செவ்வாய் கிரகத்தில் ஒரு கோடி இந்தியர்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு  
கதைப்பதிவு: May 25, 2024
பார்வையிட்டோர்: 4,542 
 
 

நான் ஒரு ரிப்போர்ட்டில் மூழ்கியிருந்த போது என் பாஸ் கூப்பிட்டார். “வசந்த், நீ உடனே மாநாட்டு அறை 401க்கு வர முடியுமா? முக்கியமான அசைன்மென்ட் ஒன்றைப் பற்றி பேச வேண்டும்.”

நான் 401 அறைக்குள் நுழைந்தபோது, மிடுக்காக உடை அணிந்திருந்த, நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் மூலையில் அமர்ந்திருப்பதைக் கவனித்தேன். என் பாஸ் எங்களை அறிமுகப்படுத்தினார். “ வசந்த், இது சர்மா. தொழிலாளர் அமைச்சகத்தில் ஒரு பெரிய பதவியில் இருக்கிறார். மிஸ்டர் சர்மா, இது வசந்த். சிபிஐ டிபார்ட்மென்டின் தலை சிறந்த புலனாய்வாளர். நீங்கள் இவரிடம் உங்கள் பிரச்சனையை மனம் திறந்து சொல்லலாம்.”

சர்மா தொண்டையை செருமிக் கொண்டு ஆரம்பித்தார். “ஆறு மாதங்களுக்கு முன்பு செவ்வாய் கிரக அரசாங்கம் ஒரு கோடி இந்தியர்களை அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தது. அது ஒரு நல்ல டைமிங். இந்தியாவின் மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப் படுத்த முடியாமல் நாங்கள் திணறிக் கொண்டிருந்த சமயம் அது. தேவையான அரசாங்க ஒப்புதல்களை சுலபமாகப் பெற முடிந்தது. உடனே ஒரு கோடி இந்தியர்களை தயார் செய்து செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பினோம்.”

அவர் சொன்னது எல்லாம் எனக்கு ஏற்கனவே தெரிந்ததால், நான் எதுவும் பேசவில்லை. அவர் மேலும் தொடர்ந்தார். “இப்போது இன்னொரு கோடி இந்தியர்களை அனுப்புமாறு இரண்டாவது கோரிக்கை வந்திருக்கிறது. ஆனால் இந்த முறை அரசாங்க ஒப்புதல்களை பெறுவது கடினம். ஏற்கனவே நாம் அனுப்பிய இந்தியர்களை செவ்வாய் கிரக அரசாங்கம் ஒழுங்காக நடத்தியது என்பதற்கான ஆதாரங்களை எல்லா மந்திரிகளும் கேட்டுக் குடைகிறார்கள்.”

நான் குறுக்கிட்டு, “ஆனால், அந்த ஆதாரம் தான் நம்மிடம் இருக்கிறதே? செவ்வாய் கிரகத்தில் வாழும் இந்தியர்கள் படங்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் அல்லவா காணப்பட்டனர்?” என்றேன்.

“உண்மை தான். ஆனால் அந்தப் படங்களை எல்லாம் செவ்வாய் கிரக அரசாங்கம் ஜோடித்திருக்கலாம். நிஜமாகவே அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ள அங்கு வாழும் சில இந்தியர்களை நான் நேர்காணல் செய்தேன். அவர்கள் சொன்னது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.” சர்மா குரலைத் தாழ்த்திக் கொண்டார். “இதை நீங்கள் ரகசியமாக வைத்திருக்க வேண்டும். செவ்வாய் கிரகத்திற்கு நாம் அனுப்பிய இந்தியர்கள் அங்கு எந்த வேலையும் செய்வதில்லை. சாப்பிடுவது, தூங்குவது, விளையாடுவது என்று ஜாலியாக பொழுதைக் கழிக்கிறார்கள்.”

நான் அதை எதிர்பார்க்கவில்லை. “வேலை எதுவும் இல்லை என்றால் ஒரு கோடி இந்தியர்களை எதற்கு கேட்டது செவ்வாய் கிரக அரசாங்கம்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

சர்மா புன்னகைத்தார். “அதைத்தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இது பற்றி செவ்வாய் கிரக அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது எனக்கு நேரான பதில் கிடைக்கவில்லை. தங்களுக்கு மனிதர்கள் தேவைப்படுவதற்கான காரணத்தை அவர்கள் வெளிப்படுத்த விரும்பவில்லை. அது தெரிந்து போனால் எதிர்கால பேச்சு வார்த்தைகளில் அது நமக்கு பெரிய பலத்தைக் கொடுத்து விடும் என்று அவர்கள் நினைக்கலாம்.”

“செவ்வாய் கிரக வாசிகளைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?” என்று என் பாஸ் கேட்டார்.

“ஒரு முக்கிய வேறுபாட்டைத் தவிர, அவர்களின் உடலியல் மற்றும் வாழ்க்கை முறை நம்மைப் போல் தான் இருக்கிறது. அவர்களின் உணவில் கெரட்டின் (keratin) எனப்படும் நார்ச்சத்து நிறைந்த புரதம் நிறைய தேவைப்படுகிறது. அது அவர்களுக்கு தினமும் வேண்டும், இல்லாவிட்டால் அவர்கள் இறந்து விடுவார்கள்.”

அத்துடன் எங்கள் மீட்டிங் முடிந்து விட்டது போல சர்மா எழுந்து நின்றார். “ஒரு வாரத்தில் எனக்கு பதில் கிடைக்குமா?” என்று கேட்டார்.

“நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்,” என்று மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது.

அடுத்த மூன்று நாட்களுக்கு, செவ்வாய் கிரக வாசிகளைப் பற்றிய அனைத்து தகவல்களையும் ஆராய்ந்தேன். செவ்வாய் கிரக அரசு அதிகாரிகள் பகிர்ந்த வீடியோக்களை நான் திரும்பத் திரும்பப் பார்த்தேன். அவர்களுக்கு மனிதர்கள் தேவைப்படுவதற்கான காரணங்கள் எல்லாவற்றையும் யோசித்தேன். சாத்தியமில்லாத காரணங்களை ஒவ்வொன்றாக நீக்கிய பின் ஒரே ஒரு காரணம் மட்டும் மிஞ்சியிருந்தது. உடனே சர்மாவை போனில் அழைத்தேன்.

“சமீபத்தில் செவ்வாய் கிரகத்தின் மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்தது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டேன்.

“ஆம், தெரியும்,” என்றார் சர்மா.

“திடீரென்று அதிகரித்த மக்கள் தொகைக்கு உணவளிக்க அவர்களுக்கு அதிக அளவில் கெரட்டின் தேவைப்பட்டது. அதற்குத் தான் மனிதர்களாகிய நாம் தேவைப்பட்டோம்.”

“அவர்களுக்கு வேண்டிய கெரட்டினுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?”

“செவ்வாய் கிரகத்தில் வசிக்கும் இந்தியர்களின் புகைப்படங்கள், விடியோக்கள் பார்த்தீர்களா?”

“ஆம், பார்த்திருக்கிறேன்.”

“அவற்றில் எதாவது வித்தியாசமாக இருந்ததைக் கவனித்தீர்களா?”

“யெஸ், பல இந்தியர்கள் சுத்தமாக மொட்டையடித்த தலையுடன் இருந்தது எனக்கு நினைவிருக்கிறது.”

நான் மௌனமாக இருந்தேன் அவரே இந்தப் புதிரை அவிழ்க்கட்டும் என்று. சட்டென்று பிரகாசமான சர்மா, “மனித தலை முடியில் கெரட்டின் இருக்கிறது என்று சொல்கிறீர்களா?” என்று கேட்டார்.

“ஆம், நம் தலை முடியில் கெரட்டின் 95% இருக்கிறது… வெட்ட வெட்ட வளரும் முடியிருக்கும் மனிதர்களை செவ்வாய் கிரக அரசு வேண்டியதின் காரணம் அது தான்!”

பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான்.  அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *