கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
தின/வார இதழ்: ராணி
கதைத்தொகுப்பு: அமானுஷம் த்ரில்லர்
கதைப்பதிவு: January 2, 2024
பார்வையிட்டோர்: 14,403 
 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

என்னுரை! 

வாசக நெஞ்சங்களுக்கு என் வந்தனங்கள்! 

ராணி வார இதழில் நான் தொடராக எழுதிய ஒரு நாவல் இது. சமூகம் சரித்திரம் அமானுஷ்யம் என்று எல்லா தளங்களிலும் இன்று நான் அறியப்பட்டிருந்தாலும் அமானுஷ்யம் கலந்த மர்மமான கதைகள் என்றால் என் பெயர் முதலில் அடிபடுவதைக் காணுகிறேன். ராணி வார இதழிற்கு நான் ஒரு தொடர் எழுதவேண்டும் என்று அதன் பொறுப்பாசிரியர் திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் என்னை தொடர்பு கொண்டபோது சார் உங்கபாணியில் அமானுஷ்யம் மர்மமும் கலந்து ஒரு தொடர் பண்ணுங்களேன் என்றார். 

அப்பொழுதே இந்த நாவலின் இனம் தீர்மானமாகி விட்டது. வழக்கம் போலவே ஒவ்வொரு அத்தியாயமும் தொடர்கதைகளுக்கே உரிய பரபரப்புடன் அமைந்தது. இதன் முக்கிய கருப்பொருளாக நாகமாணிக்ககல் அமைந்தது. வாசகர்களும் விரும்பி வரவேற்றனர். கதை போகும்போக்கை வைத்து பலரும் இதை அமானுஷ்ய நாவலாகவே கருதினர். ஆனால் இதன் க்ளைமாக்ஸ் அதை அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது. 

இப்படி ஒரு முடிவை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்கிற ரீதியில் விமர்சனங்கள் வந்தன. ஆனாலும் இது செயற்கையான முடிவல்ல – மிக அருமையான நம்பகமான முடிவே என்றனர். 

மர்மக்கதைகளுக்கு இலக்கணமே அதன் முடிவு அமைவதில்தான் உள்ளது. மர்மக் கதைகள் எழுதும்போது நான் அதில் பல பரிசோதனைகளை செய்து பார்த்துள்ளேன். ஆனந்தவிகடனில் கோட்டைப்புரத்து வீடு என்கிற தொடரினை எழுதியபோது அத்தொடரின் கடைசிவரி வரை சஸ்பென்ஸை கொண்டு சென்றேன். அது மிகப் பெரிய வெற்றிபெற்றது. இத்தொடரிலும் அதுபோல ஒருவர் சோதனை செய்ததில் நல்ல வெற்றி கிட்டியது. இதனை திருமகள் நிலையத்தார் புத்தகமாக கொண்டு வந்துள்ளனர். எனது வாசகர்களுக்கும் இது நல்ல விருந்தாக அமையும் என்று நம்புகிறேன். இவ்வேளையில் ராணி வார இதழிற்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். 

11.12.67
மதுரை-3 

பணிவன்புடன்
இந்திராசௌந்தர்ராஜன்

அத்தியாயம்-1 

‘இதோ பார்… என் மகள் ஒரு ‘பி.இ.’ பட்டதாரி! ஒரு படிப்பில்லாதவனுக்கு, பணம் இருக்குங்கிறதுக்காக நான் பொண்ணு தரமாட்டேன். என் மாப்பிள்ளையை நான் ஒரு ‘பில்கேட்ஸ்’ அந்தஸ்துக்கு யோசிச்சு வெச்சிருக்கேன். போய்ச் சொல்… போ…!’ 

படகு போன்ற அந்த உயர்ரக கார், சொக்கிகுளம் அம்பாரி மாளிகை என்னும் அந்த பிரமாண்ட மாளிகைக்குள் நுழைந்து, நின்றது. 

காரில் இருந்து இறங்கினாள்,’லயன்’ லட்சுமி என்று கம்பீரமாக எல்லோராலும் அழைக்கப்படும் அந்த மாளிகையின் எஜமானி. எஜமானிதான்… எஜமானர் சக்கரவர்த்தி சாரநாதன் ஒரு விமான விபத்தில் வானத்திலேயே உயிரை விட்டுவிட்டார். அவர் உடம்பு என்று கிடைத்ததெல்லாம் ஓர் ஐந்தாறு கிலோ சதைக் கோளங்கள்தான். 

அவற்றை வைத்து ஒரு மணிமண்டபம் கட்டி இருந்தாள், லட்சுமி. காரைவிட்டு இறங்கினால் ‘பளிச்’சென்று பார்க்க முடியும், கூம்பு வடிவ கூரையுடன் மணிமண்டபம். சுற்றிலும் வட்டமாய் சவுக்கு கன்றுகளால் ஆன வேலி. 

அது போக ஏராளமான பூச்செடிகள். 

பார்க்கும் போதே ரம்மியமாக இருக்கும். 

நடுநாயகமாய் கோட்டும் சூட்டுமாய் சிரித்தபடி இருக்கும் சக்கரவர்த்தி சாரநாதனின் புகைப்படம்! 

‘லயன்’லட்சுமி எனப்படும் லட்சுமி, காரைவிட்டு இறங்கிய நொடியில், மணிமண்டபம் பக்கமாய் திரும்பி ஒரு பார்வை பார்த்து முடித்தாள். 

கண்களை மூடி – அகாலமாய் இறந்துவிட்ட கணவரை நினைத்து ஒரு குட்டிப் பிரார்த்தனை… 

பிறகுதான் உள்ளே நுழைவாள்! இன்றும் நுழைந்தாள்…அவள் பின்னாலேயே ஒரு மூட்டை கோயில் பிரசாதங்களை தட்டுத் தட்டாய் ஒன்றன்மேல் ஒன்றாய் ஏந்திப் பிடித்தபடி சென்றான், டிரைவர் ஞானமணி. 

ஞானமணிக்கு ஐம்பது வயதாகிறது. 

திருச்செந்தூர் பக்கம் ஆறுமுக நேரியைச் சேர்ந்தவன். ‘லயன்’ லட்சுமிக்கும் அந்தப் பக்கம்தான். அவள் வாழ்க்கைப்பட்டுவந்த இடம் மதுரையாகிவிட்டது. 

இன்று மதுரை சொக்கிகுளத்தில் ‘லயன்’ லட்சுமி இல்லாமல் ஒரு நிகழ்ச்சிகூட நடப்பதில்லை. ‘லயன்ஸ் கிளப்’ கவர்னராகவும் இருப்பதால், ‘லயன்’ பட்டம் அவளோடு ஒட்டிக்கொண்டு விட்டது. குணத்திலும் லட்சுமி அந்த ‘லயன்’ போலத்தான். கோபத்தில் சிலிர்த்துக் கொண்டு பாயும் சிங்கத்தின் முகமும், லட்சுமியின் முகமும் கிட்டத்தட்ட ஒன்று போலத்தான் இருக்கும். 

பலருக்கு அந்த நாளைய ராணி மங்கம்மாளே திரும்ப பிறந்து வந்திருப்பதாகத்தான் நினைப்பு… எனவே, லட்சுமி வருகிறாள் என்றாலே ஓர் அமைதி – நிசப்தம் எப்படியோ ஏற்பட்டுவிடும். 

தனது அம்பாரி மாளிகைக்குள் நுழைந்த லட்சுமிக்காக, மதுரையை சேர்ந்த ஊர்ப் பிரமுகர்கள் பலரும் காத்திருந்தார்கள். அதில் மாஜி எம்.எல்.ஏ. ராஜதுரையும் இருந்ததுதான் ஆச்சரியம். 

அரசியல் விஷயத்தில் லட்சுமிக்கு ‘அலர்ஜி’ உண்டு. யாரையும் அருகேயே சேர்க்கமாட்டாள். ‘இந்த முன்னாள். எம்.எல்.ஏ. ராஜதுரை மட்டும் எப்படி வந்தான்…?’ பார்வையில் கேள்வியோடு – அவரது உதவியாளராக உலாவரும் சிட்டி என்கிற சிட்டிபாபுவை பார்த்தாள். 

சிட்டிபாபுவுக்கு வழுக்கைத் தலை. ஆனால், நாற்பது வயதுதான் ஆகிறது. ஆந்திராவாள்ளு! பார்வையாலேயே சிட்டிபாவுக்கு ஓர் அழைப்பு வைத்தபடி மாடிப்படி ஏறத் தொடங்கினாள். 

அவளுக்காக காத்திருப்பவர்கள் ஏதோ அம்பிகையையே பார்த்துவிட்டது போல எழுந்து நின்று வணக்கம் சொல்லி விட்டு, நின்றபடியே காட்சி தந்தார்கள். 

சிட்டிபாபுவும் தான் அன்போடு ‘மேடம்’ என்று அழைக்கும் லயன் லட்சுமியை பின்தொடர்ந்து ஓடினான். அவனது கையில், அவன் எப்போதும் பிடித்தபடி இருக்கும் நீலநிற டைரி. 

லட்சுமி தன் ரகசிய அறைக்குள் புகுந்தாள். இதமான ஏ.சி. குளிர். மிதமான மணம். கடல் நுரையைக் கொண்டு செய்தது போன்ற மெதுமெதுப்பான சோபா! அதில் களைப்போடு அமர்ந்தவள், சற்று கோபமாக திரும்பினாள். 

“சிட்டி.” 

“மேடம்… 

“எங்கய்யா வந்தான் அந்த மாஜி எம்.எல்.ஏ.?” 

“தெரியாதுங்க மேடம்… நான் எவ்வளவு கேட்டாலும் சொல்லவும் மாட்டேங்கிறாரு…” 

“போகட்டும்… நான் அரசியல்வாதிகளை பார்க்கிறதே இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே?” 

”சொன்னேன் மேடம்…ஆனா, அந்த ஆளோ ‘நான் அரசியல்வாதியா வரலை. மேடமும் நானும் ஒரே ஜாதி. கூட்டிக்கழிச்சாதூரத்து சொந்தமும்கூட. நான் வந்திருக்கிறது வேற ஒரு முக்கியமான விஷயம் பற்றி பேச’ன்னு சொல்றாரு மேடம்…”

”என்னய்யா பெரிய முக்கியமான விஷயம்? இன்னிக்கு இவன்… நாளைக்கு இன்னொரு கட்சிக்காரன். வரிசையா வருவாங்க. அப்புறம் கட்சி நிதி, சிலை வைக்க நிதின்னு ஆரம்பிப்பாங்க. மறுத்தா அதிகாரிகளை வைத்து திடீர் சோதனை, அது இதுன்னு தொல்லை தருவாங்க. என் புருஷன்காரர் இவங்ககிட்ட சிக்கி அவதிப்பட்டது போதாதா?” 

”மேடம்… இந்த ஒரு தடவை அவரை பார்த்து அனுப்பிடுங்க. அடுத்த தடவை அவர் நம்ம அரண்மனை பக்கமே வராதபடி நான் பார்த்துக்கிறேன்.” 

“இந்தத் தடவையே அவன் என்னை விழுங்காம நான் பார்த்துக்கணுமேய்யா?” 

“அதெல்லாம் எதுவும் ஆகாது மேடம் உங்கள விழுங்க ஒருத்தர் இனிமேதான் பொறக்கணும்.’ 

“போதும்யா…நீயும் உன் பங்குக்கு ‘ஐஸ்’ கட்டியை வைக்காதே. ஆமா… வேற யாரெல்லாம் வந்துருக்காங்க?”

“சினிமாதியேட்டர் ராஜாங்கம், ரைஸ்மில் ராஜேந்திரன், காற்றாலை கன்னையன்… அப்புறம், உள்ளூரில் வீரகாளியம்மன் கோயில் தர்மகர்த்தா…” 

“ராஜாங்கம் எதுக்கு வந்துருக்கான்?” 

“அவர்மக வயசுக்கு வந்துருக்காம். சடங்கு வைச்சுருக்காரு… நீங்க வந்து மகளை ஆசீர்வாதம் பண்ணணுமாம்.” 

“சரி… அப்புறம் ராஜேந்திரன்?” 

“அவரு தன் தங்கச்சியின் கல்யாண பத்திரிகை கொடுக்க வந்துருக்காரு மேடம்.” 

“கன்னைய்யன்?” 

“ராதாபுரம் பக்கமும், நாங்குனேரி பக்கமும் ஏதோ இடம் வருதாம். நல்ல விலையாம். நம்மளை மடக்கிப் போடச் சொல்லத்தான் வந்துருக்காரு…” 

“இவன் ஒருத்தன்தான் எனக்கு உபயோகமானவன். மத்த அவ்வளவும் எனக்கு செலவு… சரி, முதல்ல அந்த எம்.எல்.ஏ.வை அனுப்பு.” 

“மாஜி எம்.எல்.ஏ. மேடம்… இப்ப அரசியல்ல அவ்வளவு ஈடுபாடு இல்லை, அவருக்கு. ” 

“சரி சரி… வரச் சொல்லு. ” 

“சரிங்க மேடம்” – சிட்டிபாபு விலகினான். 

லட்சுமியின் கைப்பையில் இருந்த செல்போனில் இருந்து அவளுக்கு பிடித்த ‘அலோ’ டியூனில் எம்.ஜி.ஆரின் ‘நான் ஆணையிட்டால்… அது நடந்துவிட்டால்…’ பாடல்! 

செல்போனை எடுத்து, திரையைப் பார்த்தாள். திரையில் பிரியதர்ஷினி என்கிற பெயர். அதைப் பார்த்த மாத்திரத்தில் லட்சுமி முகம் ஓர் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல ஒளிவிட ஆரம்பித்தது. 

“பிரியா…” 

“அம்மா…” 

“எப்படிடா இருக்கே?” 

“நல்லா இருக்கேன்ம்மா… நான் இப்ப மதுரை கிளம்பி வந்துகிட்டிருக்கேன். என்னோட படிப்பு முடிஞ்சிடிச்சி.” 

“அய்…ய்…யோ… எவ்வளவு சந்தோஷமான விஷயம் சொல்லி இருக்கே நீ. ஆமா எப்ப வருவே?” 

“நாளைக்கு விமானத்துல ‘டிக்கெட்’ எடுத்துட்டேன். விமான நிலையத்துக்கு ஞானமணியை அனுப்பிடும்மா…” 

“கட்டாயம்… எனக்கு இப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?” 

“உனக்கு மேலே எனக்கும் சந்தோஷம்மா… நான் இனி உன்னை பிரியவேண்டிய அவசியமே இல்லை.” 

”வாடா…வா. சீக்கிரமா வா. மத்த விஷயங்களை நேர்ல பேசுவோம். இங்கே சிலர் ‘வெயிட்’ பண்ணிகிட்டு இருக்காங்க.” 

“சரிம்மா”. 

பிரியா என்கிற பிரியதர்ஷினி அந்தப் பக்கமாய் அடங்கினாள். ஆனால், லட்சுமி வரையில் ஓர் இன்பசுவை அவளுக்குள் பொங்கத் தொடங்கி இருந்தது. 

கச்சிதமாக கும்பிட்டபடியே மாஜி எம்.எல்.ஏ. 

உள்ளே நுழைந்தார். 

”வணக்கம்மா…” 

“வாங்க… வாங்க உக்காருங்க.” 

”உங்க பி.ஏ.என்னை ஒரு அரசியல்வாதியாவே பார்க்கிறார். ஆனா, நான் இப்ப அதைவிட்டு விலகிகிட்டே இருக்கேன்.” 

“ஏன் அப்படி… அதுலேயும் நீங்க எம்.எல்.ஏ. வாவே இருந்தவரு…” 

“அரசியல்ல அதிகாரம் எப்பவும் கைல இருந்துகிட்டே இருக்கணும்மா… இப்பப் பாருங்க நான் ‘பவர்’ இல்லாத மாஜி எம்.எல்.ஏ. 

இந்தத் தடவை கட்சில எனக்கு ‘சீட்’ தரலை. இத்தனைக்கும் 25 லட்ச ரூபாயோடுதான் நான் தலைவரைப் பார்த்தேன். ஆனா, 50 லட்சத்தோடு போய் ஒருத்தன் காரியத்தை கெடுத்துட்டான். இந்த மாதிரி போட்டிகளை சந்திக்க ரொம்பவே தில்லும், திராணியும் தேவைப்படுது…” 

“சரி… நீங்க வந்த விஷயத்தை சொல்லுங்க.”

”அம்மா… நான் வந்துருக்கிறது ரொம்ப முக்கியமான விஷயங்க…” 

“சொல்லுங்க.” 

“உங்களுக்கு நரிக்குடி ஜமீன் நீல்லமணி ஐயாவை தெரியும்தாங்களே?” 

“நல்லா தெரியும்… எல்லாவிதத்திலும் என் ஆஸ்திபாஸ்திக்கு சமமான ஆள். அதுக்கென்ன?” 

“இல்ல… அவருக்கு ஒரே ஒரு பேரன். பேர் மணிகண்ட பிரபு. பிரபுன்னு கூப்பிடுறாங்க. சரியான படிப்பில்லை. அதனால தொழில்ல இறக்கிவிட்டாரு.” 

“அந்த பிரபுவுக்கு இப்ப என்ன?” 

“இல்லீங்க… அவனுக்கு உங்க பெண் நல்லா இருக்கும்னு நல்லமணி ஆசைப்படுறாரு…” 

மாஜி எம்.எல்.ஏ. சொல்லி முடித்த நொடி லட்சுமிக்கு முகமானது பரங்கிப்பழம் போல சிவந்து விட்டது. “ஆமா நீரு எப்ப இருந்து ‘புரோக்கர்’ தொழிலுக்கு மாறினீரு?” – லட்சுமியிடம் ஆவேசம் ஆரம்பமாயிற்று. 

“அவசரப்படாதீங்க… நல்லமணி ஐயா ஆசைப் படுறதுக்கு பின்னாடி ஒரு சரியான காரணம் இருக்கு.” 

“இதோ பார்… என் மக ஒரு பி.இ. பட்டதாரி. ஒரு படிப்பில்லாதவனுக்கு பணம் இருக்குங்கிறதுக்காக நான் பொண்ணு தரமாட்டேன். என் மாப்பிள்ளையை நான் ‘பில்கேட்ஸ்’ அந்தஸ்துக்கு யோசிச்சு வைச்சிருக்கேன்… போய்ச் சொல்லு போ…” 

“அம்மா… நீங்க அவசரப்படுறீங்க. நான் சொல்ற காரணத்தை கேட்டுட்டு, அப்புறம் நீங்க எதுவா இருந்தாலும் பேசுங்க.” 

“என்னய்யா பெரிய காரணம்?” 

“அதை நான் கையோட கொண்டு கிட்டே வந்துருக்கேங்க.” 

மாஜி, பேச்சோடு பேச்சாக தன் கைப்பையில் இருந்து ஒரு சிறு மரப்பெட்டியை எடுத்து திறந்தார். 

உள்ளே… 

அத்தியாயம்-2

‘அம்மா… சும்மா கையில வாங்கிப் பாருங்க… எனக்கு தெரிஞ்சு நாகமாணிக்கக் கல்லு பற்றி பக்தி கதைங்கதான் இருக்கு. யார் கைலயும் இருந்ததில்ல. ஆனா, நரிக்குடி ஜமீன்ல மட்டும் அது இருக்கு!’ 

மாஜி எம்.எல்.ஏ. ராஜதுரை நீட்டிய மரப் பெட்டிக்குள், கருநீல நிறத்தில் புளியங்கொட்டை அளவில் ஒரு நாகமாணிக்க கல்! 

மிக அபூர்வமான கல்… அப்படியொரு கல் நரிக்குடி ஜமீனில் இருப்பது பற்றி லட்சுமியும் பட்டிருக்கிறாள். ஆனால், அவள் அதை நம்பியதில்லை. கேள்விப் இன்று ராஜதுரை அதை நேரில் காட்டவும், லட்சுமியிடம் ஒரு திக்குமுக்காடல்… அவள் கண்களும் அந்த நாகமாணிக்க கல்லை பார்த்து அகண்டு விரிந்தன. 

“அம்மா…சும்மா கையில வாங்கிப் பாருங்க… எனக்கு தெரிஞ்சு நாகமாணிக்கக்கல்லு பத்தி கதைங்கதான் இருக்கு. யார் கைலயும் இருந்ததில்லை. ஆனால், நரிக்குடி ஜமீன்ல மட்டும் அது இருக்கு. குற்றாலமலை மேல நரிக்குடி ஜமீன்தார் வேட்டைக்கு போனப்போ அவர் எதிர்க்க ஒரு நாகம் உமிழ்ந்த மாணிக்கம், இது. இது வந்த பிறகுதான் ஜமீன்தார் பெரிய பெரிய வெற்றியெல்லாம் அடைஞ்சார். அவர் போன உயரம், அதுக்குப் பிறகு யாரும் போகல. அவ்வளவு ஏன்…? இது எங்க இருக்கோ அங்க வெற்றிகள் தேடி வரும்னு சொல்வாங்க. 

உங்களுக்கே தெரியும்… அந்த காலத்துல ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர்னு எல்லாருமே ஜமீன்தாரை பார்க்க அவர் வீட்டுக்கே போயிருக்காங்க. அவரைப் பார்த்து பார்த்து பெருமூச்சு விடாதவங்களே இல்லை. 

அதுக்குக் காரணமான ஒரு நாகமாணிக்க கல்லை, ஜமீன்தார் தன் வாரிசுகளும் பத்திரமா வெச்சு பாதுகாக்கணும்னு விருப்பப்பட்டார்” – ராஜதுரை சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு – ஓர் இடைவெளிவிட்டார். லட்சுமியிடம் ஒரு ஸ்தம்பிப்பு. 

“இதைபத்தி கேள்விப்பட்டு வெளிநாட்டுல இருந்தெல்லாம் ஆளுங்க வந்து பார்க்க விருப்பப் படுறாங்க. அவ்வளவு ஏன்… ? ஒரு திருட்டுக் கூட்டம் இதை எப்படியும் திருடிட என்னல்லாம் பண்ணணுமோ அதெல்லாம் பண்ணி கிட்டும் இருக்காங்க. இதை காப்பாத்த ஜமீன்தார் படுறபாடு கொஞ்ச நஞ்சமல்ல. 

உங்களுக்கு சொல்றதுக்கென்ன? அவருக்கு வயசு 99 ஆயிடுச்சு. வர்ற வைகாசியில அவருக்கு நூறு வரப் போகுது. நாகமாணிக்கத்தை அடைஞ்சவன் நூறு வயசு வாழ்வான்னு சொல்லுவாங்க. அது மெய்யாகப் போகுது. இதுக்கு மேல வாழவும் ஜமீனதாருக்கு விருப்பம் இல்லை. அதே நேரம், தன் பரம்பரைக்கு பயன்படணும்னு விரும்புறார். இதை பாதுகாக்கிற சக்தி இப்போதைக்கு உங்ககிட்ட இருக்கிறதாதான் அவர் நம்புறார். அதனாலதான் தன் பேரனை அவர் உங்க பொண்ணுக்குக் கொடுத்து, அப்படியே உங்க வழியா இந்த நாகமாணிக்கக் கல்லை பாதுகாக்க ஆசைப்படுகிறார். 

‘எனக்குப் பொறவு ‘லயன்’ லட்சுமியாலதான் இதை வெச்சு காபந்து பண்ண முடியும். என் பேரன் பணத்துக்கு ஆசைப்பட்டு யாருக்காவது வித்தாலும் வித்துடுவான்’னு சொல்றாருங்க…” 

மாஜி எம்.எல்.ஏ. ராஜதுரையின் மொத்த விளக்கமும், ‘லயன்’ லட்சுமியை அப்படியே கட்டிப் போட்டு விட்டது. 

கண்கள் என்னவோ அந்த நாகமாணிக்க கல்லின் மேலேயே…! கூடவே, மனதிலும் ஒரு சந்தேகம். 

இன்றைக்கெல்லாம் நூறு கோடி ரூபாய்க்கு இதை வாங்க ஒரு கூட்டம் தயாராக உள்ளது. அப்படி இருக்க -ஒரு நிறம் மாறும் அரசியல்வாதியிடம் இவ்வளவு பெரிய பொக்கிஷத்தை கொடுத்துவிட, ஜமீன்தாருக்கு எப்படி மனம் வந்தது என்கிற கேள்வியும் அவளை குடையத் தொடங்கியது. 

ராஜதுரையும் கில்லாடி… அவள் மனதில் ஓடுவதை அப்படியே அவளது முகத்தில் படித்துவிட்டு, அதற்கும் ஒரு பதிலை சொல்லத் தொடங்கினார். 

“அம்மா… இதை இனிமே நீங்கதானே வெச்சுக்கணும்னு ஐயா ஆசைப்படுறார். அவருக்கு என்னமோ மனுசுல பட்டுடுச்சாம். இதை வாங்கிகிட்டு முழுமனசா கல்யாணத்துக்கும் சம்மதிச்சா ரொம்ப சந்தோஷப்படுவேன்னு சொன்னார்…” 

ராஜதுரை சொல்லி வாய் மூடுமுன், தொலைபேசி அமட்டியது. எழுந்து சென்று அதற்கு காது கொடுத்தாள். 

“யாரு… லட்சுமிதேவியா?” மறுமுனையில் நடுங்கும் நல்லமணி குரல். லட்சுமிக்கு அந்த குரலே காட்டிக் கொடுத்துவிட்டது. 

“அய்யா… நல்லா இருக்கீங்களா?” -லட்சுமியும் நலம் விசாரித்தாள். 

“நீ எப்படி இருக்கே தாயி…?”

“ரொம்ப நல்லா இருக்கேங்க.” 

“ராஜதுரையை அனுப்பி இருக்கேன். வந்தானா?”

“வந்தாருங்க… இப்ப என் எதிர்லதான் இருக்கார்”.

“விஷயத்தை எல்லாம் சொல்லி இருப்பானே?”

“சொன்னாருங்க… ஆனா, என்னாலதான் நம்ப முடியலே.” 

“நீ நம்பித்தான் ஆகணும். நான் நூறுதடவை யோசிச்சு இந்த முடிவுக்கு வந்திருக்கேன். நான் இப்படி அந்த நாகமாணிக்க கல்லை கொடுத்துவிட்டிருக்கிறது வெளியில் யாருக்கும் தெரியாது. தெரியவும் கூடாது…” 

“நான் எதுக்குங்க இதையெல்லாம் சொல்றேன்…” 

“நீ சொல்லாட்டியும் அந்த ராஜதுரை ஒரு ஓட்டவாயன். ஆகையால் அவன் அக்கம் பக்கம் சொன்னாலும் சொல்லிடுவான்.” 

“எனக்கும் அந்த சந்தேகம் உண்டு. ஆனா, நீங்கதான் அவசரப்பட்டுட்டீங்க. எனக்கு ஒரு போன் பண்ணினா நான் நேர்ல வந்துட்டுப் போறேன்.”

“இல்ல… நீ என்னை பார்க்க வந்தா அதுக்கு வேற அர்த்தம். நான் வந்தாலும் அதுக்கு வேற அர்த்தம். இப்படி நடந்துக்கிறதுதான் ஒரே நல்ல வழி.” 

“இப்ப இந்த ஆள் வெளியே யார்கிட்டேயாவது சொல்லிட்டா…?” 

”அவன் சொல்லமாட்டான்… சொல்ல அவன் உயிரோடு இருந்தாத்தானே?” 

“அய்யா…”

“இப்பகூட அவன் ஒரு மோசடி வேலை பண்ணாலும் பண்ணியிருப்பான். அதாவது, உண்மையான நாக மாணிக்க கல்லை எடுத்து வெச்சிகிட்டு, போலியை உனக்குன்னு வெச்சி இருக்கலாம்…” 

“நானும் அதை நினைச்சேங்க.” 

“நீ ஒண்ணு பண்ணு… உன் ஆளுங்களைவிட்டு அவனை சோதனை போடு.’ஒரிஜினல்’ கிடைச்சிடும்.” 

“எதுக்குங்க… என் ஆளுங்களுக்கெல்லாம் இந்த விஷயம் தெரியறதுக்கா… நானே பார்த்துக்கிறேங்க…” 

“அதான் லட்சுமி… அவன்கிட்ட ‘ஒரிஜினல்’ இருந்தா எடுத்துக்கிட்டு, எனக்கு தகவல் கொடு. அவன் உன் வீட்ல இருந்து அவன் வீட்டுக்கு உயிரோடு போகக்கூடாது. போற வழியிலேயே கதையை முடிக்க வேண்டியது என் பாடு…” 

“எதுக்குங்க இவ்வளவு பெரிய ‘ரிஸ்க்’ கெல்லாம் எடுக்கிறீங்க?” 

”நான் இன்னும் சில மாதங்கள் உசுரோடு இருந்தா ஜாஸ்தி. அவனோ சரியான திருட்டுப் பய.எம்.எல்.ஏ.வாக இருந்து ஊர்ப்பணத்தை அள்ளி அள்ளி தின்னவன். அவன் பதவியில் இருந்தப்போ அவனது கார் மோதி செத்தவனோட மகன் என்கிட்ட வந்து அழுதான். அவன்தான் இப்ப அவன் கணக்கையும் முடிக்கப்போறான். 

உப்பைத் தின்னவன் தண்ணி குடிக்கப் போறான். நாம் எதுக்கு கவலைப்படணும். இவ்வளவு நாளா அந்த நாகமாணிக்கக் கல்லை எவ்வளவு புத்தி இருந்தா பாதுகாத்திருப்பேன்னு அவனுக்கு தெரியாது.”

“அது வாஸ்தவம்தாங்க. பெரியவங்க என்னை நம்பி மிகப் பெரிய பொறுப்பை ஒப்படைச்சிருக்கீங்க. நான் இதுக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன்.” 

“பெரிய வார்த்தை எல்லாம் எதுக்கு? என் பேரனுக்கு உன் பொண்ணை கொடுப்பேதானே?” 

“சந்தேகமேபடாதீங்க. உங்க பேரன்தான் இனி என் மருமகன். என் மகளும் இப்ப படிப்பு முடிஞ்சு வந்துட்டிருக்கா. அவகிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுட்டு நான் உங்களை திரும்ப கூப்பிடுறேன்”. 

“ரொம்ப சந்தோஷம், லட்சுமி. இனம் இனத்தோடுதான் சேரணும், பணம் பணத்தோடு சேரணும். நாம சேரப்போறோம்.” 

“ஆமாங்க… அப்ப நான் வைச்சிடட்டுங்களா?”. லட்சுமி நயமாக கேட்டபடியே ரிசீவரை வைத்துவிட்டு, மெல்ல முன்னாள் எம்.எல்.ஏ. ராஜதுரை பக்கம் திரும்பினாள். அவரும் அவள் பேசியதை எல்லாம் கேட்டு லேசாக குழம்பித்தான் போயிருந்தார். 

ராஜதுரையை பற்றியே அவள் பேசினாலும், பட்டும்படாமல் பேசியதால் ராஜதுரைக்குள் லேசாக குழப்பம். 

லட்சுமியோ நாகமாணிக்கக் கல்லை திரும்பப் பார்த்தாள். பின் ராஜதுரையையும் ஒரு பார்வை பார்த்தாள். 

“என்னம்மா… அப்படி பார்க்கிறீங்க?” 

“இல்ல… நாகமாணிக்கக் கல்லு கண்ணைப் பறிக்கும்னு சொல்லுவாங்க. ஜமீன்தாரும் சும்மா கொழுக்கட்டை ‘சைஸ்’னு சொன்னார். ஆனா, இதுல புளியங்கொட்டை அளவுதானே இருக்கு?” 

“ஐய்யோடா…ஜமீன்தார் என்கிட்டேயே வேலையை காட்டுறாராக்கும்? சும்மாகத்தி மேல கத்தி பாயாது. என்னை அவர் நம்பி இதை தூக்கி கொடுக்கும் போதே நான் பயந்தேன். இதை நான் அமுக்கிறதுன்னு முடிவு பண்ணி இருந்தா இதை எடுத்துகிட்டு இவ்வளவு தூரம் வந்துருக்கவே மாட்டேன். 

‘பாஸ்போர்ட்’ எல்லாம் தயாரா இருக்கு. சிங்கப்பூர், மலேசியான்னு பறந்துருப்பேன். என்னைப் புரிஞ்சுக்குங்க. 

அடுத்து, உங்களை ஏமாத்திட்டு நான் எங்கே போய் சந்தோஷமா வாழ்ந்துட முடியும்? நீங்கதான் விட்டுடுவீங்களா? உங்க சக்தி என்னன்னு எனக்கு தெரியாதா என்ன?” 

ராஜதுரையும் நயந்து வடிந்தார். 

“அப்ப இது ‘ஒரிஜினல்’ நாகமாணிக்கக் கல்லுதான்னு சொல்றீங்க…” 

“சத்தியமா… சந்தேகமா இருந்தா அதை பால்ல போடுங்க. மொத்த பாலும் நீலநிறமாகும். அப்ப தெரியும்.” ராஜதுரை காட்டிய வழியில் அப்பொழுதே போகத் தொடங்கிவிட்டாள், லட்சுமி. 

இன்டர்காமில் சமையலறைக்கு தொடர்புகொண்டு பசும்பாலை ஒரு செம்பில் கொண்டுவரச் சொன்னாள். 

அதுவும் வந்தது! 

அதில் அந்த கல்லைப் போட்டாள். 

ராஜதுரை சொன்னது வாஸ்தவம்தான்… மொத்தப் பாலும் நீலமாகியது! 

‘அப்பாடா’ என்று ராஜதுரையும் பெருமூச்சுவிட்டார். ”குட்… சரி நீங்க போகலாம்” – லட்சுமி உடனேயே ராஜதுரைக்கு ஒரு ‘டாடா’ காட்டினாள். 

“என்னங்க… ஏதோ மளிகை சாமான் கொண்டு வந்து கொடுத்த ஒரு வேலைக்காரன் நிலைமையில் என்னை நடத்துறீங்களே… நாளைக்கு உங்க பொண்ணுக்கு கல்யாணமாகும்போது அதுக்கு நானும்தானேங்க காரணம்?” 

”சரி… இப்ப அதுக்கு என்ன பண்ணணும்னு சொல்றீங்க?” 

“ஒரு நன்றி… ஒரு சந்தோஷம் உங்க பேச்சுல இல்லீங்களே…” 

“சரி… உங்களுக்கு ரொம்பவே நன்றி. போதுமா?” ராஜதுரைக்கு அவளிடம் ஏன் கேட்டோம் என்று இருந்தது. முகம் மாறிப்போனது. 

“நல்லது… நான் கிளம்புறேன்” என்றபடியே அறையை விட்டு வெளியே வந்தவரிடம்… ‘எனக்கு இதுவும் வேணும்… இன்னும் வேணும்’ எனும் ஒரு வாய்விட்ட புலம்பல்! 


மதுரை விமான நிலையம்! நீலவண்ண விமானம், ஓடுதளத்தை முத்தமிட்டபடியே சீறி முடித்து நின்றது. 

உள்ளிருந்து பலர் வெளிப்பட்டனர். 

அவர்களில் பிரியா தனியாக தெரிந்தாள். 

இந்திரலோகத்து வெள்ளைக் குதிரை ஒன்று பெண்ணாக பிறப்பு எடுத்து பூமிக்கு வந்தமாதிரி இருந்தது. மாநாட்டு மேடை போல மார்பகங்கள்… மழைக்கால குற்றாலம் போல அவளது கூந்தல்… புஷ்டியான மானைப் போல நடை! 

வெளியே ஞானமணி காத்துக் கொண்டிருந்தான். 

“அம்மா” என்று ஓடிப்போய் பிரீப்கேஸ், பேக், லாப்டாப், கம்ப்யூட்டர் என்று எல்லாவற்றையும் வாங்கி ‘டிக்கி’யில் வைத்தான். 

காரும் கிளம்பியது. விமான நிலையத்துக்கு வெளியே கார் வரவும், ‘ஹெல்மெட்’ அணிந்த – முகம் தெரியாத ஒரு இளைஞன் தன் ‘பைக்’கில் அந்த காரை படுவேகமாக பின்தொடரத் தொடங்கினான். 

அத்தியாயம்-3

‘மேடம்…நான் ‘எஸ்.ஐ.’ அருணாசலம் பேசுறேன். நம்ம தொகுதி மாஜி எம்.எல்.ஏ. ராஜதுரைக்கு ஒரு பெரிய விபத்து. ஆனா, நல்லவேளையா உயிருக்கு ஆபத்தில்லாம தப்பிச்சிட்டார்!’ 

பிரியாவின் கார் நல்ல வேகம் எடுத்தது. அதே வேகத்துக்கு அந்த இளைஞனின் ‘பைக்’கும் காரைத் துரத்தத் தொடங்கியது. 

‘ஹெல்மெட்’ இளைஞன் ஒருவன் வேண்டுமென்றே துரத்துகிறான். என்பது, காரை ஓட்டும் ஞானமணிக்கு தெளிவாகிவிட்டது. 

“அம்மா… பார்த்தீங்களா… ஒருத்தன் விடாம துரத்திகிட்டு வர்றதை…” 

“உம்…உம்… பார்த்தேன்…” 

“யாருன்னு தெரியலியேம்மா… அப்படியே காரை ‘சைடு’ல ஒடிச்சு, வண்டியோடு அவன் தலைக்குப்புற விழும்படி செய்யட்டுமா?” 

“ஐயோ… அப்படி எல்லாம் எதையாவது பண்ணி வைக்காதே… காரை அப்படியே ஓரமா நிறுத்து”. 

“…”

“நிறுத்துன்னா நிறுத்து… அப்படியே அவனையும் மடக்கு. அவன் யார்? எதுக்கு துரத்தறான்னு எல்லாத்தையும் பார்த்துடுவோம்…”

-பிரியாவிடமும் ‘லயன்’ லட்சுமியின் துணிச்சல். 

ஞானமணியும் காரை சர்ரென்று ஓரம் கட்டி நிறுத்தினான். அதே வேகத்தில் இறங்கி, ‘பைக்’காரனையும் வழிமறித்து தடுத்தான். 

‘கிரீச்கிரீச்’, சிட்டுமுன்பாகம் வளைய தேங்கி நின்றது அந்த ‘பைக்!’அந்த இளைஞனும் ‘பைக்’கைவிட்டு இறங்கினான். 

“டேய்… யாருடா நீ… எதுக்குடா எங்க காரை ‘பாலோ’ பண்ணினே? உள்ள இருக்கிறது யார் தெரியுமா?” 

-ஞானமணி, கேள்விகளில் கொந்தளிக்க தொடங்க, அந்த இளைஞனும் தன் ‘ஹெல்மெட்’டை கழற்றினான். பிரியாவும் காரைவிட்டு இறங்கி வந்தாள். அவனைப் பார்த்தவளுக்கு ஒரே ஆச்சரியம். 

“அர்ஜுன்…” என்றாள், உற்சாகமாக! 

அவன், பதிலுக்கு ஒரு புன்முறுவல் பூக்க ஞானமணிக்குத்தான் ஏமாற்றமாகிவிட்டது. 

“என்னம்மா.. இந்த தம்பியை உங்களுக்கு ஏற்கெனவே தெரியுமா?” 

“தெரியுமாவா… அர்ஜுன் என் ‘கிளாஸ்மேட்…’ஏய்… என்னப்பா இது ஆச்சரியம். இப்படித்தான் துரத்திகிட்டு வருவியா?” 

“எல்லாம் ஒரு ஜாலிக்குத்தான் பிரியா… ஆமா, இவர்தான் உன் கார் டிரைவரா? அலெக்சாண்டர் மாதிரியே ஆவேசப்படுகிறாரே…?” 

“அலெக்சாண்டர் மாதிரியா…? நீ அலெக்சாண்டரை எல்லாம் பார்த்திருக்கியா, அர்ஜுன்…?” 

“ஓ… ‘ஆலிவுட்’ படத்தில்…” 

அவனது சாதுரியமான பதிலுக்கு முன், அவள் ஒரு பலத்த சிரிப்பு சிரித்தாள். 

”ஆமாம்… நான் வரப்போறது உனக்கு எப்படி தெரியும்?” 

“எதுக்கு இருக்கா ஆஸ்டல்ல உன் ‘ரூம் மேட்’ ரம்யா.” 

”ஓ… அவபோட்டுவிட்டாளா? அதுசரி, நீ எப்ப வந்தே?” 

“நான் நேத்தே வந்துட்டேன்…” 

”சரி… எனக்கு நேரம் ஆச்சு. எங்கம்மா அப்படியே… துடிச்சுகிட்டு இருப்பாங்க. அப்புறம் பார்க்கலாம்…’ 

‘அப்புறம்னு சொல்றே… சரி… எப்போ… எங்கே?” ”பறக்காதேடா… அதான் ‘செல்போன்’னு ஒண்ணு இருக்குல்ல. அதுல பேசு… சொல்றேன்.” 

பிரியா அவனிடம் சொல்லிக்கொண்டே காரில் ஏறினாள். 

மீண்டும் அது வேகம் எடுத்து ஓடத் தொடங்கியது. அந்த அர்ஜுனும், ‘துரத்தியது போதும்’ என்று நின்றுகொண்டே ‘டாட்டா’ காட்டினான். 

காருக்குள்… 

“அம்மா… நான் நிஜமாவா கொந்தளிச்சுட்டேங்க… நல்லவேளை, அந்த ஆளு உங்களுக்கு தெரிஞ்சவரா இருக்கவும் தப்பிச்சுட்டாரு…” 

“சரி ஞானமணி… காரை நீ பார்த்து ஓட்டு. ஆமா.. அம்மா எப்படி இருக்காங்க? மருந்து சாப்பிட்டு ஒழுங்கா காலையில் ‘வாக்கிங்’ போறாங்களா?” 

“அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லைம்மா… நீங்க அவங்களை பிரிஞ்சு இருந்ததைத்தான் அவங்களால தாங்க முடியலை. தினமும் படுக்கை பக்கத்துல உங்க படம் இருக்கும்னா பார்த்துக்குங்களேன்.” 

ஞானமணி சொல்லும்போதே பிரியாவுக்கு கண்களில் கண்ணீர் கூடுகட்டிவிட்டது. 

”இனிமேல் என்னம்மா? நீங்க கூடவேதானே இருக்கப் போறீங்க. என்ன… மாப்பிள்ளையும் வீட்டோடு இருக்கிறமாதிரி பிடிக்கணும்.” 

-ஞானமணி தனது சகஜமான பேச்சில், ஆழமான விஷயத்தையும் தொட்டுவிட்டான். பிரியாவுக்கு உடனேயே ‘ஜில்’ லென்று கோபம் வந்தது. 

“இதுதான் ஞானமணி… உன்கிட்ட அதிகம் பேசக் கூடாதுங்கிறது.உடனேயே முக்கியத்துவம் எடுத்துக்குவே…! “

“ஐயோ அம்மா… மன்னிச்சிக்குங்க…” 

“என்னத்த மன்னிச்சிக்குங்க. அது என்ன வீட்டோட மாப்பிள்ளை? அப்படி ஒருத்தன் என்கூட இருக்க சம்மதிச்சா அவனெல்லாம் ஒரு ஆம்பிளையா? 

“அம்மா, அம்மா… தப்பா எடுத்துக்கிட்டீங்களே… நம்ம பெரியம்மா ஆசைப்பட்டதை நான் அப்படி சொல்லிட்டேன்…” 

“முட்டாள்… அம்மா அப்படி எல்லாம் ஆசைப்பட மாட்டாங்க. நீ உளறுறே… இனி இந்த மாதிரி எங்க தனிப்பட்ட விஷயங்களில் எல்லாம் தலையிடாதே!” 

பிரியா அவனை அதட்டி அடக்க கார் தெற்குவாசல் பாலத்தில் ஏறிக் கொண்டிருந்தது. அப்படியே வலப்புறமாக திரும்பும்போது, அங்கே ஏகத்துக்கும் கூட்டம். 

காரும் நின்றது! 

“அம்மா…ஏதோ விபத்து மாதிரி தெரியுது..”

“சரி ஞானமணி… நீ பார்த்து ஓட்டு!” 

“எங்கம்மா ஓட்ட… இருங்க, போக்குவரத்து போலீஸ்கிட்ட போய் நீங்க யாருன்னு சொல்லிட்டு வர்றேன். கொஞ்சம் கூட்டத்தை விலக்கி வழிவிடுவாரு…” 

பதிலோடு, காரைவிட்டு இறங்கிய ஞானமணிக்கு ‘பகீர்’ என்றது. 

எதிரில் ஒரு ஸ்ட்ரெச்சரில் மாஜி எம்.எல்.ஏ. ராஜதுரையின் இரத்த சகதியான உடம்பு ஆம்புலன்சில் எறியபடி இருந்தது. 

“அடி ஆத்தி… இந்த ஆளுக்கா விபத்து…'” – புலம்பியபடியே போலீஸ்காரரிடம் சென்று காதைக் கடிக்க -அவரும் காருக்கு வேகமாக வழி ஏற்படுத்திக் கொடுத்தார். 

ஞானமணி காரைக் கிளப்பினான். 

மெல்ல ஊர்ந்து ஓட ஆரம்பித்தது, வாகனம். ஆனால், அவன் முகத்தில்தான் சுரத்தே இல்லை. 


அம்பாரி மாளிகை! 

வாசலில் ஆரத்தி சகிதம் காத்துக்கொண்டிருந்தாள், ‘லயன்’லட்சுமி. 

கார் உள்ளே நுழையவும், உற்சாகமாக தயரானாள்.

இரண்டு வேலைக்கார பெண்கள் ஓடிவந்து, ஆரத்தி எடுக்க உச்சிமுகர்ந்து மகளை வரவேற்றாள், லட்சுமி. 

பிரியாவும் தாயைப் பார்த்தவுடன் கட்டிக் கொண்டாள். அப்படியே பார்வை வெளியே உள்ள அந்த மணிமண்டபம் பக்கம் சென்றது. 

“என்னம்மா… அப்பாவோட சமாதிக்கு போகணுமா?”

“என்னடா இது கேள்வி… அவர் இல்லாட்டி நீதான் ஏது? நான்தான் ஏது?” 

“சரிம்மா… வா போகலாம்…” – பிரியா, லட்சுமியின் விருப்பத்தை நிறைவேற்றுவது போல உடன் நடந்தான். அவளுக்காய் ஒரு தனி துடிப்பு இல்லை. பிரியா ஐந்து வயதாக இருக்கும்போதே சக்கரவர்த்தி சாரநாத் போய் சேர்ந்து விட்டார். 

அதன்பின் பிரியாவுக்கு அப்பா-அம்மா என்று எல்லாமே அம்மா லட்சுமிதான். 

அந்த மணிமண்டபத்திலும் புதிதாக மாலை போட்டு விளக்கெல்லாம் ஏற்றப்பட்டிருந்தது. லட்சுமிக்கு அங்கே நுழையவும், கண்கள் இரண்டும் ஈரமாகிவிட்டன. பிரியா சாதாரணமாக நின்றாள். 

சில விநாடிகள்தான். அப்புறம், திரும்பத் தொடங்கி விட்டாள். 

மணிமண்டபத்தை விட்டு இருவரும் வெளியே வரவும், லட்சுமியின் ‘செல்போன்’ அவளை அழைத்தது. 

அவளது காதுமடல்களும் அதற்கு இடம் கொடுக்க மறுபக்கத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேசினார். 

”மேடம்… நான் ‘எஸ்.ஐ.’ அருணாசலம் பேசுறேன்.”

“என்ன விஷயம்?” 

“நம்ம தொகுதி மாஜி எம்.எல்.ஏ. ராஜதுரைக்கு ஒரு பெரிய விபத்து. ஆனா, நல்லவேளை… உயிருக்கு ஆபத்தில்லை. நல்லபடி தப்பிச்சுட்டாரு…” 

சப்-இன்ஸ்பெக்டரின் பதில், லட்சுமிக்கு பிடரியில் அடித்தது போல் இருந்தது. 

“உங்க பங்களாவுக்கு வந்துட்டு திரும்பும்போது இப்படி ஆனதால உங்களுக்கும் தகவல் கொடுத்துடலாம்னு தான் போன் பண்ணினேன். தப்பா எடுத்துக்காதீங்க மேடம்…” 

சப்-இன்ஸ்பெக்டர் சாதுரியமாக பேசி முடித்துக் கொண்டார். ஆனால், லட்சுமிக்குள் புயல்வீச ஆரம்பித்து விட்டது. 

ராஜதுரை தப்பித்தால் நிச்சயம் அடுத்த பாய்ச்சல் ஜமீன்தார் நல்லமணியின் மீதும், தன் மீதுமாகத்தான் இருக்கும் என்று அவளுக்குள் ஒரு புதிய கணக்கு எழுந்தது. 

லட்சுமி இப்படி உள் சிக்கலில் சிக்கிக்கொண்டு அமைதியாகி விட்டதை பிரியா உணரவில்லை. துள்ளிக் கொண்டு உள்ளே ஓடினாள். 

பார்த்துக்கொண்டே நின்ற லட்சுமிக்கு, திரும்பவும் செல்போனில் அழைப்பு.. 

இந்த முறை ராஜதுரையேதான் பேசினார். 

“அம்மா… நான் ராஜதுரை… பேச முடியாமதான் பேசுறேன். சுத்தி டாக்டருங்க இருக்காங்க. நீங்க என்வரைல இப்படிப் பண்ணக்கூடாதும்மா. எந்த கல்யாணம் நடக்கணும்னு நான் வந்து பேசினேனோ அந்த கல்யாணம் நடக்காதும்மா… இனி உங்களை நிம்மதியா நான் தூங்கவிடமாட்டேன்…”

அத்தோடு செல்போனும் அடங்கியது. லட்சுமிக்குள் தாறுமாறான இதயத்துடிப்பு. 

– தொடரும்…

– யாரென்று மட்டும் சொல்லாதே…  (நாவல்), முதற் பதிப்பு: 2009, திருமகள் நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *