முடிவிலியின் நிகழ்தகவு

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 69,766 
 

1.

“அப்போ மனித பரிணாம வளர்ச்சி பற்றிய சார்லஸ் டார்வினின் இயற்கைத் தேர்வு மற்றும் தக்கன பிழைத்தல் கோட்பாடு தவறுண்ணு சொல்றீங்களா?”

“அப்படி சொல்லவும் முடியாது. மனிதன் எப்படி தோன்றினான் என்று நிறைய பேர் அவங்கவங்க கொள்கைகளை உருவாக்கிச் சொன்னாங்க. அதில் டார்வின் அவரோட கருத்தை அறிவியல் பூர்வமாக விளக்கினார். அதை உலகம் ஏற்றுக் கொண்டது.”

“என்னோட மனசுக்கு, நான் ஏற்றுக் கொண்ட கொள்கை, சரியாக இருக்குமென தோணுச்சு. அதான் அதை நீருபிக்க இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டேன். வெற்றி அடையும் நிலையில் தற்போது இருக்கிறேன்.”

“ஒரு செல் உயிரிலருந்து தான், தாவரங்கள், விலங்குகள் அப்புறம் மனிதர்களாகிய நாம் எல்லாரும் பரிணாம வளர்ச்சி பெற்று வந்தோம் என்ற கருத்து தான் இதுவரை அனைத்து அறிவியாலாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் முதல் பாதியை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், மனிதனின் தோற்றம் என்பதில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. மனிதன் இந்த உலகத்தை சேர்ந்தவன் இல்லை என்று தோன்றியது.”

” இந்த பேரண்டத்தின் ஏதோ ஒரு பகுதியில் உள்ள கிரகத்திலிருந்து இங்கே வந்திருக்கக் கூடும் என்பது என் அவதானிப்பு.” “அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, தற்போது முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்.

2.

கருமையான இருளில் விண்மீன்கள் புள்ளிகளாக பின்னணியில் மினுங்கிக் கொண்டிருக்க, ஜொலிக்கும் நீல நிறத்தில், வெண்மையான மேகங்கள் ஆங்காங்கே மிதக்க, ஒரு நீல நிற கோலிக்குண்டை பாதியாக வெட்டி வீசியது போல், உதித்துக் கொண்டிருந்தது பூமி. சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியின் ஒரு பாதியில் மட்டுமே விழுவதால், மறுபாதி இருளடைந்து கிடந்தது. பூமி உதிக்கும் அந்த அழகான காட்சியை, தன் விண்வெளி உடையின் தடிமனான கண்ணாடியின் வழியே பார்த்துக் கொண்டிருந்தான் SFP7689.

அவன் முகத்தை, தன் சக்தி வாய்ந்த காமிராக் கண்களால், பச்சை நிற ஒளி மினுங்க, உற்று பார்த்துக் கொண்டிருந்தது ரா-மசே-கரகு-ழவன். ராமசேகரகுழவன். செயற்கை நுண்ணறிவும், சுய கற்றல் மூலம் தவறுகளை திருத்திக் கொண்டு, செயலை முழுவதும் தவறில்லாமல் செய்யவும் முடிந்த ஒரு இயந்திரம். புளூட்டோனியம்241 ஐ எரிபொருளாக கொண்ட அணுசக்தி மின்கலம் மூலம் இயங்குகிறது. பதினான்கு வருடங்கள், நான்கு மாதங்கள் வரை இந்த மின்கலம் மின்சக்தியை வழங்கக் கூடியது. அதன் மாடல் மிகவும் நவீனமாக தயாரிக்கப்பட்ட ஒன்று.

2155AIR000983 என்ற அதன் பெயர் அதற்கு பிடிக்காததால், தனக்குத் தானே இட்டுக் கொண்ட பெயர் தான், ராமசேகரகுழவன். இந்த இயந்திரங்களுக்கு, தங்களுக்கான பெயர்களை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம், பூமியில் இருக்கும் தலைமைக் கட்டுப்பாட்டு கணினி அமைப்பால் வழங்கப்பட்டிருந்தது.

அந்தப் பெயர் அதற்கு பிடித்த காரணம் இதுவரை தெரியவில்லை. நாம் ராம் என்றே சுருக்கி கூப்பிடுவோம், அதற்கு அவ்வாறு அதன் பெயரை சுருக்கி கூப்பிடுவது பிடிக்காது என்றாலும்.

பூமியின் பிம்பம் SFP7689 இன், முகத்தில் தெரிய அதைத் தாண்டி, தன் கதிர்க் காமிரா மூலம் அவன் முக பாவனைகளை ஸ்கேன் செய்தது ராம்.

“மிகவும் அழகாக, இருக்கிறது இல்லையா? அற்புதமான காட்சி. நிரம்பவும் விரும்பி இரசிக்கின்றாய் போலிருக்கிறது”. ராமின் இயந்திரக் குரல், அவன் விண்வெளிக் கவச உடையின் உள்ளே ஹெட் போனில் ஒலித்தது. SFP7689 லேசாக தலையைத் திருப்பி ராமைப் பார்த்தான். அவன் புன்னகைப்பதை கதிர்கள் வழி ஊடுருவி உணர்ந்து கொண்டது

“யெஸ் ராம், இந்த ரசனை இல்லனா, நானும் உன்னை மாதிரி துருப் பிடிக்காத இரும்பு தானே”, என்றான் SFP7689.

“ஆமா, நான் துருப் பிடிக்காத இரும்பு, நீ பெரிய ரசனைவாதி. போடா டேய்.., நானும் அன்னைக்கு, உன்னைப் போல வேடிக்கைப் பார்த்துகிட்டு இருந்துருக்கணும். நீ இப்ப இப்படி நிலாவுல உட்கார்ந்து, கவிதை எழுதற மூட்ல இருக்கமாட்ட. மேல போய்ச் சேர்ந்துருப்ப”.

3.

“காலப் பயணிகளுக்கு ஒரு பார்ட்டி வச்சு, ஸ்டீஃபன் ஹாக்கிங் அவர்களை வரவேற்க, காத்திருந்தார். ஆனால், ஒருத்தரும் வரல. ஏன் தெரியுமா? என்று, என்னை பார்த்தார் ப்ரபசர் கிளின்ட் கேமரூன் மெகேய். குவாண்டம் இயற்பியலில் பிஹெச்டி. அமெரிக்காவின், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பணி புரிபவர். செமினார் தலைமையேற்க வந்துள்ளார்.

“அந்த பார்ட்டிக்க்கான அழைப்பிதழை பார்ட்டி முடிஞ்சு தான், வெளியிட்டார். காலப்பயணம் எதிர்கால மனிதர்களுக்கு ஒரு வேளை சாத்தியமாகி இருந்தால், இந்த அழைப்பிதழை பார்த்துட்டு, வருவாங்கன்னு நினைச்சார். இது போல சிந்திக்கிறதே பெரிய விஷயம். உலகத்துல இதுவரை யாரும் சிந்திக்காத ஒரு கருத்து உனக்கு தோன்றியது என்றால் நீ தான் அறிவியலுக்கு தேவை.” என்றார்.

“எதிர் காலத்திலிருந்து மனிதர்கள் வராததுக்கு காரணம், டைம் டிராவல் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருக்கலாம். அல்லது…, சில வினாடிகள் அமைதியாக பார்த்தார்.

இந்த பூமி வரப்போற வருடங்களில் அழிஞ்சு, மனிதர்கள் என்ற இனமே, ஒருவருமின்றி இல்லாமல் போயிருக்கலாம்” “இவை அனைத்தும் நடப்பதற்கு சாத்தியக் கூறு இருக்கிறது.” “இரண்டாவது விஷயம் நடப்பதற்கு, வாய்ப்பு அதிகமாக தெரிகிறது”, என்றார்.

4.

ஹுமோ நோவா கிரகம். கால இயந்திரம் கிளம்பத் தயாராய் இருக்க, உள்ளே இருவர் அமர்ந்திருந்தனர். போக வேண்டிய வருடத்தின் எண்கள் கணினித் திரையில் மின்னிக் கொண்டிருந்தது. 380 மில்லியன் வருடங்கள். மின்னல் வெட்டியது போல ஒளி வெள்ளம் வெடித்துப் பரவ, இயந்திரம் கிளம்பி மறைந்தது.

பூமி. நெருப்புக் குழம்பு கொதிப்பது போல கிடந்தது. புகை சூழ்ந்து பரவி, எங்கும் எதுவும் தெரியவில்லை. புகையை விலக்கி உள்ளே நுழைந்து, நிலை கொண்டது கால இயந்திரம். கதவைத் திறந்து இறங்கினான் ஒருவன். தன் கையிலிருந்த சிறு குப்பியை திறந்து, துளி திரவத்தைக் கீழே கொட்டினான். அந்த துளி பூமியின் சுடு திரவத்தில் கலந்தது. பின் திரும்ப இயந்திரத்தில் ஏறினான். இயந்திரம் கிளம்பியது.

துளி திரவத்தில் இருந்த ஒரு செல் உயிரி, வெப்பம் தாளாமல் தவித்தது. பின்னர் வெப்பத்தை பொறுத்துக் கொண்டது. சூழ்ந்திருந்த திரவத்தை சிறிது உறிஞ்சிக் குடித்துச் சுவை பார்த்தது. பின் அசைந்து அசைந்து நகரத் தொடங்கியது.

Print Friendly, PDF & Email

2 thoughts on “முடிவிலியின் நிகழ்தகவு

  1. அட்டகாசமான கதை. கற்பனை, தற்கால நிகழ்வு போலவே இருக்கிறது. தமிழும் அறிவியலும் விளையாடியிருக்கிறது. வாழ்த்துகள். உங்கள் பணி சிறப்புற தொடரட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *