APX777 எனும் கிரகத்தில் கடந்த பதினான்கு நாட்கள் தங்கியிருந்த விண்வெளி வீரர் மிஷ்ராவிற்கும், அவரது செல்லக் குரங்கு ஜானிக்கும் அதுவே கடைசி தினம். பூமிக்கு திரும்பிச் செல்வதற்கு வேண்டிய ஆயத்தங்களை சுறுசுறுப்படுன் மேற்கொண்டிருந்தார் மிஷ்ரா.
மிஷ்ரா கடந்த பதினான்கு நாட்கள் அங்கு நடத்திய ஆய்வுப் பணி வெற்றிகரமாகவே நடந்தது. பூமிக்கப்பால் பூமியைப் போலவே ஏதாவது கிரகம் இருக்குமா என்ற தேடலுக்கு பதில் அளிக்கும் வகையில் APX777 இருந்தது. அந்தக் கிரகம் அதன் சூரியனிலிருந்து சரியான தொலைவில் இருந்தது. பூமியைப் போலவே, வளிமண்டலம், மேகங்கள், நீர் மற்றும் ஏராளமான ஆக்ஸிஜனைக் கொண்டிருந்தது. மேலும் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அந்தக் கிரகித்தில் இருந்த ஊட்டச்சத்து நிறைந்த மண். அதில் கிழங்கு, காய்கறி, பழங்கள், நெல் என்று எதை வேண்டுமானாலும் சுலபமாக வளர்க்கலாம்.
அந்தக் கிரகத்திலிருந்து கிளம்ப வேண்டிய தருணம் வந்து விட்டது. குரங்கு ஜானியை விண்கலத்தினுள் ஏற்றி விட்டு தானும் ஏறிக் கொண்டார் மிஷ்ரா. விண்கலத்தினுள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று முழுமையாக சோதித்து விட்டு, விண்கலத்தின் வாயிற்கதவை மூடும் பட்டனை அழுத்தினார். வாயிற்கதவு முழுவதும் மூடுவதற்குள் ஜானி விளையாட்டுத்தனமாக செய்த ஒரு காரியத்தை மிஷ்ரா கவனிக்கவில்லை.
தான் பாதி சாப்பிட்டு மீதி வைத்திருந்த வாழைப் பழத்தை வீசி எறிந்தது ஜானி. இரண்டு பல்டி அடித்து அது விழுந்தது APX777ன் மண்ணில்.