வினய் சர்மா தன்னுடைய ஐபோன் 29 கேமரா வழியாக கபில் தேவ் மட்டையுடன் டன்பிரிட்ஜ் வெல்ஸ் மைதானத்திற்குள் நுழையும் தருணத்தை மும்முரமாக பதிவு செய்து கொண்டிருந்தான். அன்றைய உலகக் கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த போதிலும் கேப்டனின் நடையில் ஒரு உறுதியும் கம்பீரமும் இருந்தது. கல் போல இருகியிருந்த முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. மைதானத்திலிருந்த பெருவாரியான கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணியின் மோசமான ஆட்டத்தைக் கிண்டலடித்து சிரித்துக் கொண்டிருந்தினர்.
“ஏய்! யாரது? உடனே அந்த சாதனத்தைக் கீழே போடு!” பின்னால் இருந்து ஒரு குரல் இடி போல முழங்கியது.
வினய் திடுக்கிட்டு திரும்பினான்.
“முழங்காலில் மண்டியிடு!” இரண்டு போலீஸ் அதிகாரிகள் கத்திக் கொண்டே அவனை நோக்கி ஓடி வர வினய் பயந்து போய் மண்டியிட்டான். பல பார்வையாளர்கள் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தனர்.
“இது ஒரு சாதாரண போன்! இதன் கேமரா வழியாக நான் இந்தப் போட்டியைப் பதிவு செய்கிறேன்,” வினய் நடுங்கிய குரலில் சொல்ல, ஒரு அதிகாரி அவன் கையைப் பின்புறமாக முறுக்கினார். மற்றொருவர் அவன் கையிலிருந்த ஐபோனைப் பறித்தார்.
அதிகாரி ஐபோனை சந்தேகத்துடன் ஆராய்ந்தார். “இது போன்ற ஒரு சாதனத்தை நான் இது வரை பார்த்ததில்லை.”
“ஐயா, நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே? அமைதியாக ஒரு ஓரத்தில் தானே நின்று கொண்டிருந்தேன்?”
“கூட்டத்தை நோக்கி சந்தேகத்திற்குரிய சாதனத்தை அல்லவா நீ காட்டுகிறாய்?” அவர்கள் அவனை எழுந்து நிற்க வைத்தனர். “உன்னை தீர விசாரிக்க வேண்டும். நீ எங்களுடன் வா.”
அவர்கள் அவனை தள்ளிச் சென்ற போது, வினய் மைதான நடுவில் கபில் தேவ் கார்டு எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். “ஐயோ, என்னை விட்டு விடுங்களேன்! இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டி! இதை நான் கண்டிப்பாக என் கேமிராவில் பதிவு செய்ய வேண்டும்.”
அவன் கெஞ்சலைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவர்கள் அவனை தரதரவென்று இழுத்துச் சென்றனர். சில நிமிடங்களில், மைதானத்தின் மூலையில் உள்ள ஒரு சிறிய அறைக்குள் அவனைத் தள்ளிக் கதவை மூடினர்.
ஐந்து நிமிடங்கள் கழித்து கதவு திறக்க, இன்ஸ்பெக்டர் மோரிஸும் சார்ஜண்ட் பீட்டரும் மிடுக்காக உள்ளே நுழைந்தனர். இன்ஸ்பெக்டர் கையில் அவன் ஐபோன் இருந்தது. சார்ஜண்ட் ஒரு நோட்புக்கைத் திறந்து எழுத ஆரம்பித்தார்.
“உன் பெயர்?”
“வினய் சர்மா.”
“ஊர்?”
“இந்தியாவில் மும்பை.”
“பிறந்த தேதி?”
“அக்டோபர் 23, 2021.”
“என்ன விளையாடுகிறாயா? இன்றைக்கு தேதி என்ன தெரியுமா?”
“தெரியும். ஜூன் 18, 1983.”
சார்ஜண்ட் நோட்புக்கை மூடி விட்டார். அவர் பார்வையில் அனல் பறந்தது.
வினய் தொண்டையைக் கனைத்துக் கொண்டான். “நான் இதை உங்களிடம் சொல்லக் கூடாது, இருந்தாலும் எனக்கு வேறு வழியில்லை. நான் 2045ஆம் ஆண்டைச் சேர்ந்தவன். ஒரு விளையாட்டு பத்திரிகையாளன். காலயந்திரத்தில் பின்னோக்கி சென்று பதிவு செய்யப்படாத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டுப் போட்டிகளை பதிவு செய்வது தான் என்னுடைய வேலை.”
“ஓ, அப்படியா! சார் 2045 ஆண்டிலிருந்து வருகிறீர்களா? வெரி குட். நான் யார் தெரியுமா? நான் இங்கிலாந்தின் ராணி!” சார்ஜண்ட் சுவரில் சாய்ந்தபடி கேலியாகச் சிரித்தார்.
“இந்த சாதனத்தின் மூலம் தான் இங்கு நடக்கும் கிரிக்கெட் போட்டியை பதிவு செய்கிறாயா?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர் தன் கையிலிருந்த ஐபோனைக் காட்டி.
“ஆமாம். இது கேமராவுடன் கூடிய போன். இதை வைத்துக் கொண்டு அருமையான படங்களும் விடீயோக்களும் சுலபமாக எடுத்து விடலாம்.”
இன்ஸ்பெக்டர் ஐபோனை மேஜையில் வைத்தார். “ஏன் இந்தப் போட்டியை பதிவு செய்கிறாய்? இந்த இந்தியா-ஜிம்பாப்வே போட்டியில் யாருக்குமே பெரிய ஆர்வம் ஒன்றும் இல்லை. அரங்கத்தில் கூட்டமே இல்லை பார்த்தாயா?”
வினய் உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தான். “இன்று தான் கபில் தேவ் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை விளையாடப் போகிறார். 175 ரன்கள் எடுத்து இந்தியாவிற்கு வெற்றி தேடித் தரப்போகிறார். ஆனால் இன்று பார்த்து பிபிசி தொழில்நுட்ப ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் உள்ளனர். எந்த கேமராக்களும் பதிவு செய்யாத ஆனால் கிரிக்கெட் உலகமே வியந்து பேசப் போகும் போட்டி இது.”
“என்ன உளறுகிறாய்?” என்றார் இன்ஸ்பெக்டர். “இந்தியா 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அவர்கள் கதை முடிந்து விட்டது. இன்றைய இரவே அவர்கள் ஊர் திரும்ப வேண்டியது தான்.”
வினய் ஒன்றும் சொல்லவில்லை. அமைதியாகப் புன்னகைத்தான்.
சார்ஜண்ட் கேலியாக சிரித்தார். “உலகக் கோப்பையை யார் வெல்வார் என்பதும் சாருக்கு தெரியுமோ?”
“ஜூன் 25ஆம் தேதி, இந்தியா லார்ட்ஸில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தப் போகிறது. அவர்களின் முதல் உலகக் கோப்பை வெற்றி. கிரிக்கெட் வரலாற்றை என்றென்றும் மாற்றப் போகும் வெற்றி.”
இரு அதிகாரிகளும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
“இந்தியாவா? வெஸ்ட் இண்டீஸை? இறுதிப் போட்டியிலா?” சார்ஜண்ட் கண்களில் கண்ணீர் வரும் வரை சிரித்தார். “இது வரை எனக்கு சந்தேகமாகத் தான் இருத்தது. ஆனால் இப்போது உறுதியாகி விட்டது – நீ ஒரு பைத்தியம் தான் என்று.”
வினய் மர்மமாகப் புன்னகைத்தான். “சிரியுங்கள், நன்றாகச் சிரியுங்கள். ஆனால் நான் சொல்வதெல்லாம் உண்மை தான் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.” வெளியே கூட்டத்தின் சத்தம் அதிகரித்துக் கொண்டிருந்தது. “கபில் தேவ் இன்னொரு சிக்ஸர் அடித்துவிட்டார். என்னை விசாரித்து நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக நீங்கள் அரங்கத்திற்கு சென்று கபிலின் ஆட்டத்தைப் பார்க்கலாம். அது ஒரு அற்புதமான காட்சியாக இருக்கப் போகிறது. இன்றைக்கு மிஸ் பண்ணினீர்களென்றால் மறுபடி என்றைக்கும் நீங்கள் அதைப் பார்க்க முடியாது.”
அதிகாரிகள் இருவரும் அர்த்தமுள்ள பார்வை ஒன்றை பரிமாறிக் கொண்டனர்.
“இவன் இங்கேயே இருக்கட்டும்,” இன்ஸ்பெக்டர் கதவை நோக்கி நடந்தார். “இன்றைய போட்டியில் என்ன தான் நடக்கப் போகிறது என்பதை பார்க்க விரும்புகிறேன்.”