தீயில் அழிந்த செவ்வாய் கிரக நகரம்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: August 31, 2024
பார்வையிட்டோர்: 2,292 
 
 

தீ எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை. பதினெட்டு மணி நேரம் சுழன்று சுழன்று பரவிய தீ செவ்வாய் கிரக மேற்குப் பகுதியில் மூன்று மைல் சுற்றளவில் நாங்கள் உருவாக்கியிருந்த ஒரு சிறு நகரத்தின் பெரும் பகுதியை அழித்து விட்டது. தீ அணைந்தவுடன் எங்கள் குழு தலைவர் ஒரு அவசர கூட்டத்தைக் கூட்டினார். ஒரு சிறிய அறையில் கூடிய எங்கள் உடலில் தீயை எதிர்த்துப் போராடிய களைப்பும் கருப்புத் திட்டுக்களும் தெரிந்தன.

குழு தலைவர் மெதுவாக பேச ஆரம்பித்தார். “நாம் கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்தின் முதல் நகரத்தை உருவாக்கினோம். ஆனால் நேற்றுப் பிடித்த தீயில் நாம் கட்டியவற்றில் பெரும்பாலானவை – மருத்துவமனை, பள்ளி, உணவகம் மற்றும் கடைகள் – எல்லாமே எரிந்து சாம்பலாகி விட்டன. அதிர்ஷ்டவசமாக, நம்முடைய குடியிருப்பு கட்டிடங்களும், அங்கு வாழும் ஆயிரம் ஆண்களும் பெண்களும் காப்பாற்றப்பட்டனர். ஆனால், மற்ற எல்லாவற்றையும் நாம் புதிதாக மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.”

“கிட்டத்தட்ட அறுபது மாடல் D3க்கள் நம்மிடம் இருக்கின்றனவே?” செவ்வாய் நகரத்திற்கான திட்டங்களை உருவாக்கிய மூத்த கட்டிடக் கலைஞரான ஷைலா நம்பிக்கையுடன் பேசினார். “அவைகளை வைத்துக் கொண்டு நாம் சீக்கிரமே அழிந்த நகரத்தை புதிப்பித்து விடலாமே?” எல்லோரும் என் திசையில் பார்த்தார்கள்.

மாடல் D3 என்பது சக்தி வாய்ந்த 3D பிரிண்டர். அவற்றின் செயல்பாடு மற்றும் பராமரிப்பை நான் மேற்பார்வையிட்டேன். உலோகம், மரம் மற்றும் பிளாஸ்டிக் போன்ற மூலப்பொருட்களிலிருந்து பல்வேறு வடிவங்கள் கொண்ட பொருட்களை அதி விரைவில் வெட்டக்கூடிய நவீன அச்சுப்பொறிகள் அவை. மாடல் D3க்கு தேவையானது எல்லாம் எந்த பொருளை தயாரிக்க வேண்டுமோ அந்த பொருளின் புளூபிரிண்ட் வடிவமைப்பு மட்டுமே. ஒரு வாரத்திற்கு முன்பு, எங்கள் மருத்துவமனைக்கு அவசரமாக ஒரு ICU வென்டிலேட்டர் தேவைப்பட்டது. நான் பூமியில் இருக்கும் எங்கள் குழுவிற்கு கம்ப்யூட்டர் வாயிலாக ஒரு மெசேஜ் அனுப்பினேன். ஒரு மணி நேரத்திற்குள் அந்த வென்டிலேட்டரின் புளூபிரிண்ட் வடிவமைப்பு பூமியிலிருந்து வந்து சேர்ந்தது . மாடல் D3 அந்த புளூபிரிண்டைப் படித்து, அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் முழுமையாகச் செயல்படும் ஒரு ICU வென்டிலேட்டரை உருவாக்கியது. நாங்கள் எழுப்பிய செவ்வாய் கிரக நகரம் மாடல் D3க்கள் இல்லாமல் சாத்தியமில்லை. அதனால் தான் செவ்வாய் கிரகத்தில் நாங்கள் முதன் முதலில் வந்து இறங்கிய போது அறுபது மாடல் D3க்களை எங்களுடன் கொண்டு வந்தோம்.

நான் ஆயாசத்துடன், “நேற்றுப் பிடித்த தீ ஐம்பத்தெட்டு மாடல் D3க்களை எரித்து, உலோகக் குவியலாக உருக்கி விட்டது. நம்மிடம் இப்போது இருப்பது இரண்டு மாடல் D3க்கள் மட்டுமே. நான் அவைகளையும் இழக்க முடியாது. பூமியிலிருந்து புதிய மாடல் D3க்கள் வரும் வரை நம்முடைய கட்டுமானப் பணிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும்.” என்றேன்.

“அவை எப்போது வரும்?” என்று கேட்டார் டாக்டர் ஹென்றி. இப்போது சிதைந்து கிடக்கும் எங்களின் ஒரே மருத்துவமனையின் இயக்குநர் அவர்.

“இன்னும் ஒன்பது மாதங்கள் கழித்து,” என்றேன். எல்லோரும் அதிர்ச்சியில் உறைய அறையில் ஒரு மயான அமைதி நிலவியது.

முதலில் சுதாரித்துக் கொண்டவர் டாக்டர் ஹென்றி தான். “அவ்வளவு நாட்கள் நாங்கள் காத்திருக்க முடியாது,” என்றார் உரக்க. “உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படும் நோயாளிகள் பலர் என்னிடம் இருக்கிறார்கள். மருத்துவமனையும் அதன் உபகரணங்களும் இன்னும் ஒரு வாரத்திற்குள் புனரமைக்கப்பட வேண்டும். இல்லையேல் என் நோயாளிகள் ஒவ்வொருவராக செத்து மடிவதை நாம் காண வேண்டியிருக்கும். இது சீரியசான…”

நான் குதித்து எழுந்து அறை வாசலுக்கு விரைந்தேன். “எங்கே போகிறாய்?” என்று குழுத் தலைவர் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை.

இரண்டே நிமிடங்களில் நான் என் அலுவலகத்தில் இருந்தேன். கம்ப்யூட்டர் திரையில் நான் பூமிக்கு அனுப்பிய கடைசி மூன்று மெசேஜ்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன:

“எங்களுக்கு EV டிரக்கிற்கான புளூபிரிண்ட் வடிவமைப்பு தேவை.”

“25KW ஜெனரேட்டருக்கான புளூபிரிண்ட் வடிவமைப்பு எங்களுக்குத் தேவை.”

“கிவா ரோபோ மாடல் 1611க்கான புளூபிரிண்ட் வடிவமைப்பு தேவை.”

நான் ஒரு புதிய மெசேஜை என்னால் முடிந்தவரை வேகமாக டைப் செய்தேன்-

“3D பிரிண்டர் மாடல் D3க்கான ப்ளூபிரிண்ட் வடிவமைப்பு எங்களுக்குத் தேவை.”

Print Friendly, PDF & Email
பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான்.  அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *