கோவையிலிருந்து ஐம்பது கி.மீ தூரத்திலிருக்கும் பொங்கலூர் கிராமமும் இல்லாத, நகரமமும் இல்லாத ஒரு இரண்டுங்கெட்டான் டவுன். அந்த டவுனின் அமைதியான தெருக்களில் அறுபது வயது மதிக்கத்தக்க ராமகிருஷ்ணன் உலாவிக் கொண்டிருந்தார். அடி வானத்தில் மாலை நேர சூரியன் மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது.
சென்னையில் முப்பது வருட காலம் செல்வத்தைத் துரத்தி விட்டு இப்போது ரிடையர் ஆகப் போகிறவர் ராமகிருஷ்ணன். தன்னுடைய ஓய்வுக் காலத்தை நிம்மதியாக கழிக்க ஒரு இடத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார். அதற்கு பொங்கலூர் ஏதுவாக இருக்குமா என்று பார்க்கவே அங்கு வந்திருந்தார்.
அவருடைய முதல் நிறுத்தம் தெரு மூலையில் அமைந்துள்ள கும்பகோணம் காபிக் கடை. உள்ளே நுழைந்து ஜன்னலுக்கு அருகே ஒரு இருக்கையைப் பிடித்து உட்கார்ந்து கொண்டார். புதிதாக காய்ச்சப்பட்ட பில்டர் காபியின் நறுமணம் அருகில் வந்து ஹலோ சொன்னது. அவர் டேபிளுக்கு அடுத்த டேபிளில் தலையெல்லாம் நரைத்த வயதான முதியவர் ஒருவர் ஆவி பறக்கும் காபியை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தார்.
ராமகிருஷ்ணன் முதியவரிடம் திரும்பி, “பொங்கலூர் ஒரு அழகான ஊர். இங்கு வாழ்வதில் சிறந்த அம்சம் என்ன?” என்று கேட்டார்.
முதியவர் புன்னகைத்தார். “இங்கிருக்கும் அமைதி தான் நண்பரே. நகரத்திலிருக்கும் அவசரமும் டென்ஷனும் இங்கு இல்லை.” சொல்லி விட்டு காபி கோப்பையை உதடுகளுக்கு உயர்த்தினார்.
அப்போதுதான் முதியவரின் வலது கையில் சுண்டு விரல் இல்லாததை ராமகிருஷ்ணன் கவனித்தார்.
இருபது நிமிடங்களுக்குப் பிறகு, ராமகிருஷ்ணன் உள்ளூர் நூலகத்திற்குள் நுழைந்தார். பெரிய மேசைக்கு பின் உட்கார்ந்திருந்த நூலகர் நாற்பது வயது மதிக்கத்தக்க, கனிவான கண்களுடைய ஒரு பெண்மணி.
ராமகிருஷ்ணன் தன்னை அறிமுகம் செய்து விட்டு கேட்டார், “பொங்கலூரின் சிறப்பு என்ன? மற்ற டவுன்களில் இருந்து அதை வேறுபடுத்துவது எது?”
“இங்கிருக்கும் ஒற்றுமை உணர்வு தான். நாங்கள் அனைவரும் சண்டை சச்சரவு எதுவுமின்றி அமைதியாக வாழ்கிறோம்.”
கொஞ்ச நேரம் அங்கிருக்கும் புத்தகங்களை மேய்ந்தார் ராமகிருஷ்ணன். பத்து நிமிடம் கழித்து நூலகத்தை விட்டு வெளியே வரும்போது நூலகப் பெண்மணி கை அசைத்தார். அவர் வலது கையில் சுண்டு விரல் இல்லை.
அடுத்த இரண்டு மணி நேரத்தில், ராமகிருஷ்ணன் உள்ளூர் மக்கள் பலரிடம் பேசினார். ஆனால் அவர்கள் சொன்னது எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. எல்லோருடைய வலது கையிலும் காணாமல் போன சுண்டு விரலே அவர் மனதை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. ஏன் இந்த ஊரில் யாருக்குமே சுண்டு விரல் இல்லை?
திடீரென்று ராமகிருஷ்ணனுக்கு ஒரு சந்தேகம். தன் கையில் சுண்டு விரல் இருக்கிறதா? தன்னுடைய வலது கையை சோதிக்க ஒரு வலுவான ஆசை எழுந்தது. அது முட்டாள்தனமான ஆசை என்று அவருக்கே புரிந்தது. இருந்தாலும்…
ராமகிருஷ்ணன் தன் VR (Virtual Reality) ஹெட்செட்டை வேக வேகமாக அவிழ்த்து, VR கையுறைகளை கழற்றி எறிந்தார்.
நல்ல வேளை. அவரது வலது கை சுண்டு விரல் பத்திரமாக இருந்தது.