APX-999 என்ற கிரகத்தில் இருக்கும் நடுநிலைப்பள்ளி ஒன்றில் அறிவியல் போட்டி நடை பெற்றுக் கொண்டிருந்தது. மாணவர்கள் தங்கள் திறமையைக் கொட்டி செய்த பல்வேறு அறிவியல் சாதனங்களை நீதிபதிகளிடம் காண்பித்து விளக்கிக் கொண்டிருந்தனர். வோரியன் எனும் பனிரெண்டு வயது மாணவன் நீதிபதி ஒருவரிடம் உற்சாகமாக இளமைக்கே உரிய ஆர்வத்துடன் பேசிக் கொண்டிருந்தான்.
“என்னுடைய அறிவியல் பராஜெக்ட்டில், நான் ஒரு பழமையான உலகத்திற்கு புரட்சிகரமான புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினேன்,” என்றான் வோரியன்.
“வெரி குட். என்ன உலகம் அது?”
“பால்வெளி கேலக்ஸியில் இருக்கும் பூமி என்ற கிரகம். பூமியின் மக்கள் தங்கள் அன்றாட பரிவர்த்தனைகளுக்கு காலாவதியான காகித நாணயத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தினர். அவர்களுக்காக ஒரு புதிய டிஜிட்டல் நாணயத்தை வடிவமைத்தேன் நான்.”
“நீ எப்படி அவர்களுடன் தொடர்பு கொண்டாய்?”
“நான் ஒரு புனைப்பெயரை ஏற்றுக்கொண்டேன். மின்னஞ்சல் மற்றும் இன்டெர்னட் ஃபோரம் மூலமாக அவர்களுடன் தகவல் தொடர்பு செய்து கொண்டேன். நான் அவர்களில் ஒருவன் என்றே அவர்கள் நம்பினார்கள்.”
“இன்டெரெஸ்ட்டிங். உனக்கு என்ன புனைப்பெயர் வைத்துக் கொண்டாய்?”
“சடோஷி நகமோட்டோ (Satoshi Nakamoto).”
பின் குறிப்பு:
2008 ஆம் ஆண்டில், சடோஷி நகமோட்டோ என்ற நபர் பிட்காயின் (Bitcoin) என்று அழைக்கப்படும் புதிய டிஜிட்டல் நாணயத்தின் தொழில்நுட்பத்தை வடிவமைத்தார். அவர் மின்னஞ்சல் மற்றும் இன்டெர்னட் ஃபோரம் மூலமே தொடர்பு கொண்டதால் யாரும் அவரை நேரில் பார்த்திருக்கவில்லை. சில வருடங்கள் பிட்காயின் தொழில்நுட்பத்தில் பணியாற்றிய பின் திடீரென்று ஒரு நாள் அவர் காணாமல் போனார். அதன் பிறகு அவரிடம் இருந்து எந்த சேதியும் இல்லை. இன்று வரை.