சென்னகேசவனைப் பார்க்கத்தான் சென்னைக்கு வந்துகொண்டிருக்கிறேன். உயிர் நண்பன் சென்னகேசவனை ஏனோ யாருமே புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். இருபத்தி ஐந்து வயதிற்கு அவனுக்குத்தான் எப்பேர்ப்பட்ட மூளை! பள்ளி நாட்களிலேயே அவனது அறிவுத்திறமை என்னை அவனோடு நெருங்கிப் பழக வைத்தது. இதனை அவன் பெற்றோர்களே புரிந்து கொள்ளாததுதான் ஆச்சரியம்! இத்தனைக்கும் அவன் அப்பாவும் அம்மாவும் நன்கு படித்தவர்கள்! படிப்புக்கும் சிந்தித்து செயல்படுவதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பது நிதர்சனம்!
சென்னையில்பிறந்துவளர்ந்த எனக்கு பொறியியல் முடித்ததும் பெங்களூரில்தான் வேலை கிடைத்தது..பிடி எம் லேஅவுட்டிலோர் வாடகை வீட்டில் குடி வந்தேன்.
அம்மாவும் அப்பாவும், அக்காவுக்கு பிரசவம் பார்க்க அமெரிக்காவிற்குப் போயிருக்கிறார்கள். ஆனாலும் சென்னைக்கு வார இறுதிநாட்களில் நான் வரக்காரணம் சென்னகேசவன் தான். இம்முறை பொன் கிடைத்தாலும் கிடைக்காத புதன்கிழமையே என் சென்னை விஜயம் நேரிட்டுவிட்டது!.
நேற்று தோட்டநகரின்டிராஃபிக்கிற்குப்புகழ் பெற்ற சில்க்போர்ட் பகுதியில் எனது வாகனத்தில் ஜான்வாச ஊர்வலம் வந்துகொண்டிருந்தபொழுது, மொபைல் ரீங்காரமிட்டது.
எடுத்துப்பார்த்தால் திரையில் திருமதி பத்மகலா பாஸ்கரன் என்ற பெயர் பளிச்சிட்டது. சென்னகேசவனின் அம்மாதான்.
“என்ன ஆண்ட்டி நீங்க மட்டும் ஸ்டைலா பேரை வச்சிண்டு என் ஃப்ரண்டுக்கு கர்னாடகப் பேரை வச்சிட்டீங்க?” என்று ஒருமுறை அறியா வயசில் கேட்டுவிட்டேன்.
“கர்னாடகப் பேர்தான்ப்பா. மைசூர்பக்கம் ஒரு கோயில் போனப்போ அங்கே சென்னகேசவப்பெருமாளுக்கு வேண்டிண்டு எனக்கு முப்பத்தி அஞ்சு வயசானப்புறம் தவப்புதல்வனாய் பொறந்தான். அதான் பெருமாள் பெயரையே சூட்டினேன். ஆனா இப்படி மோட்டுவளையைப் பார்த்துண்டு வான சாஸ்திரம் மண்ணாங்கட்டின்னு பொழுதைப் போக்குவான்னு தெரிஞ்சிருந்தா வேண்டிண்டு இருந்திருக்கவே மாட்டேன். எல்லாம் அவன் தாத்தாவால் வந்தது. நாலு வருஷம் முன்னாடி சாகிறவரைக்கும் அவனுக்கு தனக்குத் தெரிஞ்ச வான சாஸ்திரத்தை போதிச்சிட்டுப் போய்ச் சேர்ந்துட்டார். இப்போ அவனுக்கு வானமே போதிமரம்! பெத்தவாகிட்ட பேசறதில்ல யார்கிட்டயும் பேசறதில்ல ஏதோ உனக்கு அவனைப் பிடிச்சிருக்கு அவனுக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு. இதாவது ஸ்திரமா இருக்கட்டும்”
பத்மகலா ஆண்ட்டியிடம் அதற்குப்பிறகு அதிகம் பேசவே எனக்கு தயக்கமாகிவிட்டது;
“ஹலோ நீ தாச்சுதானே?” போனில் கட்டைக்குரல் அதட்டலாய்கேட்டது.
“அ.ஆமாம் …ஆண்ட்டி தாசரதிதான்”
“தாச்சு! நானும் மாமாவும் இப்போ மீனம்பாக்கம் ஏர்போர்ட்ல இருக்கோம். ஒருவழியா காசிக்கு போயி இப்படி ஒருபிள்ளையை பெத்த பாவத்துக்கு கங்கைல தலைமுழுக தீர்மானிச்சிட்டோம். அரைமணில டில்லி ஃப்ளைட் ஏறப்போறோம் இதை சொல்லத்தான் உனக்கு போன் பண்ணினேன் வச்ச்சிடட்டுமா?”
நான் திடுக்கிட்டு,”ஆண்ட்டி என்ன இது, துலாஸ்னானம் பண்ண காவிரிக்குப்போகிறமாதிரி சொல்றீங்க? ஓ மை காட்!” என்றேன்.
“எந்த ‘கா’டும் எங்களுக்கு உதவலைப்பா.. இப்படி ஒரு பைத்தியத்தை பெத்ததுக்கு நாங்க வேதனைப்படாத நாளே இல்லை..ஒருவார்த்தை அம்மாஅப்பான்னு வாய நிறையக்கூப்ட்டு பேசறானா? எப்பபார்த்தாலும்எங்க பங்களாவின் அவுட் அவுஸ் ஆசாமியா இருக்கான். பெத்த கடனுக்கு அவனுக்கு பொருளாதார வசதியைப் பண்ணிட்டோம், அவன் தாத்தா வேற ஏகமா அவன் பேர்ல பணம்போட்டுவச்சிருக்கார். இனி அவன் ’எக்கேடோ கெடட்டும் போ’ன்னு கிளம்பிட்டோம் அவ்ளோதான்”
“ஐயோ ஆண்ட்..” முடிப்பதற்குள் எதிர்முனை அமைதியாகிவிட்டது. திரும்ப அழைக்க செய்த முயற்சியில் போன் ஸ்விச்டு ஆஃப் என்ற தகவல் வந்தது. ஏதோ விபரீதமாகிவிட்டது போலத்தோன்றவும் இரவு ரெட்பஸ்ஸில் சென்னைக்கு டிக்கட் வாங்கிவிட்டேன். இரண்டுநாள் லீவு கேட்டு ஆபீசுக்கும் மெயில் அனுப்பினேன்.
சென்னகேசவனுக்கு போனில்”நாளைக்காலை சென்னை வரேண்டா” என்றதும்,”நானே உன்னை இந்தவாரம் இரண்டுநாள் லீவ் எடுத்து வரமுடியுமான்னு கேட்க நினச்சேன். விண்கல் ஒன்று விழப்போகிறது அதை நாம் பார்க்கப்போகிறோம்” என்றான் பதட்டமான குரலில்.
“எ.. என்னடா சொல்றே?”
“உலகம் அழியப்போகிறது என்று இந்த நிகழ்வை சொல்வார்கள். நேர்ல வா உன்கிட்ட சொல்லாமல் யாரிடம் இந்த ரகசியத்தை சொல்லப்போகிறேன்?” என்று சொல்லி போனை வைத்துவிட்டான்.
உலகம் அழியப்போகிறதாம்! இதை முன்பு ஓரளவு விளக்கியிருக்கிறான் சென்னகேசவன்
இந்துக்களுக்குத்தான் வான சாஸ்திரம் நன்றாகத்தெரியுமாம். கிரேக்கர்களிடமிருந்து தான் சில விஷயங்களை நாம் கற்றோம் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் எழுதியதைப் படித்ததுண்டு. அவர்கள் எழுதியன எல்லாம் தவறு என்று தன் தாத்தா சொல்லிவிட்டாராம்.
“முதலாவதாக, தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஒவ்வொரு கிரகத்துக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. புகழ்பெற்ற அமரகோஷம் என்ற வடமொழி நிகண்டிலும், தமிழ் நிகண்டுகளிலும் இவ்வாறு பல பெயர்களைக் காணும்போது உலகில் நாம் தான் இத்துறையில் முன்னேற்றம் கண்டோம் என்பது தெளிவாகிறது. மற்றொரு எடுத்துக் காட்டு, வெள்ளி கிரகத்துக்கு
மழைக் கோள் என்று பெயர். புற நானூற்றில் நாலைந்து பாடல்களில் இந்தக் குறிப்பு வருகிறது. இதுவரை விஞ்ஞானிகள் கண்டு பிடிக்காத இந்த விஷயம் தமிழ் மொழி வடமொழி நூல்களில் மட்டுமே காணப்படும் உண்மை. எதிர்காலத்தில் விஞ்ஞானிகள் இதை உறுதிப்படுத்தும்போது நாம் மார்தட்டிக் கொள்ளலாம், —நாங்கள் அன்றே சொன்னோம்— என்று. இப்படித்தான் நம் பெருமையை நாமே அறிவதில்லை.என் தாத்தா தன்னோட தாத்தாவிடமிருந்து வானவியல் கற்றதுமட்டுமல்ல வலுவான ஒரு சுதர்சன சக்கர மந்திரத்தின்மூலம் வானப்பிரளயம் உண்டாவதிலிருந்து நாம் மீளவும் முடியும் என்று எனக்கு மட்டும் அந்த சுதர்சன சக்கர மந்திரத்தை சொல்லிக்கொடுத்திருக்கிறார். சமயம் வரும்போது நான் அதை பிரயோகித்துக்காட்டுவேன் தாசரதி!” என்றான் ஒருநாள்.
எனக்கு முற்றிலும் புரியவில்லை என்றாலும் ஆர்வம் மேலிட அவன் சொல்வதை பிரமிப்புடன் கேட்டுக்கொள்வேன்.
இப்போதும் உலகம் அழியப்போவதாய் அவன் சொன்னதும் எனக்கு ஆச்சர்யம்தான் மேலிடுகிறது.
பெசண்ட் நகரில் சென்னகேசவனின்பிரும்மாண்ட பங்களாவின் பின்புறமிருந்த அவுட் ஹவுஸுக்குள் அவசர அவசரமாக நுழைகிறேன்.
என்னைக்கண்டதும் இறுகக்கட்டிக்கொண்டவன்,” நான் முன்னர் சொன்னேன் இல்லையா இந்த பூமி விண்கல் தாக்குதலுக்கு ஆளாகப்போகிறதென்று?’ எனக்கேட்டான்.
“ஆமாம்”..
“உலகத்தில் ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும்,ஒரு அட்டவணை போட்டு, இந்த ஆயிரம் விண்கற்களில் ஒவ்வொரு கற்களையும் தனித்தனியே, தினமும் அவதானித்து வருகின்றனர். ஏதாவது ஒரு விண்கல்லின் திசையாவது பூமியை நோக்கித் திரும்பும் பட்சத்தில் அவர்கள் உடன் அறிவிக்கத் தயாராக இருக்கின்றனர். ஆனால் நான் என் தாத்தா சொல்லிக்கொடுத்த வானசாஸ்திர ஞானத்தில் நாளை ஆகஸ்ட் 14ம் திகதி அளவில் பூமியை வந்து கண்ணுக்குத் தெரியாத ஒரு விண்கல் தாக்கப்போகிறது என்பதை உணர்ந்துவிட்டேன் அதை அவர் சொல்லித்தந்த சுதர்சன சக்கர மந்திரத்தால் எதிர்கொள்ளப்போகிறேன். அழியப்போகிற உலகத்தைக் காப்பாத்தப்போகிறேன்”
“சென்ன கேசவா! உன் உழைப்பும் திறமையும் வீண் போகாதுடா ?”
”பூமி, விண்கல் தாக்குதலுக்கு உள்ளாகி அழிவதற்கு நூறு விகிதம்சாத்தியங்கள் உண்டு.. இவை போல ஒன்று தாக்கித்தான் முன்னர் இருந்த டைனசார்கள் எல்லாம் அழிந்தன. அந்த நேரத்திலும் பூமி முழுமையாக அழிந்தது. இப்படிப் பூமியை ஒட்டு மொத்தமாக அழிக்கக் கூடிய ஆயிரம் விண்கற்கள் விண்வெளியில் வலம் வருகின்றன என்றாலும் கண்ணுக்குத் தெரியாத ஒரு விண்கல் தாக்கும் என்றே வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்களே ஒழிய, விண்கல் என்றுமே தாக்காது என்று சொல்லவில்லை. அவர்களே சொல்வது பூமி நிச்சயம் ஒரு விண்கல் தாக்கி எப்போதாவது அழியும் என்பதுதான் அதுநாளைக்குநடக்கப்போகிறது அதுவும் இந்தியாவில் தென் இந்தியாவில் சென்னைக்கு அருகே !இதை வெளியே சொன்னால் என்னைப்பைத்தியக்காரன் என்பார்கள். .,,,உனக்கு திருமாலின் சுதர்சன சக்கர மகிமைபற்றி தெரியுமா தாச்சு? “
“ஏதோ சினிமால பார்த்திருக்கேன். தீபாவளீ விஷ்ணு சக்கரம்மாதிரி இருக்கும் அதுதானே?”
“பஞ்சாயுதங்களில் அது ரொம்ப முக்கியமானது வீர்யமானது.சுதர்ஷன் என்றால் மங்கலகரமானது, மங்கலகரமானவன் என்று அர்த்தம்.
‘சக்ரா’ என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருந்துகொண்டே இருப்பது என்று பொருள். மற்ற ஆயுதங்களைப் போல் சுதர்சன சக்கரம் இல்லை. எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் வலிமையானது. அத்துடன் எப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கக் கூடியது. எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடியும் என்கிறது விஷ்ணு புராணம். மேலும் மகாவிஷ்ணுவின் திருக்கரத்திலிருந்து சுதர்சனச் சக்கரமானது கிளம்பியதும் தெரியாது, எதிரிகளை அழித்ததும் தெரியாது, மீண்டும் அவரின் திருக்கரங்களுக்கு வந்து விரலில் வந்து உட்கார்ந்துகொள்வதும் தெரியாது. எல்லாமே கணப்பொழுதில் அரங்கேறிவிடும். ஒரு வேளை, எதிரியானவன் மிகுந்த பராக்கிரம் மிக்கவனாக இருந்தால், சுதர்சனச் சக்கரத்தின் வேகத்தில் தடையேதும் ஏற்பட்டால்… அப்போது, சக்கரத்தின் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு வேகம் கூடுமாம்! இதை ‘ரன்ஸகதி’ என்பர்.இன்னொரு விஷயம்… சுதர்சனச் சக்கரம் சுழலும் தருணத்தில், சப்தங்கள் எழுப்புவதில்லை.
சுதர்சனச் சக்கரத்தின் வடிவம் எத்தகையது தெரியுமா? சின்னஞ்சிறு துளசி தளத்தில், ஒரு கைப்பிடி அளவு துளசியில் அடங்கக்கூடியது. அதேசமயம், இந்தப் பிரபஞ்சம் அளவுக்கு பரந்து விரிந்துமாகவும் இருக்கிறது. இந்த சக்கரத்தைதியானித்து ஒரு மந்திரம் சொன்னால் போதும் அது புறப்பட்டுவிடும் வருகிற அழிவினை திருப்பி அனுப்பிவிடும்.தாத்தா சொல்லியிருக்கிறார், மஹாவிஷ்ணுவின் சக்ராயுதம் உலகை ரட்சிக்கும் என்று.சுதர்சன சக்கர மந்திரமகிமையை நீ பார்க்கத்தானே போகிறாய்! நாம் சாகமாட்டோம். அதுவும் நான் உன்னை இழக்கமாட்டேன்.
தாசரதி! உலகில் எனக்கு நீ ஒருத்தன் போதும். என்னைப்புரிந்துகொண்ட ஒரே ஆத்மா நீதான்.” உணர்ச்சிவசப்பட என் கரங்களைப் பிடித்துக் கண்கலங்கினான் சென்னகேசவன்.
பாழூர்
நிஜமாகவே பாழாகிப்போன ஊராகத்தான் தெரிந்தது .மனிதத்தலைகளே தெரியவில்லை மேலும் நாங்கள் சென்னையிலிருந்து காரில் அங்கு போன நேரம் இரவு மணி பத்து.கும்மிருட்டில் வெட்டவெளியில் காரை நிறுத்தினான் .ஏதோ வயல்வெளிபோல தெரிந்தது. இருவரும் நிலாவில் காலடி எடுத்துவைத்த விஞ்ஞானிகளைப்போல கவச உடைகளுடன் அந்த வெட்டவெளியில் மணல்தரையில் அப்படியே உட்கார்ந்தோம்.
சென்னகேசவன்…”நான் முன்பு சொன்னேனே முன்பு 2012ல் உலகம் அழியப்போவதான வதந்தி வந்தபோது சூரியன் பக்கம் இருக்கிற’நிபுரு’ என்கிற கோள் பற்றிய இரகசியத்தை?”
“ஆமாம் நினைவிருக்கு”
‘அதுதான் இன்று நடுநிசியில் இங்கே விழப்போகிறது அதற்கான காட்சிகளை என் தொலைநோக்கு கருவிகளில் பார்த்து நிச்சயம் செய்துவிட்டேன் அதைவிட தாத்தா முன்புகொடுத்த ஓலைச்சுவடிகளில் நாள் நேரம் எல்லாம் சரியாக இருக்கிறது”
“சுதர்சன மந்திரம்?”
“அது மனப்பாடம்.அதைநான் சொல்வேன். நீமட்டும் ’ஜெய ஜெய ஸ்ரீ சுதர்சனா’ என்றுமட்டும் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும்.”
“இதோ.”
ஜெய ஜெய ஸ்ரீ சுதர்சனா..
பத்து நிமிஷங்கள்தான்.
ஐயோ என்ன இது?. வானத்தின் வடக்குப் பக்கம் ஏதோ ஒன்று இயல்புக்கு மாறாக நடப்பது போல் தோன்றவே திரும்பிப் பார்த்தேன்..சென்ன கேசவனும் திரும்பினான்.
வானம் இரண்டாகப் பிளந்து திடீரென்று ஒரு ஒளிக் கற்றை தோன்றியது…நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அந்த நெருப்பு பூதாகாரமாக வளர்ந்து அடிவானமெங்கும் பரவியது…மரங்கள் தீப்பற்றிக் கொண்டமாதிரீருந்தது,…வடக்குப் பக்கத்தில் இருந்து தாங்க முடியாத வெப்பம் வந்து என்னைத் தாக்கியது… என் சட்டையை கழற்றக் கூட நேரம் இல்லாமல் அப்படியேகிழித்து எறியும் அளவு வெப்பம் என்னை தாக்கியது…உலகம் அழியப் போகிறது என்ற சென்னகேசவன் வாக்கு உண்மையாகிறதா?..வானத்தில் ஆயிரம் இடிகள் சேர்ந்து ஒலிப்பது போல சத்தம் கேட்டது…பூமி நடுங்கத் தொடங்கியது..எங்கிருந்தோ பாறைகள் பறந்து வந்து விழுந்தன…நாங்கள் தூக்கி வீசப்பட்டோம்….எனக்கு நினைவு தவறி விட்டது…நீண்டநேரம் கழித்து நினைவு திரும்பியதும் வயல்கள் எல்லாம் சுடுகாடுகள் போல காட்சியளித்தன… தீயில்பொசுங்கிய நாற்றம்.. நான் உயிரோடு இருக்கிறேன் போலிருக்கிறதே! நெருப்பில் உடை பொசுங்கி தலைமயிர் புருவம் மீசை என எல்லாம் தீய்ந்துபோனாலும் உடலில் நெருப்புக்காயம் அப்பி இருந்தாலும் உயிர் இருக்கிறதே.வியப்புடன் சென்னகேசவனை கண்கள் தேடின. அருகில் படுத்துகிடந்தான் சட்டையும் பாண்ட்டும் பாதிக்குமேல் தீக்கிரையாகி உடம்பெல்லாம் லேசான நெருப்புக்காயங்களுடன்.
ஈனஸ்வரத்தில் ”அற்புதமான காட்சி பார்த்தாயா தாச்சு? 1908 ஆம் ஆண்டு ரஷ்யாவின் ‘துங்குஷ்கா ‘ என்ற இடத்தில் ஒரு மிகப் பெரிய விண் கல் ஒன்று வந்து விழுந்தது…அதிர்ஷ்ட வசமாக முழுவதுமாக வந்து மோதாமல் பூமிக்கு சுமார் 10 கிலோ மீட்டர் உயரத்திலேயே வெடித்து சிதறி விட்டது….அப்படியிருந்தும் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தி விட்டது…(அப்படியே வந்து மோதியிருந்தால் ரஷ்யாவே போயிருக்கும் என்கிறார்கள்) இதனால் விளைந்த ஆற்றலானது ஹிரோஷிமாவின் மீது வீசப்பட்ட குண்டைப் போல ஆயிரம் மடங்கு ஆற்றலுக்குச் சமம் என்கிறார்கள்..அப்படி ஒரு நிகழ்வுதான் சென்னைக்கு அருகேயே பாழூரில் ஏற்பட்டுவிட்டது. ஆனால் தாத்தா சொல்லிக்கொடுத்த சக்திவாய்ந்த சுதர்சன சக்கர மந்திரம் சொன்னதும் அது விஷ்ணு கையிலிருந்து ஓடிவந்து நடக்க இருந்த ஒரு பேரழிவைத்தடுத்துவிட்டது பார்த்தாயா? உலகமே இனி இதைப் பற்றிப் பேசப்போகிறது. இதைப்பற்றி நானும் பேசுவேன் தாசரதி.” என்றான் உற்சாகக் குரலில் .
“கனவுபோல இருக்கு. ஒரு…ஒரு…மந்திரத்தில் நீ விஷ்ணு கையிலிருக்கும் சக்கரத்தை வரவழைத்து பேரழிவைத் தடுத்துவிட்டாயா? உண்மையாகவா? என்னால் எதையுமே நம்பவே முடியலைடா” என்று ஆச்சரியமும் குழப்பமும் நிறைந்தகுரலில் கத்திவிட்டேன்.
அவ்வளவுதான்..
என் கேள்வியில் தாக்குண்டவனாய் சிரமப்பட்டு எழுந்தவன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு, ”அப்ப..அப்ப.. நீ …நீயே என்னை நம்பலாயாடா?” என்று கரகரத்த குரலில் கேட்ட சென்ன கேசவன் சட்டெனகீழே விழுந்தான்.
“இல்லடா. அப்படி இல்ல..அதுவந்து..வந்து..” என நான் திணறினேன்..
ஆனால் கீழே விழுந்தவன் அப்புறம் எழுந்திருக்கவில்லை.