என் வாழ்வில் முதல் முறையாக மரண பயம் வந்தது. நான் கடந்த மூன்று வாரங்களாக நிலாவில் வசித்து வருகிறேன். அங்கே காலனி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ என்னை அனுப்பி இருந்தது. பத்து வாரங்களுக்கு போதுமான தண்ணீர் மற்றும் உணவுடன் ஒரு சிறிய தற்காலிக கேபினில் தங்கியிருந்தேன். தனிமையான ஒரு வாழ்க்கை. நிலவின் மேற்பரப்பில் ரோவர் ஓட்டி, பல்வேறு சோதனைகளை நடத்தி என் நேரத்தை செலவழித்தேன்.
இன்று காலை நான் கேபினை விட்டு வெளியேறி ரோவரை ஒரு நூறு அடி ஓட்டி இருப்பேன். திடீரென்று நிலவின் மேற்பரப்பு கடுமையாக குலுங்கியது. நான் திரும்பிப் பார்த்தால், என் கேபின் இடிந்து விழுந்து கொண்டிருந்தது. நாற்பத்தைந்து வினாடிகள் நீடித்த நிலநடுக்கம் எல்லாவற்றையும் அழித்து விட்டது. எனது குடிதண்ணீர் கொட்டி விட்டது. உணவு சேதமடைந்தது. தகவல் தொடர்பு சாதனங்கள் சிதைந்து விட்டன.
நான் குடிப்பதற்கும் சாப்பிடுவதற்கும் எதுவும் இல்லாமல், பூமியுடன் தொடர்பு கொள்ள முடியாமல் நிலவின் மேல் தனியாக நின்று கொண்டிருந்தேன். நான் வழக்கமாக வாரத்திற்கு ஒரு முறை மிஷன் கன்ட்ரோலுடன் பேசுவேன். முந்தைய இரவு தான் நான் அவர்களுடன் பேசினேன், அதனால் எனக்கு உதவி தேவை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வதற்கு குறைந்தது ஒரு வாரமாவது ஆகும். நான் ஒரு வாரம் ரோவரில் தங்கி இருக்க முடியும், ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு வாரம் என்னால் வாழ முடியாது. நான் பூமியுடன் தொடர்பு கொள்ள உடனே ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. மிக மிக அவசரம்.
அப்போதுதான் நிலவின் மேற் பரப்பில் இருந்த அடர்த்தியான தூசியில் ரோவரின் கூர்மையான தடங்களை நான் கவனித்தேன்.
…
அமெச்சூர் வானியலாளரான ஷீலா, ஒரு தெளிவான இரவில் நிலவின் வடக்குப் பகுதியை நோக்கி தனது தொலைநோக்கியைத் திருப்பியபோது, அவள் இதுவரை பார்த்திராத ஒரு விசித்திரமான வடிவத்தை அங்கே கண்டாள். அதை தெளிவாகப் பார்க்க அவள் ஃபோகஸ் குமிழியைச் சுழற்றினாள். அப்போது அவள் பார்த்தது அவளை அதிச்சியில் உறைய வைத்தது. நிலவின் மேற்பரப்பில் அவள் பார்த்தது நான்கு சிறிய எழுத்துக்களை-
H E L P