ஒரு குளிர்ந்த டிசம்பர் காலையில் மும்பை பிலிம் சிட்டியில் உள்ள ஒரு சிறிய ஸ்டுடியோவுக்கு அகர்வால் வந்து சேர்ந்த போது, தயாரிப்பு குழுவினர் மீட்லெஸ் வொண்டரின் (Meatless Wonder) விளம்பரப் படத்தை படம் பிடிக்க தயாராக இருந்தனர்.
அகர்வால் Healthy Foods நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி. Healthy Foods நிறுவனம் வேறு சில உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தாலும், அதற்கு புகழும் பணமும் குறுகிய காலத்தில் வந்து சேர்ந்தது மீட்லெஸ் வொண்டரினால் தான். மீட்லெஸ் வொண்டர் பிறந்தது மிகவும் தற்செயலாக. பார்ப்பதற்கும் சுவைப்பதற்கும் ஆட்டிறைச்சியைப் போலவே இருக்கும் போலி இறைச்சியை ஆய்வகத்தில் உருவாக்க அகர்வாலின் குழுவினர் முயன்று கொண்டிருந்தனர். இரண்டு வருட ஆராய்ச்சிக்குப் பின் அவர்கள் கண்டு பிடித்த போலி இறைச்சி ஆட்டிறைச்சி மட்டுமல்ல, நீங்கள் சாப்பிட்ட மற்ற எந்த இறைச்சியை விடவும் சுவையாக இருந்தது. ஹைதராபாத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட போது பெரும் வெற்றி பெற்றது. அதை சுவைத்த அனைவரும் இதையே தான் சொன்னார்கள்: “இதைப் போன்ற ஒரு மாமிச உணவை என் வாழ் நாளில் நான் இது வரை சாப்பிட்டதில்லை. இது போலி இறைச்சியில் செய்தது என்றால், நம்பவே முடியவில்லை!”
முறையாக விளம்பரம் செய்தால் மீட்லெஸ் வொண்டர் நாடு முழுவதும் சென்றடையும் என்பதை அகர்வால் புரிந்து கொண்டார். பெரிய அளவில், ஒட்டுமொத்த தேசத்தையும் ஒரே சமயத்தில் தாக்கும் ஒரு மாபெரும் விளம்பரப் படத்தை உருவாக்க விரும்பினார். விளம்பரப் படத்திற்கான பல ஐடியாக்களை அவர் மதிப்பாய்வு செய்து கடைசியில் மிக எளிமையான ஆனால் மிக புத்திசாலித்தனமான ஐடியா ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்: விளம்பரப் படத்தில் மீட்லெஸ் வொண்டரை ரசித்து சுவைக்கும் ஒரு புலியைக் காட்டுவது. அது போலி இறைச்சி என்பதை ஒரு புலியால் கூட கண்டு பிடிக்க முடியாது என்பதே அந்த ஐடியா.
அகர்வால் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொள்ள, தயாரிப்பு குழுவினர் படப் பிடிப்பை ஆரம்பித்தனர். கேமரா மெதுவாக நகர ஆரம்பித்தது. அருகில் இருந்த உலோக கூண்டு ஒன்றில் மாலா என்ற ஏழு வயது பெண் புலி பசியுடன் உலாத்திக் கொண்டிருந்தது. குழு உறுப்பினர்களில் ஒருவர் மீட்லெஸ் வொண்டரின் குளிர் பாக்கெட்டைக் கூரான கத்தியால் கிழித்து திறந்தார். ஐந்து கிலோ போலி இறைச்சி துண்டு ஒன்றை மாலாவின் கூண்டிற்குள் தூக்கி வீசி எறிந்தார். மாலா உடனடியாக இறைச்சி மீது பாய்ந்தாள்.
மாலாவின் கூர்மையான பற்கள் போலி இறைச்சி துண்டின் மீது பதிந்த போது, அதன் கவிச்ச வாசனை குப்பென்று அவள் நாசியை எட்டியது. அவளின் நீண்ட நாக்கு இறைச்சியின் சுவையான பகுதியைத் தொட, அது ஒரு மிகச் சிறந்த, அசாதாரணமான மாமிச வகை என்று அவளுக்குப் பட்டது.
ஆஹா, இந்த இறைச்சி மிகவும் சுவையாக இருக்கிறதே. இது போன்ற ஒன்றை நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை!
ஹும், இல்லை இல்லை… இதற்கு முன்பு இதே போன்ற ஒன்றை நான் சுவைத்திருக்கிறேன்… எப்போது அது?
வெகு காலத்திற்கு முன்பு, பந்திப்பூர் காட்டில் ஒரு சிறிய விலங்கை நான் துரத்திச் சென்று கொன்று சாப்பிட்ட போது.
அது ஒரு இரண்டு கால் விலங்கு.