ராஜசேகர் ரோபாட்டிக்ஸ் துறையில் ஒரு முக்கியமான புள்ளி. பெங்களூரிலிருந்து செயல்படும் அவரது நிறுவனமான சைபோடெக் தயாரிக்கும் ரோபோக்கள் தோற்றத்தில் மட்டுமல்ல, செயல்பாட்டிலும் மனிதர்களை போலவே இருப்பவை. அவைகளுக்கும் மனிதர்களுக்கும் துளி கூட வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாது. பல்வேறு துறைகளில் அந்த ரோபோக்கள் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், ஒரு புதிய துறையில் தன் ரோபோக்களை நுழைத்து ஒரு பெரிய மார்க்கெட்டை பிடிக்க திட்டம் போட்டார் ராஜசேகர்.
ஒரு கோடை நாளில் மும்பைக்கு சென்று பிச்சை தொழிலில் செல்வாக்கு மிக்க தலைவர்களாக இருந்த ஆதித்யா, விஷால் இருவரையும் சந்தித்தார் ராஜசேகர். பிச்சைத் தொழிலின் பல்வேறு நுணுக்கங்களை நுட்பமாக அறிந்தவர்கள் ஆதித்யாவும் விஷாலும். மும்பையின் நூற்றுக்கணக்கான தெருக்களில் பிச்சை எடுக்கும் ஒவ்வொரு பிச்சைக்காரனும் பிச்சைக்காரியும் அவர்கள் கீழ் வேலை செய்பவர்கள். அவர்களுக்கு தெரியாமல் மும்பையில் யாரும் ஒரு பைசா கூட பிச்சையாக வாங்க முடியாது. ஆதித்யா வியாபாரத்தை கவனித்துக் கொண்டான். விஷால் வியாபாரத்தில் வேலை செய்பவர்களை அதாவது பிச்சைக்காரர்களை கவனித்துக் கொண்டான்.
ராஜசேகர் தன் முன்னே உட்கார்ந்திருந்த ஆதித்யாவையும் விஷாலயும் பார்த்து புன்முறுவலித்தார். அவரது கண்களில் உற்சாகம் மின்னியது. “ஆதித்யா, உங்கள் தொழிலில் பெரும் புரட்சியை ஏற்படுத்தக் கூடிய ஒன்றை நான் உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன்.”
ஆதித்யா ஆர்வத்துடன் புருவத்தை உயர்த்தினான். “சொல்லுங்கள்.”
“உங்கள் தொழில் இப்போது பிச்சைக்காரர்களின் கடுமையான பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. கட்டிட வேலை, வீட்டு வேலை, சமையல் வேலை, டெலிவரி வேலை என்று நன்றாக சம்பாதிப்பதற்கு பல வேலைகள் இருக்கும் போது வெகு சிலரே பிச்சை எடுத்துப் பிழைப்பதற்கு வருகிறார்கள். அதனால் உங்கள் டர்ன்ஓவர் நிறையவே வீழ்ந்திருக்கிறது.”
“உண்மை தான்,” என்று பெருமூச்சு விட்டான் ஆதித்யா. “இந்தப் பிரச்சனைக்கு உங்களிடம் தீர்வு ஏதேனும் இருக்கிறதா?”
“இருக்கிறது,” என்று சொல்லிவிட்டு ராஜசேகர் எழுந்து சென்று அறையின் கதவைத் திறந்தார். திறந்த கதவின் வழியே ஒரு ரோபோ உள்ளே நுழைந்தது.
அது ரோபோ தானா? அசல் பிச்சைக்காரி போலவே இருந்தது அந்த ரோபோ. கந்தலான கிழிந்த ஆடைகள், கையில் ஒரு அலுமினிய குவளை, தலையில் போலி இரத்தம் தோய்ந்த கட்டுகள் என்று ஒரு பிச்சைக்காரியின் எல்லா அம்சங்களையும் கொண்டிருந்தது. ஒரு தேர்ந்த பிச்சைக்காரி போலவே நடந்தது, அசைந்தது. தன் இரு கைகளையும் ஆதித்யாவின் முன் நீட்டி பிச்சை கேட்பது போல் நின்றது.
“இது தான் பிச்சை தொழிலின் பிரகாசமான எதிர்காலம்,” என்று பெருமையுடன் கூறினார் ராஜசேகர். “என்னுடைய இந்த ரோபோக்கள் மும்பையின் தெருக்களில் கடுமையான வெயிலில் பதினான்கு மணி நேரம் அயராது பிச்சை எடுப்பார்கள். இவர்கள் ஓய்வு எடுக்க மாட்டார்கள். பாத்ரூம் போக மாட்டார்கள். சம்பள உயர்வு கேட்க மாட்டார்கள். இவர்கள் உங்களுக்கு கொண்டு வரப் போகும் லாபத்தை கற்பனை செய்து பாருங்கள்.”
அசந்து போய் உட்கார்ந்திருந்த ஆதித்யா ரோபோவையே சிறிது நேரம் உற்று நோக்கினான். பிறகு ராஜசேகரிடம் திரும்பி, “இம்மாதிரி எத்தனை ரோபோக்களை உங்களால் சப்ளை செய்ய முடியும்?” என்று கேட்டான்.
ராஜசேகர் பெருமிதத்துடன் சிரித்தார். “நூற்றுக்கணக்கான ரோபோக்களை. நீங்கள் ஒரு பிச்சைக்காரப் படையையே உருவாக்கி, உங்கள் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தலாம். டெல்லி , கொல்கத்தா, சென்னை போன்ற பிற நகரங்களில் உங்கள் செயல்பாடுகளைத் தொடங்கலாம். பிச்சைக்காரர் பற்றாக்குறையைப் பற்றி நீங்கள் இனி ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை.”
விஷால் எதுவும் பேசாததைக் கவனித்த ஆதித்யா அவனிடம் திரும்பி, “நீ என்ன நினைக்கிறாய் விஷால்?” என்றுகேட்டான்.
“இந்த கான்செப்ட் ரொம்பவே பிரில்லியன்டாக இருக்கிறது,” என்றான் விஷால் தொண்டையைச் செருமிக் கொண்டு. “ஒரு வெற்றிகரமான பிச்சைத் தொழிலுக்குத் தேவையான எல்லா அம்சங்களும் இதில் இருக்கின்றன, ஒன்றே ஒன்றைத் தவிர. துரதிர்ஷ்டவசமாக அது ஒரு பெரிய அம்சம்.”
ராஜசேகரின் சிரிப்பு நின்றது. “என்ன சொல்கிறீர்கள்?”
“பிச்சை எடுப்பது என்பது பிச்சைக்காரனுக்கும் பிச்சை கொடுப்பவருக்கும் உருவாகும் உணர்ச்சிபூர்வமான ஒரு தொடர்பைப் பற்றியது. பிச்சைக்காரனைப் பார்த்த அடுத்த நொடியே பிச்சை கொடுப்பவர் மனதில் ஒரு ஆழமான இரக்க உணர்வு பிறக்க வேண்டும். ஒரு திறமையான பிச்சைக்காரன் அந்த இரக்க உணர்வை எப்படி உருவாக்குகிறான் தெரியுமா?”
ராஜசேகர் மௌனமாக இருக்க, விஷால் தொடர்ந்தான். “பிச்சைக்காரனின் கிழிந்த ஆடைகளோ, போலி ரத்தக் கட்டுகளோ அந்த இரக்க உணர்வை உருவாக்குவதில்லை. அவையெல்லாம் வெறும் ஆடை அணிகலன்களே. இறுதியில், பிச்சைக்காரனின் கண்களில் தோன்றும் மகத்தான சோகம் தான் பிச்சை கொடுப்பவரின் இதயத்தைத் தொடுகிறது. அவர் மனதில் அபரிதமான இரக்க உணர்வை உருவாக்குகிறது. அது இல்லாமல், எதுவும் இல்லை – உணர்ச்சிபூர்வமான தொடர்பு இல்லை, இரக்க உணர்வு இல்லை, தொழில் பரிவர்த்தனை இல்லை. உங்களுடைய ரோபோவின் கண்களில் நான் அந்த சோகத்தை உணரவில்லை.”
விஷால் எழுந்து நின்றான். “எங்களை சந்தித்ததற்கு மிக்க நன்றி, ராஜசேகர். எப்போது உங்கள் ரோபோவின் கண்களில் அந்த சோகத்தை உருவாக்க முடிகிறதோ அப்போது எங்களுக்கு சொல்லி அனுப்புங்கள்.”