கீழத் தெருவில் உடுக்கை சப்தம் மூன்று நாட்களாக கேட்டுக் கொண்டே இருந்தது.’ஏண்டி சின்னமயிலு உங்க அக்கா மல்லிகாவுக்கு இன்னுமா பேய் இறங்கல’-ஊர்சனம்.
அது அக்காவின் நெருங்கிய தோழி. வீட்டில் சிறுசடவு.அரளிவிதை தின்று இறந்து போனாள்.அக்கா வாக்கப்பட்டு அன்னஞ்சிக்கு போயி மூணு வருசமாகியும் வயிற்றில் குழந்தை தங்கல.பெருமாயி கிழவி சொன்ன ரோசனையிலதான் உடுக்கை சத்தம். அது அக்கா மேல் இருக்கும் வரையில் குழந்தை பிறக்காதாம்.நடுமுடியை பிடுங்கி தலையில் கல்லை ஏற்றி ஊர்வலமா வந்து புளியமரத்தில் முடியை ஆணி அடித்த பின்தான் பிரச்சனை ஓய்ந்தது. அது நடந்து ஒரு வருசத்துக்குள்ளேயே அக்காவும் பிள்ளை பெத்துக்க வீட்டுக்கு வந்தப்பதான் சின்னமயிலு பூதபாண்டிக்கு வாக்கப்பட்டு மெட்ராசுக்கு போனா.
சலூன் கடையில இருக்கிற புரோக்கர் கிட்டதான் வீடு பாக்க சொல்லி வச்சிருந்தான் பாண்டி.அரைமாச கொடைகூலி தந்தப்பதான் ஒரு வீடு அமைஞ்சது. வாடகை கம்மி.நல்ல வசதி. முதல்மாடி.வீட்டுக்காரங்க தங்கம்மாதிரி.கல்யாணம் பண்ணி போறவுகளுக்கு வீடும்,வீட்டுக்காரங்களும்தான் முக்கியம்.நல்ல அனுசரனையா போனாங்க. அந்த வீட்டுக்கு குடிவந்து ஒன்பது மாசம் தாண்டியாச்சு மயிலுக்கு வயித்துல குழந்தை தங்கல. மயிலு சகவாசத்துல எவளும் நாண்டுக்கிடல.பூதபாண்டியும் லேசுப்பட்ட ஆளு இல்ல. நைட்டு கரண்டு இருக்கிறப்போ நடுச்சாமத்துல புஞ்சைக்கு தனிஆளா போயி தண்ணிகட்டுன ஆளு அவேன். அசராத பார்டி.
சின்னமயிலு அப்பேன்தான் பூசாரித் தாத்தாவ அழைச்சிக்கிட்டு வந்து மகவீட்டுல ரெண்டு நா தங்கிப் போனாரு. தாத்தா போரப்ப இந்த வீடு சரியில்லனு மட்டும் சொல்லிச்சு.தாத்தா மேல இருக்கிற கருப்பசாமிதான் குறி சொல்லிச்சாம். பூதபாண்டி இப்ப சுதாரிச்சுக்கிட்டான்.
நள்ளிரவில் முனி செல்லும் பாதைய கணிச்சு சொல்லும் சீயானுக்கு ஊரில் நல்ல பேரு. முனிஸ்வரன் கோயிலிருந்து வெங்கலா கோயிலுக்கு நடுச்சாமத்துலதான் சடையாண்டி முனி வலசை போகுமாம். ஆளுக குறுக்க போனா நாக்கு தள்ளிடும்னு கதவுண்டு.
காத்தமுத்து மளிகை கடையில…
“நாட்டாரே உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்னு இருந்தேன் சொல்லுவியா?”
“நானே சொல்லணும்னு இருந்தேன்.நீயே கேட்டுப்புட்ட”
“……………..”
“இதுக்கு மின்னாடி இருந்தவுக யாரும் ரெண்டு மாசம்கூட இருக்கல”
“…………….”
“அதுல ஒரு கன்னிப் பொண்ணு நாண்டுக்கிட்டா !”
“……………..”
” ஆமா, பேய் இருக்கா இல்லியா பாண்டி”
பாண்டி மெளனமாக நடய கட்டினான்.
“ஏய் புள்ள மயிலு! நைட்டு பதினொரு மணிக்கு எதிர் வீட்டு நாயி ஊழையிடுதே ஏன்?”
“அப்பதேன் அது வார நேரம் போல மாமா!”
“நம்ம தெரு கடைசியில ஒரு ஒத்த பனை மரம் இருக்கா. அதுலேயிருந்துதான் அவ வாரா”
“விடிகால நாலு மணிக்கு அதே நாயி ஊழையிடும் பாரு.அப்போ அவ பனை மரத்துக்கு போயிரா போல”
“மாமா, இது தெனைக்கும் நடக்குது.நமக்குதேன் இம்புட்டு நாளா தெரியல”
“நம்ம வீட்டுக்கு பின்னால ஒரு பழைய கெணறு கெடக்கா. ஒரு நா மூணு மணிக்கு கெணத்துல யாரோ தண்ணி சேந்துர சத்தம் கேட்டுச்சு.சன்னல தெறந்து பாத்தேன் யாருமில்ல. பின்ன, திரும்பவும் பக்கெட்ட ‘டம்’முனு கெணத்துல போடுர சத்தம் கேட்டுச்சு. நா இத பத்தி யாருகிட்டேயும் கேக்கல!”
சின்னமயிலு பூஜை அறையிலிருந்து திருநீரு எடுத்து பூசிக்கிட்டு, மாமனுக்கும் பூசி விட்டா. மணி ரெண்டு.உறக்கம் பிடிக்கல.காலையிலதான் ரெண்டு பேரும் அசந்து தூங்குனாங்க.
பணி செய்யும் இடத்தில் சில சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டான் பூதப்பாண்டி.
“அண்ணே, நைட்டு தூங்கறச்சே எங் கனவுல ஒரு பொண்ணு வந்து சிரிக்கா. திடுக்கினு முளிச்சிப் பாத்தா யாரும்மில்ல!”
“டேய், அது ஒனக்கு வரப்போற ரெண்டாவது பொண்டாட்டியா இருக்கும்டா!”
எல்லோரும் சிரித்தார்கள்.
அன்று சின்னமயிலு ஹவுஸ் ஓனர் அக்காவிடம் நீண்ட நேரம் அன்யோன்யமாக பேசிக் கொண்டிருந்தாள். அந்த வீட்டில் இதற்கு முன்பு நடந்த சம்பவங்களையும் கேட்டறிந்தாள். அந்த பொண்ணு செத்த பிறகு வீட்டை காலி பண்ணிப் போகும் போது பரணில் ஒரு போட்டோவை விட்டுச் சென்றிருந்தார்கள். செத்துப் போன பொண்ணுதான் அது.பழைய சாமான்கள் போட்டு வைத்திருக்கும் அறையிலிருந்து எடுத்துவந்து மயிலுவிடம் காட்டினார் அக்கா. இளம் வயது குமரி.அப்படி ஒரு சிரித்த முகம்.
இரவு சாப்பாட்டிற்கு பிறகு மயிலு அந்த போட்டோவை மாமனிடம் காட்டினாள். வாங்கிப் பார்த்த பூதப்பாண்டி அதிர்ந்து போனான். தன் கனவில் வந்து சிரித்த அதே முகம்!
“ஏலே,பாண்டி வீட்ட காலி பண்ணிட்டியாமே. கடபாக்கிய குடுத்துட்டு போடா”-காத்தமுத்து நாடார்.
– கல்வெட்டு பேசுகிறது இதழில் டிசம்பர் 2021ல் பிரசுரம் கண்டது.
மிக்க நன்றி!💐