புத்தம் புது பூமி!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: July 9, 2019
பார்வையிட்டோர்: 66,874 
 
 

“இதோ, இதுதான் நாம் கண்டுபிடித்துள்ள புதிய கோள்!” என்று பெருமிதப் புன்னகையோடு தன் இடப்புறம் இருந்த திரையைக் காட்டினார் அந்த விண்வெளிக் கூடத்தின் தலைமை அறிவியலாளர்.

அங்கே நூற்றுக்கு எழுபத்தைந்து அடி நீள அகலம் கொண்ட மாபெரும் திரையில், பல்லாயிரம் ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து நேரலையில் தெரிந்தது அந்தப் புதிய பூமி. ஊடகங்களின் ஒளிப்படக் கருவிகள் படபடவென அதைப் பார்த்துக் கண் சிமிட்டின. விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் பிற அறிவியலாளர்கள், உதவியாளர்கள் புடைசூழ அமர்ந்திருந்த மூத்த அறிவியலாளரின் முன்னால் ஆர்வத்தோடு அமர்ந்த செய்தியாளர்கள் கேள்விகளைத் தொடங்கினர்.

“சார், இந்தப் புது கிரகத்தை பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்!”

“இந்தக் கிரகம் பூமியிலேயிருந்து கிட்டத்தட்ட 3000 ஒளியாண்டுகள் தொலைவில இருக்கு. இதுக்கு ஒரு நிலாவும் இருக்கு. ரொம்பப் பெரிய கிரகம்…” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர்,

“சார்! இது வரைக்கும் எத்தனையோ புதிய கிரகங்களைக் கண்டுபிடிச்சிருக்கீங்க. இந்தக் கிரகத்துல என்ன சிறப்புன்னு சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.

“கண்டிப்பா! இது வரைக்கும் நாம 1317 கிரகங்களை கண்டுபிடிச்சிருக்கோம். ஆனா, அதுல எதிலேயுமே உயிரினங்கள் இல்லை. ஆனா, இந்த கிரகம் அப்படி இல்ல… லொக் லொக்…” என்ற அவர் தண்ணீரை எடுத்துக் குடிக்க, ஆர்வம் தாங்காத ஊடகர்கள் நாற்காலியின் நுனிக்கு வந்து,

“என்ன சார், சொல்றீங்க! அப்படீன்னா இந்த கிரகத்துல உயிரினங்கள் இருக்கா?” என்று கேட்டனர்.

“அப்படி இல்ல, இந்த கிரகத்துலேயும் உயிரினங்கள் எதுவும் கிடையாதுதான். ஆனா, சில நூற்றாண்டுகள் முன்னே வரைக்கும் அங்க உயிரினங்கள் மட்டுமில்ல, அறிவில் மிகவும் மேம்பட்ட ஒரு மனித இனமே வாழ்ந்திருக்கிறது தெரியுது” என்றார் பக்கத்திலிருந்த அறிவிலாளர் ஒருவர்.

“எதை வெச்சு சார் சொல்றீங்க?”

“அந்த கிரகத்துல பெரிய பெரிய கட்டடங்கள் – சும்மா இல்ல, இருநூறு முந்நூறு அடி உயரத்துக்கு கட்டடங்கள் – இருக்கு. அதுவும் கிரகம் முழுக்க, கோடிக்கணக்குல” என்று அவர் சொல்ல வியப்பில் வாய் பிளந்தனர் ஊடகர்கள்.

“அது மட்டும் இல்ல, கலை – அறிவியல் – தொழில்நுட்பம்னு எல்லாத்திலேயுமே அவங்க நிறைய முன்னேறி இருந்திருக்காங்க. அந்த கிரகத்துக்குப் போய் வந்த நம்ம விண்வெளி வீரர்கள் எடுத்த படங்கள், சேகரித்த மாதிரிகள் மூலமா இது உறுதியா தெரியுது. முந்தி மாதிரி இல்லாம, இப்போ ஒளியின் வேகத்தைத் தாண்டிப் பார்க்கிற, பயணிக்கிற தொழில்நுட்பத்தை நாம கண்டுபிடிச்சுட்டதால இதெல்லாம் சாத்தியமாச்சு” என்றார் தலைமை அறிவியலாளர்.

“ஆனா சார், இவ்வளவு முன்னேறின அந்த மனித இனம் எப்படி அழிஞ்சுது?” என்று கேட்டார் செய்தியாளர் ஒருவர். அதற்கு,

“அ… அது வந்து இன்னும் சரியாத் தெரியல. ஆராய்ச்சி நடந்திட்டிருக்கு. கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சுடுவோம்” என்று பெரியவர் சற்றே தடுமாற்றத்துடன் சொல்ல,

“ஏன் சார் பொய் சொல்றீங்க?” என்று அழுத்தமாகக் கேட்டான் பக்கத்திலிருந்த அந்த இளம் அறிவியலாளன்.

“பொய்யா?!… என்ன பொய்?… நீங்க கொஞ்சம் சும்மா இருங்க! நாந்தான் பேசிட்டிருக்கேன்ல?” என்று கோபமானார் தலைமை. செய்தியாளர்கள் இடையில் சலசலப்பு ஏற்பட்டது. சட்டென எழுந்து நின்ற அந்த இளம் அறிவியலாளன்,

“நண்பர்களே! இவங்க சொல்றது பச்சைப் பொய்! அந்த கிரகத்துல இருந்தவங்க ஏன் அழிஞ்சாங்கங்கிறதையும் கண்டுபிடிச்சாச்சு! அதுக்குக் காரணம், இயற்கைக்கு எதிரான வாழ்க்கை முறை” என்றான்.

“வாய மூடுங்க!” என்று கத்தினார் பெரியவர். அதைக் கண்டு கொள்ளாமல் இளைஞன் தொடர்ந்தான்.

“இன்னிக்கு நாம இங்க என்ன பண்ணிட்டிருக்கோமோ அதையேதான் அவங்களும் அங்கே பண்ணிட்டிருந்திருக்காங்க. வளர்ச்சிங்கிற பேர்ல இயற்கைய சின்னாபின்னமாக்கி இருக்காங்க. அவங்களோட பல கண்டுபிடிப்புகள், அன்றாட வாழ்க்கைல பயன்படுத்தின பொருட்கள் கூட இயற்கைக்கு எதிராத்தான் இருந்திருக்கு. இதனால கண்ணெதிர்ல உலகம் அழிய ஆரம்பிச்சதுக்கு அப்புறமும் திருந்தாம பணம், புகழ், அறிவியல், தொழில்நுட்பம்னு பித்துப் பிடிச்சு அலைஞ்சிருக்காங்க…” என்று அவன் பேசப் பேச அனைத்தையும் பரபரவெனப் பதிவு செய்தது ஊடக உலகம்.

“என்ன இது? அவர் சொல்ல சொல்ல நீங்க பாட்டுக்குப் பேசிட்டிருக்கீங்க!” என்று இப்பொழுது இன்னொரு அறிவியலாளரும் அதட்ட. மற்ற அறிவியலாளர்கள் என்ன செய்தெனத் தெரியாமல் திருதிருவென விழித்தனர். முதியவர், ஒரு பொத்தானை அழுத்தினார். லேசர் துப்பாக்கிகளோடு ஓடி வந்த காவலர்கள் இளைஞனைப் பிடித்துத் தரதரவென இழுத்துச் செல்லத் தொடங்கினர். ஆனாலும் அவன் அந்த அரங்கமே அதிரக் கத்தினான்.

“நண்பர்களே! நல்லாக் கேட்டுக்கங்க! நாம எத்தனை ஆயிரம் மரம் நட்டாலும் சரி, தண்ணிய எவ்வளவுதான் சேமிச்சாலும் சரி, இயற்கைக்கு எதிரான இந்த மின்னணுப் பொருட்கள், மக்காத குப்பைகள் இதையெல்லாம் உற்பத்தி செய்யறத நிறுத்தாத வரைக்கும் எந்தப் பயனும் கிடையாது. அந்த மக்களோட ஒட்டுமொத்த அழிவு நமக்குச் சொல்றது இதைத்தான். இதைப் பார்த்ததுக்கு அப்புறமும் நாம திருந்தலன்னா அவங்க நிலைமதான் நமக்கும்” என்று கத்திக் கொண்டே போனான் அவன்.

நடந்த கலவரத்தைக் கண்டு உறைந்து போய் நின்றிருந்த ஊடகத்தினரைப் பார்த்து,

“உக்காருங்க!… உக்காருங்க!…” என்றார் பெரிய அறிவியலாளர், மீண்டும் பழைய புன்னகையோடு.

“இந்த கிரகம் பத்தித் தொடர்ந்து ஆராய்ச்சியில இருந்ததால அவருக்கு லேசா மனசு பாதிக்கப்பட்டிருக்கு. வேற ஒண்ணுமில்ல. அவர் சொன்னதுக்கெல்லாம் எந்த ஆதாரமும் கிடையாது அது எதையும் வெளியிட வேணாம்! சமூகத்துல தேவையில்லாத குழப்பம் ஏற்படும்” என்றார் அவர். உடன் இருந்த மற்ற அறிவியலாளர்களும் அதை ஆமோதித்தனர்.

“சார்! அடுத்து, புது கிரகத்துல நம்ம விண்வெளி வீரர்கள் எடுத்த படங்களையெல்லாம் இவங்களுக்குக் காட்டணும் இல்லையா?” என்று சமயம் பார்த்து எடுத்துக் கொடுத்தார் உதவியாளர் ஒருவர்.

“ஓ! ஆமா, ஆமா! வாங்க எல்லாரும்” என்றபடி பெரியவர் முன்னே செல்ல, அனைவரும் ஆவலுடன் அடுத்த அறைக்குள் நுழைந்தனர்.

அங்கே அனைவரையும் முதலில் வரவேற்றது, ஓரளவு சிதைந்த நிலையிலும் தன் கம்பீரம் குன்றாத ‘தஞ்சைப் பெரிய கோயில் கோபுரத்தின்’ டிஜிட்டல் படம்!

– ஏப்ரல் 28 – மே 4, 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *