எங்கே போனாய்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: July 8, 2024
பார்வையிட்டோர்: 834 
 
 

எப்போ வருவாய்?

2080-ம் வருடம் வெளிவர வேண்டிய கதை இது. அவசரக் குடுக்கைத்தனமாக இப்போதே எழுதப்பட்டு… அதேத்தனமாக இப்போதே வெளியிடப்பட்டு விட்டது.

செக்ஷன் ஹெட் அழைத்தார். சென்றான் சிவா. “கமின்” என்றது கம்ப்யூட்டர் (செக்ஷன் ஹேட்) “யெஸ் சார்” “மிஸ்டர் சிவா உங்களுக்கு இந்த வருடத்திய விடுமுறை நாட்கள் நாளை துவங்குகின்றன. 71 நாட்கள். கம்பெனியின் அன்பளிப்பாக 53,400 ரூபாயை கேஷ் கவுண்டரில் பெற்றுக் கொண்டு செல்லலாம். விஷ்யு நைஸ் டேய்ஸ்” என்றது. “டுர்…. டர்… என்று சத்தம் போட்டு ஒரு சின்ன கார்டை வெளியே தள்ளியது. “மெர்ஸி” என்று அதை எடுத்துக் கொண்டு சென்று கேஷ் கவுண்டரின் வாயில் திணித்தான் சிவா. வயிறு திறந்தது. பணம் இருந்தது. எடுத்துக் கொண்டு கம்பெனியின் மொட்டை மாடிக்குச் சென்று று’ வரிசையில் இரண்டாவது டிராக் வந்து தன் ஸ்பேஸ் காரில் ஏறினான். சில வினாடிகளில் சிவா மேகங்களிடம் ஹலோ’ சொல்லிக் கொண்டிருந்தான். ஆட்டோ டிராஃபிக் சிக்னல் சிவந்தது. எரிச்சலுடன் காரை சென்று கொண்டிருந்த காரை ஒரு ஹைஜம்ப் செய்து ஓவர் டேக் செய்தான்.

மூன்று நிமிடம் கழித்து தன் குவார்ட்டர்ஸின் மொட்டை மாடியில் ணு டிராக்கில் இறக்கிவிட்டு, லிஃப்டில் ஏறி கீழிருந்து நூற்றிப்பதினாலாவது ஃப்ளோருக்கு வந்தான்.

கதவைத் திறந்தான்.

அப்பா பேப்பர் ரீடரில் நியூஸ் கேட்டுக் கொண்டிருந்தார்.

அந்தக் குள்ளமிஷின் அன்றைய தினசரி உள்ளேத் தள்ளப்பட்டதும், கிங்களி கால் குலேடர்ஸ் ஆல்த பெஸ்ட்…’ என்ற விளம்பரத்தில் ஆரம்பித்து வானத்தில் இரண்டு ராக்கெட்டுகள் மோதிக் கொண்ட சாதாரண செய்தியில் துவங்கி வரிவரியாய்ப் படித்துக் கொண்டிருந்தது.

“டாட்” என்றான்.

மிஷினை நிறத்தி “எஸ்” என்றார்.

“நாளைக்கு எனக்கு ஹாலிடேஸ் தொடங்குது. ஸ்பேஸ் – முடு வேணும்.”

“எங்கே போகப் போறே? மூன்? மார்ஸ்?”

“ரெண்டும் இல்லை. எய்ம்லெஸா போய்க்கிட்டே இருக்கப் போறேன்.”

“போய்ட்டு வா.” என்று ரீடரைத் தட்டினார்.

சிவா தன் அறைக்குச் சென்று விண்வெளி உடை அணிந்து, உணவு டேப்லெட்ஸ் டின் ஒன்றை எடுத்துக் கொண்டு ஷெட்டிற்குப் போனான்.

“ஸ்பேஸ் – முடு” வா’ என்றது. உள்ளே சென்று அமர்ந்து.

“ஹலோ சுபாஷ்” என்றான் பேசும் கம்ப்யூட்டரிடம்.

“ஹலோ சிவா” என்றது அது.

“ப்யூல் இருக்கிறதா சுபாஷ்?”

“ஷ்டேஷன் 7 வரை போகலாம்.”

சிவா ஒரு பட்டனை அழுத்த கிளாஸ் டோர்ஸ் அவனைச் சூழ்ந்து கொண்டது. அடுத்த பட்டனை அழுத்தினான்.

ஷெட்டை விட்டு வெளியே வந்து… கொஞ்சம் சாய்வாய் பறந்து பின் செங்குத்தாய் மேலே மேலே பறந்தது.

அந்தரத்தில் பிரம்மாண்டமான கூடு. அதன் ஸ்டேஷனின் உள்ளே நுழைய அனுமதி கேட்டு நுழைந்தான். சிவா.

‘ஃபுல் டாங்க் என்றான் சிவா.

டாங்க் நிரப்பப்பட்டதும்

“நெக்ஸ்ட் ஸ்பேஸ் ஸ்டேஷன் எது?” என்றான் சுபாஷிடம்.

“இதுதான் பைனல். இனிமேல் வானம் நோ ஸ்டேஷன்ஸ்.”

“இங்கிருந்து நிலாவுக்குப் போக எவ்வளவு நேரமாகும்?’

“59 நிமிஷம் 22 வினாடி ஆகும். ஆனால் அங்கே எல்லா டிராக்ஸும் ரிசர்வ்ட். நம் கப்பல் நிற்கக் கூட இடமில்லை .

“நாம் நிலாவுக்குப் போகவில்லை. மேலே மேலே போய்க் கொண்டே இருக்கப் போறோம். கிளம்புவோமா?”

ஸ்பேஸ் – முடு கிளம்பியது.

“சுபாஷ். நம் கப்பலின் வேகம் என்ன?”

“70,000 கிலோ மீட்டர் பெர் செகண்ட்”

மேலே மேலே சென்று கொண்டிருந்தது.

“சுபாஷ் வாட் ஈஸ் திஸ்! அதோ பார் ஒரு ஸ்பேஸ் ஸ்டேஷன்” என்ற கத்தினான் சிவா.

“ஆமாம். இங்கே எப்படி ஸ்டேஷன் வந்தது? நம் ஸ்டேஷன் செவனுக்கும் இதற்கும் நடுவில் 17,644,000,000 கி.மீ. எனக்கே புரியவில்லை !”

சிவாவிற்கு ஆர்வம் அதிகரிக்க கப்பலை நிறுத்தினான்.

“எப்படியும் அதற்குள் செல்ல வேண்டும்.”

“கதவு மூடியிருக்கிறது. செய்தி அனுப்பினேன். நம் மொழிகள் எல்லாம் புரியவில்லை . ஹவ்லி ஸா’ என்று செய்தி வருகிறது.”

“அப்படி என்றால்?”

“ஒரு வினாடி. என் டிரான்ஸ்லேடிங் மிஷின் மொழி பெயர்த்துவிட்டது. பாஸ் வேண்டும் என்கிறார்கள். நம்மிடம் பாஸ் இல்லை சிவா.”

“எனக்கு தெரியாது. நீ என்ன செய்வாயோ, நாம் அதற்குள் நுழைந்தே ஆக வேண்டும்.”

சில விநாடிகளில் ஸ்டேஷனில் கதவுதிறக்க…. உள்ளே கப்பலுடன் நுழைந்தார்கள்.

“சுபாஷ், சுபாஷ் என்ன செய்தாய்?”

“கதவுக்கருகில் காவல் நிற்பது முட்டாள் கம்ப்யூட்டர். நான் போலி பாஸ் தயாரித்துக் காட்டிவிட்டேன்.”

“சரி நீ இங்கேயே இரு” என்ற கீழே இறங்கினான்.

சுற்றிப் பார்த்தான்.

யாரையும் காணோம்.

அடுத்த வினாடிகளில் சர் என்ற கார் போன்ற ஒரு ஊர்தி வேகமாய் வந்து நிற்க ஒரு பெண் இறங்க…

சிவா அதிர்ந்தான்.

அந்தப் பெண் மேலே ஒன்றுமே அணியவில்லை.

இவன் பார்ர்ர்ர்த்தான்.

அவள் கவலையே படவில்லை .

“ஹூக் ஷீர்ரகன் ஸாரிடன்’ என்றான்.

இதென்ன மொழி ஸாரிடன் மாத்தி — கேட்கிறாளா?

சுபாஷின் நினைவு வரவே கம்ப்யூட்டரிடம் ஓடினான்.

“நண்பா, உதவுடா, இதென்ன மொழி?”

“ஹூக்லு …”

“நான் எப்படி அவளிடம் பேசுவது?”

“என் ட்ரான்ஸ்லேடிங் மிஷினை கழற்றித் தருகிறேன். அவள் சொல்வதை அதில் பதவு செய்து பின் அதனிடம் உனக்கு எந்த மொழியில் மாற்றம் தேவையோ, அந்த மொழியின் பெயரைச் சொல்லி ON’ பட்டனை அழுத்து”

“நீ கில்லாடி.”

சுபாஷ் சின்னதாய் சத்தம் கேட்டு ஒரு கேஸட் அளவிற்கான மெஷினைத் தந்தான். அதை எடுத்துக் கொண்டு அவளிடம் வந்தான். அவள் மறுபடி ஹஸீர்ரகன் ஸாரிடன் என்றாள்.

சுபாஷ் சொன்னபடி செய்து ‘தமிழ்’ என்று சொல்லி பட்டனை ‘ON’ பட்டனை அழுத்த…

“இங்கே விண்வெளி உடை தேவையில்லை. நீ யார்?” என்றது.

“நான் பூமி மனிதன். நீ யார்?” என்றான். அவளிடம் மெஷினை நீட்டினான்.

அவள் புரிந்து கொண்டு ஹூகலு சொன்னாள். மெஷின் ஹேஹவரி ஹனிதஸ் ஸாரிடன்’ என்றது.

பின்னர் அவர்கள் அந்த முறையில் பேசத் தொடங்கினர்.

“நான் காமியைச் சேர்ந்தவள்” என்றாள்.

“காமி என்றால்?”

“பூமி என்றால்?”

“பூமி என்றால் அது ஒரு கிரகம். அங்கு மனிதர்கள் வாழ்வார்கள்.”

“காமி என்றால் ஒரு கிரகம். நான் அங்குதான் வசிக்கிறேன். அங்கும் மனிதர்கள் வாழ்கிறார்கள்.”

அட! பூமியைப் போல இன்னொரு கிரகமா? அங்கும் மனிதர்களா? வாட் எ சர்பரைஸ்…

“உன் பெயரென்ன?” என்றான்.

“ஹோலி”

“எங்க நாட்ல அப்படி ஒரு பண்டிகை இருக்க.”

“உன் பெயர்!”

“சிவா .”

“ஷீவா “

“எப்படி வேணும்னாலும் கூப்பிட. மொதல்ல உங்க காமியை எனக்குக் காமி. உங்க உலகத்திலே எத்தனை பேர் இருப்பீங்க?”

“என் கம்ப்யூட்டரைக் கேட்டுச் சொல்கிறேன்.”

“சரி, நாம் உங்க பேரிக்காவுக்குப் போகலாமா?”

“போகலாம். கொஞ்சம் பொறு” என்றாள். சென்றாள். பொறுத்தான்

ஒரு வினோத வடிவ ஸ்பேஸ் கப்பலைக் கொண்டு வந்தாள்.

“ஏறு” என்றாள்.

“கொஞ்சம் பொறு” என்று சுபாஷிடம் சென்று, “நண்பா, நான் காமி கிரகத்திற்குப் போகிறேன். அங்கே மனிதர்கள் வசிக்கிறார்கள். விபரங்கள் வந்து சொல்கிறேன்.” என்றான் சிவா.

“நண்பா, நீ வரும் வரை நான் காத்திருக்கிறேன்” என்றது சுபாஷ் ஹோலியுடன் ஏறிக் கொண்டான்.

உடனே கிளம்பியது.

“எவ்வளவு நேரமாகும் போய்ச் சேர?”

“ரெண்டு மணி நேரம் ஆகும்.”

“ஒண்ணு கேக்கறேன். கோவிச்சுக்காதே. ஏன் ஹோலி இப்படி காத்து வாங்க விட்டிருக்கியே. உனக்கு வெக்கமா இல்லை?”

“அப்படி என்றால்?”

“சரியாப் போச்சு நீ அழகா இருக்கே.”

“ஷீவா, நீங்களும்தான்.”

“நான் உன்னை தொடட்டுமா”

“தொடேன்.”

“இப்படி உடனே ஒத்துக்கிட்டா அதிலே த்ரில் இல்லை. எங்க தமிழ்ப் பெண்களைப் பத்தியெல்லாம் உனக்குத் தெரியலை.”

நட்சத்திரங்களுக்கு நடுவே பிரயாணம் தொடர்ந்தது.

“ஹோலி, ஐ லவ் யு” என்றான்.

“ஷீவா, நானும்தான்” என்றாள்.

காமியில் பேரிக்காவின் பெரியநகர் ஒன்றின் ராக்கெட் போர்ட்டில் அவர்களின் கப்பல் இறங்கியது.

அதே போல கட்டிடங்கள், அதே போல கார்கள். அதே போல கடல், (சுண்டல் இல்லை) அதே போல மனிதர்கள், (எல்லா பெண்களும் டாப்லெஸ்)

எல்லாம் பூமி போல.

மொழி ஒன்றுதான் புரியவில்லை. ஹூலு!

ராக்கெட் போர்ட்டில் கப்பலை விட்டுவிட்டு வெளியே வந்து ஒரு காரில் ஏறி கொஞ்ச தூரம் சென்றதுமே ஹோலியின் வீடு வந்தது.

இருவரும் உள்ளே சென்றார்கள்.

உள்ளே ஒருவர் தனியாக என்னவோ ஒரு விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார். ஹோலி அவர் அருகே சென்று அணைத்துக் கொண்டாள்.

“ஹூல ஹவ்சப் ஸிஷகோ” என்றாள்.

சிவாவிற்கு சுரீர் என்றது. சுற்றும், முற்றும் தேடினான்.

எங்கே அந்த டிரான்ஸ்லேட்டிங் மிஷின்?

அய்யய்யோ! அந்த விண்வெளி கப்பலிலேயே விட்டு விட்டு வந்தாச்சே….

“என்னோட டிரான்ஸ்லேடரைக் காணோம்” என்றான்!

அவள் “ஹசடே?” என்றாள்.

“ஆமாம். நான் அசடுதான். எவ்வளவு முக்கியமானதை விட்டு விட்டு வந்துட்டேன். இரு இதோ வர்றேன்” என்று வாசலுக்குப் பாய்ந்து காரில் ஏறினான்.

அவள் புரியாமல் நின்றாள்.

வந்த வழியே ஒட்டி ஒரு நிமிடத்தில் ராக்கெட் போர்ட்டை அடைந்த போது….

அவர்கள் வந்த விண்வெளிக் கப்பலை நாலுபேர் சுற்றி நின்று எரித்துக் கொண்டிருந்தார்கள்.

அடப்பாவிகளா! வேகமாக ஓடினான்.

“என் டிரான்ஸ்லேடர் இருக்குடா. அது இல்லைன்னா நான் ஒண்ணுமே பேச முடியாதுடா” என்று கத்தி அவர்களின் கையைப் பிடித்து இழுத்தான் சிவா.

அவர்கள் ஹூலு பாஷையில் கத்தினார்கள்.

கொஞ்சம் பதட்டம் ஏற்பட்டு… பதினைந்து வினாடிகளில் ஒரு ஜீப் வந்தது. நாலு சிகப்பு உடை அணிந்தவர்கள் சிவாவை நெருங்கி கோழியைப் போல அமுக்கி உள்ளே உட்கார வைத்தார்கள்.

இதென்னடா பேஜார்? ஒரு தடவை உபயோகிச்ச கப்பலை மறுபடியும் உபயோகிக்காம எரிச்சுடுவாங்க. போலிருக்கு . இவங்க யார்? போலீசா? இப்ப என்ன செய்வாங்க? நம்ம ஹோலியோட அட்ரஸ் என்ன?

அய்யய்யோ! இதென்ன வம்பு? என்னை என்ன செய்யப் போறாங்க?

சிவா சில அதிகாரிகள் முன் நிறுத்தப்பட்டான்.

அவர்கள் ஹூக்லுவில் என்னவோ கேட்டார்கள்.

இவன் விழித்தான்.

“நான் பூமி மனிதன்” என்றான்.

அவர்கள் தங்களுக்குள் என்னவோ பேசிக் கொண்டார்கள்.

அந்த அதிகாரிகளில் ஒருவன் தன் இடுப்பிலிருந்து ரிவால்வர் எடுத்தான்.

என்னை உளவாளி என்று நினைத்து விட்டார்களா? இந்த வேறு உலகத்தில் என்னை அறிந்த ஒரே ஜீவன் ஹோலி! ஹோலி! நீ எங்கே?

அய்யோ நான் என்ன செய்வேன்?

சிவா கத்தினான். “என்னை சுட்டுடாதீங்க!”

கைகளால் சைகை காட்டினான். கெஞ்சினான். கதறினான்.

ஆனாலும், அந்த அதிகாரி அவனை சுட்டான்.

அந்த ஸ்பெஷல் ஸ்டேசனில் கம்ப்யூட்டர் சுபாஷ் “நண்பா, நீ எங்கே போனாய்? எப்போ வருவாய்?” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு சிவாவிற்காகக் காத்திருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *