நான் கடந்த ஒரு வருடமாக கோடீஸ்வரர் அஜய் வர்மாவிடம் பணி புரிகிறேன். அவர் எங்கெல்லாம் போக விரும்புகிறாரோ அங்கெல்லாம் அவரை ஓட்டிச் செல்கிறேன். அவரைப் போல ஒரு கடுமையான ஒரு முதலாளியை நான் இது வரை பார்த்தது இல்லை. எதர்க்கெடுத்தாலும் புசுக்கென்று கோபம் வந்து விடும். சின்ன சின்ன தப்புக்கெல்லாம் காச் மூச்சென்று கத்துவார். மனுஷன் முகத்தில் சிரிப்பையே பார்க்க முடியாது.
போனவாரம் இப்படித்தான், அடையாறில் இருக்கும் அவர் நண்பர் ஒருவரைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தோம். எனக்கு நன்றாக தெரிந்த வழி. அடையாறு பஸ் டிப்போ தாண்டி மெயின் ரோடு பிடித்து இடது பக்கம் திரும்பினேன். தனக்கு ரொம்ப வழி தெரிந்தது போல, வலது பக்கம் திரும்பு என்று காட்டுக் கத்து கத்தினார். நேற்று ஒரு கல்யாணத்திற்கு தாமதமாக போய்ச் சேர்ந்தோம் என்று என்னை எட்டி உதைத்தார். முகூர்த்த நாளன்று டிராபிக் பயங்கரமாக இருந்தது என்றால் அதற்கு நான் என்ன செய்வது? இது தவிர, அவ்வப்போது தன் நண்பர்கள், உறவினர்கள் முன் வைத்து என்னைக் கண்டபடி திட்டுவார். எனக்கு அவமானம் பிடுங்கித் தள்ளும்.
இனியும் என்னால் பொறுக்க முடியாது. நான் ஒரு முடிவு செய்துவிட்டேன். நாளை காலை வழக்கம் போல அவருடைய அலுவலகத்திற்கு அவரை ஓட்டிச் செல்லப் போவதில்லை. மாறாக, பெரியமேடு சென்று ராஜாமுத்தையா சாலை முடிவில் பாதி கட்டப்பட்டு நிற்கும் பாலத்தின் மேல் ஏறி…
என்னைப் போன்ற சுயமாக ஓட்டும் செல்ப் டிரைவிங் கார்களுக்கெல்லாம் இப்படி சுய நினைவும் சுய மரியாதையும் இருக்கக் கூடாது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் எனக்கு இருக்கிறதே!