கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: August 17, 2024
பார்வையிட்டோர்: 1,903 
 
 

சனிக்கிழமை அலுவலகம் அரை நாள் மட்டுமே வேலை என்பதால், மதியம் பீச் ஸ்டேஷனில் நுழைந்து ரெடியாக இருந்த மின்சார ரயிலில் ஏறி ஜன்னலோரம் அமர்ந்து கொண்டேன். என்னைத் தவிர யாரும் இல்லை. கம்பார்ட்மெண்டே காலியாக இருந்தது.

நாளை ஞாயிற்றுக்கிழமை. என்னையும் என் மனைவியையும் தங்கள் வீட்டுக்கு வரச்சொல்லி மாமனார் அழைப்பு விடுத்திருந்தார். எங்களுக்குத் திருமணமாகி ஆறு மாதங்களுக்குள் இது மூன்றாவது அழைப்பு! அடிக்கடி தன் மகளை பார்க்கவும் அவளிடம் மனம் விட்டுப் பேசவும் விரும்புவார்கள் போல் தெரிகிறது. அதனால்தான் இந்த ஏற்பாட்டைச் செய்கிறார் மாமனார்.

இது இல்லாமல், இடையிடையே வந்து தங்கள் பெண்ணையும்  என்னையும்  பார்த்துவிட்டுச் செல்வார்கள்.  வரும்பொழுது, ஆப்பிள், சாத்துக்குடி, பழங்களுடன் சேர்த்து ஸ்வீட், சேவரியும் கொண்டு வருவார்கள். எங்கள் இருவருக்கும்ஜாஸ்திதான். சொன்னால் கேட்கமாட்டார்கள்.  நாங்களும் நாள் கணக்கில் வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்படுவோம். சிலவற்றை அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தமும்  ஏற்படும்.

அழைப்பின் பேரில் மாமனார் வீட்டுக்குச் சென்றால் போதும்.  நாள் முழுவதும்  அம்மாவும் பெண்ணும்பேசிக்கொண்டே இருப்பார்கள். அப்படி என்னதான் ஓயாமல் பேசுவார்களோ தெரியாது. ஆனால் என்னைப் பற்றிய எதிர்மறை வார்த்தைகள் நிச்சயம் இருக்காது. ஏனென்றால் இதுவரை என் மனைவி ஒரு நாளும் என்னால் கண்ணீர் சிந்தியதாக சந்தர்ப்பமே ஏற்பட்டதில்லை. அந்த அளவிற்கு நான் அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறேன். 

இதனால் எனக்கு மாமனார், மாமியாரிடம் நல்ல பெயர் உண்டு! மேலும் என் மனைவி ஒரே மகள் அவர்களுக்கு. கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை. அதனால் அவள் பெற்றோர் அளவிற்கதிகமான அன்பும், பாசமும் மகள் மீது வைத்திருந்தனர். முக்கியமாக அவளின் அம்மா மகள் மீது தன் உசிரையே வைத்திருந்தார்.

காலை சென்றால் மாலை வரை ஒரே விருந்தோம்பல்தான். காலை சுவையான பிரேக்ஃபாஸ்ட், மதியம் அறுசுவை விருந்து மாலை பக்கோடா, பஜ்ஜி சகிதம் அருமையான டீ என்று அமர்க்களமாக இருக்கும்!

இருட்டும் முன்னால் வீடு திரும்பி விடுவோம். உள்ளூரிலேயே ஜாகை இருந்ததால் இந்த செளகரியம்!

அதைப் பற்றி விரிவான சிந்தனையில் ஆழ்ந்திருந்த எனக்கு நவம்பர் மாத சிலு சிலுப்புடன் கூடிய மின்விசிறிக் காற்று உடலை தழுவிக் கொள்ள சுகமாக இருந்தது.  அப்படியே கால்களை எதிர் சீட்டின் அடியில் பரப்பி வைத்தபடி கண்களை மூடினேன்.  சில வினாடிகள் கூட ஆகியிருக்காது.  

“எக்ஸ்யுஸ் மி!”  குரல் கேட்டு கண் திறந்து பார்த்தபோது  முழுக்கை வெள்ளை நிற க்ஷர்ட்டும் கருப்பு கலர்  பேண்டும் அணிந்திருந்த ஒருவன் என்னருகில் நின்றுகொண்டிருந்தான். கண்களில் குளிர் கண்ணாடி! படிய வாரிய கருமையான கேசம்!  நல்ல உயரத்தில் சிவந்த தேகத்துடன் ஒரு சினிமா ஹீரோ போல் தோற்றம் கொண்டிருந்தான்.  

“யெஸ், என்ன வேணும்?”  என்றபடி மரியாதை நிமித்தம் நான் கால்களை இழுத்துக் கொண்டதுதான் தாமதம்! சடாரென்று  என் எதிர் இருக்கையில் அமர்ந்தான்.  எத்தனையோ இருக்கைகள் காலியாக இருக்க அவன் என் எதிரில் வந்து அமர்ந்தது எரிச்சல் கலந்த கடுப்பைத் தந்தது எனக்கு. அதே சமயம் குப்பென்று அவனிடம் இருந்து வந்த சென்ட் வாசனை என் மூக்கைத் துளைத்தது. 

ரோஜா, பவழமல்லி, முல்லை இவைகளை ஒன்றாகச் சேர்த்து பிழிந்தெடுத்த கலவை தரும்  அபூர்வ நறுமணம் போல் இருந்தது. விலை உயர்ந்த சரக்காக இருக்க வேண்டும்.  இல்லையென்றால் இந்த அளவிற்கு பிரமாதமான வாசனை வராது. நிச்சயம் வாசனை  அந்தக் கம்பார்ட்மென்ட் பூராகவும் பரவியிருக்கும். அந்த அளவுக்கு அதன் வீரியம் இருந்தது.

“ஹலோ ஸார், நீங்கள் எழுத்தாளர் மாமல்லன்தானே?” அவன் எடுத்த எடுப்பில் இப்படி கேட்டதும் எரிச்சல் மறைந்து பரவசம் வந்து என்னைத் தொற்றிக் கொண்டது.  பரவாயில்லை, இரயிலில் ஒரு ரசிகன் கிடைத்து விட்டான் என்ற குஷியும் ஏற்பட்டது. 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாமல்லன் என்கிற புனைபெயரில்  கதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்புவது வழக்கம். அவைகளும் பிரசுரமாகும். இரண்டு தடவை  வெவ்வேறு பத்திரிகைகள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசும் வாங்கியிருக்கிறேன். இரண்டும் மூன்றாவது பரிசுதான். ஆனாலும் என் கதைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் எனக்கு மேன்மையானதாகத் தெரிந்தது. இதனால் நான்  ஓரளவு பிரபலம் ஆவதற்கு வழியும்  செய்தது!

நான் புன்னகையுடன் அவன் கேள்விக்கு ‘ஆமாம்’ என்று பதில் சொன்னேன், ரயில் மெல்ல நகர்ந்து பிறகு ஓடத் தொடங்கியது.

அவன் தொடர்ந்து, “உங்கள் கதைகளில் எனக்கு பிடித்தது சஸ்பென்ஸ், அப்புறம் எதிர்பாராத திருப்பம்!  ரியலி சூப்பர்ப்!  குடும்பக்கதைகள், மர்மக் கதைகள் இப்படி எல்லா சப்ஜெட்டிலும் புகுந்து விளையாடுகிறீர்கள். உங்களுக்கு அபாரமான  கற்பனா சக்தி இருக்கு. நானும் எத்தனையோ பேர்களின் கதைகளைப் படித்திருக்கிறேன்.  அவைகள் நீங்கள் எழுதுவதுபோல் அவ்வளவு இம்ப்ரெஸ்ஸிவாக இருந்தது இல்லை.” என சிலாகித்துப் பேசினான்.

“நன்றி.” ஷர்ட் காலரை கர்வத்துடன் தூக்கி விட்டுக் கொண்டேன். நேருக்கு நேர் ஒரு புதிய மூன்றாம் பேர்வழி  என் எழுத்தைப் பற்றி நல்லவிதமாக விமர்சித்தது பெருமையாக இருந்தது எனக்கு. 

“ஆமாம், உங்களைப் பார்த்தால் வேலைக்குச் செல்பவர் போல தெரிகிறது.  எழுதுவதற்கு எப்படி நேரம் கிடைக்கிறது?” 

“மிஸ்டர்…அதுக்கு முன்னாடி உங்கள் பெயர் என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

அவன் முறுவலிப்புடன் சொன்னான். “ஜெகவீரப்பாண்டியன்!”  

‘நல்ல பெயர்தான்’ மனதில் எண்ணியபடி, “சரி, என்ன செய்கிறீர்கள்? எங்கே ஜாகை?”  எனக் கேட்டேன். 

அவன் தலை கவிழ்ந்து ஏதோ யோசனை செய்தான். பிறகு நிமிர்ந்தான். 

“டைம் பியிங் உங்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன்….” 

சட்டென இடைமறித்தேன். “என்ன ஜோக்கா? என்ன வேலை செய்கிறீர்கள்ன்னு கேட்டேன்?” 

“வேலை எதுவும் இல்லை. ஆனால் முயற்சி செய்துகிட்டிருக்கேன். கூடிய சீக்கிரம் கிடைச்சிடும்ன்னு நம்பிக்கை இருக்கு!” 

எதையோ மறைக்கிறான். சொல்லக் கூடாதென்று விரும்புகிறான். அதற்கு மேல் அவனை நான் வற்புறுத்தவில்லை. அவன் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆயத்தமானேன். 

“மிஸ்டர் பாண்டியன், எப்படி கதை எழுதுகிறேன் என்றுதானே கேட்டீர்கள்? அதாவது மனதில் தோன்றும் கருவை ஒரு நோட் புக்கில் குறித்து வைத்துக் கொள்வேன். நேரம் கிடைக்கும் போது அந்தக் கருவை மையமாக வைத்து கதை எழுதுவேன். ப்ரோக்ராம் எதுவும் இல்லேன்னா ஞாயிற்றுக்கிழமை பூராகவும் எழுத்து வேலைதான்.” 

“ஒண்டர்ஃபுல்!” எனக் கூறிவிட்டு ஓடிக்கொண்டிருந்த ரயில் ஜன்னல் வழியே பார்வையைச் செலுத்தினான். அவன் சென்ட் வாசனையில் லயித்திருந்தேன். இது மாதிரி வாசனையை நான் இதுவரையில் அனுபவித்ததே இல்லை. முகர முகர  வெகுவாக என்னை ஈர்த்தது வாசனை!  இவனுக்கு எங்கிருந்து இந்த மாதிரி சென்ட் கிடைக்கிறது என்கிற வியப்பும்   ஏற்பட்டது.

அவன் உபயோகிக்கும் சென்ட்டில் கொஞ்சம் கேட்டு வாங்கிக் கொள்ளலாமா என்று நப்பாசை தோன்றியது. அதை வாங்கி உடம்பில் ஸ்ப்ரே செய்து கொள்ளலாம். மனைவி லைக் பண்ணுவாள். சென்ட் வாசனை அருமையாயிருக்கே என மெச்சிக்கொள்வாள்! ஆனால், அவன் ‘ சே! சரியான பக்கி’ என என்னை  மட்டமாக நினைத்து விட்டால் என்ன செய்வது? அதனால் வேண்டாம் என்ற மறுப்பு வர ஆசையை அடக்கிக் கொண்டேன். 

சிறிது நேரம் கழித்து  திரும்பினான்.  நான் அவனை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். மீண்டும் அவனாக வாய் திறந்தான். 

“அப்புறம் மாமல்லன் ஸார்! உங்களிடம் ஒரு விஷயம் பற்றி பேசலாமா?” என்றதும்  எனக்கு ஒன்றும் புரியவில்லை. கதைகள் பற்றியென்றால் விருப்பத்துடன் பேசலாம்.  மற்ற விஷயங்கள் பற்றி அவ்வளவாக எனக்கு அக்கறை கிடையாது. 

“எதைப் பற்றி பேசப்போகிறீர்கள்?” என்றேன் சிரத்தையில்லாமல். 

முன்னால் சாய்ந்தபடி தன் இடது கையை வளைத்து இடது கால் மீது ஸ்டைலாக வைத்துக் கொண்டவன்,  வலது கையை இருக்கைமீது அழுத்தமாக வைத்தான். இப்போது அவன் முகம் வெகு அருகில் என் முகத்துடன் ஈஷிக் கொள்வது போல் இருந்தது. அவனின் அருகாமை என்னை என்னவோ செய்தது. சென்ட் வாசனை வேறு அபரிமிதமாக என் நாசியில் குப்பென்று அறைந்தது. என்னையே அவன் உற்று நோக்குவது போல் தெரிய சிலிர்த்துக்  கொண்டேன். 

“நீங்கள் ஆவிகள் பற்றியும் எழுதுகிறீர்கள் இல்லையா?” 

“ஆமாம்!” சரிதான் அவன் எங்கு வருகிறான் என்பதை ஓரளவு என்னால் யூகிக்க முடிந்தது. ஆவிகள் கதைகளில் விருப்பம் போலும்; நிறையப் படிப்பான் போலத் தெரிகிறது. அது விஷயமாக சில சந்தேகங்கள் கேட்கப் போகிறான் என நினைத்தேன்.  அவன் தொடர்ந்தான்.  

“உங்களின் சில கதைகளில் ஆவிகள் கெடுதல் செய்வதாக சித்தரித்துக் காட்டியிருக்கிறீர்கள். நான் தெரியாமல்தான் கேட்கிறேன். ஆவிகள் நல்லதே செய்யாதா.. இல்லை ஆவிகளிடத்தில் உங்களுக்கு வெறுப்பா? எதற்காக  அப்படி எழுதுகிறீர்கள்?”  திடீரென அவன் குரல் மிரட்டுவது போல்  கொஞ்சம் உயர்ந்திருந்தது.  

“இதென்ன கேள்வி! கதையின் மூலக்கருவின் படி அப்படி எழுத வேண்டிய நிலைமை! எத்தனையோப் பேர் படித்து விட்டு பாராட்டியிருக்கின்றனர். உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் நான் என்ன செய்வது?” என்றேன் நானும் காட்டமாக! 

“எனக்கு மட்டுமில்ல..என் நண்பர்கள்  சில பேருக்குக் கூட பிடிக்கவில்லை. இன்ஃபாக்ட்  இந்த விஷயத்தில் நாங்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறோம்.” 

“ஹூம், நல்ல வேடிக்கை! கதையில் நடப்பதை சீரியஸாக எடுத்துக் கொண்டால் நான் என்ன செய்வது? என்னைப் போல சில எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஆவிகள் பற்றி கடுமையாக விமர்சித்து கதைகளில் எழுதுகின்றனர். இவ்வளவு ஏன்? ரமேஷ் வர்மான்னு ஒரு எழுத்தாளர். அவர் தன்னோட  சில  கதைகளில் ஆவிகளைப் பற்றி சித்தரித்தரித்துக் காட்டியிருக்கிறார். அவைகள் செய்யும் கெடுதல்கள் பற்றியும், அவற்றால் ஏற்படும் துன்பங்கள் பற்றியும் விலாவரியாக எழுதுதியிருக்கார். படித்து நிறைய பேர்  பாராட்டியிருக்கின்றனர், தெரியுமா?”

“முற்றிலும் கற்பனையில் எழுதிய கதைகள். இது தவறு என்று எப்படி கூற முடியும்? …வேண்டுமானால்,  அவரிடம் இதே கேள்வியை கேட்டுப் பாருங்கள். தகுந்த பதில் தருவார். அப்போது தெரியும் கதை எழுதறது எவ்வளவு சிரமமுன்னு!” என கொஞ்சம் கோபத்துடன் கூறி விட்டு, “ஆமாம், ஆவிகளைப் பற்றி எழுதினால் உங்ககளுக்கு ஏன் பொத்துக்கிட்டு வர்றது?” என எகிறி குதித்தேன். 

கேட்கக் கூடாததைக் கேட்டது போல்  அவன் முகம் இறுகியது.  பார்க்கச் சகிக்கவில்லை. அவனுடைய ரியாக்ஷ்ன் கண்டு எனக்குள் பீதி உண்டானது! சில வினாடிகள்தான். உடனே இயல்பு நிலைக்குத் திரும்பினான். மீண்டும் அவன் முறுவலிப்புடன் கூறினான். 

“மிஸ்டர் மாமல்லன்! நீங்கள் அப்படி எழுதறது ‘பிடிக்கவில்லை’ ன்னு பொதுப்படையாகச் சொன்னேன். அவ்வளவுதான். அதற்காக, நீங்கள் இவ்வளவு கோபம் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை…” 

“ஏன்,  நீங்கள் மட்டும் கோபப்படவில்லையா?”

“ஓ.கே. ஸாரி!” என்று இரு கை கொண்டு கூப்பியவன், கூடவே “இனி ஆவிகளைப் பற்றி மட்டமாக எழுதுவதை தயவுசெய்து தவிருங்கள்.. ”  என்று வேண்டுகோள் விடுத்தான்.  அவன் ஏன் இப்படி செய்கிறான் என்று விளங்கவில்லை எனக்கு. 

தொடர்ந்து “மிஸ்டர் மாமல்லன்! இது விஷயமாக ரமேஷ் வர்மாவை கேட்கச் சொல்கிறீர்களே! அது  முடியாது.”  என்றான். 

“ஏன் பயமா?” 

“இல்லை.  ரமேஷ் வர்மா இப்போது உயிரோடு  இல்லை.” 

திடுக்கிட்டேன். “என்ன…. ரமேஷ் வர்மா இப்போது உயிருடன் இல்லையா?”  நம்ப முடியவில்லை. 

“யெஸ், இன்னிக்கு முற்பகல் பதினொரு மணி அளவில் ஒரு சாலை விபத்தில் மரணமுற்றார்.  வாட்டர் டேங்கர்  லாரி மோதி ஸ்பாட் டெத்! அநேகமாக இந்நேரம் பாடி போஸ்ட் மார்ட்டத்திற்காக ஆஸ்பிட்டல்ல இருந்திருக்கும்!” 

ஏராளமான அதிர்ச்சி ஏற்பட்டது. எத்தனை உன்னதமான மனிதர்! இன்று உலகம் முழுவதிலும் நிறைய ரசிகர்கள் அவருக்கு உண்டு. இலக்கியத்தில் ஏராளமான பரிசுகளை வாங்கிக் குவித்திருக்கிறார். புகழ் பெற்ற எழுத்தாளர். 

அவர் எனக்கு பழக்கமானது சுவாரஸ்யமான விஷயம்! அதாவது, ஒரு முன்னணி வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டிக்கு ரமேஷ் வர்மாவையும் சேர்த்து மூன்று ஜட்ஜூகள் நியமிக்கப்பட்டிருந்தனர். நான் அந்தப் பத்திரிகைக்கு ஒரு சிறுகதை எழுதி அனுப்பியிருந்தேன், போட்டியில் மூன்றாவது பரிசுக்குரியதாக என் சிறுகதையை தேர்ந்தெடுத்ததில் ரமேஷ் வர்மாவின் பங்கு அதிகம் என்று கேள்விப்பட்டேன். என் கதைக்கு மூன்றாவது பரிசு கிடைத்திருப்பதை அவராகவே ஃபோனில் சொன்னார்.   அகமகிழ்ந்துபோய், அவருக்கு நன்றிகள் பல கூறினேன். 

அன்றிலிருந்து பழக்கம்!  ரமஷ் வர்மா என் சிறுகதைகளைப் படிக்க ஆரம்பித்தார். படித்து விட்டு தன் அபிப்ராயத்தை உடனே ஃபோனில் கூறுவார். கூடவே பாராட்டுதலும் கிடைக்கும் . இப்படியாக அடிக்கடி ஃபோனில் பேசிக் கொள்வது, பிறகு நேரில் சந்திக்க ஆரம்பித்தோம்,   

சில சமயங்களில் என் கதையின்  கருவைப் பற்றி அவரிடம் விவாதிப்பேன். அதோடு சில முக்கியமான பாயிண்ட்ஸ்கள் பற்றியும் எடுத்துச் சொல்வேன். காது கொடுத்துக் கேட்பார். அப்படித்தான், ஓரு தடவை கதை ஒன்றைப் பற்றி கூறி,  மாற்றம் ஏதாவது தேவையா எனக் கேட்டதற்கு வேண்டாம் கதையின் போக்கு அருமையாக இருக்கிறது என்று பாராட்டியவர், அப்படியே அனுப்புங்கள் என்றார். அந்தக் கதை எடிட் செய்யப்படாமல் பிரசுரமானது. 

இது மாதிரி சில சந்தர்ப்பங்கள். ரமேஷ் வர்மாவும் ஓர் இரண்டு தடவை தன் கதையைப் பற்றி என்னிடம் அபிப்ராயம் கேட்டதுண்டு. நானும் ஒருதடவை அவர் தந்த கையெழுத்துப் ( நன்றாக இருக்கும்) பிரதியை முழுவதுமாக படித்துவிட்டு கதை  நன்றாக இருப்பதாகச் சொன்னேன். உண்மையிலேயே கதை சுவாரஸ்யம் குன்றாமல் வெகு நேர்த்தியாகத்தான் இருந்தது. நன்றி கூறிவிட்டு சென்றார். அதுதான் அவரை நான் கடைசியாக நேரடியாகச் சந்தித்தது! 

இரண்டு  நாள் முன்னாடி கூட அவரிடம் அலைபேசியில் பேசினேன். அடுத்த வார ஞாயிற்றுக்கிழமை தன் குடும்பத்துடன் என் வீட்டுக்கு விஜயம் செய்யப் போவதாக உறுதியளித்திருந்தார்.  

நாடு போற்றும் பெரிய எழுத்தாளர் ஒரு சாதாரண புதுமுக எழுத்தாளனான என்னிடம் நட்பு வைத்தது என் பேரதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அந்த மாமனிதரின் நட்பை  நிரந்தரமாக இழக்க நேரிடும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அகாலத்தில் அவர் உயிரைப் பறித்துக்கொண்ட காலனின் மீது சொல்லவொண்ணா கோபம் வந்தது. 

அப்போது என் அலை பேசி அலறிட பாக்கெட்டில் இருந்து எடுத்துப் பார்த்தேன்.   டிஸ்பிளேயில் என் மனைவியின் பெயர் இருந்தது. ஆன் செய்து, “சொல்லு உமா! வீட்டுக்குதான் வந்துக்கிட்டிருக்கேன். என்ன விஷயம்?” 

“என்னங்க,  ஒரு ஷாக்கிங் நியுஸ்!” 

“என்ன நியுஸ்?”  மனம் பட படவென்று அடித்துக் கொண்டது. 

“வந்து… உங்க நண்பர் ரமேஷ் வர்மா ஆக்ஸிடெண்டுல போயிட்டாராம்.  டி.வி.யில் செய்தி ஓடிக்கிட்டிருக்கு.” என்று வேதனையுடன் சொன்னாள் உமா.  இப்போதுதான் ஜெகவீரப்பாண்டியன் அதைப் பற்றி கூறினான்.  அதற்குள் மனைவியிடம் இருந்து அதே செய்தி! 

அனிச்சையாக என் பார்வை எதிர் சீட்டுக்குத் தாவ தூக்கி வாரிப் போட்டது. சீட் காலியாக இருந்தது. அப்படியென்றால், அந்த டிப் டாப் ஆசாமி எனக்கெதிரில் வந்து உட்கார்ந்தது, என்னிடம் பேசியது…பேச்சின் முடிவில் ரமேஷ் வர்மாவின் மரணம் பற்றி சொன்னது இதெல்லாம் எப்படி… அவன் சொன்னது போலவே ரமேஷ் வர்மாவின் மரணம் என் மனைவியால் உறுதி செய்யப்பட்டிருக்கு. 

வந்தவன்  என்னிடம் எத்தனையோ நிமிடங்கள் பேசினான். அதுவும் ஆவிகளை சப்போர்ட் பண்ணிப் பேசினானே…. வந்தவன் யார்? இப்போது எங்கு சென்றான்? 

அப்போதுதான் ஒரு விஷயம் என் மண்டையில் உறைத்தது.  நான் சற்று தூங்கியிருந்தபோது கனவில் வந்த அந்த நபர்..இரண்டு மாதம் முன்னால் சினிமா ஷூட்டிங் நடந்தபோது மூன்றாவது தளத்தில் இருந்து தவறி விழுந்து இறந்து போன எக்ஸ்ட்ரா நடிகன் என்பது தெரிந்தது. அவன் ஆவிகளை சப்போர்ட் பண்ணிப் பேசியதின் காரணமும் தெள்ளத் தெளிவாக புரிந்தது. 

கனவில் வந்த அமானுஷ்யமான நிகழ்வு நிஜமாகவே  நடந்தேறியது போல் இருக்க தண்டுவடம் சில்லிட்டது எனக்கு. உடலும்  வேர்த்துக் கொட்டியது.  

மறுமுனையில் காத்துக்கொண்டிருந்த மனைவியிடம், “உமா, கட் பண்ணு. நான் வீட்டுக்கு வந்து பேசறேன்” எனக் கூறிவிட்டு, அலைபேசியை அணைத்துப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். 

நான் இறங்க வேண்டிய ஸ்டேஷனில் வண்டி நின்றதும் குனிந்தவாறு எழுந்து கொள்ள முற்பட்டேன். அப்போது காலியாக இருந்த எதிர் இருக்கையில் இருந்து அதே சென்ட்டின் வாசனை என் நாசியில் வந்து மோதியது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *