“மிஸ்டர் ராம்கோபால், இங்கே கொஞ்சம் உட்கார முடியுமா? நான் உங்கள் உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும்,” என்று சொன்ன நர்ஸ் மருத்துவமனை படுக்கையை சுட்டிக் காட்டினாள்.
ராம்கோபால் சோர்வுடன் தலையசைத்தார். அவரது மனைவி கிருத்திகாவும் பதினேழு வயது மகன் சேகரும் அருகில் நின்று கொண்டிருந்தனர்.
நர்ஸ் அவரது கையில் இரத்த அழுத்த மானியை சுற்றிக் கொண்டிருக்கும்போது, கிருத்திகா மெதுவாக, “ராம், ஆர் யு ஓகே?” என்று கேட்டார்.
“மிகவும் களைப்பாக இருக்கிறது,” என்றார் ராம்கோபால். அவரது குரல் மிகவும் மெலிதாக கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போல கேட்டது.
நர்ஸ் தனது பரிசோதனையை முடித்துவிட்டு ராம்கோபாலிடம், “சார், நீங்கள் உங்கள் பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை ஒப்படைக்க வேண்டும்.” என்றாள்.
ராம்கோபால் சேகரை நோக்கி சைகை செய்ய, சேகர் முன்னோக்கி வந்து ஆவணங்களை நீட்டினான். “இதோ இருக்கிறது.”
“தேங்க்யூ,” என்று சொன்ன நர்ஸ், பின்னர் சற்று தயங்கி, “சார், உங்கள் உயில் தயாராக உள்ளதா?” என்று கேட்டாள்.
ராம்கோபால் தலையசைத்தார். “ஆம், எல்லாம் ஒழுங்காக உள்ளது.”
நர்ஸ் ஒரு படிவத்தை எடுத்தார். “நீங்களும் உங்கள் மனைவியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.”
பேனாவை எடுக்கும்போது கிருத்திகாவின் கை லேசாக நடுங்கியது. “இது அவசியம் தானா?”
“மன்னிக்கவும் மேடம், இது அரசாங்கத்தால் கட்டாயப்படுத்தப்பட்ட ஒப்பந்தம். இது மிகவும் அவசியமான ஒன்று.”
ராம்கோபால் அடுத்து கையெழுத்திட்டார். ஒரு காலத்தில் கம்பீரமாக இருந்த அவர் கையெழுத்து இப்போது ஒரு பலவீனமான கிருக்கலாக இருந்தது.
“நேரமாகிவிட்டது,” என்று அறிவித்தாள் நர்ஸ். “நாங்கள் இப்போது சாரை அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.”
கிருத்திகா குனிந்து, கணவரின் நெற்றியில் முத்தமிட்டாள். “ஐ லவ் யு ராம். அதை எப்போதும் நினைவில் கொள்.”
“ஐ லவ் யு டூ கிரு. என்றாவது ஒரு நாள் நாம் மறுபடி சந்திப்போம் என்று நம்புகிறேன்.”
சேகர் முன்னே வந்து ராம்கோபாலின் கையைப் பற்றிக் கொண்டான். அவன் குரல் உடைந்திருந்தது. “குட்பை, அப்பா. உங்களை மிகவும் மிஸ் பண்ணுவேன்.”
“குட்பை, சேகர். அம்மாவை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்.”
இரட்டைக் கதவுகளின் வழியாக ராம்கோபால் அழைத்துச் செல்லப்படுவதை குடும்பத்தினர் அவர் பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தனர்.
சேகர் சோர்வாக பக்கத்திலிருந்த நாற்காலியில் சரிந்தான். “எனக்கு புரியவில்லை அம்மா. அப்பா ஏன் இந்த முடிவைத் தேர்வு செய்தார்?”
“அவர் இறப்பதற்கு பயந்தார், சேகர். மரணத்தை ஏமாற்ற அவர் எடுத்த முடிவு தான் இது.”
அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர், அந்த தருணத்தின் பெரும் பாரத்தை சுமந்து கொண்டு.
சில நொடிகள் கழித்து கண்களில் கண்ணீருடன் சேகர் தழு தழுத்த குரலில் கேட்டான். “ஏம்மா, அப்பாவை நான் மீண்டும் பார்க்க முடியுமா?”
கிருத்திகா ஆழ்ந்த பெரு மூச்சு விட்டாள். அவள் குரல் உணர்ச்சிகளால் கனத்திருந்தது. “ஆம், பார்க்க முடியும். ஆனால் உன் அப்பாவாக அல்ல. அவரது உடலின் கடைசி அங்கத்திற்கு பதிலாக செயற்கை பாகம் பொருத்தப்பட்ட பிறகு, அவர் இனி ஒரு அப்பாவாக இருக்க மாட்டார். அவர் வெறும்… ஒரு இயந்திரமாகவே இருப்பார்.”