காலை 8 மணியளவில் நான் என் இஸ்ரோ அலுவலகத்திற்குள் நுழைந்தபோது, ராமச்சந்தரும் செந்தில் நாதனும் எனக்காகக் காத்திருந்தனர். பூமிக்கு பதிலாக பூமியின் சகல அம்சங்களும் கொண்ட இன்னொரு கிரகத்தைத் தேடும் எனது குழுவில் அவர்கள் ஒரு பகுதியாக இருந்தனர். பத்து வருட நீண்ட தேடலுக்குப் பிறகு, பதினைந்து சாத்தியமான கிரகங்களைக் பட்டியலிட்டோம். அதிலிருந்து மனிதர்கள் வாழ்வதற்கு மிகச் சிறந்த கிரகம் என AX149ஐ தேர்ந்தெடுத்தோம். ராமச்சந்தரும் செந்தில் நாதனும் ஏழு நாட்கள் AX149இல் தங்கி இறுதி மதிப்பீட்டைச் செய்து விட்டு நேற்று தான் பூமிக்கு திரும்பினர்.
நான் ஒரு பெரிய புன்னகையுடன் அவர்களை வரவேற்று உடனே விஷயத்திற்கு வந்தேன். “AX149 நம் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது என்பதை உலகிற்கு அறிவித்து விடலாமா?”
அதற்கு செந்தில் நாதன், “AX149 நமக்குத் தேவையான அனைத்தையும் கொண்டுள்ளது சார். அடர்த்தியான வளிமண்டலம், ஏராளமான ஆக்ஸிஜன், தாவரங்கள், விலங்குகள், நிறைய நீர் மற்றும் சரியான தூரத்தில் ஒரு நட்சத்திரம் என்று நாம் எதிர் பார்க்கும் எல்லாமே அங்கு இருக்கிறது. ஆனால்…” என்று சொல்லி விட்டு ராமச்சந்தரைப் பார்த்தார்.
சில நொடிகளுக்குப் பின் ராமச்சந்தர், “எங்களுக்கு ஒரே ஒரு விஷயம் கொஞ்சம் கவலையாக இருக்கிறது சார்.”
“என்னய்யா அது?”
“முதலில் நாங்கள் அதை கவனிக்கவில்லை. இரண்டு நாட்கள் போன பின் தான் உணர்ந்தோம். அந்த கிரகத்தில் வண்ணங்களே இல்லை சார். மண், செடிகள், மரங்கள், மலைகள் மற்றும் விலங்குகள் என நாங்கள் அங்கு பார்த்த அனைத்துமே கருப்பு அல்லது வெள்ளை நிறத்தில் தான் இருந்தன. அந்த கிரகத்தில் எங்கு சென்றாலும் ஒரு B&W திரைப்படத்தைப் பார்ப்பது போல் தான் இருந்தது.”
எதையெல்லாமோ கற்பனை செய்து கொண்டிருந்த நான் அதை எதிர்பார்க்கவில்லை. சில நொடிகளுக்குப் பிறகு நான் கேட்டேன். “ஹ்ம்… வண்ணங்கள் அங்கு இல்லை… அதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்ன?”
“சார், உங்கள் குழந்தைகள் நிறமற்ற ஓர் உலகில் வளர்வதை நீங்கள் விரும்புவீர்களா?”