224..225..226..227.. லிஃப்ட் கதவு திறந்தது. லிஃப்டிலிருந்து குமார் வெளிபட்டான். உலகின் மிகசிறிய கட்டிடமான இதில் ஒவ்வொரு தளத்திலும் 300 அறைகள் இருந்தது. குமார், தனக்கு வலது பக்கமாக இருந்த கனினித் திரையில் கட்டவிரலை பதித்துவிட்டு அறைகளை நோக்கி தரையோடு ஓடிக் கொண்டிருந்த எஸ்கலெட்டரில் நின்றுக் கொண்டான். அவன் அறைக்கு நேராக வந்து நின்றவுடன் முற்றதில் இருந்த ஸ்பீக்கரில் ரூம் நம்பர் – ஒன் டூ செவன் என்று ஒரு பெண் குரலில் ஒலித்தது. எஸ்கலெட்டரிலிருந்து இறங்கி அறை கதவருகே சென்று இட்ஸ் குமார் என்றதும் ஐந்து வினாடிகள் கடந்தன பிறகு வாய்ஸ் லாக் டீயாக்டிவேட்டெட் என கூறி கதவு வலபக்கமும் இடபக்கமும் பிளந்தது.
குமார்- ஒரு மருத்துவ விஞ்ஞானி . தன் மனைவி லீலாவோடு சென்னையிலுள்ள கோடம்பாக்கத்தில் வசித்து வந்தான். லீலா எட்டு மாதம் முழுகாமல் இருந்தாள். ஆனால், அது வெளியே யாருக்கும் தெரிந்திருக்கவில்லை இருவரும் ரகசியமாகவே அந்த குழந்தையை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருந்தனர். அதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.
அறையில் லீலா, டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். குமாரை பார்த்ததும் இன்னைக்கு செய்தி பார்த்தீங்களா.. என கேட்டு தன் கையில் இருந்த மொபைலில் இருந்து செய்தி சேனலை விரல்களால் நசுக்கி எடுத்து டிவி திரையை நோக்கி வீசினாள். குமார் செய்தியை கேட்டுக் கொண்டே அவள் அருகில் அமர்ந்தான்.
சென்னையில் நேற்று அரசு தடையை மீறி ரகசியமாக குழந்தை பெற முயற்சி செய்த தம்பதியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சென்னை கோயம்பேட்டில் வசித்து வருபவர் ராமைய்யன்… செய்தி தொடர்ந்துக் கொண்டிருந்தது.
பயமா இருக்குது குமார். லீலா
தேவையில்லாமல் பயப்படாதே லீலா. முதலில் இது போன்ற
செய்திகளையெல்லாம் பார்க்காதே. குமார்
என் பயம் அரசாங்கத்தை பார்த்து இல்ல குமார். நம்ம குழந்தையை பற்றி தான். குழந்தைக்கு எதுவும் ஆகிவிட கூடாது.
என் மேலே உனக்கு நம்பிக்கை இல்லையா..? நீ புத்திசாலி. நான் சொல்லியது குறுகிய காலத்தில் புரிந்தது உனக்கு மட்டும் தான். என்னை நம்பு… குழந்தை பிறந்தவுடன் நாம் இங்கு இருக்கப்போவதில்லை. நமக்காக ஒரு தீவு காத்திருக்கிறது. இது என் வாழ்நாள் சாதனை லீலா. மனிதர்களுக்கு பல நூற்றாண்டுகளாக இருக்கும் பிரச்சனைக்கு நான் தீர்வு கண்டுபிடிச்சுட்டேன். நம் குழந்தை மூலமாக இதை சோதித்தும் காட்டப் போகிறேன். அதுவும் இல்லாமல் நமக்கு இதை செய்து முடிப்பதை தவிர வேறு வழியில்லை.
ம்… என பெருமூச்சு விட்டபடி தலையசைத்தாள் லீலா.
நீ இனையதளத்தில் படிப்பதை நிறுத்து அதான் இவ்வளவு குழப்பத்திற்கும் காரணம். தினமும் டிவியில் புது படமா ரிலீஸ் ஆகுதுல்ல அதை மட்டும் பாரு. அதையும் மீறி உனக்கு ஏதாவது படிக்க வேண்டும் என்று தோன்றினால் என்னுடைய அலமாரியில் இருக்குற புத்தகங்களை எடுத்து படி. என அலமாரியை சுட்டிக்காட்டியபடி சமையல் அறைக்குள் சென்றான்.
அலமாரியில் விரல் வைத்து வருடிக் கொண்டே ஒவ்வொரு புத்தகமாக பார்த்துக்கொண்டிருந்தாள் லீலா. ஒரு புத்தகத்தின் விளிம்பில் மாற்றம் என எழுதப்பட்டு இருந்தது. அதை எடுத்து பொருளடக்கத்தை வாசிக்கத் துவங்கினாள். நமூக்கள் என்ற தலைப்பை தேர்ந்தெடுத்து பக்கத்தை பார்த்தாள். பக்கம் – 349. அந்த பக்கத்தை பிளந்து குமார் எனக்கு காஃபி வேனும் என கூறிக்கொண்டே படிக்…..
கி.பி 2012ல் உலகம் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்ட பிறகு ( 2012ல் கிறிஸ்துவுக்கு முன் – பின் என உலக வரலாறு பிரித்து அறியப்பட்டுவந்தது. ) மனித இனம் தன்னை வேகமாக புதுப்பித்துக் கொள்ள ஆரம்பித்தது. அதன் வேகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என்னால் முடிந்தவரை தடிமனான வார்த்தைகள் எதுவும் இல்லாமல் சுருக்கமாக எழுதிவிடுகிறேன்.
மனித இனத்தின் பயணம் துவங்கிய தேசம் கி.மு – கி.பியில் இருந்த ஆப்பிரிக்க கண்டத்தில் என கருதப்படுகிறது. தன்னை புதுப்பித்துவிட்டு மீண்டும் அதே கண்டத்தை தான் திரும்ப கொடுத்தது உலகம். இந்த புதுப்பித்தலுக்கு பிறகு வரலாறு புதுப்பித்தலுக்கு முன் – பின் ( பு.மு – பு.பி ) என பிரிக்கப்பட்டது. வருடம் 0001ல் இருந்து துவங்கியது.
மனிதர்கள் இரண்டாவது முறையாக ஆப்பிரிக்காவில் குடியேறிய பின்பு வெகுஜோராக இனப்பெருக்கதிலும் விவசாயதிலும் ஈடுபடத் துவங்கினார்கள். விஞ்ஞானம் குறைந்தபட்ச கேள்விகள் கூட எதுவும் இல்லாமல் வளரத் துவங்கியது. 700 கோடிக்கு மேல் வாழ்ந்தவர்களில் மிச்சம் இருந்தது சில இலட்சம் மக்கள் தான். இந்த சில இலட்சமும் விஞ்ஞானத்தின் உதவியால் தான் காப்பாற்றபட்டது என மக்கள் முழுமையாக நம்பினார்கள். அதன் பிறகு தங்கள் மனதிலிருந்து சினிமாவை தூக்கிவிட்டு அங்கே விஞ்ஞானத்தை வைத்துக் கொண்டார்கள். சாலையோர துணிக் கடைகளில் விஞ்ஞானிகளின் முகம் பதியப்பட்ட டீ-சர்ட்களை கேட்டு வாங்கி உடுத்தும் அளவுக்கு விஞ்ஞானிகள் மக்கள் மனதில் பதிந்துவிட்டனர். 2012 க்கு முன்பும் சரி இப்போதும் சரி இலக்கியவாதியின் நிலை ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது.300 ஆண்டுகளுக்கு மேல் எந்த ஒரு கவலையும் இல்லாமல் இனப் பெருக்கம் தொடர்ந்தது. இந்த இனப்பெருக்க ஜோரில் தன்னோடு சேர்த்து மனிதர்களை போலவே மற்றொரு இனமும் வளர்ந்து வருவது கவனிக்கப் படவில்லை.
ஒருவழியாக பு.பி 355ல் நிவ்ராட் என்ற விஞ்ஞானியின் மூலம் மனிதர்கள் இரு இனங்களாக வேறுபட்டுள்ளார்கள் என நிரூபிக்கப்பட்டது. அவருக்கு முன்பே சிலர் அந்த இனத்தை பற்றி தகவல்களை வைத்திருந்தாலும் நிவ்ராட் அதை பரிசோதனை செய்து நிரூபித்துக் காட்டினார். மலத்திலிருந்து குளோனிங் வரை இவர் ஆராய்ச்சி செய்யாத விஷயங்களே இல்லை. அவர் எழுதிய புத்தகத்தில் நமூக்களின் உருவாக்கம் மனிதனின் உயிரனுவில் உண்டான மாற்றம் தான் காரணம் என குறிப்பிட்டு அவர்களின் உடலியல் மனவியல் பற்றி தெளிவாக எழுதியிருக்கிறார். அவர் எழுதிய பெரும்பாலான புத்தகங்கள் நூலகத்தில் கிடைப்பதில்லை. இணையத்தில் ஆர்டர் கொடுத்து தான் பெற முடியும். அதுவும் அவ்வளவு சுலபத்தில் கிடைப்பதில்லை. அவர் எழுதிய முக்கியமான The New World புத்தகத்தை கூட இணையத்தில் ஆர்டர் கொடுத்து இரண்டு மாதம் கழித்து தான் கைக்கு வந்தது. குளோனிங் என்றவுடன் ஒரு விஷயம் எனக்கு நினைவுக்கு வருகிறது. பு.மு காலத்திலேயே மனிதர்கள் குளோனிங் முறையை கண்டுவிட்டனர். அப்போது அம்முறை தடை செய்யப்பட்டிருந்தது. சரியாக பு.பி 455க்கு மேல் அந்த குளோனிங் முறை மீண்டும் தேவைப்பட்டது.
நிவ்ராட்டின் திட்டவட்ட அறிக்கைக்கு பிறகு உலகமெங்கும் நமூக்கள் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் இனத்தை சேர்ந்தவர்களை தனியாக அடையாளம் காணப்பட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. கணக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு நமூக்களே இருந்தனர். அதிலும் நூறு வயதுக்கு மேல் நிறைய பேர் வாழ்ந்து வந்தனர். இந்த கணக்கெடுப்பே நமூக்களின் எதிர்காலத்தை தீர்மானித்துவிட்டது. இந்த சமயத்தில் மனிதர்கள் சில தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட துவங்கினர். அப்போதுவரை அரசு அதிகார மட்டதில் இயங்கிவந்த நமூக்களையெல்லாம் இடம்பெயர்த்துவிட்டு மனிதர்களையே நியமித்தக் கொண்டனர். நமூக்கள் தாங்களும் மனிதர்கள் தான் என நம்பி வந்ததால் இந்த நடவடிக்கையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்த வருடமே மீண்டும் கணக்கெடுப்பு நடந்தது. அப்போதும் நமூக்களின் எண்ணிக்கையே அதிகமாக கானப்பட்டது. மனிதர்கள் அதை பெரிய பிரச்சனையாகவே கருதினார்கள். இதனால் மனித இனம் அழிந்துவிடுமோ என பயந்தார்கள். நமூக்கள் என்ற மற்றொரு இனம் பூமியின் மாற்று இனமாக மாற துவங்கியது. அதன் பிறகு உலக நாடுகளின் அதிகார மையங்கள் ஒன்றுகூடி முடிவு செய்து சில சட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்தன. அறிவிக்கப்பட்ட அத்தனை சட்டங்களும் நமூக்களுக்கு எதிரானது. நமூக்களும் மனிதர்களும் பாலுறவில் ஈடுபட கூடாது. மனிதர்கள் திருமனம் செய்துக்கொள்ளும் போது அதற்கென அமைக்கப்பட்டுள்ள அரசு அலுவலகத்தில் அனுமதி சான்றிதழ் பெற வேண்டும். அந்த சான்றிதழை வைத்து அரசாங்கத்திடம் புதிதாய் ஒரு குளோனிங் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மாதம் 20 ஆணுறை வழங்கப்படும். அணுறை அணியாமல் பாலுறவில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும்.
இதன் பிறகு சில ஆண்டுகள் சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை. நமூக்களுக்கு இது போதாத காலம். சாலையெங்கும் சகதி போல ரத்தம் உறைந்து கானப்பட்டது. வீதியெங்கும் பினங்கள். எந்த கேள்வியுமின்றி நமூக்கள் வேட்டையாடப்பட்டு தலை துண்டிக்கப்பட்டது. பெண்களின் நிலை பரிதாபத்துக்கும் மேல் பரிதாபமாக மாறியது. கற்பழிப்பு இயந்திரத்தை வைத்து கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்டனர்.
உருவ அமைப்பில் நமூக்கள் பார்ப்பதற்கு மனிதர்களை போலவே இருப்பவர்கள். அவர்கள் மனதிலோ உடலிலோ அழுத்தம் கூடும் பொது கருவிழி சிவப்பாக மாறிவிடும். உடலுறுப்புகளில் எதாவது ஒன்று வித்தியாசமாக கானப்படும். மூளை செயல்பாடு மனிதர்களை விட இரண்டு மடங்கு அதிகம். மனிதர்களுடைய தற்போதைய ஆயுட்காலம் அறுபது ஆண்டுகள் நமூக்களுக்கோ நூற்றைம்பது ஆண்டுகள். மனிதன் தன்னை மேல் நிறுத்திக்கொள்ள ஆக்கவும் மட்டுமல்ல அழிக்கவும் கற்றுக் கொள்கிறான். ஆரம்பத்தில் சில நாட்கள் இந்த விஷயம் மக்களின் பார்வைக்கே வரவில்லை. ஆங்காங்கே நமூக்கள் கைது செய்யப்பட்டு சிறையிலிட்டு கொல்லப்பட்டு வந்தனர். (எனக்கு பு.முவில் வாழ்ந்த ஹிட்லரின் நினைவுதான் வருகிறது.) நமூக்கள் படுகொலை செய்யப்படுவதை மீடியாக்கள் உளவு பார்த்த பிறகு நிலைமை சூடு பிடிக்க துவங்கியது. ஆங்காங்கே அரசின் இந்த கொடூர நடவடிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களும் உண்ணாவிரதங்களும் துவங்கியது. ம்ஹும்… மனிதர்கள் செவிசாய்ப்பதாக தெரியவில்லை. பொருமை இழந்த சில நமூக்கள் அரசை எதிர்த்து கலவரத்தில் ஈடுபடத் துவங்கினர். இப்படியொரு சூழலில் தான் என்.ஓ.என் இயக்கம்…..
லீலா, காஃபி ரெடி என கோப்பையை நீட்டினான் குமார்.
புத்தகத்தை மூடி வைத்து விட்டு குமாரின் தோளில் சாய்ந்துக் கொண்டு காஃபியை உறிஞ்சினாள்.
மாற்றம்… இதில் எந்த கட்டுரையை படிச்சிட்டு இருந்தாய். குமார்
பக்கம் – 349 நமூக்கள் பற்றிய கட்டுரை. லீலா
நாதம் எழுதின கட்டுரை தானே…
ஆமாம், இதை முன்பே படித்துவிட்டாயா..?
ம்… அந்த புத்தகம் எனக்கு முழு மனப்பாடம். அதுல என்.ஓ.என் இயக்கத்தை பற்றி வருமே..
யெஸ்.. அதை பற்றி படிக்க ஆரம்பித்தேன் சரியாக நீ காஃபி கொண்டு வந்துவிட்டாய்.
என்.ஓ.என் பற்றி நாதம் ரொம்ப சுருக்கமாக எழுதியிருப்பார். அலமாரியில் புரட்சி என்ற தலைப்பில் ஒரு புத்தகம் இருக்கும் அதை படித்துபார்.
பேசிக்கொண்டிருக்கும் போதே குமாரின் மொபைல் சினுங்கியது. ஃபோனை எடுத்துக் கொண்டு பால்கனி சென்றான். லீலா, மீண்டும் விட்ட பக்கத்தை பிரித்து தொலைத்த வரியை தேடி வாசிக்க ஆரம்பித்தாள்.
இப்படியொரு சூழலில் தான் என்.ஓ.என் இயக்கம் தன்னை அடையாளப் படுத்திகொண்டது. என்.ஓ.என் என்பதன் முழு அர்த்தம் Nation of Namos. நமூக்களை பற்றிய முதல் கணக்கெடுப்புக்கு பிறகு அதிகார மையத்தில் தாங்கள் பலவந்தமாக நீக்கப்பட்டதை சில நமூக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏதோ விபரீதம் நடக்கப்போவதாக உணர்ந்தார்கள். அரசுக்கு தெரியாமல் தங்களுக்குள் ஒரு உடன்படிக்கை செய்துக்கொண்டு குழு ஒன்றை ஆரம்பித்தார்கள். அக்குழு ஒரு பக்கம் அரசை எதிர்த்து அர்ப்பாட்டம் செய்துக்கொண்டு ஒரு பக்கம் ஆயுதம் ஏந்திய படையை தயார் செய்துக் கொண்டிருந்தது.
இதற்கிடையில் மனிதர்கள் குளோனிங் முறையில் தன் இனத்தை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். என்.ஓ.என் தன் முதல் தாக்குதலை மிக பிரம்மாண்டமாக நிகழ்த்திக் காட்டியது. நமூக்கள் அதிகமாக பாதிக்கப்பட்ட தேசங்கள் முதலில் தாக்கப்பட்டது. எல்லா தேசங்களிலும் ஒரே நேரத்தில் இந்த புரட்சி நடந்தது. இதனால், நேச நாடுகளிடம் உதவிகள் பெறமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. நூற்றுக்கு எம்பது சதவிகிதம் வெற்றியில் முடிந்தது. ஒவ்வொரு தேசத்திலும் குறிப்பிட்ட பகுதியை கைப்பற்றினர். ராணுவ கிடங்குகள் காவல் நிலையங்களெல்லாம் சூரையாடப்பட்டது. அரசு அலுவலகங்கள் கையகப்படுத்தப்பட்டன. இறுதியில் என்.ஓ.என் என்ற இயக்கம் நமூக்களுக்கான தேசத்தை நிறுவியது. சிறை படுத்தப்பட்ட பகுதிகளை மனிதர்களால் மீட்கவே முடியவில்லை. இரு தரப்பிலும் இருந்த மாற்று இனங்கள் தமக்கென இருக்கும் தேசத்தில் வாழத் துடித்தனர். பலத்த பாதுகாப்போடு அவர்கள் இடம் பெயர்க்கப்பட்டார்கள். வெகுநாட்களுக்கு பிறகு C.M.N என்ற பொதுவான குழு…….
நிற்க. லீலாவோடு கட்டுரை வாசிப்பை நிருத்திவிட்டு குமாரை பின் தொடர்வோம்.
ஹலோ…
—————–
சொல்லுங்க சார்..
—————–
டெலிவரி… இன்னும் ரெண்டு மாசத்துல ஆகிடும்.
—————–
ம்ஹும்…. அவளுக்கு இதை பற்றி தெரியாது.
—————–
சார்… அவங்களுக்கு ஆயுதம் பலம் என்றால் நமக்கு மூளையே பலம்.
—————–
நீங்கள் கவலையை விட்டுத்தள்ளுங்க… நமக்கு தேவை அவங்க உயிர் இல்லை பூமி மீது நமக்கு இருக்கும் உரிமை மட்டும் தான். அதை கூடிய சீக்கிரம் தெரிந்துக் கொள்வார்கள். நம்முடைய புதிய ஆயுதம் மனிதர்களுக்கு நிச்சயம் சவாலாக இருக்கும். நான் வேலையை முடித்துட்டு உங்களுக்கு ஃபோன் செய்கிறேன்.
பேச்சை துண்டித்துவிட்டு பார்த்தான்…. பிரம்மாண்ட கட்டிடங்களை தாண்டி… அந்தரத்தில் தொங்கும் ரயில்வே ட்ராக்குகளை தாண்டி… கடல் வழி புகுந்து… கப்பல்களின் முனுமுனுப்பை கேட்டுக்கொண்டே அவன் பார்வை சூரியனை நோக்கி பயனித்தது.