மூளையின் ஆழத்திற்குள் ஒரு தேடல்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: November 3, 2023
பார்வையிட்டோர்: 4,080 
 
 

பிரபல மூளை அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் சஞ்சய் எனது வேண்டுகோளைக் கேட்டு திடுக்கிட்டார். “என்ன சொல்கிறீர்கள்? உங்கள் பிட்காயின்களை (Bitcoin) எடுக்க தேவையான பாஸ்வேர்டு மறந்து போய் விட்டதா? உங்கள் மூளையைத் திறந்து அதைக் கண்டு பிடித்து நான் தர வேண்டுமா?”

நான் அயர்ச்சியுடன் சொன்னேன், “ஆமாம் டாக்டர். அந்த பாஸ்வேர்டு இல்லாவிட்டால், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள எனது பிட்காயின்கள் அனைத்தையும் நான் இழந்து விடுவேன். நீங்கள் மூளையின் ஆழமான பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர், உங்களால் மட்டுமே இது முடியும். நீங்கள் தான் என்னுடைய கடைசி நம்பிக்கை.”

“நான் முயற்சி செய்து பார்க்கிறேன். ஆனால் வெற்றிக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதனால் சில பக்க விளைவுகள் ஏற்படலாம். அதனால் வரும் அபாயங்களை ஏற்றுக் கொள்ள நீங்கள் தயாரா?”

“ஆம், அதற்கெல்லாம் நான் தயார் டாக்டர்,” என்றேன்.

எட்டு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான் கண்களைத் திறந்தேன். நான் படுத்திருந்தது அறுவை சிகிச்சைக்குப் பின் நோயாளியை மதிப்பீடு செய்யும் அறையில். டாக்டர் சஞ்சய் என்னைப் பார்த்து, “நான் பேசுவது உங்களுக்கு கேட்கிறதா?” என்றார்.

நான் சோர்வுடன் தலையசைத்து, “ஆம்” என்றேன்.

“வாழ்த்துக்கள்! உங்களுடைய பாஸ்வேர்டை நான் கண்டு பிடித்து விட்டேன்!”

நான் மெலிதாக சிரித்தேன்.

“உங்கள் மூளையின் அனைத்து பகுதிகளும் பழையபடியே திறம்பட வேலை செய்கிறதா என்பதை நான் உறுதிப்படுத்த வேண்டும். அதற்காக நான் சில கேள்விகளை இப்போது கேட்பேன். பதில் சொல்ல முடியுமா?”

நான் சரி என்பது போல் தலையசைத்தேன்.

“உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி என்ன?”

நான் பதில் சொன்னேன்.

“நல்லது.”

அவர் தனது பாக்கெட்டிலிருந்து நூறு ருபாய் நோட்டு ஒன்றை எடுத்தார். என் முகத்தருகில் அதைக் கொண்டு வந்து, “இது என்னவென்று சொல்ல முடியுமா?” என்றார்.

திடீரென்று என் உடல் முழுவதும் ஒரு விரும்பத்தகாத, அருவெறுப்பான உணர்வு படர்ந்தது. நான் அவரைப் பார்த்து, “அது ஒரு நூறு ருபாய் நோட்டு. தயவு செய்து அதை என்னிடம் காட்டாதீர்கள். என்னால் அதைப் பார்க்க முடியவில்லை.” என்றேன்.

அவர் என்னைக் கூர்ந்து பார்த்து “ஏன் அப்படி சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.

நான் முகத்தைத் திருப்பிக் கொண்டு சொன்னேன். “டாக்டர், நான்… நான் இப்போது பணத்தை வெறுக்கிறேன்.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *