நான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்து தலையை நிமிர்த்தி விண்கலத்திற்கு வெளியே இருந்த முடிவில்லா வெறுமையைப் பார்க்க ஆரம்பித்தேன். எவ்வளவு நேரம் தான் புத்தகத்தை படிப்பது?
என் முன்னே உட்கார்ந்திருந்த விண்கலத்தின் கேப்டன் ரோஜர் என்னைப் பார்த்து புன்முறுவலித்தார். “என்ன, போர் அடிக்கிறதா?” நான் ஆம் என்பது போல தலையசைத்தேன்.
“பூமிக்குப் போய் சேர்வதற்கு இன்னும் ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகுமே. அது வரை நீ எப்படி தாக்குப் பிடிக்கப் போகிறாய்?” என்று சிரித்திக் கொண்டே கேட்டார்.
நாங்கள் பேசியது பைலட்டின் காதில் விழுந்திருக்க வேண்டும். அவர் ரேடியோவில், “அவ்வளவு வருடங்கள் ஆகாது. நம் கிரகம் இருக்கும் விண்மீனை பூமி இருக்கும் பால்வீதியுடன் இணைக்கும் ஒரு சுருக்கு வழியைக் கண்டு பிடித்து விட்டேன். இன்னும் 467 ஆண்டுகளில் நாம் பூமிக்குப் போய் சேர்ந்து விடுவோம்.” என்றார்.
“நாம் போட்டிருந்த திட்டத்திற்கு முன்னரே பூமியை அடைய போகிறோம். மிக நல்லது.” என்றார் ரோஜர்.
நான் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்த பின் ரோஜரிடம், “இந்த பயண திட்டம் எப்படி ஆரம்பமானது என்பதை பற்றி விவரமாக சொல்கிறேன் என்கிறீர்களே, இப்போது சொல்லுங்களேன்.” என்று கேட்டேன்.
“கண்டிப்பாக. நம் உலகில் பெருந்தேவி என்று அழைக்கப்படும் ஒரு தீர்க்கதரிசியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?”
“கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் பார்த்ததில்லை. அவருக்கு தெரியாதது ஒன்றுமேயில்லை என்றும், எதிர் காலத்தில் நடக்கப்போவதை தெரிந்து கொள்ளும் அபார சக்தி கொண்டவர் என்றும் சொல்லக் கேள்வி.”
“அவர் தான் இந்தப் பயணத்திற்கு வழி வகுத்தவர். நமது கிரகத்தில் இருந்து 450,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பூமியில் மற்றொரு அறிவார்ந்த நாகரிகம் உருவாகப் போவதை பல கோடி வருடங்களுக்கு முன்னரே தனது தீர்க்க தரிசனத்தினால் கண்டறிந்து கொண்டார் பெருந்தேவி. பூமிக்கு செல்லவும் அங்குள்ள அறிவுடைய மனிதர்களை சந்திக்கவும் அவர் தான் திட்டம் வகுத்துக் கொடுத்தார்.”
“பூமியில் இருக்கும் மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்று அவர் விவரித்தாரா?”
“உடலளவில் அவர்கள் நம்மை விட பெரிதாக இருப்பார்கள் என்று சொன்னார். நாம் அதிகபட்சமாக அரை அடி உயரத்திற்கு வளருவோம். ஆனால் மனிதர்கள் ஆறு அடி உயரம் வரை வளருவார்களாம். அவர்கள் உடலில் கை கால்களும், முடிகளும் இருக்குமாம்.”
“அவர்களால் பேச முடியுமா?”
“இந்த பயணத்திற்கு தயாராகும் போது நாம் கற்றுக்கொண்ட ஆங்கில மொழியை அவர்கள் பேசுவார்கள்.”
“பூமியில் இறங்கியதும் நம் திட்டம் என்ன?”
“பைலட் விண்கலத்தில் தங்கியிருப்பார். நீயும் நானும் வெளியே சென்று மனிதர்களைத் தேடுவோம். மனிதர்களுடன் பேசுவதை நான் கவனித்துக் கொள்கிறேன். நீ என் பக்கத்தில் எனக்குப் பாதுகாப்பாக இரு.”
“சரி,” என்று நான் தலையசைத்தேன்.
467 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் பூமியில் தரையிறங்கினோம். திட்டமிட்டபடி நானும் ரோஜரும் விண்கலத்தை விட்டு இறங்கி வெளியே வந்தோம். பூமி மிகவும் அழகாக இருந்தது. பளிச்சென்று சூரிய ஒளி. எங்கு பார்த்தாலும் ஒரே பசுமை. அங்கங்கே சிறிய நீரோடைகள்.
ஒரு மைல் நடந்த பின் நாங்கள் ஒரு மனிதரைக் கண்டோம். பெரிய உருவம். உயரம் ஆறடிக்கும் மேலே. அவர் எங்கள் திசையில் வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.
அவர் எங்களிடமிருந்து பத்து அடி தள்ளி நின்று விட்டார். முகத்தில் குழப்பம். அவர் எங்களைப் போல ஒரு உயிரினத்தை இது வரை பார்த்திருக்க மாட்டார்.
ரோஜர் நிமிர்ந்து, “வணக்கம், மனிதரே. நாங்கள் AP-88bc கிரகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களால் உங்களுக்கு எந்தத் தீங்கும் வராது,” என்றார் சுத்தமான ஆங்கிலத்தில்.
மனிதர் அருகில் வந்து எங்களைப் பரிசோதித்தார். அவர் வாயிலிருந்து வினோதமான சத்தங்கள் வர ஆரம்பித்தன. கண்டிப்பாக அது ஆங்கிலம் இல்லை. பிறகு வந்த வழியே கிடு கிடுவென்று போய் விட்டார்.
நான் ஏமாற்றத்துடன், “அவர் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை போலிருக்கிறது, கேப்டன்,” என்றேன்.
“ஆம், அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் நான் ஆங்கில வார்த்தைகளை சரியாகத் தானே சொன்னேன். எத்தனை முறை பயிற்சி செய்தேன் அந்த வார்த்தைகளை!”
இருவரும் சில நிமிடங்கள் மௌனம் சாதித்தோம். திடீரென்று எனக்கு ஒரு சந்தேகம். நான் கேட்டேன், “கேப்டன், நாம் பூமிக்கு சீக்கிரமே வந்து சேர்ந்து விட்டோம் இல்லையா? திட்டமிட்ட காலத்திற்கு முன்னரே?”
“ஆமாம், ரொம்ப வருடங்களுக்கு முன்பாகவே வந்து சேர்ந்து விட்டோம். நம் பைலட்டின் திறமையினால்.”
“எத்தனை வருடங்களுக்கு முன்பு?”
கேப்டன் சிறிது நேரம் மனக் கணக்கு போட்டு விட்டு, “அறுபத்தைந்து மில்லியன் ஆண்டுகள்” என்று பதிலளித்தார்.