கி.பி. 2058 ல் ஒருநாள். அவன் இருந்தது சென்னை அதி பாதுகாப்பு சிறைச்சாலையின் தலைமை பொறுப்பாளருடன்.
“நண்பரே, உங்கள் கடைசி ஆசையை நிறைவேற்றுவதில் நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார் த.பொ. அவனிடம். அவன் மரணதண்டனைக் கைதி. அவன் செய்த குற்றம் நமது கதைக்கு தேவையற்றது என்பதால் நேரடியாக அவனது கடைசி ஆசைக்கு செல்வோம்.
“அரசிடம் இருந்து ஒப்புதல் வந்துவிட்டதா?” என்றான் அவன்.
“ஆம் நண்பரே, இன்னும் 1 மணிநேரத்தில் தங்களது தண்டனை நிறைவேற்றப்படப் போகிறது. எனவே உங்கள் கடைசி ஆசையை நிறைவேற்றச் செல்வோமா?”
“கண்டிப்பாக” என்றான் மனதெங்கும் மகிழ்ச்சியுடன்.
அடுத்த அறையில்…
“நண்பரே, இதுதான் கால இயந்திரம். உங்கள் கடைசி ஆசையின்படி நீங்கள் இதில் பயணம் செய்யப்போகிறீர்கள்…ஆனால் ஒரு சில நிபந்தனைகளுடன்”
அவன் அமைதியாக இருந்தான்.
“முதலில், நீங்கள் இறந்த காலத்திற்குத்தான் செல்ல முடியும், எதிர்காலத்திற்கு அல்ல, நீங்கள் மரணதண்டனை குற்றவாளி என்பதால். அடுத்தது உங்களுக்கு கொடுக்கப்படும் நேரம் 55 நிமிடங்கள் மட்டுமே, அதன்பின் நீங்களாகவே திரும்பிவிட வேண்டும், 1 நிமிட தாமதம் கூட பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது. மூன்றாவது ஏதேனும் ஒரே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத்தான் செல்ல முடியும், அங்கேயிருந்து வேறு ஒரு காலத்திற்கு உங்களால் செல்ல முடியாது, திரும்பி இங்கே வருவது மட்டுமே சாத்தியம். புரிகிறதா?”
“புரிகிறது”
“எந்த காலகட்டத்திற்கு செல்ல விரும்புகிறீர்கள்?”
“நூறு ஆண்டுகளுக்கு முன்னால்”
“நல்ல தேர்வு, மாசுபடாத காற்று, சுத்தமான நீர், அபரிமிதமான இயற்கை வளம் எல்லாம் அனுபவிக்க முடியும்.”
மறுபுறம் திரும்பி அங்கே இருந்த க்வான்டம் கணினியில் ஒரு சில உள்ளீடுகளைச் செய்தார்.
“உலகின் எந்த பகுதிக்கு செல்ல விரும்புகிறீர்கள்? இந்தியாவின் ஏதோ ஒரு பகுதிக்கா? கிழக்கு அல்லது மேற்கு பகுதிக்கா?”
அவன் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவன். காதலியுடன் ஐரோப்பா முழுவதையும் ரசித்தவன். எனவே
“கிழக்காசிய நாடுகளில் ஏதேனும் ஒன்று”
“கண்டிப்பாக நண்பரே”
மீண்டும் ஏதோ உள்ளீடுகளைச் செய்தார்.
“அனைத்தும் தயார். இதை அணிந்து கொள்ளுங்கள். இது இன்னும் எத்தனை நிமிடங்கள் மீதி உள்ளன என்று காட்டும். இதோ இந்த கதவில் உள்ளே செல்லுங்கள். கடைசியாக சில அறிவுரைகள், நீங்கள் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்துக்குச் செல்லப் போகிறீர்கள். இந்த கால இயந்திரம் நவீன க்வாண்டம் கணிணியின் உதவியுடன் உங்களை குறிப்பிட்ட காலத்திற்கு அனுப்ப உதவும். சரியாக கிளம்பிய 55 நிமிடத்தில் நீங்கள் மீண்டும் இதற்குள் வந்து இந்த சிவப்புப் பொத்தானை அழுத்தினால் நீங்கள் இங்கேயே திரும்பி வந்து சேருவீர்கள். மீண்டும் சொல்கிறேன். கால தாமதம் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று. மேலும் இது 16 மெகா பிட் நீளமுள்ள பாதுகாப்புத் தகவலுடன் இயங்குகிறது, தற்போதுள்ள அதிவேக க்வாண்டம் கணினியால் இதை உடைக்கவே 16 பில்லியன் ஆண்டுகள் ஆகும். எனவே உங்களுக்கு இருக்கும் 55 நிமிடத்தில் முயற்சி செய்யாதீர்கள்.”
“நான் தயார்” என்றான் அவன்.
“உற்சாகமான பயணத்திற்கு வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம்.”
த.பொ. மீண்டும் அனைத்தையும் சரி பார்த்த பின் பச்சை நிறத்தில் இருந்த ஒரு பொத்தானை அழுத்தினார்.
அவன் சடாரென உள்ளிழுக்கப்பட்டான் அல்லது பட்டதாக உணர்ந்தான். அடுத்த வினாடி அவனது கால் மற்றும் கை விரல்களில் ஆரம்பித்த வலி உடலெங்கும் பரவ ஆரம்பித்தது. அவன் உடல் வெப்பநிலை திடீரென்று உயர்ந்தது.
‘என்ன இது.. நான் ஏமாற்றப்பட்டேனா? எனது மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறதா?’
அவன் வலியால் கத்த ஆரம்பித்த நேரம் அவன் பனி வெள்ளத்திற்குள் விழுந்தது போல் உணர்ந்தான். வலி முற்றிலும் இல்லாமல் காற்றில்லா தளத்தில் மிதப்பது போல். அவன் மனதை அதுவரை அவன் கடந்த மகிழ்ச்சியான தருணங்களால் நிரப்பினான்.
பத்து வயது சிறுவனாக அம்மா மடியில் தலை வைத்து படுத்தான். பதினைந்து வயதில் சக தோழியிடம் இருந்து முதல் முத்தம் பெற்றான். கைத்தட்டல்களுக்கு நடுவே பல்கலை கழகத்தின் மேடையில் தங்கப்பதக்கம் பெற்றான். காதலியுடன் ஐரோப்பிய தங்கும் அறைகளில் கட்டிப் புரண்டான்.
அவன் நினைவு தடைபட்டது. எதன் மீதோ மோதி பிடிமானமில்லாமல் விழுந்தான். மெல்ல கண்களைத் திறந்து, சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லாம் அதனதன் இடத்தில் இருந்தன. கால இயந்திரம் ஏதோ ஒரு அழகான பூங்காவின் பச்சைப் புல்வெளியில் நின்றிருந்தது.
மணிக்கட்டைப் பார்த்தான். இன்னும் 54 நிமிடங்கள் இருப்பதாகக் காட்டியது. கதவைத் திறந்து வெளியே வந்து சுதந்திரக்காற்றை சுவாசித்தான்.
‘இதோ இங்கே இரண்டாயிரம் காவலர்களின் பாதுகாப்பு இல்லை. கதவுகளைத் திறக்க இருநூற்று ஐம்பத்தாறு எழுத்துகளை அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை உணவு மாத்திரைகள் இல்லை. தப்பிச் செல்லாமல் இருக்க பதினாறு வளைய சுற்றுச் சுவர்கள் இல்லை. வான் வழித் தப்புதலைத் தடுக்க கண்ணிற்குத் தெரியாத லேசர் படலங்கள் இல்லை. சுரங்கம் தோண்டி அதன் வழியாக தப்பிக்க நினைப்போரை பொடிப் பொடியாக்கிக் கரைக்கும் அமிலக் குழாய்கள் இல்லை.
நினைக்கும் போதெல்லாம் நாவிற்கு சுவையான உணவு, சுதந்திரமான சுற்றுப்புறம், அபரிமிதமான பெட்ரோல், அழகான பெண்கள்.
இல்லை. நான் திரும்பிப் போவது இல்லை. இங்கேயே நிரந்தரமாக தங்கப் போகிறேன். முதலில் இங்கேயிருந்து தொலைவில் செல்ல வேண்டும், மக்கள் அதிகம் கூடும் இடத்திற்கு. ஒருவேளை அவர்கள் என்னைத் தேடி வந்தாலும், என்னைப் பிடிப்பது அவர்களுக்கு சுலபமாக இருக்கக் கூடாது. திரும்பிச் சென்றால் உடனடியாக நான் லேசர் அறைக்குள் அனுப்பப்பட்டு என் சாம்பல் கடலில் கரைக்கப்படும். இங்கேயே இருப்பதன் மூலம் அவர்கள் வந்து என்னைப் பிடித்தாலும் குறைந்தது எனது ஆயுள் ஒரு மணிநேரமாவது நீட்டிக்கப்படும்.
ஒருவேளை அவர்கள் வராமலே போனால் புதிய வாழ்க்கையை தொடங்குவேன். ஆம் அதுதான் சரி’
நினைத்துக்கொண்டே கால இயந்திரத்தை விட்டு நகரம் தெரிந்த திசையை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தான்.
அங்கே….
“இவர் திரும்பி வருவார் என்று நம்புகிறீர்களா?” என்றார் உதவிக்காவலர்.
பதில் சொல்லாமல் புன்னகைத்தார் த.பொ.
அது ஒரு அற்புதமான காலை நேரம். சூரியன் லேசாக மேலே எழும்பிக் கொண்டிருந்தது. வழியில் பார்த்த எல்லா முகங்களும் ஒரே மாதிரி இருப்பதாக பட்டது அவனுக்கு. எல்லோரும் அவரவர் வேலைகளில் மும்முரமாக இருந்தனர்; தெருவை சுத்தப்படுத்திக் கொண்டும், பள்ளிக்கு சென்று கொண்டும், தினப் பத்திரிக்கைகளை விற்றுக் கொண்டும், இரு சக்கர மிதிவண்டிகளில் அலுவலகங்களுக்குப் போய்க் கொண்டும்….
‘ம்ம்ம்ம் நூறு ஆண்டுகளில் உலகம் எவ்வளவுதான் மாறிவிட்டது’
அவனுக்கு அப்பொழுது ஒரே பிரச்சினை, தான் எங்கே இருக்கிறேன், எந்த தேதியில் இருக்கிறேன் என்று தெரியாதது. எல்லா அறிவிப்புப் பலகைகளிலும் சித்திர எழுத்துகளே பிரதானமாக இருந்தது. எந்த நாடு என்பதைக் கூட யூகிக்க முடியவில்லை.
எதிப்பட்டவர்களிடம் “இங்கிலீஷ்” என்றான். எல்லோரும் அவனை ஒருமாதிரி பார்த்துவிட்டு தலையை இட வலமாக அசைத்தனர்.அரை மணி நேர நடைக்குப் பின்னர் நகரத்தின் முக்கிய வீதியை வந்தடைந்தான். மற்ற இடங்களை விட இது பரபரப்பாக இருந்தது. மணிக்கட்டை பார்த்தான் 22 என்று காட்டியது.
வீதியில் நடக்க ஆரம்பித்தான். வழியிலிருந்த தண்ணீர் குழாயில் குளிர்ந்த நீரை உடலெல்லாம் வழிய வயிறு முட்டக் குடித்தான். சின்ன சின்னதாக கால்களை ஆட்டியவாறு நடைபாதையிலேயே குட்டி ஆட்டம் ஆடினான்.
எதிர்ப்பட்டவர்களிடம் ஆட்களைத் தேர்ந்தெடுத்து “இங்கிலீஷ்” என்றான், வெகு நேரத்திற்கு வெற்றி இல்லாமல். கடைசியாக ஒருவன் “யெஸ்” என்றான்.
மனம் நிறைந்த மகிழ்வுடன் ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்தான்.
“இது எந்த நாடு?”
“ஆச்சரியமான கேள்வி. நீங்கள் என்னை சோதிக்கிறீர்களா? நீங்கள் இருப்பது எம்பயர் ஆஃப் ஜப்பான்”
‘அற்புதம், சரியான இடத்தில்தான் இருக்கிறேன். ஜப்பானின் வேகமான வளர்ச்சியில் நானும் பங்கு கொள்ளப் போகிறேன், தொண்ணூறுகளில் பொருளாதார தாழ்நிலை ஏற்படும்போது நான் இயற்கையாகவே மரித்திருப்பேன்’
அங்கே….
“இன்னும் 2 நிமிடங்கள்தான் இருக்கின்றது” என்றார் உதவிக்காவலர் தவிப்புடன்.
“காத்திருப்போம்” என்றார் த.பொ.
“நீங்கள் எப்படி ஆங்கிலம் பேசுகிறீர்கள்?”
“என் பணி நிமித்தமாக நான் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. அதனால்தான். நீங்கள்?”
“நான் அமெரிக்காவில் படித்தவன்”
அவர் முகம் மாறியது.
“இந்தியன். ஆனால் படித்தது மட்டும் அமெரிக்காவில். இனி பிழைக்கப் போவது இந்த ஜப்பானில்”
அவர் சிரித்துக் கொண்டே “நல்வரவு” என்றார்.
அங்கே…
உதவிக்காவலர் பதறினார் “55 நிமிடங்களிக்கு மேலே 15 வினாடிகள் ஆகிவிட்டன. அவர் திரும்பி வருவதாகத் தெரியவில்லை. இன்னும் கால இயந்திரம் திரும்புவதற்காக ஆரம்பிக்கப்படவே இல்லை. அவர் திரும்பி வரப் போவதில்லை”
த.பொ. எந்த உணர்ச்சியும் காட்டாமல் எழுந்து சுவரிலிருந்த தகவல் பலகைக்குப் போனார். அங்கே அவன் புகைப்படத்திற்கு நேராக இருந்த ‘தண்டனை நிறைவேற்றப்பட்டது’ என்ற பொத்தானை அழுத்தினார்.
அவன் உற்சாகமாக அவரிடம் பேசிக் கொண்டிருந்தான்.
“இன்றைய தேதி என்ன?”
“ஹா..ஹா..ஹா..நீங்கள் என்னவோ வேறு கிரகத்தில் இருந்து வந்தவரைப் போல் கேட்கிறீர்கள். இருந்தாலும் சொல்கிறேன். இன்று திங்கட்கிழமை ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி, 1945ம் வருடம், நேரம் காலை 8.14 மணி. நீங்கள் நின்று கொண்டிருப்பது நகரின் பிரபலமான ஷிமா மருத்துவமனை வாசலில். போதுமா தகவல்கள்?”
ஏதோ நெருடியது…’06 ஆகஸ்ட் 1945, காலை 8.14 மணி’
நடுங்கும் குரலில் கேட்டான் “இது என்ன நகரம்?”
அவர் உற்சாகமாக பதிலளித்தார் “ஹிரோஷிமா”
32,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும் ஓசை அவன் காதில் கேட்டது.
– ஜூலை 2008, சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கான இரண்டாவது இடுகை.
Excellent story. Wow.