சுரேஷன் நாயர் ஒரு ரூபாய் நாணயத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுத்துக்கள் கட்டங்களில் எழுதப்பட்டிருந்தன. ஒரு சிறிய டம்பளரில் நீர் இருந்தது. அந்த நீர் அதிர்ந்துகொண்டே இருந்தது. ஒல்லியான ஆசாமி ஒருத்தன் சம்மணமிட்டு, விறைப்பாக உட்கார்ந்திருந்தான். கண்கள் மூடி இருந்தன. அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவன் வசத்தில் அவன் இல்லை என்பது தெரிகிறது. சுரேஷன் நாயர் அடுத்த கேள்வியைக் கேட்டார். ஒரு ரூபாய் நாணயத்தின் மீது ஒரு விரலை வைத்திருந்த ஒல்லி ஆசாமியின் விரல் நாணயத்தோடு அங்குமிங்கும் நகர ஆரம்பித்தது.
S
U
C
C
E
S
S
சுரேஷன் நாயர் ‘பகவதி’ என்று சொல்லிக்கொண்டார். இந்தியா முழுவதும் அறியப்படும், எதிர்பார்க்கப்படும் அந்த விஞ்ஞானியின் முகத்தில் நிம்மதி பிறந்தது.
நாடெங்கும் தொலைக்காட்சிகளும் வானொலிகளும் அலறிக்கொண்டிருந்தன. புயல் சின்னம் உருவாகி இருந்தது. இன்னும் இரண்டு நாள்களுக்கு மழை பெய்யும் என்கிற செய்தியெல்லாம் ஒளி(லி)பரப்பாமல் ஊடகங்கள் இன்னொரு முக்கியச் செய்தியைச் சொல்லிக்கொண்டிருந்தன. புயலை திட்டமிட்டு நகர்த்தும் முயற்சியின் முதல் சோதனை அன்று நிகழவிருக்கிறது. இதுவரை உள்கட்டங்களில் மட்டும் சோதனையில் இருந்த, ‘புயலை விருப்பப்பட்ட இடத்துக்கு மாற்றும் சோதனை’ இன்று முதன்முறையாக சோதிக்கப்பட இருக்கிறது.
சுரேஷன் நாயர் தலைமையில் நூற்று நாற்பது பேர் கொண்ட குழு வேகமாக இயங்கிக்கொண்டிருந்தது. இன்னும் அரைமணி நேரத்தில் புயல் சின்னத்தை நகர்த்தி, கடலுக்கு நடுவில் அதை வலுவிழக்கச் செய்யவேண்டும். 920 மில்லிபார் உள்ள குறைவழுத்த காற்று மண்டலம். அதைவிடக் குறைந்த காற்றழுத்த தாழ்வை, விரும்பும் இடத்தில் உருவாக்கி, அதை நோக்கி குறைந்த காற்றழுத்தத்தை நகர வைப்பதுதான் அடிப்படை நோக்கம். குறைந்த காற்றழுத்தத்தைவிட மிகக்குறைந்த காற்றழுத்தத்தை உருவாக்குவதில் வெற்றி அடைந்த சுரேஷன் நாயர் இத்திட்டம் நிச்சயம் வெல்லும் என்று நம்பினார். அறிவியல் பொய்த்தாலும் ஆவி சொன்னது பொய்க்காது என்று நினைத்துக்கொண்டார்.
மிகக் குறைந்த காற்றழுத்தத்தை உருவாக்கவேண்டிய இடத்தைத் தேர்வு செய்து, அதற்கான வேலையை ஆரம்பித்தார். கொஞ்சம் பதட்டமாகவும் இருந்தது அவருக்கு. ‘பகவதி’ என்று சொல்லிக்கொண்டார்.
சிறிய குன்றின் உச்சியில் முருகன் சிரித்துக்கொண்டிருந்தார். மேலே செல்லும் படிகளில் உட்கார்ந்திருந்த தலைப்பாக்கட்டு பண்டாரம் காவிப் பல் தெரியச் சிரித்துக்கொண்டார். கைகளில் பற்ற வைத்திருந்த பீடியை ஒரு இழுப்பு இழுத்துக்கொண்டு தூரத்தில் நிற்கும் தூணில் உள்ள சிலையிடம் பேசினார்.
‘மழைய நிறுத்திடுவானுவளா மக்கா? கேக்கேன், நிறுத்திடுவானுவளாங்கேன்? கேட்டா அறிவியலும்பானுவோ. இன்னைக்கு நானும் பாக்கேன். மழ வல்லேன்னே இனிமே தலைப்பாக்கட்டு கிடையாதுங்கேன். என்னவே சிரிக்கீரு? பாரும், மழ வரும். புயல் வரும். ஒரு மசுரையும் ஒரு மசுராண்டியாலும் புடுங்கமுடியாதுங்கேன். தலப்பாக்கட்டா அறிவியலான்னு நானும் பாக்கேன்.’
கேமராக்கள் பளிச்சிட ஒளி வெள்ளத்தில் சுரேஷன் நாயர் பற்கள் தெரிய பேட்டி கொடுத்தார். மிகப் பெரிய வெற்றி. கரையைக் கடக்கும் புயல் கடலையே கடந்தது. கடலிலேயே மழை பெய்து, காற்றடித்து புயல் ஓய்ந்துவிட்டது.
‘இது ஒரு மிகப்பெரிய சாதனை. இச்சாதனையை இதுவரை எந்த நாடும் செய்ததில்லை. இச்சாதனையில் இந்தியா ஒரு முன்னோடியாக விளங்கும். ஒரு காற்றழுத்தத்தைவிடக் குறைந்த காற்றழுத்தத்தை உருவாக்குவதன் மூலம் இதைச் சாதித்தோம். மேடான பகுதியிலிருந்து தாழ்வான பகுதிக்கு நீர் ஓடுவதைப் போல, காற்று நாங்கள் சொன்ன திசைக்கு ஓடியது.’
சாட்டிலைட் புகைப்படங்களை வெளியிட்டார். வெண்மை நிற மேகங்கள் மெல்ல மெல்ல தங்கள் நிலையிலிருந்து விலகி, சுரேஷன் நாயர் வட்டமிட்டிருந்த இடத்திற்குச் சென்றன.
‘இது ஒரு தொடக்கம்தான். இதை வைத்தே புயலையும் நாம் உருவாக்கமுடியும். தேவையான அளவு மழையையும் நாம் பெறமுடியும். இது அதற்கடுத்த பெரிய வெற்றியாக இருக்கும். செயற்கை மழைக்கு அவதிப்படவேண்டியதில்லை. ஒரு சின்ன காற்றழுத்தத் தாழ்வுநிலை. கொஞ்சம் நீராவி. மழை ரெடி.’
கேள்விகள் நாலா பக்கமும் இருந்து பாய்ந்துவந்தன.
’எல்லாம் பகவதி செயல்’ என்றார்.
‘மழையை நிறுத்தவே முடியாது என்று பலர் சொன்னார்கள். நானும் மரபிலும் இயற்கையிலும் நம்பிக்கை உள்ளவந்தான். ஆனால் அறிவியலின் சாத்தியங்கள் எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டவை. நீங்கள் கடவுளையும் அறிவியலையும் பிரிக்கவேண்டியதில்லை. எனக்கு அறிவியலும் பகவதியும் ஒன்றுதான்.’
‘மிகக்குறைந்த காற்றழுத்தத்தை எப்படி உருவாக்கினோம் என்பது ரகசியம். அணுக்கரு பிளவின் அடிப்படையிலான உயர் சோதனை அது. அதை மட்டுமே இப்போது சொல்லமுடியும். செலவைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். தடுக்கமுடியாத புயல் தரும் அழிவையும் சேதத்தையும் விடக் குறைவுதான்.’
சுரேஷன் நாயர் ஓர் இந்திய முகமாக மாறத் தொடங்கியிருந்தார்.
கோவிலின் படிகளில் சோர்ந்து படுத்திருந்தார் தலப்பாக்கட்டு பண்டாரம். அவர் கண்களில் பெரும் மருட்சியும் பயமும் தெரிந்தன. தான் இப்படி தோற்போம் என்று அவர் நினைக்கவே இல்லை. இயற்கையையும் கடவுளையும் விஞ்சும் அறிவியலைப் பற்றித் தனக்குத் தெரியவில்லையே என்கிற கவலையும் கொஞ்சம் இருந்தது.
எதிரில் தூணில் இருந்த சிலை தன்னைப் பார்த்துச் சிரிப்பதைக் கண்ட பண்டாரம் நெக்குருகி ‘முருகா’ என்றார். இனியும் தான் தலைப்பாக்கட்டு கட்டக்கூடாது என்று எண்ணி, தலையில் கட்டியிருந்த துணியை எடுத்து தூர வீசினார். காற்றில் அவரின் தலைமயிர் பரவிப் பறந்தது. அப்படியே ஓர் ஓரத்தில் ஒண்டிப் படுத்துக்கொண்டார். சொல்லொணாத துயரத்தில் அதன் கண்களில் இருந்து நீர் வழிந்தது. ‘இனி வெள்ளமே இல்லை’ என்பதை நினைக்கவே அவருக்குக் கஷ்டமாக இருந்தது. தன் சிறுவயதில் திடீர் மழையில் தனக்குக் கிடைத்த சந்தோஷத்தையும், அந்நீரில் மிதந்த காகிதக் கப்பலையும் நினைத்துக்கொண்டார். ஆறு பொங்கிப் பிரவகித்து ஊருக்குள் வர, அனைவரும் முழங்கால் வரைக்கும் ஆடைகளைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு, தூரத்தில் எங்கும் பரவிக்கிடக்கும் வெள்ளத்தைப் பார்த்த சந்தோஷத்தை நினைத்துக்கொண்டார். இது எல்லாம் இனிமேல் கிடையாதா என்று நினைத்தபோது அவரது சோகம் எல்லை மீறியது.
எப்போது தூங்கினோம் என்று தெரியாமல் உறங்கிக்கொண்டிருந்த பண்டாரத்தின் மீது நீர்த்துளிகள் பட்டன. எழுந்து உட்கார்ந்து வானத்தைப் பார்த்தார். ஒன்றிரண்டு நீர்த்துளிகள் வானத்திலிருந்து பொத்துக்கொண்டு வருவது தெரிந்தது. சிறிது நேரத்தில் மழை வலுத்தது. வலுத்த மழை மேலும் மேலும் வலுக்க, இதுவரை தான் காணாத ஒரு பேய் மழையைக் காணப் போகிறோம் என்பது பண்டாரத்திற்குப் புரிந்துபோனது.
சுரேஷன் நாயரின் குழு தீவிரவமாக ஆராய்ந்தது. எங்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமில்லை. இது புயலில்லை என்றார் சுரேஷன் நாயர். ஆனால் மழை கொட்டிக்கொண்டே இருந்தது. காற்று சுழன்றடித்தது. தீவிரமான மழை. விடாமல் இரண்டு நாள்கள் மழை கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்தது. முக்கியச் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருந்தன. எல்லா ஆறுகளிலும் வெள்ளம். நிறைய வீடுகளில் வெள்ள நீர் புகுந்திருந்தது. சுரேஷன் நாயர் எல்லாருக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் யோசித்தார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவினார். இரண்டு நாள்கள் மழை பெய்யும் என்கிற அறிக்கை மட்டும் வானிலைச் செய்தியாகச் சொல்லச் சொல்லிவிட்டுப் போனார்.
வீடுகளில் வெள்ளம் புகுந்த மக்கள் கோவிலின் படிகளில் ஏறி, மேலே உள்ள கோவிலில் தஞ்சம் பெற ஓடினார்கள். பண்டாரம் உறக்கச் சொன்னார், ‘மழய நிறுத்திட்டோம்னு சொன்னவன் அறிவாளி, மழ வரும்னு முன்னக்கூடியே இங்க வந்து நிக்கவன் பயித்தியக்காரனா, சொல்லுங்கல.’
தூரத்தில் கிடந்த துணியை எடுத்து மீண்டும் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டார் பண்டாரம்.
– டிசம்பர் 2008