ஜூரியோன் ஒரு கோடீஸ்வர ரியல் எஸ்டேட் அதிபர். ஆன்ரோமெடா விண்மீன் மண்டலத்தில் உள்ள தனது தலைமையகத்தில் இருந்து செயல்படும் அவர், யாரும் வசிக்காத, உபயோகமில்லாத கிரகங்களை வாங்கி அவைகளை சீர்ப்படுத்தி பெரும் லாபத்திற்கு விற்று விடுவார். Alpha Arietis b ஐ வாங்கி அதை அனைவரும் பார்க்க விரும்பும் சுற்றுலா மெக்காவாக மாற்றினார். Kepler-452b ஐ வாங்கி அதில் வணிகங்களை ஈர்க்கும் அலுவலக கட்டிடங்களையும் மலிவு தொழிலாளர்களையும் நிரப்பினார்.
அவரது வாடிக்கையாளர்களில் ஒருவர் அதிக அளவு உப்பு நீரைக் கொண்ட ஒரு கிரகத்தைத் தேடிக்கொண்டிருந்தார். ஜூரியோன் K2–18b கிரகத்தை வாங்கி அதில் உள்ள தண்ணீரில் உப்பு சேர்க்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரது ஆய்வாளர்களில் ஒருவர் பூமியைக் கண்டு பிடித்த போது, அவருடைய அதிர்ஷ்டத்தை அவரால் நம்பவே முடியவில்லை. அவரது போட்டியாளர்கள் யாரேனும் உள் நுழைந்து பூமியைத் தட்டிக் கொண்டு போய் விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் தன்னுடைய வழக்கமான கொள்முதல் சோதனை முறைகளைத் தவிர்த்து அவசர அவசரமாக பூமியை வாங்கிப் போட்டார். தனது மேலாளர் ஒருவரை பூமிக்கு அனுப்பி, அதில் ஏதேனும் மறுசீரமைப்பு வேலை தேவைப்படுமா என்பதைக் கண்டறிய சொன்னார்.
பூமியை அடைந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, மேலாளர் ஜூரியோனை அழைத்தார். ஒரு சந்திப்பில் பிசியாக இருந்த ஜூரியோன் அவரது செயலாளர் அவசரம் என்று கூறியதால் அழைப்பை எடுத்தார்.
மேலாளர் நேரத்தை வீணடிக்கவில்லை. அவர், “சார், நாம் வாங்கிய பூமியில் ஒரு சிக்கல் உள்ளது.” என்றார்.
அதை ஜூரியோன் எதிர்பார்க்கவில்லை. எரிச்சலுடன், “என்னய்யா சிக்கல் இப்போது?” என்று கேட்டார்.
“சார், நாம் நினைத்தது போல் காலியாக இல்லை பூமி. அது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.”