கடவுள் அவசர அவசரமாக மாநாட்டு அறைக்குள் நுழைந்தார். அவருக்காகக் காத்திருந்த தலைமைப் பணியாளர், பொறியியல் தலைவர் மற்றும் செயல்பாட்டுத் தலைவர் மூவரும் மரியாதையுடன் எழுந்து நின்றனர்.
அவர்களை உட்காரச் சொன்ன கடவுள் தொண்டையைச் செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார். “நேற்று இரவு 11:47 மணிக்கு நாம் பிரபஞ்சத்தை இழந்தோம் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். மாபெரும் கருந்துளையான (Blackhole) PQN-109 இரவு 10 மணியளவில் விரிவடைய ஆரம்பித்து அதன் பாதையில் உள்ள அனைத்தையும் விழுங்கத் தொடங்கியது. கோடிக்கணக்கான விண்மீன் திரள்கள் உறிஞ்சப்பட்டு நொடியில் மறைந்து போயின. கருந்துளை எவ்வளவு அதிகமாக விழுங்கியதோ, அவ்வளவு அதிகமாக வளர்ந்து மேலும் மேலும் வேகமாக ஒரு வாக்யூம் கிளீனர் போல உறிஞ்சித் தள்ளியது. என்ன நடக்கிறது என்பதை நாம் உணரும் முன்பே, எல்லாம் முடிந்து விட்டது. முழு பிரபஞ்சமும் அழிந்து போனது.”
“இந்த நிகழ்வுக்கான மூல காரணத்தை நாங்கள் ஆராய்ந்த போது…” என்று ஆரம்பித்த பொறியியல் தலைவரை கை காட்டி நிறுத்தினார் கடவுள். “நடந்து போனதை பற்றி அலசி ஆராய நாம் இங்கு வரவில்லை. இழந்த பிரபஞ்சத்தை விரைவாக மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்கவே நாம் இங்கு கூடியிருக்கிறோம்.”
செயல்பாட்டுத் தலைவர், “எங்கள் காப்புப்பிரதியிலிருந்து (Backups) பிரபஞ்சத்தை மீட்டெடுக்க முயற்சி செய்யலாம். இதற்கு முன்பு நாங்கள் அதை செய்ததில்லை, ஆனாலும் முயற்சி செய்து பார்க்கலாம்.” என்றார்.
“இழந்த எல்லாவற்றையும் திரும்பப் பெறுவோமா?” என்று கேட்டார் கடவுள்.
“பிரபஞ்சத்தின் கடைசி காப்பு நேற்று காலை 6:00 மணிக்கு எடுக்கப்பட்டது. காலை 6:00 மணிக்குப் பிறகு பிரபஞ்சத்தில் நடந்த அனைத்தையும் இழந்துவிடுவோம்.”
“இந்த செயல்பாட்டில் ஏதாவது ஆபத்து உள்ளதா?” கடவுள் பொறியியல் தலைவரைப் பார்த்துக் கேட்டார்.
“உறுதியாக சொல்வது கடினம். பிரபஞ்சத்தில் பல்வேறு விஷயங்கள் இருந்தன – விண்மீன் திரள்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள் மற்றும் உயிரினங்கள் – இவை அனைத்தும் அவற்றின் முந்தைய நிலைக்கு சரியாக மீட்டமைக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.”
“இதை விட்டால் வேறு வழி ஒன்றும் நமக்கு இல்லை, அப்படித்தானே?” என்று கேட்டார் தலைமைப் பணியாளர். யாரும் பதில் சொல்லவில்லை.
கடவுள் எழுந்தார். “காப்புப்பிரதியிலிருந்து மீட்டெடுக்கும் செயல்பாட்டை உடனே துவங்குங்கள். எட்டு மணி நேரம் கழித்து மறுபடி இதே அறையில் நாம் சந்திக்கலாம்.” …
சென்னையிலிருந்து நாப்பது மைல் தொலைவில் உள்ள புறநகர்ப் பகுதி ஒன்றில் வசிக்கும் 27 வயதான ராமலிங்கம், காலை 6:15 க்கு எழுந்தபோது, படுக்கையறையில் ஏதோ விசித்திரமாக உணர்ந்தான். அறையில் உள்ள அனைத்து பொருட்களும் – டிரஸ்ஸர், புத்தக அலமாரி, படுக்கை விளக்கு, சுவரில் உள்ள புகைப்படங்கள் – அனைத்தும் எந்தவித ஆழமும் இல்லாமல் தெரிந்தன. அவன் குளியலறைக்குள் நுழைந்து, லைட் ஸ்விட்சை தட்டி, தனது டூத் பிரஷை எடுத்தான். நிமிர்ந்து கண்ணாடியைப் பார்த்தவன்… அலறினான்.
அவனுக்கு ஒரு கண் மட்டுமே இருந்தது.