ஒரு டிரில்லியன் டாலர்களை தானம் செய்வது எப்படி?

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: August 25, 2024
பார்வையிட்டோர்: 2,910 
 
 

ஒரு சோம்பேறித்தனமான ஞாயிறு காலையில் என் தொலைபேசி ஒலித்தது. கூப்பிட்டது ஆஸ்வால்ட். அவருடைய தனிப்பட்ட வழக்கறிஞரான என்னையும், அவருடைய பண மேலாளரான ரிச்சர்டையும் சந்திக்க விரும்பினார். உடனே.

உலகின் மிகப் பெரிய பணக்காரரான ஆஸ்வால்டிடம் பணிபுரிவதில் சில சௌகரியங்கள் இருந்தாலும், ஒரு சில தொல்லைகளும் உண்டு. அவர் எப்பொழுது கூப்பிட்டாலும் எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு அவரிடம் ஓட வேண்டும்.

நான் வேகமாக குளித்துவிட்டு ஆஸ்வால்டின் மாளிகைக்கு சென்றேன். மூன்றாவது மாடியில் உள்ள பெரிய அலுவலக அறையில் ரிச்சர்டும் ஆஸ்வால்டும் அமர்ந்திருந்தனர். நான் இருவரையும் பார்த்து ஒரு புன்னகையை சிந்தி விட்டு ரிச்சர்டுக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்தேன்.

ஆஸ்வால்ட் நேரத்தை வீணடிக்காமல் உடனே விஷயத்திற்கு வந்தார். “உங்கள் இருவருக்கும் தெரியும், நான் புற்றுநோயுடன் போராடித் தோற்றுக் கொண்டிருக்கிறேன் என்பது. இன்று காலை என் மருத்துவர் என்னைக் கூப்பிட்டார். நான் இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பேனாம்.” இதைச் சொன்ன போது ஆஸ்வால்ட் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.

நாங்கள் திகைத்துப் போய் அமர்ந்திருந்தபோது, ஆஸ்வால்ட் தொடர்ந்தார். “என்னுடைய செல்வத்தையெல்லாம் என்ன செய்வது என்று தீர யோசித்தேன். அதை தானமாக கொடுத்து விடலாம் என்று முடிவு செய்து விட்டேன்.”

“சார், உங்கள் நிகர மதிப்பு சுமார் ஒரு டிரில்லியன் டாலர்கள்.” என்று ரிச்சர்ட் நினைவுபடுத்தினார்.

“அத்தனையும் நான் தானம் செய்து விடப் போகிறேன்.”

“உங்களுடைய இந்த செயல் மிகவும் உன்னதமானது. இதற்கு முன் இப்படி யாரும் செய்ததில்லை.” என்றார் ரிச்சர்ட்.

நான் கேட்டேன், “சார், தான தர்மங்கள் செய்கிற பிற நிறுவனங்களின் பட்டியலை நான் தயார் செய்யட்டுமா?”

“இல்லை, நான் எனது பணத்தை ஒரு சில நிறுவனங்களுக்கு கொடுக்க விரும்பவில்லை.” சிறிய இடைவெளி விட்டு தொடர்ந்தார், “நான் அதை இந்த முழு உலகிற்கும் கொடுக்க விரும்புகிறேன்.”

எங்கள் முகத்தில் உள்ள குழப்பத்தைப் பார்த்து, ஆஸ்வால்ட் விளக்கினார், “பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சிறிய தொகையை நான் கொடுக்க விரும்புகிறேன். நீங்கள் இருவரும் இந்த விநியோகத்தை கையாள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களுக்கு நான்கு மாதங்கள் உள்ளன இதை செய்து முடிப்பதற்கு.”

நாங்கள் இருவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் திக்பிரமை பிடித்து அமர்ந்திருந்தோம். நான் சுதாரித்துக் கொண்டு, “சார், இது நடைமுறையில் தளவாட ரீதியாக மிகவும் சிக்கலான, கடினமான காரியம். உலக அளவில் இவ்வளவு பணத்தை இவ்வளவு குறுகிய காலத்தில் யாரும் விநியோகித்ததில்லை.”

“எனக்குத் தெரியும். உங்கள் இருவரின் மீதும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது, இதை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள் என்று.”

நான் சிறிது யோசித்து விட்டு, “சார், வங்கிக் கணக்கு வைத்திருக்கிற மக்களுக்கு நாம் சுலபமாக பணம் அனுப்பி விட முடியும். ஆனால் வங்கிக் கணக்கு இல்லாமல் பில்லியனுக்கும் மேலான மக்கள் கீழ்த்தட்டத்தில் இருக்கிறார்கள். இந்த குறுகிய காலத்தில் அவர்களை அடைவது சாத்தியமற்ற ஒரு காரியம்.” என்றேன்.

அது வரை மௌனமாக இருந்த ரிச்சர்ட் முன்னோக்கி சாய்ந்து, “நான் ஒரு எளிய யோசனையை சொல்லட்டுமா, சார்?” என்றார்.

“நிச்சயமாக, சொல்லுங்கள்.”

“நாம் ஒரு டிரில்லியன் டாலர்களை கொடுக்க விரும்புகிறோம். நாம் செய்ய வேண்டியதெல்லாம், அந்தப் பணத்தை புழக்கத்தில் இருந்து அகற்றுவதுதான். புழக்கத்தில் பணத்தைச் சேர்ப்பது பணவீக்கத்தை ஏற்படுத்துகிறது, இது மக்களின் வாங்கும் சக்தியைக் குறைக்கிறது. புழக்கத்தில் இருந்து பணத்தை நீக்குவது எதிர் விளைவை ஏற்படுத்துகிறது. இது பணவாட்டம் என்று அழைக்கப்படுகிறது, இது மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கிறது.”

ஆஸ்வால்ட் உடனே மலர்ந்தார். “அதாவது நமது டிரில்லியன் டாலர்களை புழக்கத்தில் இருந்து அகற்றினால், அது ஒவ்வொரு மனிதனுக்கும் கணிசமான ஒரு தொகையை கொடுப்பதற்கு சமம்?”

“கரெக்ட்.”

“புழக்கத்தில் இருந்து எப்படி அகற்றுவது? பணத்தை எரித்து விடலாமா?”

“இல்லை, சட்டம் அதை அனுமதிக்காது. நாம் டிரில்லியன் டாலர்கள் கரன்சி நோட்டுகளை யாரும் அறியாத ஒரு இடத்திற்கு நகர்த்தி, அவற்றை நிலத்தடியில் இருக்கும் வலுவான தகர்க்க முடியாத பெரிய லாக்கரில் பூட்டி வைக்க வேண்டும். யாரும் அந்த லாக்கரைத் திறக்க முடியாது இருக்க வேண்டும், நாம் உட்பட.”

“சரி, அப்படியே செய்து விடுவோம்,” என்று புன்னகைத்தார் ஆஸ்வால்ட்.

Print Friendly, PDF & Email
பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான்.  அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *