தென்றலழகன் கூறிய காற்றின் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 6,927 
 

(1988ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அக்கினி புத்திரன் சொன்ன நெருப்பின் கதை | தென்றலழகன் கூறிய காற்றின் கதை | மேகநாதன் சொன்ன ஆகாயத்தின் கதை


“கண்ணால் என்னைக் காண முடியாது: ஆனாலும்- நான் இல்லை என்று உங்களால் சொல்லமுடியாது; என் பெயர் என்ன?” – ஒரு விடுகதை.

இன்னும் இரண்டே ரன் எடுத்தால் போதும்; இந்தியா ஆஸ்திரேலியாவை வென்று வெற்றி வாகை சூடிவிடும் என்ற நிலையில் ரவிசாஸ்திரி பாட் செய்து கொண்டிருந்தார். அடுத்து- 

ஆஸ்திரேலிய வீரர் மாத்யூஸ் வீசிய பந்தை ரவிசாஸ்திரி வெகு லாகவமாக அடித்து ஒரு ரன் சேர்த்தார். இப்போது இந்தியா வெற்றி பெறத் தேவையானது ஒரே ஒரு ரன்தான் என்கிற நிலைமை ஏற்பட்டபோது அழகப்பன் தன்னையும் மறந்து “வெல்டன் சாஸ்திரி; விக்டரி ஃபார் இந்தியா” என்று கத்தினான். 

சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் ரசிகர் களிடையே ஏற்பட்டிருந்த பரபரப்பும், மகிழ்ச்சி ஆரவாரமும், டிரான்சிஸ்டரைத் திணர அடித்துக் கொண்டிருந்தது. 

உணர்ச்சியின் உச்ச கட்டத்தில் கிரிக்கெட் காமெண்டரி கேட்டுக்கொண்டிருந்த அழகப்பனின் செவிகளில், வாசலிலிருந்து பலமுறை கூப்பிட்ட கந்தசாமியின் குரல் கேட்கவே இல்லை. 

அழகப்பன் இருக்கிறானா இல்லையா என்று அறிந்து கொள்ள உள்ளே வந்த கந்தசாமி தோள்களைத் தொட்டு, “மண்டபத்திற்கு வரல்லியா அழகப்பா?” என்று கேட்டபோதுதான் அவனுக்கு சுய உணர்வு வந்தது. 

உற்சாகத்தின் விளிம்பில் இருந்த அழகப்பன் கந்தசாமியை அருகில் அமரச் செய்து “இன்னும் ஐந்து நிமிஷத்தில் இந்தியா ஜெயித்து ஆட்டம் முடிந்துவிடும்; சேர்ந்து போகலாம்” என்று பதில் கூறிவிட்டு காமெண்ட்ரியில் புகுந்து விட்டான். 

கந்தசாமிக்குக் கிரிக்கெட்டைப் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும்; அழகப்பனோடு சேர்ந்து போகலாம் என்கிற ஆசையில் உட்கார்ந்திருந்தான். ஆனால் ஆட்டம் முடிந்து ரேடியோவை நிறுத்திய, அழகப்பன் மிகுந்த வருத்தத்துடன், “கந்தசாமி நான் இன்னிக்கு மண்டபத்துக்கு வரல்லே; நீ மட்டும் போயிட்டு வா. எனக்கு மனசு சரியாயில்லை” என்று சொல்லவுமே, ஒன்றும் புரியாத கந்தசாமி, “ஏன் அழகப்பா! திடீர்னு வரல்லேங்கறே? கொஞ்சமுன்னே வரேன்னு சொன்னியே உனக்கு என்ன ஆச்சு?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டான். 

“ஒண்ணும இல்லே கந்தா-இந்தியா ஜெயிக்கும்னு ரொம்ப ஆசையா எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன் “டை” (Tie) ஆயிடுச்சு…” 

“ஆனா உனக்கென்ன? இதபாரு அழகப்பா… நம்மை எல்லாம் ஒரு பொருட்டா மதிச்சு… எங்கேயோ உள்ள தேவகுமாரங்க – அவங்க எங்கே…நாம் எங்கே… – ஆனாலும் எவ்வளவு ஆசையா, அன்பா நம்மைத் தேடி வந்து எவ்வளவு நல்ல நல்ல கதையெல்லாம் சொல்றாங்க. 

நேத்திக்கு மாரியப்பன் வரல்லேங்கறதைக்கூட எவ்வளவு அக்கறையா கேட்டு விசாரிச்சாங்க. அப்படிப்பட்டவங்க இன்னிக்கு உன்னைப் பத்திக் கேட்டா நாங்க என்ன பதில் சொல்லுவோம் யோசிச்சுப் பாரு” 

அழகப்பன் யோசித்தான். ஆமாம் இந்த வருத்தம் கொஞ்ச நேரம். இது அடுத்த டெஸ்ட் டில் மகிழ்ச்சியாகவும் மாறலாம். ஆனால் தேவ குமாரர்கள் எவ்வளவு நல்லவர்கள். இந்தக் கிராமத்துச் சிறுவர்கள் மீதுதான் எவ்வளவு அன்பு காட்டுகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு வரும் கதை என்கிற பெயரில் எனக்குத் தெரியாத அல்லது 
ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய எவ்வளவு நல்ல அறிவியல் விஷயங்களைப்பற்றி எல்லாம் விளக்குகிறார்கள். 

இத்தனை வருஷப்படிப்பில் நான் இதில் கால் பகுதியைக் கூடிப் படித்ததில்லையே – இன்று நான் போகா விட்டால் அவர்கள் ஒன்றும் என்னைச் சபித்துவிடப் போவதில்லை – ஆனால் நஷ்டம் எனக்குத்தானே! மேலும்; தங்களை அலட்சியப்படுத்துவதாக அவர்கள் மனம் ஒரு வேளை புண்படவும் செய்யலாம்… 

“என்ன அழகப்பா யோசிக்கறே?” 

“ஒண்ணுமில்லே கந்தா… வா போகலாம்…” 

அவர்கள் இருவரும் மண்டபத்தை அடைந்த போது, தென்றலழகன் கதை சொல்லிக் கொண்டிருந்தான். எல்லோரும் ஆவலோடு அதைக் கேட்டு கொண்டிருந்தனர். 

அழகப்பன் வெட்கத்தோடும், கந்தசாமி பாதிக் கதை போய்விட்டதே என்கிற வருத்தத்துடனும் – இருவரும் சற்று ஓரமாக வந்து அமர்ந்து கொண்டனர். தென்றலழகன் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தான். 

நண்பர்களே…! மனிதன் உணவு இல்லாமல் சில மாதங்கள் உயிர் வாழ்ந்து விடலாம்; நீர் இல்லாமலும் சில நாட்களை உயிருடன் ஓட்டி விட முடியும்; ஆனால் காற்று இல்லாமல் – சில வினாடிகள் கூட உயிர் வாழ முடியாது. காற்று மனிதனின் உயிர் மூச்சு. இயற்கையின் ஓர் அற்புதப் பொருள். 

காற்று கண்களுக்குப் புலப்படுவது இல்லை. அதற்கென்று தனிப்பட்ட எந்த ஒரு உருவமும் இல்லை. ஆயினும் அதனை இல்லை என்று மறுப்பதற்கில்லை. அதை ஸ்பரிசத்தால் உணர முடிகிறது. மரம், செடி, கொடிகள் அசைவதால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக – நாம் காற்றினால்தான் உயிர்வாழ்கிறோம் என்பதை ஒப்புக்கொள்ளாமல் முடியாது. 

அதோடு- 

காற்றிலுள்ள வாயுக்கள் அணுக்களால் நிறைந்தவை. கண்ணுக்குப் புலப்படாத கோடானு கோடி அணுக்களுக்குமே எடை உண்டு. அதன் படி வாயுவின் அணுக்களால் காற்றுக்கும் எடை உண்டாகிறது. வாயுக்களை விஞ்ஞானிகள் ‘பொருள்’ பட்டியலில் சேர்த்துள்ளதால் ‘வாயு’ அணுக்களால் ஆன காற்றுப் பொருள் பட்டியலில் இடம் பெறத் தக்கதாகிறது. 

நாம் வாழும் உலகத்தில் மேற்பரப்பு நிலம், நீரால் சூழப்பட்டது என்றால்; அவற்றிற்கு சில மைல்கள் உயரத்திற்கு உலகம் முழுவதையும் வாயு மண்டலம் போர்வைபோல மூடியுள்ளது. 

உலகம் தோன்றி, நீர், நிலம் இவை உருப் பெற்று வெகுகாலத்திற்குப் பிறகே காற்று பிறந் தது. அப்படி முதன் முதலாகப் பிறந்த காற்றில் உயிர்கள் வாழ்வதற்கு இன்றி அமையாத பிராண வாயுஇல்லை. அவற்றில் கரியமிலவாயு, நைட்ரஜன் வாயு, கந்தகப்புகை, நீராவி ஆகியவை நிரம்பி யிருந்தன. பிராணவாயு அந்தக் காற்றுக் கலவை யில் இல்லாத காரணத்தால், புல் பூண்டு, மரம் செடி கொடிகள் இல்லாத நிலையில் உயிரினங் களும் தோன்ற இயலவில்லை. 

நிலம் நீர் பிரிந்து; உலகம் தோன்றி பலஆயிரம் ஆண்டுகளுக்கிடையில் வான வெளியில் உள்ள வாயுக்கலவையிலும் படிப்படியாகப் பலப்பல மாறுதல்கள் தோன்றி இப்போது உள்ள பிராண வாயுக் கலவையே நிலை பெற்றது. அதன் பிறகு உலகம் விரித்தது. உயிரினங்கள் தோன்றின. 

ஆயினும், உயிர்வாழ இன்றியமையாத ‘பிராணவாயு’ என்னும் ஒருவாயு,வாயுக் கலவையில் இடம் பெற்றிருக்கிறது என்கிற உண்மையை சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு ‘இராபர்ப்ஃ பாய்ட்’ என்கிற ஆங்கில விஞ்ஞானி 1600-ம்ஆண் டில் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தார். பிறகு தான் உலகம் அதை உணரத் தலைப்பட்டது.

அதன் பிறகு,இடைவிடாது நடந்த பல சோதனைகள் நடைபெற்றன. 1774-ம் ஆண்டு ‘ஜோஸப் பிரீஸ்ட்லி’ என்னும் ஆங்கில விஞ்ஞானி, உலகில் உயிர் வாழ அத்தியாவசியமாகத் திகழும் வாயுவின் பல தன்மைகளை ஆராய்ச்சி செய்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆராய்ச்சிகளின் இறுதியில் “லாவாய்ஸீயர்” என்னும் பிரெஞ்சு விஞ்ஞானி இந்த வாயுவுக்குப் “பிராணவாயு” (ஆக்ஸிஜன்) என்னும் பெயரைச் சூட்டினார். 

பூமியைச் சுற்றியுள்ள காற்றுக் கலவையில் நைட்டிரஜன் வாயு 78.084 சத விகிதமும்; பிராண வாயு 20.946 சதவிகிதமும், ஆர்கான் வாயு 0.934 சதமும், கரியமிலவாயு 0.033 சதவிகிதமும்: நியான், ஈலியம்,சிரிப்பான், மிதேன், நீரக வாயு போன்ற பலவகையான வாயுக்கள் கூட்டாக கரியமிலவாயுவின் சத அளவிற்குக் காற்றில் கலந்துள்ளன. 

இவைதவிர, கந்தக அமிலம், நீராவி, ஓகோன், புகைக்கரி, தூசி, தும்பு,உப்புத் திவலைகள், நுண் தாவரங்கள், நுண் உயிர்கள் ஆகியவையும் பரவ லாகக் கலந்துள்ளன. 

மற்றெந்த வாயுக்களையும் விட, பிராண வாயு ஒன்று மட்டும் இல்லாவிட்டால், உயிரினங்கள் மட்டுமல்ல; தாவரங்கள் கூட உயிர் வாழ முடியாது. 

இத்தனை சிறப்பு வாய்ந்த பிராணவாயு உலகத்திலுள்ள மூலப்பொருள்களில் பெரும் பகுதியான இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு கூட்டுப் பொருளாகவே திகழ்ந்து வருகிறது. 

உலகத்தில் உள்ள நீரில் நூற்றுக்கு 90 சத விகிதம் பிராண வாயுவாகவும்; உலகில் உள்ள பாறைகளில் பாதி அளவு பிராணவாயு கலந்துள்ள தாகவும் விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். கரியமில வாயுவின் பங்கும் உண்டு. 

பிராண வாயுவின் சிறப்பான இயல்பு என்ன வென்றால், உலகிலுள்ள பெரும்பாலான மூலப் பொருட்களுடன் வெகு எளிதில் கூடிக் கலந்து நிற்கக் கூடியது. உதாரணத்திற்குத் தண்ணீரைப் போல –

பலவகையான வாயுக்களைக் கொண்ட காற்று மண்டலம், உலகிலுள்ள மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு மட்டுமின்றி, தொழில்செய்து பிழைக்கவும்; நாகரீக வளர்ச்சிக்கு உதவும் விஞ்ஞானத்திற்கு மிகச் சிறந்த நண்பனாகவும் திகழ்கிறது. 

சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்முடைய நாட்டினர் கடல் வாணிபம் செய்ய முற்பட்டனர். 

சிறிய சிறிய படகுகளின் மூலம் ஆற்றுப்பாதை வழியாகவும், பாய்மரம் கட்டிய படகுகள், பெரிய, மரக்கலங்கள் ஆகியவை மூலமாகவும் கடலில் காற்றின் உதவியோடு, வாணிபம் செய்து வந்தனர். 

நீராவிக் கப்பல்கள் கண்டுபிடிக்கும் வரை நம் நாட்டில் மீன்பிடித் தொழில் முதல், கடல் பயணம், வாணிபம் வரை கட்டு மரங்களையும், மரக் கப்பல் களையும் கொண்டு காற்றின் உதவியோடு தான் நடந்து வந்தன. 

கடலில் பிழைப்பு நடத்துகிறவர்களைக் காக்கும் தெய்வமாகத் திகழும் காற்று, சில சமயங்களில் உயிர்ப் பறிக்கும் கோர அரக்கனாக மாறி; பெருப் புயலாகவும் சூறாவளியாகவும் மாறுவதுண்டு. ஆயினும் காற்றிலிருந்து எவராலும் ஒதுங்கியோ – அல்லது காற்றை வெறுத்தோ வாழ முடியாது. ஏனெனில் மனிதனுக்கு உயிர் மூச்சே காற்றுத் தானே! 

பறவையைப் பார்த்து மனிதன் விமானம் படைத்தான். நவீன இயந்திர வசதிகளுடன் கூடிய விமானத்திற்கும் காற்றின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும். 

நமது உடலை பல்வேறு தொழில் புரியும், சிறந்த – நுண்ணிய தொழிற்கூடமாகக் கொள்ளலாம். 

கண்களால் காண்கிறோம்; காதால் கேட் கிறோம்; நாசியால் சுவாசித்து நுகர்கிறோம்; பற்களும் நாக்கும் அதற்கு ஒத்துழைக்கின்றன. கைகளால் நமது அன்றாடப் பணிகள் நடக்கின்றன. கால்கள் – நடமாடும் இந்தத் தொழிற்சாலையை நாம் விரும்பிய இடந்திற்கெல்லாம் சுமந்து செல்கின்றன. இவை அனைத்தும் செவ்வனே தம் தம் கடமைகளைச் செய்து நிறைவேற்ற ஆணை பிறப்பிக்கும் பிரதான கேந்திரமாக மூளைப்பகுதி திகழ்கிறது. இருதயம் இவையனைத்தையும் உயிரோட்ட முள்ளதாகப் பாதுகாக்கிறது. 

உதாரணமாக நாம் உண்ணும் பல தரப்பட்ட உணவுகளும்; நம் உடலினுள் எரிந்து கொண்டிருக்கும் தீயின் உதவியால் ஜீரணிக்கப்படுகின்றன என்று கூறினேன். வயிற்றில் இருக்கும் தீ கூடப் பிராணவாயு இல்லாவிடில் தொடர்ந்து எரியாது. அப்படி எரிவதற்கு – அந்தத் தீக்கு எரிபொருள் எங்கிருந்து கிடைக்கிறது என்பதைப் பாருங்கள். 

நம்முடைய உடலுக்குள் கோடிக்கணக்கான உயிர் அணுக்கள் உள்ளன. இவை வளர, உணவு வேண்டும். நாம் உட்கொள்ளும் உணவை அந்த உயிர் அணுக்கள் ஜீரணம் செய்து அதிலிருந்து சக்தியைப் பெறுகின்றன. 

அதே சமயம், நம்முடைய உணவில் உள்ள சர்க்கரை, கொழுப்புச்சத்து ஆகியவை ரத்த ஓட்டத்தில் கலந்து கோடிக்கணக்கான உயிர் அணுக்களை அடைகின்றன. அதேசமயம், நாம் சுவாசிக்கிற காற்றிலுள்ள பிராணவாயுவும் ரத்தத் திலுள்ள சிவப்பு அணுக்கள் மூலம் உயிர் அணுக்களை அடைகின்றது. 

அந்தப் பிராணவாயு நம் உணவிலிருந்து கிடைக்கும் சர்க்கரை மற்றும் பலதரப்பட்ட கொழுப்புச் சத்துக்களையும் எரிபொருளாகப் பயன் படுத்தி, அவற்றை எரித்து நம் உடலுக்குத் தேவையான வெப்பத்தையும், உயிர் உறுப்புக்களுக்குத் தேவையான சக்தியையும் தருகிறது. இதனால், நமது உடல் தேவையான வெப்பத்துடன் இருக்கவும்; நமது உடல் உறுப்புக்கள் உழைக்கவும்; தொடர்ந்து இதயம் இயங்கி, ரத்த ஓட்டத்தை தடையின்றி நடத்திக் கொண்டிருக்க. வும்-பிராண வாயு எவ்வளவு முக்கியமானதென்று உணரமுடிகிறதல்லவா? இந்தப் பிராணவாயுவை நாம் காற்று அலைகளிலிருந்து பெறுகிறோம். 

இன்றைய மனித நாகரீகத்தின் விஞ்ஞான வளர்ச்சியில் காற்று-மனிதனுக்கு வெகுவாகக் கைகொடுத்து உதவுகிறது. 

இந்த உலகம் முழுவதும் ஒலி, ஒளிமயமாகத் திகழ்கின்றது என்றால் – அதை எடுத்துச் சென்று நமக்கு அளிப்பது காற்றிலுள்ள ஒலி அலைகளேயாகும். 

உதாரணத்திற்கு உங்களுக்கு ஒன்றை விளக்கு கிறேன் என்று கூறிய தென்றலழகன் அழகப்பன் பக்கம் திரும்பி, “அழகப்பா உன் கையிலிருக்கும் டிரான்ஸிஸ்டரை இப்படிக் கொடு” என்று கேட்ட போது – ‘நான் மடியில் மறைத்து வைத்துக்கொண்டிருப்பதை தேவகுமாரன் எப்படிப் பார்த்தான்?’ – என்று வியந்து கொண்டே அதைத் தென்றலழகனிடம் கொடுத்தான். 

அதைப் பெற்றுக் கொண்ட தேவகுமாரன், விசையைத் திருப்பினான். இனிய சங்கீதம் ஒலித்தது. உடனே அதை நிறுத்திவிட்டு – இந்த சங்கீதத்தை இங்கு யாரும் பாடவில்லை – பெட்டி யினுள்ளும் யாரும் இருக்க முடியாது. ஆனால் இதை எங்கோ; யாரோ பாடுகிறார்கள் – அந்த ஓசையை ஒலி அலைகள் மூலமாக விண்வெளியில் கலக்கிறார்கள்; அந்த அலைவரிசையை இந்த ரேடியோ பிரித்து எடுத்து குறிப்பிட்ட இசையை நமக்குத் தருகிறது. 

சற்று முன்பு வரை சென்னையில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியின் வர்ணனையை நேரில் பார்ப்பதுபோல் கேட்டு ரசித்துவிட்டு அழகப்பன் வந்திருக்கிறான். அதில் இந்தியா வெற்றி பெறாது போனதில் அழகப்பனுக்கு அளவு கடந்த வருத்தம் என்று தேவகுமாரன் அருகில் இருந்து பார்த்தது போல் கூறக்  கேட்டதும் அழகப்பனும், கந்தசாமியும் பிரமித்துப் போய் விட்டனர். 

நான முக்கியமாக எதைச் சொல்ல விரும்புகிறேன் என்றால் இந்த உலகம் முழுவதும் ஒலி அலைகள் வியாபித்திருக்கின்றன. 

நாம் இப்போது அமர்ந்திருக்கும் இந்த மண்டபத்திலும்கூட, கோடிக்கணக்கான ஒலி அலைகள் கண்ணுக்குத் தெரியாமல், சிலந்தி வலைபோல் பின்னிக் கிடக்கின்றன. ஒவ்வொரு ஒலி அலையும்; மற்றொரு ஒலி அலையிலிருந்து மாறுபட்டவை. 

இந்த மாறுபட்ட; பலதரப்பட்ட ஒலி அலை களையும், ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு இலவசப் பயணமாக அழைத்துச் செல்லும் பணியை காற்று ஒரு கடமையாகச் செய்து வருகிறது. 

உலகின் மீது படர்ந்துள்ள காற்று மண்டலத் தின் உதவி இல்லையானால் நான் இவ்வளவு அருகிலிருந்து பேசுவது கூட உங்கள் செவிகளில் விழாது. நான் வாயசைப்பதைத்தான் உங்களால் பார்க்க முடியும். பேசுவதை – ஒலியாக மாற்றி, அவற்றை அலைகளாகச் சுமந்து சென்று கேட்கும் திறன் படைத்த உங்கள் செவிப் புலனுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது காற்றே. 

ஓரிடத்திலிருந்து புறப்படும் ஒலியை வேறு இடத்திற்கு ஏந்தி எடுத்துச் செல்லும் சாதனமாக- ஒலி பரவுவதற்கு உதவியான மீடியமாக காற்று திகழ்வதால்-இந்தக் காற்றை மீடியமாக வைத்துத் தான் வானொலி-ஒலிபரப்பு நிகழ்ச்சிகளைச் செய்து வருகின்றன. தொலைபேசிகள் இயங்கி வருகிறது; 

காற்று ஒலியை மட்டுமல்ல; ஒளியையும்; அதுவும் பலவித வண்ணங்களில் மூல கேந்திரத்திலிருந்து சுமந்து வந்து அளிப்பதுதான் தொலைக் காட்சி – அதாவது டெலிவிஷன். 

இந்த ஒலி அலைகளை, விரும்பியபடி மாற்றம் செய்து; ஒளிப்பதிவு நாடாவிலும்; திரைப்படச் சுருள்களிலும் விரும்பியபடிப் பதிவு செய்து கொள்ளுமளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. 

இந்த ஒலி அலைகளின் திறனை வைத்துத் தான் தொலைபேசி ஆராய்ச்சி துவங்கியது. 

இதனை முதன் முதலாக கண்டறிந்தவர் “டாக்டர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல்” என்னும் விஞ்ஞானியாவார். 

தந்தி; செய்தித்துறை தொடர்பாகப் பல பல சோதனைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண் டிருந்த கிரகாம்பெல்லுக்குப் புகழைத் தேடித் தந்தது தொலைபேசியே! 

தொலைபேசியின் மூலம் உள்ளூரில் மட்டுமே ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ள முடியும் என்கிற பழைய நிலைமை மாறி; இப்போது உலகத்தின் எந்த மூலையில்-எத்தனை ஆயிரம் மைல்கள் கடல் கடந்து இருப்பினும், விரைவாகத். தொடர்பு கொள்ளத்தக்க வசதி பெருகிவிட்டது. 

இவை அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் காற்றும்; அது சுமந்து செல்லும் ஒலி அலைகளுமே யாகும். பிறரது பேச்சின் அலையையும்; இசையின் இனிமையையும் உலகம் முழுவதும் ஒலிபரப்பிக் கொண்டிருக்கும் வானொலி நிலையங்கள் அதற் கான நவீன நிலையங்களை நிர்மாணித்து அங்கி ருந்து எழும் -இசையோ, பேச்சோ – எந்த ஒலியை யும்; நிலையம் எழுப்பியிருக்கும் மிகவும் உயரமான ஏரியல் மூலமாக வானவெளியில் மிகுந்த சக்தியுடன் பலவித அலை வரிசைகளில் கலந்து விடுகிறது. 

அவற்றை அந்தந்த அலைவரிசைகளில் ஏற்று வெளிப்படுத்த இந்த ரேடியோ பெட்டிகளினுள் டிரான்சிஸ்டர்களும், ஸ்பீக்கரும் உள்ளன. 

காற்றுடன் கலந்து; கண்ணுக்குப் புலப்படாத இந்த மர்ம ஒலி அலைகளுக்கு மின்காந்த அலைகள் (Electro-Magnetic Waves) என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இந்த மின்காந்த அலைகள் காற்றுடன் கலந்து உறவாடிக் கொண் டிருப்பதை முதன்முதலில் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தவர் ஸ்காட்லாண்ட் நாட்டைச் சேர்ந்த (James Clerk Maxwell) ‘ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ் வெல்’ என்னும் விஞ்ஞானியாவார். 

இவரது கண்டுபிடிப்பான மின்காந்த அலை களைத் தொடர்ந்து ஆராய்ந்து, அந்த அலைகள் பற்றிய பல அபூர்வ விஷயங்களை மேலும் கண் டறிந்தவர், ‘ஹென்றி ஹெர்ட்ஸ்’ என்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி. 

நம்மால் சாதாரணமாக ஒரு நொடிக்கு பதினாறிலிருந்து சுமார் இருபதினாயிரம் அதிர்வு, உடைய ஒலிகளைத் தான் கேட்க முடிழம். 

சாதாரணமாகக் காற்று சுமந்து செல்லும் ஒலி அலைகளின் வேகத்தைவிட வானொலி மூலம் அனுப்பப்படும் ஒலி அலைகள் கிட்டத்தட்ட பத்து லட்சத்திற்கு மேற்பட்ட வேகத்தில் விரைவாகப் பயணம் செய்கின்றன. இந்த மின்காந்த அலை களின் பயணம், வான வெளியில் எல்லா திசை களுக்கும் ஒரு வினாடிக்கு 1,86,000 மைல்கள் வீதம் கடந்து செல்கின்றன. 

நாம் சாதாரணமாக ஒரு அறையினுள் சென்று, அதன் கதவுகளை அடைத்துக் கொண்டு என்ன கூக்குரலிட்டாலும் அடுத்த அறைக்குக் கூடக் கேட்பது இல்லை. ஆனால்— 

வானொலி போன்ற சாதனங்களினால் அனுப் பப்படும் மின்காந்த ஒலி அலைகள் எந்தத் தடை களையும் மீறி, சுவர்கள், மதில்கள், மலைகள் அனைத்தையும் கடந்து ஊடுருவிச் செல்லும் சக்தி படைத்தவை. 

அவற்றைச் சுலபமாக நமது ரேடியோவிலுள்ள டிரான்ஸிஸ்டர்கள் கிரகித்துக் கொண்டு நமக்கு வழங்குகின்றன. 

காற்றைப்பற்றி இன்னும் அனேக புதிய புதிய விஷயங்களை உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்பது என் விருப்பம் அதை இன்னொரு சமயம் கூறுகிறேன்” என்று கூறி விடை பெற்றுக்கொண்ட தென்றலழகன்; கையிலிருந்து டிரான்ஸிஸ்டரை அழகப்பனிடம் சிரித்தபடி நீட்டினான்.

– தொடரும்…

– பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1988, சாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *