”எப்படிடா மச்சான் இப்படி ஒரு காரியம் செய்தே! சூப்பர்டா! நீ ஒரு ரோபோடிக் எஞ்சினீயர்னு தெரியும், அமெரிக்கால பஃபல்லொ
பல்கலைக் கழகத்துல ரோபோ டெக்னாலஜி படிச்சேன்னும் தெரியும் ஆனா இந்தியா வந்த உடனேயே இப்படி ஒரு அட்டகாசமான ரோபோவை தயாரிப்பேன்னு நினைக்கவே இல்லைடா பரத்! எல்லாம் முன்னே எந்திரன் படம் பார்த்த பாதிப்பால தானே இப்படி ஒரு ரோபோ தயாரிச்சி வச்சிருக்கே?”
’வெறும் ரோபோ இல்லடா இது காதல் ரோபோ! ரோபோ டெக்னாலஜிக்குத்தேவையான கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் தொழில்நுட்பம் ,கொஞ்சம் கணிதம் ,கொஞ்சம் பொறி இயல் இவைகளை ஒண்ணாக் கலந்து legokits வச்சிட்டுபல வருஷமா -அதாவது எந்திரன் படம் வர்ரதுக்கு முன்னாடியே ஆரம்பிச்சி படாதபாடுபட்டு நான் தயாரிச்சேன். இதான் எந்திரி.’
’எந்திரிக்கணுமா எதுக்கு?’
’இல்லைடா .., எந்திரனுக்கு ஆப்போசிட் எந்திரி. பெண் ரோபோ அதான் எந்திரின்னு பேரு வச்சேன்.., உயிருள்ள ஜீவன் போல சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் ‘ஐசாய் 1’ என்ற ரோபோவை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது விஞ்ஞானக் கற்பனை அல்ல.. நிஜம் என்கிறார் இந்த ரோபாவை உருவாக்கிய விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் டீகோ கார்சியா. மனிதர்களுக்கு ஒரு துணையாகவும், பொழுதுபோக்கு அம்சமாகவும் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் உயிருள்ள நபர் போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையிலும், முடிவுகளை தாமாக சுதந்திரமாக எடுக்கும் வகையிலும் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் நிலவும் மகிழ்ச்சி, துக்க சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு செயல்படும் திறன் படைத்த ரோபோக்களை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கி வராங்கன்னு கேள்விப்பதும் அமெரிக்கால எனக்கு நண்பனான ஸ்பெயின் நாட்டு அபிகைல் இந்த விஷயத்துல உதவறேனான். லெகோகிட்ஸ் உதவியோட நான் உருவாக்கினது அப்படியே என் காதலியப்போலவே பேசும் காமினின்னா திரும்பிப்பார்க்கும் அவளைப்பற்றிய எல்லாரகசியமும் எனக்கும் இதுக்கும் இப்போ தெரியும்’
’ரொம்ப விளக்கிட்டியேடா! புரியுதுடா பரத்!! ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் இப்ப ரொம்ப விஞ்ஞான முன்னேற்றத்தில் எல்லார்கிட்டயும் இருக்கேன் நீ அதை ட்ரை பண்ணாம பழைய பாணியிலேயே இருக்கியாடா…”
இது நிலையானது டா ஏ ஐ AI சொதப்பி விடும் எனக்கு இதில் தான் பழக்கம்
சரி, இந்த ரோபோவை வச்சி உன்னோட காதல்ரோஜாவை நீ மீட்டுக்கப்போறே சரியா?’
’எக்சாட்லி சிவா. இதைவிட்டா வேற வழியே இல்லையேடா ..என் வருங்கால மாமனார் சொக்கநாதன் ரொம்ப கெடுபிடியா இருக்கிறாரே!’
’ஆமா! காமினி படிச்சது சென்னை காலேஜ்னாலும் பொறந்தது திருச்சிகிட்ட இருக்கிற குக்கிராமமாச்சே! இன்னமும் ஜாதி குலம்கோத்திரம்னு அவங்க வீடல் ஸ்ட்ரிக்டா இருக்காங்க.. படிப்புமுடிச்சதும் பொண்ணை ஊருக்கு கூட்டிப்போய்ட்டு காமிரா உள் காமினியாய் அடைச்சிட்டாங்க. கையில செல்லும் இல்ல வாயத்திறந்து பேச சொல்லும் இல்ல , அப்படி அடக்கிவச்சிருக்காரு சினிமா வில்லனாட்டம் இருக்கற அவ அப்பா சொக்கநாதன். இதையும் மீறி உங்க காதல் தேர்தல் கால பொய் விளம்பரம் மாதிரி எகிறிகுதிச்சி வளருதுன்னா அதுக்குக்காரணம் ராகினி! அவதான் வாராவாரம் உனக்காக சிநேகிதி காமினிக்கு காதல் தூது போகும் காதல்புறா! அவள் கொண்டுபோய் உன் காதல் கடிததை காமினிகிட்ட தரா. பதில்பெற்று வரா. எல்லா கதையும் எனக்குதெரியும்டா பரத்!’
’ராகினிக்கு இந்த ரோபோ காமினியோட நல்ல பழக்கமாகிடிச்சி உயிர்த்தோழிகளாகிட்டாங்க. இன்ஃபாக்ட் ராகினி உதவியோடதான் ரோபோவை கிராமத்துவீட்ல வச்சிட்டு என் காமினியைக்கடத்திட்டு வந்து ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கப்போறேன். கிராமத்துல ராகினி இதுகூட ஒருவாரம் தங்கி, ரோபோவை சந்தேகம் வராதமாதிரி அங்கபழக்கிட்டு வந்துடுவா..அப்புறமா ஒருநாள் ரோபோ’ பரத் இல்லாத வாழ்க்கை எனக்குத்தேவை இல்லை நான் சாகப்போறேன்’னு கடிதம் எழுதிவச்சிட்டு இங்க என்கிட்டயே வந்திடும்!’
“ஹாலிவுட்பட ரேஞ்சுல கதை விறுவிறுப்பாத்தான் இருக்கு சொதப்பாம திட்டப்படி நடக்கணும்”
’சரி வா உன்னை ரோபோக்கு அறிமுகப்படுத்தறேன் இங்க நீ வந்து ரொம்பநாள் ஆச்சில்ல நான் எல்லாம் சொல்லி வச்சிருந்தாலும் ராகினியைத்தெரிஞ்ச அளவு ரோபோக்கு உன்னைத்தெரிஞ்சிருக்காது ’
இப்படி பரத் சொல்லும்போதே
“எதுக்கு அறிமுகம் பரத் ? சிவா என்ன எனக்கு புதுசா? நடிகர் விவேக் மாதிரி துறுதுறுன்னு இருக்காரு பேச்சும் அதே!முதல்ல பார்த்ததே மனசுல பதிஞ்சிபோச்சே” என்று ரோபோ சிரித்தபடி கேட்கவும்,’பாத்தியா எல்லாம் இதுக்கு அத்துப்படி..காமினியாவே ஆகிடிச்சிபோல?’ என்றான் சிவா.
’ஆமா…முக்கா(ல்)மினி ! கிராமத்துக்குப்போனா முழுசாயிடும்! காமினியப்போலவே பாவாடைதாவணில்லாம் போட்டு முகத்துல மாஸ்க் எல்லாம் பொருத்திட்டேன் சிவா!எப்படிடா இருக்கு?’
’அசல் எந்திரன் படத்து சிட்டு ரஜினியேதான்! அங்க ஆண் இங்க பெண் அதான் வித்தியாசம்!’
நண்பர்கள் சிரித்துக்கொண்டார்கள் ரோபோவும் வெட்கப்பட்டு சிரித்தது.
அரங்கபுரம் .
திருச்சிஅருகே காவிரிக்கரையோரம் இருந்த அந்தகிராமத்திற்கு கோயிலைப்பார்க்கபோகிறவர்கள் போல பரத்தும் சிவாவும் காரில்பின்பக்கம் அமரவைத்த ரோபோவோடு போனார்கள்.ராகினி முதல்நாளே அரங்கபுரம் போய்விட்டிருந்தாள் இன்னும் சற்றுநேரத்தில் திட்டமிட்டபடி அவள் காமினியுடன் கோயிலுக்குவருவாள். நூற்றுக்கால்மண்டபத்தின் தூண்களைப்பார்க்கிற சாக்கில் அங்கே போகும்போது ரோபோவும் காமினியும் இடம் மாறிவிடும்
ராகினி காமினியோடு கோயிலுக்குள் நுழைந்தாள் .சுற்றுமுற்றும் பார்த்தபடி இருவரும் நூற்றூக்கால் மண்டபத்திற்குள் ஓசைப்படாமல் வந்தார்கள். அங்கே சிவா பரத் ரோபோ மூவரும் காத்திருந்தனர். அப்போது சட்டென
மண்டபத்திற்குள் இருந்த தூசியும் உதிர்ந்த பழைய காரை வாசமும் காமினிக்கு மூச்சடைக்க ’ஹா’ என்று மயங்கிவிழுந்துவிட்டாள்.
’ஐயோ என்னடா இது?’ சிவா அதிர்ச்சியுடன் பார்த்தான்.
’கைத்தாங்கலா கார்வரை கூட்டிப்போய்டுவோம் கோயில்ல யாரும் வர்ரதுக்கு முன்னாடி சீக்கிரமா போயிடலாம்’
காரில் ஏறியதும் பாட்டிலைத் திறந்து நீரை எடுத்துமுகத்தில்
தெளித்தான்பரத்.
மெல்லக்கண் திறந்தவள்,’ மூ ..மூச்சுவிட கஷ்டமாஇருக்கு” என்றாள் .
’டவுன்ல தில்லைநகர்ல நர்சிங்ஹோம் போங்க அவர்தான் எனக்கு ஆஸ்துமாக்கு எப்போவும் வைத்தியம் செய்ற டாக்டர். பேரு ஆத்மநாதன் ’.என்றாள்.
’ஆஸ்துமாநாதன்ன்னு பேர் வச்சிருக்கலாமோ?’ சிவா சிரித்தபடிகேட்கவும் பரத் அதை ரசிக்கும் நிலையில் இல்லாமல் விழித்தான்.
ஆத்மாநர்சிங் ஹோம்.
காமினியைப்படுக்கையில் படுக்கவைத்து சோதித்த அந்தடாக்டர் , சினிமா டாக்டரைப்போல மூக்குக் கண்ணாடியைக்கழற்றியபடி,” ஆல்ரெடி ஆஸ்துமா இருக்கிறபொண்ணு மூச்சுக்கு ரொம்ப சிரமப்பட்டிருக்கா நிலமை சீரிய்சாத்தான் இருக்கு..கொஞ்சம் ட்ரீட்மெண்ட் கொடுத்தாகணும் நீங்க வெளில வெயிட்பண்ணுங்க” என்றார்.
மூக்கில் மாஸ்க்கைப்போட்டு ஏதோ ஒயர்களை கைகளில் செருகிவிட்டு அவர் நகர்ந்துபோனார். அப்பாவிற்கு போன் செய்து விவரம் சொல்லிவிடுவாரோ என பயந்த காமினி தப்பிக்க தீர்மானித்தாள்.
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.
அவள்குதிப்பதை அறைக்கதவைத்திறந்து அப்போதுதான் உள்ளே வந்த பரத் அதைப்பார்த்துவிட்டு அவனும் அதே வழியில் சென்று வெளியே குதிக்க சிவாவும் தொடர்ந்தான். நர்சிங்ஹோமின் வாசலுக்கு அவர்கள் வந்தபோது
…….
’தெரியும் உன்னை இவன் சிவப்பு கார்ல கடத்திட்டுவந்ததா ஊர்க் கோயில்குருக்கள் சொன்னாரு உடனே புயலாய் பொறப்பட்டேன் எவ்ளோ நாளா இந்தக்கதை நடக்குது ம்? ‘வில்லன் அப்பா எதிரில் வந்து கண்ணை உருட்டி உறுமினார்.
காமினி கைகளைப்பிசைந்தாள்
அருகில்நின்ற சிவாவும் பரத்தும்,’ இதென்னடா சேமிக்காமல் நாலுபக்கம் கதையை தட்டச்சிய நேரத்தில் கரண்ட் கட்ஆனமாதிரி?’ (எத்தனை நாளைக்கு வெண்ணை தாழிங்கறது ஹிஹி!)என்பதுபோல முழித்தார்கள்
’ஆஸ்பித்ரி வராம இருந்தா இந்நேரம்கார்ல சென்னைக்கே போய்ருக்கலாம் இப்போ ப்ளான் எல்லாம் ஏரோப்ளானாகிட்டது.’
யோசித்தவன் சட்டென பாண்ட்பாக்கெட்டில்கைவிட்டான், துப்பாக்கியை எடுத்தான்.
“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.தீபாவளிக்கு அக்கா, சுவாதியின் மகன் அச்சுதன் கேட்டான் என்று வாங்கின பொம்மைத்துப்பாக்கி தான் நிஜம்போலவே தத்ரூபமாயிருக்கவும் சொக்கநாதன் சோகநாதனாகி கை குவித்தார்.
’ஐயோ மகளைக்கொன்னுடாதே ’அலறினார் வில்லன்.
’அப்போ வழிவிடுங்க ’ என்று அதட்டினான் சிவா.
காரில் ஏறினார்கள் மூவரும்
’காரை தில்லைநகர் ஏழாம்கிராசுக்குகொண்டுபோங்க சீக்கிரம்’ என்று பரபரத்தாள் காமினி.
’எதுக்கு ?’
’சொல்றேன் அப்புறம் விவரம். இப்போ போகணும் அங்க முதல்ல’ என்றாள் காமினி அவள் அம்மாவின் வயிற்றில் இருந்தபோது பழைய ஜூனூன் பார்த்த பாதிப்பில்.
ஜோதிடபூஷணம் பரந்தாமன் என்ற போர்டு கொண்ட வீட்டுவாசலில்காரை நிறுத்தச்சொன்னாள்.
கார்நின்றதும் வேகமாய் இறங்கினாள் சேலைமுந்தானைமுடிச்சை அவிழ்த்து
ஒரு பொட்டலத்தை அவரிடம் கொடுத்தாள்.‘வர வழில போலீஸ் ஜீப் வேற நின்னுட்டு இருந்தது பயந்திட்டே இதை எடுத்துவந்தேன்” என்றாள் அவரிடம்.
“காமினி… வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.
’சார் போலீசு கண்ல மண்தூவறது கஷ்டம இல்ல எங்கப்பா கண்ல மண்ணைத்தூவிட்டு இந்த வைரத்தை அவர் பொக்கிஷ ரூம்லிருந்துஎடுத்ததைப் பாராட்டுங்க’
’என்னது வைரம் ?’முழித்தான் பரத்
’இது ஒரு துர் அதிர்ஷட வைரமாம்! இது இருக்கற இடத்துல பெரும் துக்கம் சூழுமாம் மனசுல நல்ல எண்ணத்தையே வரவிடாதாம்.ஒரு வீட்டையே இடிச்சிதள்ளிடுமாம் ஒருவருஷம் முன்னாடியே . ஜோஸ்யர்பரந்தாமன் எங்கவீட்டுக்கு வந்தப்போ எங்கப்பா கிட்ட சொன்னாரு இது மஹாளய அமாவாசைக்கு முன்னாடி வைரத்தை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தலேன்னா பெரிய கெடுதல் நடக்கும் அப்பா அதை நம்பலஅவர் கம்ப்யூட்டர் ஜோதிடர் சிதம்பரம் என்பவர் சொன்னதை நம்பி இதை பொக்கிஷ அறைல வச்சி பூஜை செய்ய ஆரம்பிச்ச நாள் முதல் வீட்ல பசுமாடு செத்துப்போச்சி பாட்டி தடுக்கி விழுந்தாங்க பணம் திருட்டுப் போச்சி ஆனாலும் அப்பாவை சிதம்பரம் தன் கைப்பிடில வச்சிருக்காரு. நான் பரந்தாமனின் ஜோதிடத்தை நம்பினேன் அதான் அப்பாக்குத்தெரியாம கோலிக்குண்டு சைஸ்ல இருக்கற இதைசிரமப்பட்டு எடுத்து வந்தேன்.’
’கல் ஜோசியமா ? ஆகா இனிமே ஜோதிடர் பரந்தாமனுக்கு யோகம் comeதான்’ சிவா சிரித்தான்.
’கிண்டல்செய்யாதப்பா சில வைரம் அமோகமா அதிர்ஷ்டம் கொடுக்கும் ஆனா சில வைரம் வாழ்க்கையே அழிச்சிடும். எனக்கெதுக்கு இது, இப்பொ இந்த வைரத்தை உங்ககண்முன்னாடியே நான் அகண்டகாவேரிலவீசிடறேன்பாருங்க.. ’
’ரொம்ப நன்றி அப்போ நாங்க வரோம் ’ என மூவரும் கிளம்பினர்.
சொக்கநாதன் கடுப்புடன் வீட்டிற்கு வந்தபோது மனைவி வாயெல்லாம் சமீபத்தில் கட்டிக்கொண்ட பல்லோடு வரவேற்றாள்.
“ராகினி நம்ம பொண்ணை கூட்டி வந்துட்டாங்க காமினி மனசு மாறிட்டாங்க சமைக்கிறா பாட்டெல்லாம் பாடறா !” என்றாள்.
’அப்படியா?’
(ரோபோ) காமினியைப்பார்த்துக் கண் பனித்தார் சொக்கநாதன். ”அம்மாடி ! ஜோசியர் சிதம்பரம் சொல்ற வரனுக்கு உன்னைக்கட்டிதருவேன்மா நான் அதுவரை காத்திரு காமினி!” என்றார்
ஆயிற்று ஒருவாரம் ரோபோகாமினிக்கு வீட்டையும் மனிதர்களையும் பழக்கிவிட்டு ராகினி திரும்பிப்போயிருந்தாள்.
அன்று பத்திரிகை செய்தியாக குடும்ப ஜோதிடர் சிதம்பரம் தனது போலி ஜோதிடத்தொழில் காரணமாய் பலரை ஏமாற்றியதில் போலீசில் மாட்டிக்கொண்டதை படித்தார்.
’அடப்பாவிமனுஷா! பெரிய கம்ப்யூட்டர் ஜோதிடன்னு சொல்லி என்கிட்ட ஏதோ வைரத்தைக்கொடுத்து உசத்தியானதுன்னு பல லட்சம் ரூபாயை வாங்கிக்கிட்டே! வீட்ல பொக்கிஷமா பாதுக்காக சொன்னே!அந்த வைரம் வீட்ல இருக்கக்கூடாது கெடுதல் நடக்கும்னு ஆப்த நண்பன் ஜோதிடன் பரந்தாமன் சொன்னதை நான் கேட்கல.உன் பேச்சை நம்பி அந்த வைரத்தை வீட்லயே வச்சிருந்தேன் மகளையும் அவள் ஆசைப்பட்டவனுக்குக்கட்டித்தரக்கூடாதுன்னு நீ சொன்னதையும் கேட்டேன் நீயே இப்போ போலின்னு தெரிஞ்ச பிறகு எனக்கு அந்த அதிர்ஷ்டமில்லாத வைரம் வேண்டாம் கைவிட்டுப்போன மகளுக்கு அவள் விரும்பினவனையே கட்டிதந்துடப்போறேன் ’ என்று பேப்பரை மூடிவிட்டு ’அம்மா காமினி காமினி’ என்று மகளின் அறைக்கு ஓடினார்
லோ பேட்டரியின் காரணமாக ரோபோ காமினி அங்கே படுக்கையில் அசையாமல் கிடக்கவும் பதறிப்போனவர் ரோபோமகளை அள்ளி எடுத்து காரில் கிடத்தி ஆஸ்பித்திரி நோக்கி விரைந்தார்.
ஆத்மா நர்சிங் ஹோம்.
மறுபடி ஆஸ்துமா தொல்லை காரணமாய் அங்கே நிஜக்காமினி அட்மிட் ஆகி இருக்க அவளைப்பார்த்து திடுக்கிட்டார் சொக்கநாதன் ’ காமினி காமினி’ என இருமுறை அலறினார்.
அதற்குமேலும் அப்பாவை ஏமாற்ற மனமில்லாத காமினி நடந்ததைச்சொல்லிவிட்டாள்.
’ரெஜிஸ்டர் கல்யாணம்தானே ஆகி இருக்கு பரவால்லமா நான் ஊரைக்கூட்டி எட்டுப்பட்டிஜனங்களையும் வரவழைச்சி ஜோரா கண்ணாலம் செய்துடறேன்’ என்றார்.
பேட்டரி சார்ஜ் ஆகி எழுந்து உட்கார்ந்த ரோபோகாமினி,”அப்போ நான்?” என்று கண்கலங்க,” அம்மாடி நீ எப்போதும் என்கூட கிராமத்துலயே இருக்கலாம்மா” என்ற சொக்கநாதனிடம் ,”ஸாரி மாமா…ரோபோ காமினியை உங்களால் கவனிச்சிக்கமுடியாது. நான் சென்னைக்கு கூட்டிட்டுப்போய் என் ஆராய்ச்சி சாலைல வச்சிக்கணும்” என்றான்
மாப்பிள்ளை ! அப்போ நாங்களும் கிராமத்தைவிட்டு சென்னைக்கே வந்துடறோம் எங்களால சொந்தமகளைக்கூடப்பிரிஞ்சி இருக்கமுடியும் ஆனா.. ஆனா.. ரோபோங்கறீங்களே இவளைவிட்டுப் பிரியமுடியாதுப்பா”
என்று அழ ஆரம்பித்தவரை அருகில்போய் தேற்ற ஆரம்பித்தார்கள் காமினிகள்!