கதிரேசன் வெற்றிக் களிப்பில் குதித்தான். “மூர்த்தி, ஏழு வருட உழைப்புக்குப் பின் நம் ஆராய்ச்சிக்கு வெற்றி! இப்போது நாம் கடந்த காலத்திலிருக்கும் யாருடனும் பேசலாம்!”
அவன் நாங்கள் கண்டு பிடித்த போன் போன்ற இயந்திரத்தை கம்ப்யூட்டருடன் இணைத்து, “மூர்த்தி, உலகின் முதல் போன் கால் கடந்த காலத்துடன். நீ யாரை அழைக்க விரும்புகிறாய்?”
நான் சொன்னேன், “பத்தாண்டுகளுக்கு முன்பு நானும் சேகரும் நெருக்கமான நண்பர்களாய் இருந்தோம். காலேஜில் ரூம்மேட்ஸ். இப்போது அவன் உயிருடன் இல்லை. அவனைக் கூப்பிடலாம்.”
கதிரேசன் கம்ப்யூட்டரில் சில பட்டன்களை குத்தி அழைப்பைத் தொடங்கினான். போன் அடித்தது. சேகருடன் என்ன பேசுவது, எப்படி ஆரம்பிப்பது என்று என் மனம் அலை பாய்ந்தது.
சில வினாடிகளுக்குப் பிறகு, “ஹலோ” என்ற பழக்கமான குரல் கேட்டது. கடந்த காலத்திலிருந்து ஒரு குரல்!
நான் பதற்றத்துடன், “ஹலோ, சேகரா பேசுவது?” என்று கேட்டேன்.
“சேகர் இங்கில்லை. க்ளாஸுக்கு போயிருக்கிறான். நான் மூர்த்தி பேசுகிறேன். சேகருக்கு ஏதாவது மெசேஜ் உண்டா?”