தாவரக் கூழ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 17,891 
 
 

“ஹே பிச். வி ஹாவ் சம்திங் நியூ.” தொலைபேசியில் உற்சாகம் கொப்பளித்தது.

“என்னம்மா காலையிலேயே?” படுக்கையிலிருந்து எழுப்பப்பட்ட பிச்சிடம் உற்சாகம் கொப்பளிக்கவில்லை.

“செக்மெண்ட் 733 ஒரு தெருவ தோண்டிட்டிருந்தோம் நியாபகமிருக்கா?” எதிர்முனையில் இன்னும் உற்சாகம் கொப்பளிக்க பேசிக்கொண்டிருப்பது அகழ்வாராய்ச்சி நிபுணள் ஸ்வேத் .

“ம்ம்.. ஒரு உதவாக்கரை செக்மெண்ட் அது. உருப்படியா இதுவரைக்கும் ஏதாச்சும் கெடச்சதில்ல.” இப்போதும் பிச்சிடம் எதுவும் கொப்பளிக்கவில்லை.

“பிச். அந்த உதவாக்கரை செக்மெண்ட் சீக்கிரமே உலகப்புகழ் செய்தியாகிடும்ணு நினைக்றேன்டா. யூ பெட்டர் கம் ஹியர் ஏ.எஸ்.ஏ.பி.” எரிச்சல் கொப்பளித்தது.

ஸ்வேத் கூப்பிட்டும் போகாமலிருக்க முடியுமா?

“சரிமா. பட் இன்னும் கொஞ்சம் தூக்கம் பாக்கி இருக்குது.” கொஞ்சம் காதல் கொப்பளித்தது போல தெர்நதது.

“கடன்காரா. வந்து சேரு!.” செல்லம் கொப்பளித்தது.
பிச் வாய் கொப்பளித்துவிட்டுக் கிளம்பினான்.

பிச் ஒரு மனித கலாச்சார ஆய்வாளன். ஃபிலாந்திராப்பிஸ்ட் எனச் சொல்வாங்களே. மனிதவியல், மானுடவியல் வசதிபோல சொல்லலாம். அவனை அப்படி ஆக்கியது அவனது பெயர்தான். சின்ன வயசுலேந்தே தனக்கு பிச் எனும் பெயர் எப்படி வைக்கப்பட்டது என்பது அவன் மனதைக் குடைந்துகொண்டிருந்தது. தேடினான் தேடினான் பல லைப்ரரிகளில் தேடினான், அகழ்வாராய்ச்சியாளர்களைக் கேட்டுத் துன்புறுத்தினான், வரலாற்றை புரட்டிப்படித்தான், ஸ்வேத்தாவை புரட்டிப் பார்த்தான். பிச்சையப்பன் எனும் தென்னிந்தியப் பெயர் லுஃப்தான்சா விமானத்தில் அமெரிக்கா பயணித்து பல அமெரிக்கர்கள் வாயில் நுழைந்து அடிபட்டு, நைந்து மறு ஞானஸ்தானத்தில் புத்துயிர் பெற்று பிச் என ஆனதைக் கண்டுபிடித்து முடிக்கையில் அவன் ஒரு முழுநேர மனிதவியல் ஆய்வாளனாயிருந்தான்.

ஸ்வேத் அகழ்வாராய்கிறாள் எனத் தெரியும் ஆனால் எங்கே? என்ன? எப்போது? என உங்களுக்குத் தெரியவில்லையென்றால் க்ளோபல் வார்மிங்கின் பின்விளைவாய் பூமியின் பாதிப் பகுதி கடலுக்குள் சென்றுவிட்டிருப்பது உங்களுகுத் தெரியாது என அர்த்தம். இந்தக் கதையின் காலத்திலிருந்து குறைந்தபட்சம் 300 வருடங்கள் முந்தியவர்கள் நீங்க. பூமியின் தெற்குப் பாதியிலிருந்த பல நாடுகளின் வரைபடங்களும் இப்போது பாதியாக்கப்பட்டுவிட்டன. இதில் இந்தியாவின் தென்பகுதியும் அடக்கம்.

அப்படி கடலில் மூழ்கிய தென்னிந்தியப் பகுதிகளில் கடலுக்குள் நீர்க்குமிழி வடிவில் பெரிய கூடாரங்களை அமைத்து செக்மண்ட் செக்மெண்டாக அகழ்வாராய்ச்சி நடந்துவந்தது. ஆழ்கடலாராய்ச்சி. நீர்க்குமிழி வடிவில் டோம் அமைக்கப்பட்டிருந்த செக்மெண்ட்கள் பொதுவாக இரண்டு மூன்று மைல் பரப்பளவில் அமைந்திருக்கும். ஒரு கிராமத்தையே டோமுக்குள் வைத்து அகழ்வாராய்வு நடக்கும். கிட்டத்தட்ட ஒரு அசையாத நீர்மூழ்கிக் கப்பல் போல டோம் செக்மெண்டை கடலிலிருந்து காப்பாற்றும்.

பிச் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளி. பதினைந்து தலைமுறைகள் கடந்த அமெரிக்கத் தமிழன். தமிழகம் முழுக்கவும் கடலுக்குள் சென்றுவிட்டது. அதன் வரலாற்று, கலாச்சார தடயங்களைத் தேடி வந்த ஸ்வேத்தாவுடன் பிச்சும் சேரவேண்டியிருந்தது.

பிச் செக்மெண்ட் 733ஐ சென்றடைந்தபோது நாலைந்து விஞானிகளுடன் ஸ்வேத் விவாதத்திலிருந்தாள். ‘செய்தி பரவி விட்டது. உருப்படியில்லாத செக்மெண்ட்டில் புதிதாய் ஏதோ கிடைத்துள்ளது. இதை வச்சி ப்ராஜெக்டை இன்னும் அஞ்சு வருஷம் ஓட்டுவா ஸ்வேத்.’ தானியங்கி மாஸ்டரிடம் காஃபி எடுத்துக் கொண்டு ஸ்வேத் வரக் காத்திருந்தான்.

செக்மெண்ட் 733. ஏதோ ஒரு பழைய குக்கிராமாம். இதுக்கு முன்னால அந்தப் பகுதியில ஆராயப்பட்ட பல குக்கிராமங்களைப் போலவே இதுவும் இருந்ததால அது வேஸ்ட் செக்மெண்ட் ஆனது. அனுபவம் குறைந்த ஸ்வேத்தா அப்படித்தான் அந்த செக்மெண்டோட தலைமை ஆய்வாளினி ஆனா.

“டேய் எப்ப வந்த?” ஸ்வேத் உள்ளே வந்தாள்.

“என்ன தல போற விஷயம். அதே ஐயனார் கோவில், அதே ஒற்றையறை வீடு அதே மண்பானை, மண்ணடுப்பு, மாட்டுக் கொட்டை, ஊருக்கு நடுவுல அடிபம்பு, வீட்டுக்குப் பின்னால சாக்கடை, சாக்கடையில வாத்து முட்டை, அதே ஆலமரத்தடி பஞ்சாயத்து திண்ண, அதே மாட்டுவண்டி, ஒத்தயடிப் பாத, ஊருக்கு வெளிய ரெண்டு கல்ல நட்டி வச்சு ஒரு கல்ல படுக்கப் போட்டு… எல்லாம் அதே அதே.” பிச் வழக்கமான செல்ல எரிச்சலில் பேசினான்.

“பிச். மற்ற கிரேட் த்ரீ – குக்கிராமம் – செக்மெண்ட் எதுலேயும் இல்லாத ஒண்ணு. ஒரு வீதி முழுக்க கட்டியா தரை போட்டிருக்காங்க.”

“வி க்னோ (க் சைலண்ட்) தாட் ஆல்ரெடிம்மா? வீதி முழுக்க காங்கிரீட் போட்ட …”

“காங்ரீட் இல்ல.!”

“பின்ன களிமண்ணா?”

“இல்ல.”

“ஹ்ம் இண்டரெஸ்டிங்.”

“சொன்னேன்ல.”

“பாக்கலாமா?”

இடிந்து கிடந்த வீடுகளை அப்புறப்படுத்தி வினோதப் பொருளில் இடப்பட்டிருந்த தெருவில் ஒரு பகுதி இப்போது மஞ்சள் பட்டையால் ‘எச்சரிக்கை-கவனத்துடன் கையாளவும்’ எனும் அடைமொழியோடு பாதுகாக்கப்பட்டிருந்தது.

“இது புதுசு. ஆய்வுக்கு அனுப்பினியா?”

“ம்.”

“என்ன சொல்றாங்க?”

“இன்னும் ஒண்ணும் வரல. நீ உன்னுடைய வேலைய ஆரம்பி.”

அகழ்வாராய்ச்சியில் மனுடவியலாளனுக்கு உடனடி வேலைகள் இல்லை. புதிதாகக் கண்டுபிடித்தவற்றை அலசி ஆராய்ந்து, பூதக் கண்ணாடி, ஆய்வுக் குடுகை, கார்பன் பதிப்பையெல்லாம் முடித்துவிட்டு வரும் முடிவுகளை வைத்து ‘அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் …’ எனத் துவங்கும் ஆய்வுக் கட்டுரைகள் வரைவதுதான் பிச் போன்றோரின் வேலை. பிச் ஸ்வேத்தின் துணையுடன் உருப்படியாய் என்ன புதிய கண்டுபிடிப்பு கிடைத்தாலும் உடனடியாகச் சென்று சுவைத்துவிடுவான். ஆமா. நிஜமாகவே அதை வாயில் போட்டு சுவைத்துப் பார்த்துவிடுவான்.

‘சுவையும் மணமும் அதீத உணர்வுகள்.’ என்பது அவன் கண்டுபிடிப்பு. உணர்நரம்புகளின் தொகுப்புத்தானே நாக்கு. ‘பார்வையில்கூட பிழை இருக்கலாம். சுவையில்?’ அடித்துச் சொல்வான்.

இன்றும் அந்த தரைப்பரப்பின் ஒருபகுதியை எடுத்து வாயில் போட்டு கண்ணை மூடி மென்று துப்பினான்.

“ப்ளாண்ட்ஸ். வீச்சமில்லை. சத்துமில்லை. தாவர சக்கை.” கைக்கருவியில் குரல் பதிந்துகொண்டிருந்தது. “பாசிபிள் வெஜிட்டேரியன் கல்ச்சர். சைவ உணவுப் பழக்கமுடையவர்கள் பயிர்களிலிருந்து விளை பொருட்களை பயன்படுத்தியபின் மிச்ச கிளை இலைகளைக் கொண்டு கூழ்போலச் செய்து தெருவில் ரோடு போடப்பட்டுள்ளது. செடி கொடிகளில் இருக்கும் நார்-Fiber-கட்டுமானத்துக்கு உதவியிருக்கும். சிமிலாரிட்டீஸ் டு த இஜிப்ஷியன் பிரமிட்ஸ்.”

“வாவ்! பிச். வேஸ்ட் செக்மெண்ட்லேர்ந்து இப்படி ஒரு புது விஷயமா?”

“ம். நல்ல கண்டுபிடிப்புதான். கலக்கிட்ட ஸ்வேத்ஸ். கடல் இத அழிக்காம இருந்தது பெரிய விஷயம்தான்..”

“ஆக்சுவலா இதுக்கு மேல சிமெண்ட் தளம் போட்டிருந்தாங்க.”

“ஓ. கே. பிரமிட்ஸ் பத்தி படிச்சிருக்கேல்ல. அதக் கட்டும்போது தாவர ஸ்ட்ராவ களிமண்ணுல வெட்டிப் போட்டு காங்க்ரீட் செஞ்சிருந்திருக்காங்க.”

“தெரியுமே.”

“இது அத்தனை ஸ்ட்ராங்க் காங்ரீட் இல்ல. வெரி வெரி லைட். வெறும் தாவரக் கூழ்தான் பயன்படுத்தியிருக்காங்க. சரி நான் இதப்பத்தி இருக்கிற அடிப்படை விஷயங்கல புத்தகங்கள்ல அகழ்வாராயுறேன் ஆய்வக ரிப்போர்ட் வந்ததும் கால் பண்ணு.”

வீட்டுக்கு வந்து சலிப்பாக சில பழைய கிராமத்துக் கதை புத்தகங்கள் குறித்த ஆய்வுகளைத் தேடிப் படித்தான். ‘தமிழன் தன் கலாச்சாரத்தை கட்டுக்கதைகளின் வழியேதான் அதிகம் பதிச்சிருக்கிறான்’ என்பதுவும் பிச்சின் ஆதங்கம் தங்கிய ஆய்வு முடிவு. ஆய்வாளன் அவன். கட்டுரைகளை அதிகம் நம்புபவன்.

ஃபோனில் ஸ்வேத்ஸ் சிரித்தாள்.

“சொல்லும்மா. என் கண்டுபிடிப்பு சரிதான்னு சொல்லிட்டாங்களா?”

“ஆமாடா.”

“யாருண்ணு நெனச்ச?”

“ரெம்ப பீத்திக்காத. அது தாவர சக்கைதானாம்.”

“சொன்னேன்ல.”

“ஆனா…”

“என்ன ‘ஆனா?’ ”

“அது மாட்டுச் சாணமாம்.”

“புல்ஷிட்.”

“அப்படியும் சொல்லலாம்.”

– ஜூலை 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *