(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“கார்த்தி, அந்த அரதப் பழசான சைக்கிளை புது வீட்டிலேயும் கொண்டு வந்து வைக்கனும்னு அடம் பிடிக்கிறாருடா உன் அப்பா”
அம்மா குறிப்பிடும் மிதிவண்டி என் அப்பா வழி தாத்தாவின் உடையது. அந்த தாத்தா இறந்து இருபது வருடங்கள் ஆனாலும், அப்பா அந்த சைக்கிளை கண்ணும் கருத்துமாய் பராமரித்து வருகின்றார். ஒன்றிற்கு இரண்டு கார்கள், மூன்று மோட்டார் பைக்குகள் என வீட்டில் இருந்தாலும் அந்த சைக்கிளும் அவற்றிற்கு இணையாக வாசலில் நிற்கும்.
“பழைய பேரீச்சம்பழம், ஈயம் பித்தாள” என தெருவில் குரல் கேட்கும்பொழுதெல்லாம் அப்பாவைத் தவிர அனைவரும் நமட்டுச் சிரிப்பு சிரிப்போம்.
அந்த அசட்டையான நமுட்டு சிரிப்புகளை ஐந்தாறு வருடங்கள் கழித்து இன்னும் எட்டு மணி நேரத்தில் மீண்டும் அனுபவிக்கப் போகின்றேன். பிராங்பர்டில் விமானம் ஏறியாகிவிட்டது. அருகில் ஓர் அமெரிக்கன். கையில் ஒருப் புத்தகம். வளைந்து நெளிந்து புத்தகத்தின் பெயரை ஒரு வழியாகப் பார்த்துவிட்டேன். “Energy of life” என எழுதி இருந்தது. எழுதியவர் பெயர் தெரியவில்லை. நாசாவின் இலச்சினை ஓர் ஓரத்தில் இருந்தது.
விமானம் வானில் நிலைபெற்ற பின்னர், அரைவாசிப் புன்னகையைக் கொடுத்ததற்கு முழுப்புன்னகையையும் கொடுத்தார்.
தன்னை “தனடோஸ்” என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
“நாசா, வாழ்வியல் மேலாண்மையைப் பற்றி எல்லாம் புத்தகம் எழுதி இருக்கின்றதா?” எனக் கேட்டேன்.
மென்மையாய் சிரித்துவிட்டு, சன்னமான குரலில், “அதிரகசியமான ஆய்வைப் பற்றியப் புத்தகம் இது, இந்த விமானம் சென்னை போய் சேர்ந்துவிட்டால், அந்த ஆராய்ச்சியின் கடைசிப் பரிசோதனையும் வெற்றி ” என்றார்.
“அப்படி என்ன வகையான ஆராய்ச்சி” என்றேன்.
“நாம் அனைவரும் இறந்த பின், அந்த ஆற்றல் எங்கேப் போகின்றது ?” என்ற அவரின் கேள்வி வடிவேலுவின் ”மூனைத் தொட்டது யாரு” நகைச்சுவை நினைவுக்கு வந்தது. இன்னும் எட்டு மணி நேரம் பொழுது போகவேண்டுமே, பேச்சுக் கொடுத்தேன்.
“நம்பிக்கையாளராக இருந்தால், சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ போகும், பகுத்தறிவாளராக இருந்தால், இயற்கையோடு கலந்துவிடும்”
“நான் ஒரு விஞ்ஞானி, ஆக இயற்கையோடு கலந்துவிடுகிறது என எடுத்துக் கொள்வோம். அப்படி இருக்கையில் அந்த ஆற்றலை வழிமறித்து நமக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்ள முடியும் தானே”
“புரியவில்லையே” சிரிக்காமல் சுவாரசியமாகக் கேட்டேன்.
“ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஆனால் ஒரு வகையான ஆற்றலை மற்றொரு வகையான ஆற்றலாக மாற்ற முடியும் இது அடிப்படை விதி, ஆக, இறந்த ஆன்மாவை பிடித்து ஏன் வேறுவகை ஆற்றலாக மாற்றி பயன் படுத்திக் கொள்ளக்கூடாது என்பதான ஆராய்ச்சி அது” உண்மையோ பொய்யோ, இந்த வகையான விசயங்களை எனக்கு கேட்கப் பிடிக்கும்.
“வல்லரசுகள் ஏன் போர்களில் ஈடுபடுகின்றன?”
“கனிம, எண்ணெய் வளத்திற்காக?”
“ஆம், அவற்றுடன், போரினால் அழியும் ஏகப்பட்ட உயிராற்றல்களுக்காகவும்”
புதுவகையான கான்ஸ்பிரைஸி தியரியாக இருந்தது.
“இப்பொழுதெல்லாம், போர்களில் வல்லரசுகள், புதுவகையான குண்டுகளைப் பயன்படுத்துகின்றன, அந்தக் குண்டு உடலில் பாயும்பொழுது, குண்டில் உயிராற்றல் சேகரிக்கப்பட்டுவிடும்”
நான் பதில் பேசவில்லை.
“பின்னர் அந்த ஆற்றலை, எரி சக்தியாகவோ, மின்னாற்றலாகவோ மாற்றிவிடுவோம்”
“எவ்வளவு நாட்களுக்கு ஓர் உயிராற்றல் வரும்”
“நல்ல கேள்வி, ஓர் இயந்திரத்திற்கு உயிராற்றலை ஆற்றல் மூலமாக கொடுத்துவிட்டால், முடிவிலா காலம் வரை அந்த இயந்திரம் தொடர்ந்து இயங்க, அந்த ஆற்றல் போதுமானது. இந்த விமானம் கூட சோதனை ஓட்டமாக ஓர் ஆன்மாவின் ஆற்றலால் தான் முதன் முறையாக யக்கப்படுகின்றது”
மல்டிலெவல் மார்க்கெட்டிங் அல்லேலூயா ஹரே கிருஷ்ணா அளவிற்கு பில்ட் அப் கொடுக்கின்றாரே என நினைத்துக் கொண்டேன்.
“யாரிடமும் சொல்லக் கூடாத ஒரு வல்லரசு ரகசியத்தை உன்னிடம் சொல்கின்றேன், கவனமாகக் கேட்டுக்கொள், அடுத்தப் பத்து வருடங்களில், உலகத்தின் மக்கள் தொகையில் பாதி திட்டமிட்டு அழிக்கப்பட்டுவிடும், மக்களின் உயிர்கள் எல்லாம் எந்திரங்களுக்கு உயிராற்றல் மூலங்களாக மாற்றப்பட்டுவிடும்”
“ஏன் விலங்குகளின் உயிராற்றலை எடுத்துக் கொள்ளக்கூடாதா, எதற்கு சாமானிய மனிதர்களைக் கொல்ல வேண்டும்” எனக்குள் இருந்த மனிதாபிமானி விழித்துக் கொண்டான்.
“நல்ல கேள்வி, இயற்கைக்கு ஒவ்வாத ஓர் உயிரினம் எதுவென்றால், மனித இனம் மட்டுமே, மனித இனம் ஒட்டு மொத்தமாக அழிந்தாலும், இயற்கையின் சமனிலை பாதிக்கப்படாது… அதனால் தான் மனித உயிர்களை நாங்கள் எடுக்க முடிவு செய்தோம்”
அதன் பின்னர் நான் ஒன்றும் பேசவில்லை. சாப்பாடு வந்தது, சாப்பிட்டேன். அதன் பின்னர் அவரை நான் ஒன்றும் தொந்தரவு செய்யவில்லை. கதைக் கேட்க சுவாரசியமாகவும் திகிலாகவும் இருந்தாலும் அது எல்லாம் சாத்தியப்படுமா எனக்கு நான் கேட்டுக்கொண்ட கேள்விக்கு, சாத்தியமில்லை என மனசாட்சி சொன்னது. கட்டுக்கதைகளைப் பரப்பிவிடும் கோஷ்டியைச் சேர்ந்தவராக இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.
அவ்வப்பொழுது ஓரக்கண்ணால் பார்த்தபடி இருந்தார். சென்னை விமான நிலையத்தில் விமான தரை இறங்கியது. விமானத்தை விட்டு வெளியேப்போகையில் தனடோஸ், விமானிகளிடம் இறுக்கமாக கைகளைக் குலுக்கி வெளியேறினார்.
எனது வீட்டின் புதுமனைப் புகுவிழா விற்கு வந்து இருந்த அனைவரும் கேட்டது, திருஷ்டிக்காக அந்த பழையை சைக்கிளை வைத்து இருக்கிறீர்களா என்பதுதான். அன்று மாலை அப்பாவிடம் அந்த சைக்கிளை யாரிடமாவது கொடுத்துவிடலாம எனக்கேட்டேன்.
“குன்றத்தூர் போகலாமா, வடபழனி போகலாமா” எனக்கேட்டார்.
“வடபழனி” என கார் சாவியை எடுத்தேன்.
“இல்லை சைக்கிளில் போகலாம் வா” எனக்கூப்பிட்டார்.
அந்த சைக்கிளில் தாத்தா இறப்பதற்கு அவருடன் கொரடாச்சேரி கிராமத் தெருக்களில் சுற்று போக சிறுவனாக இருக்கும்பொழுது ஏறியது. அதன் பின்னர் இன்றுதான் ஏறுகின்றேன்.
ஆற்காடு சாலை போக்குவரத்து நெரிசலில், என்னை பின்புறம் வைத்து சைக்கிளை எந்த சிரமமும் இன்றி அப்பா ஓட்டிக்கொண்டு வந்தார். சைக்கிளில் ஒரு மிதிக்கு கிட்டத்தட்ட நூறு மீட்டர்கள் தூரம் சர்வசாதாரணமாக ஓடியது.
“கார்த்தி, இந்த சைக்கிள் எனக்கு ஏன் முக்கியம் தெரியுமா, இந்த சைக்கிளுக்குள்ள என் அப்பாவோட உயிர் இருக்குன்னு நினைக்கிறேன், இப்போகூட நான் பெடல் பண்ணல, அவரே ஓட்டுறாருதான்னு எனக்கு ஒரு நம்பிக்கை, அவரோட ஆன்மா, இந்த சைக்கிளுக்குள்ள இருக்கு அந்த நம்பிக்கைக்காத்தான் இந்த சைக்கிள் வச்சிருக்கேன், உன் அம்மாவுக்குப் புரியாது, நீயாவது புரிஞ்சுக்கோ”
அப்பா சொன்ன தாத்தா செண்டிமெண்ட் கதைக்குப் பின்னர், அதில் இருந்த உணர்வுப் பூர்வ இழையையும் தாண்டி, தனடோஸ் சொன்னது உண்மையாக இருக்குமோ என நம்பத் தொடங்கினேன்.
– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு:http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.
Great story, Selva! Thanks for sharing.