“பூமியைப் போலவே இருக்கும் வேற்று கிரகமான ப்ராக்ஸிமா சென்டாரி பி (Proxima Centauri b) க்கு செல்ல நாம் இந்த 1000 வருட பயணத்தை மேற்கொண்டிருக்கிறோம். நீங்கள் எல்லோரும் இந்த விண்கலத்தில் பிறந்தீர்கள். உங்கள் பெற்றோரும் இங்கு தான் பிறந்தார்கள். நாளை உங்கள் குழந்தைகளும் இங்கு தான் பிறப்பார்கள்.”
எங்கள் எதிர் காலத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலுடன் இந்த சந்திப்பு அறையில் கூடியிருக்கும் பதிமூன்று வயது நிரம்பிய எங்களுக்கு கேப்டனின் இந்த வார்த்தைகள் அதிர்ச்சியைக் கொடுத்தன. நாங்கள் இந்த விண்கலத்தில் பிறந்தோமா? இதை பற்றி யாரும் எங்களுக்கு இது வரை சொன்னது இல்லை – எங்கள் பெற்றோர் உட்பட.
அறையில் ஒரு முணுமுணுப்பு அலைமோதியது. எங்கள் அனைவரின் மனதிலும் எழும்பிய கேள்வியை மாயா கேட்டாள். “நாம் ஏன் இதைச் செய்கிறோம்? எதற்காக இந்த மாபெரும் பயணம்?” அவள் குரலில் உறுதி இருந்தாலும் கண்களில் குழப்பம் தெரிந்தது.
கேப்டன் அவளை ஒரு கணம் பார்த்தார். “பூமி இனி மனிதர்கள் வாழத் தகுதியற்றதாகி விட்டது, மாயா.” அவர் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. “மனித குலம் நீடித்திருக்க நாம் உடனடியாக இன்னொரு உலகிற்கு இடம் பெயர வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.”
மற்றொரு கேள்வி எழுந்தது, இந்த முறை அரவிந்திடமிருந்து. “மிகக் குறைந்த, தேவைக்கு வேண்டிய பொருட்களை மட்டுமே வைத்துக் கொண்டு இவ்வளவு நீண்ட பயணத்தை நம்மால் எப்படி மேற் கொள்ள முடிகிறது?”
“நல்ல கேள்வி, அரவிந்த்,” என்றார் கேப்டன். “இந்த விண்கலத்தில் நாம் பயன் படுத்தும் அனைத்தையும் நாங்கள் மறுசுழற்சி (recycle) செய்கிறோம். எதுவும் வீணாகாது. நம் முன்னோர்கள் துவக்கி வாய்த்த இந்த பெரும் பயணம் முடியும் வரையில் நம்முடைய பொருட்கள் நீடித்திருக்க வேண்டும் என்றால் அது தான் ஒரே வழி.”
மற்றொரு கை எழுந்தது. “நாம் எப்போது ப்ராக்ஸிமா சென்டாரி பி கிரகத்தை அடைவோம்?”
“619 ஆண்டுகளில். இந்த அறையில் இருக்கும் நாம் அனைவரும் அதற்குள் இறந்திருப்போம். உங்கள் சந்ததியினர் இந்த விண்கலத்தை இயக்கி ப்ராக்ஸிமா சென்டாரி பி யில் தரையிறங்குவார்கள்.”
நான் கையை உயர்த்தினேன். “இந்த விண்கலத்தில் இறக்கும் நபர்கள்… அவர்களின் உடல்களை இங்கே எங்காவது வைத்திருக்கிறோமா?”
கேப்டன் என்னைப் பார்த்து சிரித்தார். “இல்லை. அந்த உடல்களை இங்கு வைத்திருந்தால், விரைவில் நமக்கு இங்கு இடம் இல்லாமல் போய்விடும்.”
அறையில் லேசான சிரிப்பு பரவியது. நான் விடாமல் “உடல்களை விண்கலத்தில் இருந்து தூக்கி எறிந்து விடுவோமா?” என்று கேட்டேன்.
“இல்லை, உடல்கள் வெளியே எறியப்பட முடியாத அளவுக்கு மதிப்புள்ளவை.”
“அப்படியானால், நாம் அந்த உடல்களை என்ன தான் செய்கிறோம்?” நான் பிடிவாதமாக என் கேள்வியை தொடர்ந்தேன்.
கேப்டன் பதில் எதுவும் சொல்லவில்லை. தர்ம சங்கடமான புன்னகை மட்டுமே அவரிடமிருந்து வந்தது.
அடுத்த மூன்று நாட்களுக்கு என்னால் எதுவும் சாப்பிட முடியவில்லை.