அவ்வெண்ணிலவில்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: September 5, 2024
பார்வையிட்டோர்: 823 
 
 

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு மனிதன் நிலவின் தென் துருவத் தில் 2009 நவம்பர் இரண்டாம் வாரத்தில் நின்றி ருப்பானாகில் அவன் சந்திர மண்டலத்தில் நிகழ்ந்த முதலாவது குண்டு வெடிப்பைப் பார்த்திருப்பான் அல்லது அதன் சத்தத்தைக் கேட்டிருப்பான் அல்லது அதில் அகப்பட்டுச் செத்துப் போயிருப்பான். 

நாஸா விண்ணாய்வு கூடத்தில் கால் இடறினால் ஒரு விஞ்ஞானியில்தான் விழ வேண்டும். விழுபவனும் கூட விஞ்ஞானியாகத் தான் இருப்பான். இரண்டு தினங்களாக யாரும் வீடுகளுக்குச் செல்லவில்லை. புதிய எதிர் பார்ப்புகளுடன் பிட்ஸாத் துண்டுகளைக் கடித்துக் கொண்டு கைகளில் தேனீர்க் குவளைகளை ஏந்திய படி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். 

‘LCROSS’ செயற்கைக் கோளிலிருந்து பிரியவிருக்கும் ஓர் ஏவுகணை சில மணித் துளி களில் சந்திரனில் ஒரு பெருந் துளையை ஏற்படுத் தப் போகிறது. அந்தக் காட்சியையும் அதன் விளைவுகளையும் அதன் பின்னரான விபரங்களையும் பெறும் உற்சா கத்தில் அவர்கள் இருந்தார்கள். ஏவுகணையைச் சுமந்து கொண்டு அந்த ‘லூனர்’ செயற்கைக் கோள் சந்திரனை நான்கு மாதங்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது. செயற்கைக் கோளிலிருந்து ஏவுகணை பிரிவதற்குள் தத்தமது சில்லறை வேலைகளை முடித்துக் கொள்வதில் விஞ்ஞானிகள் அவசரம் காட்டினார்கள். 

நிலவின் நிலத்தடியில் மைனஸ் 200 டிகிரி செல்ஸியஸ் அளவில் நீர் உறைந்திருப்பதாக விஞ்ஞானிகள் கணித்திருந்தார்கள். அவ்வாறு நீர் இருக்குமாயின் எதிர்காலத்தில் விமானிகளுக்குக் குடிநீராகவும் சுவாசிப்பு வாயுவாகவும் பயன்படுத்தலாம். ஏவுகணை எரிவாயுவாகவும் கூட அதை உபயோகிக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். புதை பனிப் படிவுகள் இருக்குமாயின் நிலவில் நிரந்தர ஆய்வு கூடம் என்ற பெயரில் உருவாக்கப்படவிருக்கும் ஓய்வு கூடம் அமைப்பதில் நாஸாவுக்குப் பெரு வெற்றியாக அமையும். 

ஏவுகணையை மோத விடும் இடமாக நிலவின் தென் துருவம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்தப் பிரதேசத்தில் 40 கிலோ மீற்றர் அகலமான ஒரு குழி இருந்தது. ‘Cabeus – A’ என்ற இந்தப் பள்ளம் சூரிய ஒளி படாத இடமாகும். எனவே மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக அதற்குள் நீர் உறைந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தார்கள். 

ஆயிற்று! 

சகலரும் பெரிய திரைக்கு முன்னால் போடப்பட்டிருந்த கதிரை களை நிறைத்து அமர்ந்திருந்தார்கள். ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்த ‘ஹப்பிள்’ விண்கோளின் கமராக்களைச் சந்திரனின் தென் துருவம் நோக்கித் திருப்பினார்கள். ‘LCROSS’ செயற்கைக் கோளில் பொருத்தப் பட்டிருந்த ஐந்து கமராக்களும் படங்களை எடுத்து அனுப்ப ஆரம்பித்தன. ஏவுகணை தாக்கும் அதே இடத்தில் சில மணித்துளிகளில் ஏவுகணையைச் சுமந்து சென்ற அந்தச் செயற்கைக் கோளும் விழுந்து வெடிக்கும். அது ஒரு தற்கொலைக் குண்டுதாரி போலத் தன்னை அழித்துக் கொள்ளும். கிழட்டு விஞ்ஞானிகளின் மூச்சுச் சப்தங்களைத் தவிர வேறு சத்தங்கள் அங்கு எழவில்லை. சகலரும் ஆவலும் பதட்டமும் கொண்ட நிலையில் பெருந் திரையை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

செயற்கைக் கோளை விட்டு லாவகமாகப் பிரிந்த ஏவுகணை எண்பது பாகைச் சரிவாக மணிக்கு 5600 மைல் வேகத்துடன் வந்து சந்திரனைப் பெருஞ் சத்தத்துடன் மோதிற்று! அதன் சிதறல்கள் சூரிய ஒளியில் மத்தாப்பாகச் சிதற விஞ்ஞானிகள் பலமாகக் கைகளைத் தட்டிக் குதூகலித்தார்கள். அந்தச் சிதறல்கள் நிலவின் தரையிலிருந்து பத்து மீற்றர் களுக்கு மேல் எழுந்தன. அந்தப் பாறைத் துகள்கள் 350 மெட்ரிக் டன் எடை கொண்டது என்றும் ஏவுகணையின் தாக்கத்தில் வெளியேறிய நீர் 7.6 லட்சம் லீற்றர்கள் என்றும் கணித்தார்கள். 

ஏவுகணையும் செயற்கைக் கோளும் விழுந்து வெடித்த அந்தக் கணங்கள் அத்தனையும் படமாக வந்து குவிந்து கொண்டிருந்தன. சந்திர னில் உண்டான பள்ளத்தின் விட்டம் 20 மீற்றர்களாயிருந்தன. 

விஞ்ஞானிகள் சுழல ஆரம்பித்தார்கள். தலைமை விஞ்ஞானி ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக தனது அறிக்கையை அவசரம் அவசர மாகத் தயாரிப்பதில் ஈடுபட்டார். 

“நிலாவில் நீர் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. இந்த நீர் மாதிரிகள் சூரிய மண்டலம் உண்டான வரலாற்றையும் வளர்ச்சியையும் அறியப் பயன்படும். இந்தச் சோதனை முடிவு சாதனையில் உயர்வானது. நிலவில் கால் வைக்காமல் நிலவைத் தோண்டாமல் இவ்விதம் சோதனை செய்வது உன்னத மானது. விண்வெளியில் குடி நீர், சுவாசிக்க ஒக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்றவற்றைப் பெறுவதற்கான வாய்ப் புக்களும் உள்ளன..” 


சந்திரனில் நீர்த் தேடலுக்கான ஆய்வில் இந்திய விண் ஆய்வு கூடம் ஒன்றும் தனது பங்களிப்பைச் செலுத்தியிருந்தது. இதற்காக ஐந்து இந்திய விஞ்ஞானிகள் நாஸாவில் நீண்ட காலம் தங்கியிருந்தார்கள். 

அமெரிக்கா சந்திரனில் நிரந்தர விண் ஆய்வு கூடத்தை அமைத்த பின்னர் இந்தியாவும் ஓர் கூடத்தை அமைக்கவிருக்கிறது என்ற தகவல் அங்கு பரிமாறிக் கொள்ளப்பட்டிருந்தது. நாஸா விஞ்ஞனிகள் கொள்கையளவில் அதை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். 

சந்திரனில் நீர் கண்டு பிடிக்கப்பட்ட மகிழ்ச்சியான தகவலுடன் இந்திய விஞ்ஞானிகள் தமது நாட்டுக்குத் திரும்பினார்கள். 

இரண்டு வார ஓய்வின் பின் இந்திய விண்ணியல் ஆய்வு விஞ்ஞானிகள் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கு அமைந்துள்ள இஸ்ரோ எனப்படும் இந்திய விண் ஆய்வு மையத்தில் ஒன்று கூடிக் கலந்துரையாடினார்கள். 

சந்திரனில் இந்தியா அமைக்கவுள்ள நிரந்தர ஆய்வு கூடம் பற்றியதாக அவர்களது பேச்சு அமைந்திருந்தது. அமெரிக்கா தனது ஆய்வு கூடத்தை நிறுவிய பிறகு மற்றொரு நாட்டுக்கு இடமளிக்குமா என்றொரு வினா அவர்களிடையே சுற்றிச் சுழன்றது. நிலவில் நீர் ஆய்வில் அவர்களுடன் ஒத்துழைத்தோம் என்பதற்காக அவர்கள் நமக்கொரு வாய்ப்பைத் தருவார்கள் என்று நம்ப முடியாது என்ற கருத்துப் பலமாக இருந்தது. சில வேளை மற்றொரு ஆய்வுக்காக அமெரிக்கா பாக்கிஸ் தானைக் கூட்டுச் சேர்த்துக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு விஞ்ஞானி குறிப்பிட்டார். 

அடுத்த ஆய்வுக்கு இந்தியாவைத் துணைக்கு அழைத்துக் கொள்ள அமெரிக்கா தவறுமாக இருந்தால் அது தனித்து இயங்கும் என்று தலைமை விஞ்ஞானி தனது முடிவை அறிவித்தார். அதே வேளை தனித்து இயங்குவதற்கான ஏற்பாடுகளை அடுத்த வாரத்திலிருந்து இரகசியமாகச் செயற்படுத்துவது என்று அவர் அறிவித்ததுடன் அக்கூட்டம் நிறைவு பெற்றது. 


சீன – ரஷ்ய தலைவர்கள் 2010 ஒக்டோபரில் சந்தித்துக் கொண் டார்கள். பிராந்திய நலன்கள் சம்பந்தமான ஒப்பந்தத்துக்கேற்ப வருடா வருடம் நடைபெறும் வழக்கமான சந்திப்பு இது. கடந்த வருடப் பதினான் காவது சந்திப்பில் சீன – ரஷ்ய விண்வெளி உறவுத் திட்ட ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டிருந்தது. அமெரிக்கா சந்திரனைத் தாக்கி நீர் பற்றிய ஆய்வு இரு நாடுகளதும் கவனத்தை ஈர்த்திருந்தது. 

இரு நாடுகளதும் விஞ்ஞானிகள் தங்களது நாட்டுத் தலைவர் களை உசுப்பேற்றி விட்டார்கள். அமெரிக்கா சந்திரனில் நிரந்தர ஆய்வு நிலையத்தை அமைக்குமானால் தம்மால் விண்வெளி தொடர்பான எந்த முயற்சிகளையும் செய்ய முடியாத நிலை வரும் என்று அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். 

எனவே பழைய ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டன. புதிய திட்டச் சேர்க்கைகள் இணைத்துக் கொள்ளப்பட்டன. அதன் படி சூரிய ஒளி விழும் சந்திரனின் மத்திய பகுதியில் உள்ள மேட்டு நிலப்பரப்பில் ரஷ்யாவும் தாழ்நிலப் பரப்பில் சீனாவும் ஆய்வு நடத்துவதென முடிவானது. 

சந்திரனில் பாறைப் படிவுகளுக்குக் கீழ் எண்ணெய் இருப்பதாக ரஷ்யா அறிவித்தது. வெப்ப எதிர்த் தாக்கப் பொருளான காரீயப் படிவு இருப்பதாகச் சீனா அறிவித்தது. 2012ம் ஆண்டிலிருந்து ஆய்வு வேலைகள் கூட்டாக மேற்கொள்ளப்படும் என தலைவர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. 


பிரிட்டிஷ் தேசிய விண்வெளி நிலையத்துக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து கடிதம் வந்தது. 2009ம் ஆண்டுக்கான விண்வெளி ஆய்வுச் செயற்பாடுகளுகென ஒதுக்கப்பட்ட 268 மில்லியன் பவுண் பணத் தொகை இரட்டிக்கப்பட்டிருப்பதாக அக்கடிதம் தெரிவித்தது. 

Polaris House ல் அமைந்துள்ள விண்வெளி நிலைய விஞ்ஞானி கள் விடயத்தைப் புரிந்து கொண்டார்கள். திட்டத்தை நடைமுறைப் படுத்து வதில் ஐரோப்பிய நாடு ஒன்றின் உதவியைப் பெற்றுக் கொள்வதா அல்லது தனியே இயங்குவதா என்று விவாதித்தார்கள். 

சந்திரனின் வடதுருவத்தில் சிலிக்கா மற்றும் இல்மனைற் படிவுகள் இருப்பதாகவும் 2013ம் ஆண்டிலிருந்து ஆய்வு ஆரம்பமாகும் என்றும் உலகுக்கு அறிவித்தனர். 


2015ல் சந்திரனில் தாக்கமான ஓர் ஏவுகணையைச் செலுத்திப் பரிசோதிப்பதற்கு இஸ்ரேல் தயாராகி வருவதை சி.ஐ.ஏ. மோப்பம் பிடித்தது. இஸ்ரேலைத் தனித்துச் செயற்பட அனுமதிக்க வேண்டாம் என்று அமெரிக்க காங்கிரஸ் வலியுறுத்தியது. எனவே இந்தியாவைக் கழட்டி விட்டு அமெரிக்கா இஸ்ரேலுடன் கூட்டுச் சேர்ந்தது. 

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டிணைப்பு விண் ஆய்வுத் திட்டத் தின் கீழான ஏவுகணை சுமந்த செயற்கைக் கோள் சந்திரனைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தது. இந்த ஏவுகணை சந்திரனைத் தாக்கும் காட்சியைக் கண்டு களிக்க நாஸா விஞ்ஞானிகள் தயாரானார்கள். அந்நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கௌரவ அதிதியாக அழைக்கப்பட வேண்டும் என்று இஸ்ரேல் விரும்பியது. அதனடிப்படையில் அவர் அங்கு கோலாகலமாக வரவேற்கப்பட்டார். அவர் தனது மனைவி மற்றும் நாய் சகிதம் அங்கு வருகை தந்திருந்தார். 

தென் துருவத்தின் மேட்டு நிலப் பகுதியை ஏவுகணை தாக்கிற்று. அந்த இடத்தில் பாறைச் சிதறல்களுடன் வெறும் புகை மண்டலமே மேலெழுந்தது. அதிதி உட்பட அனைத்து விஞ்ஞானிகளும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். அந்தப் புகை மண்டலம் அரை மணிநேரத்துக்கு மேல் நிலைத்திருந்தது. 

அங்கிருந்து கிடைத்த புகைப்படங்களின் மூலம் விஞ்ஞானி களுக்குப் புதிய எந்த விதத் தகவல்களும் கிடைக்கவில்லை.வெறுங் கற் பாறைகளே சிதறியிருந்தன. ஏவுகணை தாக்கிய இடம் கூட பெரிய பள்ளமொன்றை ஏற்படுத்தியிருக்கவில்லை. விஞ்ஞானிகள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். 

தலைமை விஞ்ஞானி ஜனாதிபதிக்குத் தனது அறிக்கையைத் தயார் செய்தார். 

“சந்திரனின் தென்மேற்கு மேட்டுப் பகுதியில் கந்தகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நமது பரிசோதனையின் போது கந்தகப் புகை விண் வெளி யில் ஆறு மணிநேரம் தரித்திருந்தது. எதிர்காலத்தில் ஆய்வு நடத்தும் எந்தவொரு தேசமும் இதைக் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆய்வு களை நடத்தும் போது மிக அவதானமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நாஸா வேண்டுகோள் விடுக்கிறது.” 

இந்த அறிக்கை வெளியிடப்பட்ட இரண்டு தினங்களில் முன்னாள் ஜனாதிபதியை ஒரு தொலைக் காட்சி பேட்டி கண்டது. விண்வெளி ஆய்வு பற்றியும் சந்திரனில் நடந்த பரிசோதனையை நேரில் பார்த்தது பற்றியும் அவர் அதில் தெரிவித்தார். சந்திரனில் கிளம்பிய புகை யைக் கொண்டு அங்கு சாம்பிராணி இருக்கிறது என்று தான் நிச்சயமாக நம்புவதாகக் குறிப்பிட்டார். 


விண்வெளி பற்றிய தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கும் நாடுகளில் உலகில் மூன்றாவது இடத்தில் பிரான்ஸ் திகழ்கிறது. விண்வெளி ஆய்வுக்கு என அதிக பணத்தைச் செலவிடும் முக்கிய நாடு என்ற பெருமையும் அதற்கு உண்டு. 

பரிஸில் உள்ள விண்வெளி ஆய்வு மத்திய நிலையத்துக்கு பிரிட்டன் விஞ்ஞானிகளிடமிருந்து வந்த கடித்தை பிரான்ஸ் விஞ்ஞானிகள் கிடப்பில் போட்டிருந்தார்கள். சந்திரனைத் தாக்கி அதன் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொள்ள ஒத்துழைப்பைக் கோரியிருந்தது அந்தக் கடிதம். தனது செயற்கைக் கோள்களைக் கொண்டு தன்னிச்சையாகச் செயற்படும் வல்லமை பிரான்ஸுக்கு உண்டு என்பது அரசியல் தலைவர் களது கருத்தாக இருந்தது. எனவே பிரிட்டனுடன் இணைவதில் அலட்சி யம் காட்டினார்கள். 

சில வேளை இணைந்து செயற்படுகையில் பிரிட்டிஷ் திடீரெனத் தம்மைக் கைவிட்டு அமெரிக்காவுடன் கூட்டுச் சேரவும் வாய்ப்பு இருக்கி றது என்பது மற்றொரு காரணம். 

சந்திரனில் விமானத் தயாரிப்புக்குத் தேவையான தைத்தேனியம் என்ற உலோகப் படிவைக் கண்டு பிடித்திருப்பதாக பிரான்ஸின் விண்வெளி ஆய்வு மத்திய நிலையம் தகவல் சொன்னது. 


இந்தியா தனித்து இயங்கத் தொடங்கியது. 2009ல் முதலாவது வெடிப்புச் செய்தி வந்த அடுத்த கணத்திலேயே பாக்கிஸ்தான், தென்னா பிரிக்கா, ஜப்பான், வட கொரியா ஆகியன தனித்தனியே செயற்பட ஆரம் பித்திருந்தன. அவற்றின் செயற்படுகள் அமைதியாகவும் இரகசியமாகவும் முன்னெடுக்கப்பட்டன. 

ஈரானின் கும் நகரில் உள்ள விண்வெளிக் கவுன்ஸில் தனது புதிய செயற்கை ஆய்வுக் கோளை விண்வெளிக்கு அனுப்புவதாக அறிவித்தது. 

பெரிய நாடுகளுடன் இணைந்து விண்வெளிச் செயற்பாடுகளில் ஈடுபட்ட சிறிய நாடுகள் சிலவும் கூட சந்திரனில் தங்கம் இருக்கிறது. வெள்ளி இருக்கிறது, செம்பு இருக்கிறது என்று அறிக்கை விட்டபடி தனி ஆய்வுக்குத் தயாராகின. 

ரகசியமாகவும் பரகசியமாகவும் சந்திரனின் பல பகுதிகள் தாக்குத லுக்குள்ளாவது தொடர்ந்தது. பூமியில் இருந்து பார்க்கையில் நிலவின் களங்கம் அதிகரித்துக் கொண்டே வருவதைக் காணமுடியுமாக இருந்தது.

ஈரான் தனது அணு ஆயுதங்களை சந்திரனில் பதுக்குவதற்குத் தயாராவதாகவும் வட கொரியா அணு ஏவுகணையைக் கொண்டு சந்திரனில் மோதப் போவதாகவும் அமெரிக்கா அறிக்கை விட்டது. வல்லரசு நாடு களைத் தவிர வேறு யாரும் சந்திரனுக்கு எதையும் அனுப்பக் கூடாது என்று ‘விண்வெளிப் பயணத் தடைச் சட்டமூலம்’ ஒன்றை அமெரிக்கா வடிவமைத்தது. எல்லா நாடுகளும் அதில் கையொப்பமிட வேண்டும் என்று கட்டளை விடுத்தது. இம்முயற்சியில் ஈடுபடாத நாடுகள் தவிர ஏனையவை அந்த வேண்டுகோளை அலட்சியம் செய்தன. 


பாக்கிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள கடாபி கிரிக்கட் மைதானம் 2027ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் திகதி ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. அன்று 14வது உலகக் கிண்ணக் கிரிக்கட் இறுதி ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மின் ஒளியில் நடைபெற்ற அந்த ஆட்டத்துக்கு அன்றைய பௌர்ணமி நிலவு மேலும் பொலிவூட்டியது. 

இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்குமிடையில் கபடி ஆட்டம் நடந்தாலும் அதை மூன்றாம் உலகப் போராகப் பத்திரிகைகள் மாற்றிய மைத்து விடுகின்றன. வீரர்களும் விளையாடுகிறோம் என்பதை மறந்து யுத்தம் புரிவதான மனோ நிலையுடன் களத்தில் ஆடினார்கள். ட 

இந்த இரவு பகல் ஆட்டத்துக்கு முன்னாள் கிரிக்கட் வீரர்கள் சிறப்பு அதிதிகளாக வருகை தந்திருந்தனர். வயோதிபத்தை அடைந்த அர்ஜூன ரணதுங்க, சனத் ஜெயசூரிய, முத்தையா முரளீதரன், வாஸிம் அக்ரம், சச்சின் தெண்டுல்கர், கேட்னி வோல்ஸ், ஜாகிர்கான், ரிக்கி பொன்டிங், டானியல் விட்டோரி போன்றோர் அதிதி அரங்கில் அமர்ந்திருந்தார்கள். 

கடைசி ஓவரில் இந்தியா வெற்றி பெற 13 ஓட்டங்களைப் பெறவேண்டியிருந்தது. கைவசம் 3 விக்கட்டுக்கள் இருந்தன. அடுத்த ஆறு பந்துகளில் வெற்றி யாருக்கு என்பது தெரிந்து விடும். தொலைக் காட்சிகள் தமது விளம்பரங்களை ஏற்கனவே ஒளிபரப்புச் செய்து முடித்திருந்தன. மிகவும் பதட்டமான அந்தச் சூழ்நிலையில் அரங்கத்தின் அதி உயரத்திலிருந்த கமராக்காரர் அன்றைய பூரண சந்திரனை முழுத் திரையிலும் கொண்டு வந்து காட்டினார். அதனை முழு உலகமும் பார்த் துப் பரவசத்துடன் ரசித்தது. 

அந்தத் தருணத்தில்தான் மனித வரலாற்றைத் திருப்பிய அந்தச் சோகச் சம்பவம் நிகழ்ந்தது. 

நீர் ஆய்வின் நான்காம் கட்டம் என்ற பெயரில் ஈரானினதும் வடகொரியாவினதும் செயற்கைக் கோள்களைத் தாக்கும் நோக்கத்துடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் அனுப்பியிருந்த இரண்டு பாரிய அதிவேக ஏவுகணைகள் இலக்குத் தப்பி நேரே சந்திரனைத் தாக்கின. 

ஏற்கனவே பலபக்கங்களாலும் வெடித்து நொந்து போயிருந்த சந்திரன் துண்டு துகள்களாக வெடித்து மத்தாப்புச் சிதறுவது போலச் சிதறிப் பறந்தது. 

– 01.12.09

– விரல்களற்றவனின் பிரார்த்தனை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜனவரி 2013, யாத்ரா வெளியீட்டகம், வத்தளை.

நூலாசிரியரின் பிற நூல்கள் கவிதை காணாமல் போனவர்கள் - 1999 உன்னை வாசிக்கும் எழுத்து - 2007 (மொழிபெயர்ப்பு) என்னைத் தீயில் எறிந்தவள் - 2008 (அரச சாஹித்திய தேசிய விருது பெற்றது) சிறுவர் இலக்கியம் புள்ளி - 2007 கறுக்கு மொறுக்கு - முறுக்கு - 2009 புல்லுக்கு அலைந்த மில்லா - 2009 ஏனையவை தீர்க்க வர்ணம் - 2009 (பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *