கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: September 16, 2024
பார்வையிட்டோர்: 2,308 
 
 

31/3/2035 அன்று இரவு 11:50 மணியளவில் அழையா விருந்தாளிகள் இருவர் பூமியில் வந்து இறங்கினார்கள்.

அவர்கள் வந்து இறங்கியது ஒரு சிறிய தட்டு வடிவம் கொண்ட விண்கலத்தில். கிண்டி நேஷனல் பார்க்கின் மரங்களடர்ந்த பகுதியில் இறங்கிய விண்கலம் எந்த ஒளியையும் ஒலியையும் உருவாக்கவில்லை. எனவே யாரும் அதை கவனிக்கவில்லை. ஒரு கணம் அது வானத்தில் இருந்தது, அடுத்த கணம் அது தரையில் அமைதியாக அமர்ந்திருந்தது.

அடுத்த ஆறு மணி நேரத்திற்கு அங்கு ஒன்றும் நடக்கவில்லை. உயிரற்ற பொருளாக விண்கலம் கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. பொழுது விடிந்ததும் சரியாக 6:05 மணிக்கு விண்கலத்தின் கதவு திறக்கப்பட்டது. விருந்தாளிகள் இருவரும் வெளியே குதித்தனர். அவர்கள் சுமார் நான்கரை அடி உயரம், பெரிய மொட்டைத் தலையுடன் இருந்தனர். முகத்தில் இரண்டு பெரிய இருண்ட கண்கள். வெளிப்படையான மூக்கு எதுவும் இல்லை. வாயிருக்கும் இடத்தில் ஒரு சிறிய பிளவு. அவர்களின் எஞ்சிய உடல்கள் பெரிய அங்கிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. ஒருவர் பச்சை நிற அங்கியும் மற்றவர் நீல நிற அங்கியும் அணிந்திருந்தனர்.

“பூமியில் வந்து இறங்கி விட்டோம். இப்போது என்ன செய்வது?” நீல அங்கி கேட்டார்.

“பூமியின் தலைவனைச் சென்று சந்திப்போம்.” என்றார் பச்சை அங்கி.

அவர்கள் அருகில் உள்ள வீடுகளை நோக்கி நடக்க ஆரம்பித்த போது, சூரியன் அடிவானத்தில் வேகமாக எழுந்து கொண்டிருந்தான். அவர்களின் சின்னஞ்சிறு கால்களுக்குக் கீழே காய்ந்த இலைகளின் ஓசையைத் தவிர வேறு எந்தச் சத்தமும் இல்லை.

சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு, புத்தம் புதிய வீடுகளால் சூழப்பட்ட ஒரு சிறிய சாலையில் அவர்கள் இருந்தார்கள். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலை வெறிச்சோடிக் கிடந்தது. எல்லோரும் தூங்கி கொண்டிருந்தார்கள்.

“எங்கே பூமி மனிதர்கள் யாரையும் காணவில்லை?” என்று கேட்டார் நீலம்.

“அதான் நானும் யோசிக்கிறேன்.” என்றார் பச்சை.

“நாம் பூமியில் தான் இருக்கிறோமா?”

“நிச்சயமாக. தரையிறங்குவதற்கு முன்பு நான் அதை உறுதிப்படுத்தினேன்”.

பச்சை நடப்பதை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தார். ஒரு பெரிய மூன்று மாடி வீட்டைக் காட்டி, “அது தலைவரின் வீடு போல் இருக்கிறது, அங்கே போய்க் கேட்போம்” என்றார்.

அவர்கள் சாலையின் குறுக்கே நடந்து வீட்டின் கேட்டை திறந்து உள்ளே சென்றார்கள். கரும்பழுப்பு நிற மஹோகனி கதவு முன் நின்றார்கள். நீலம் கையை நீட்டி மெதுவாக கதவைத் தட்டினார்.

சில நொடிகளுக்குப் பிறகு கதவு திறக்கப்பட, ஒரு நடுத்தர வயது பெண்மணி தோன்றினார். அவள் அவர்களைப் பார்த்து லேசாக சிரித்தாள்.

“வணக்கம், நாங்கள் ஆண்ட்ரோமெடா விண்மீனின் PA-99-N2 கிரகத்தில் இருந்து வருகிறோம். எங்களை உங்கள் தலைவரிடம் அழைத்துச் செல்ல முடியுமா?” பச்சை தூய ஆங்கிலத்தில் கேட்டார்.

“எங்கள் தலைவர் இப்போது பிஸியாக இருக்கிறார், நீங்கள் சிறிது நேரம் கழித்து வருகிறீர்களா?” என்றாள் அந்தப் பெண்மணி சிரிப்பை நிறுத்தாமல். அத்துடன் அவள் கதவுக்கு பின்னால் மறைந்தாள்.

அவள் கதவை மூடியவுடன், பக்கத்து அறையிலிருந்து ஒரு குரல், “யாரது, இந்த விடிகாலையில், அதுவும் ஞாயிற்றுக்கிழமை அன்று?” என்று கேட்டது.

“எல்லாம் நம்ம பக்கத்து வீட்டுப் பசங்க தான். அவுனுங்க அடிக்கிற லூட்டி தாங்க முடியலை. எப்படா ஏப்ரல் முதல் தேதி வரும், எல்லாத்தையும் ஏப்ரல் ஃபூல் பண்ணலாம்னு காத்துக்கிட்டு இருக்கானுங்க.”

பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான்.  அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *