பேய்களுக்கு யார் பயம்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 29,086 
 

வீடு வெறிச்சென்றிருக்கிறது. ‘இன்று வெளியில் நல்ல நல்ல வெயில் அடித்தது,வீட்டுக்காரர் வெளியிற் போயிருப்பார்கள்’ மகாதேவன் தனக்குத் தானே நினைத்துக்; கொள்கிறான்.

‘வெள்ளைக்காரர்கள், உல்லாசமாக வெளியிற் செல்ல,எப்போது கொஞ்சம் வெயிலடிக்கிறது என்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள்’ அவன் நினைவுகள் நீழ்கின்றன.

வேலைக்குப் போய் வந்த களைப்பில்,தன் கட்டிலிற் படுத்தபடி, ‘பெரும்பாலான மக்கள் வார விடுமுறையைச் சந்தோசமாகக் கொண்டாடுகிறார்கள், எங்களைப் போன்ற மாணவர்களால் அது முடியுமா?’ என்று யோசிக்கிறான்.

‘கிழமை நாட்களிற் படிப்பு. வாரவிடுமுறையில் உழைப்பு’ அவனின் சிந்தனைகள் தொடர்கின்றன. பெருமூச்சு விட்டபடி திரும்பிப் படுக்கிறான். திறந்திருந்த ஜன்னால் வந்த மாலையிளம் தென்றல் ஜன்னல்ச் சேலையை அசைத்துத் தடவிப் பிடித்து விளையாடுகிறது.

பினனேரம் எட்டு மணியாகிறது. இன்னும் இருளவில்லை. மெல்லிய மாலைக்காற்றின் மயக்கமும், வேலைக்குப் போய்வந்த களைப்பும் அவனின் கண்களை வருடுகின்றன.

‘ஓரு நீண்ட நித்திரையடித்தால் எவ்வளவு சுகமாகவிருக்கும்?’..

மகாதேவன் நீண்டு நிமிர்ந்து படுத்தபடி தனது அறையின் முகட்டைப் பார்க்கிறான். சுவரின் கரையோரமாக பொருத்தப்பட்டுக் கிடக்கும் பைப்புக்களில் பார்வை பதிகிறது. அது ஒரு பழையகாலத்து வீடு. வீட்டுக்கார முதிய தம்பதிகள் பலகாலமாக அந்த வீட்டில் ஒரு பதிய மாற்றங்களும் செய்யவில்லை என்பது அப்படமாகத் தெரிகிறது. அவனது பார்வை,சாடையாக வளைந்து கிடக்கும் பைப்பில் நிலைத்து நிற்கிறது.

,இந்த அறைக்கு வந்து இரண்டு கிழமைகளில், ஏதோ ஒருதரம் மல்லாக்கப் படுத்து அந்த மூலையில், அவன் பார்வை முட்டும்போது, அந்த வளைந்த பைப்பிற் பார்வை பட்டால்….மகாதேவன் புரண்டு படுக்கிறான்.ஏனோ அவனால் அந்த மூலையைப் பார்க்க விரும்பவில்லை.இன்று மடடுமல்ல, வந்த நாட்களிலிருந்து அந்த மூலையைப் பார்க்கும்போது,அவன் தனது ஞாபகத்தில் வரவேண்டாம் என்ற சில நினைவுகளை,யாரோ வலிய வந்து ஞாபகப்படுத்துவதுபோல் ஒரு பிரமை வருகிறது.

அதற்குமேல் அவனாற் படுத்திருக்க விரும்பவில்லை. ஓரு நல்ல நித்திரையடிக்கவேண்டும் என்ற அவனது நப்பாசையும் நழுவிப்போனது.

‘குளிக்கவெண்டும்,சமைக்கவேண்டும், நாளைக்குக் கொடுக்கவேண்டிய கொலிஜ் நோட்சுகளை முடிக்க வேண்டும்’ அவன் தனது சேர்ட்டைக்கழட்ட,திறந்திருந்த ஜன்னாலாற்தவழ்ந்து வந்த குளிர்காற்று அவன் உடலிற் பட்டதும் உடம்பை நெளிக்கிறான். கைகள் ஜன்னலை மூடப்போகின்றன்.

ஓவ்வொருதரமும் அவன் அந்த ஜன்னலைப் மூடப்போகும்போதும்,அவன் பார்வை எங்கு போகுமொ, இன்றும் அங்கே போகிறது.

இருண்டு கொண்டு வரும் மெல்லிய மாலைப் பொழுதின்;;,மெல்லிய இருளில,,தூரத்திற் தெரியும் ஆயிரக்கணக்கான சிலுவையுடனான கல்லறைகளைக் கொண்ட சவக்காலையிற் போய்த் தங்குகிறது.

அவன் வீடு பார்க்க வந்தபோது, வீட்டுக்காரப் பெண்மணி; இந்த அறைக்கு அவனையழைத்து வந்தபோது, அவன் பார்வையிற் தூரத்தே தெரிந்த சவக்காலையைப் பார்த்துச் சங்கடப் பட்டான்.அவன் பேய் பிசாசுகளில் மூட நம்பிக்கையற்றவன.

ஆனாலும் மனதில் ஏதோ ஒரு நெருடல்.

‘பேய்களுக்குப் பயமா?’பெருத்த உடலும். சின்னக்கண்களையுமுடைய ஒரு யானைக் குட்டியை ஞாபகப் படுத்தும், வீட்டுக்கார அம்மணி மிஸஸ் பார்ணட் அவன் தயக்கத்தைக் கண்டு கேட்டதும்,’ அவன் ‘அப்படி ஒன்றுமில்லை’என்று பதில் சொன்னான்.’பேய்களுக்கு யார் பயம்? அப்படி ஒன்றிருந்தால் அதை உண்டாக்கியவர்கள் பயப்படட்டும், கடவுளையுண்டாக்கியவர்கள் திருவிழாவைத்துக் கடவுளுக்கு லஞ்சம் கொடுத்துத் தாங்கள் வேண்டுவதைத் தரவேண்டும் என்று பிரார்த்திப்பதுபோல். அவன் தனக்குத் தானே முணுமுணுத்தான்.

மகாதேவன் குளிப்பதற்காக ஹீட்டரைப்போடக் குளியலறைக்குட் செல்கிறான.. கீழே கதவு திறக்கும் சத்தம் கேட்கிறது.’வீட்டுக்காரர்கள் வருகிறார்களாக்கும்,அவர்கள் சமைக்கமுதல் குளிக்க வேண்டும். குளிப்பதற்குத் தண்ணீர் சூடாவதற்கிடையில் சமைத்து விட்டால் நல்லது.

பாகிஸ்தானியரின் கடையில் வாங்கிய ஆட்டிறைச்சியையும் அரிசி மற்றும் சாமான்களையும் எடுத்துக்கொண்டு கீழே இறங்குகிறான்.

வீட்டின் முன் கதவு ஆவென்று திறந்து கிடக்கிறது.

இருள் பரவும் வீட்டில்,வெளியிலிருந்து வரும் தெருவெளிச்சம் பட்டுத் தெறிக்கிறது.; ‘முன் கதவைத் திறந்தவர்கள்,வீட்டுக்குள் வந்ததும்; கதவைப் பூட்டுவதற்கென்ன?’ தனக்குள் முணுமுணுத்துக்கொண்மு கீழே இறங்கியவன், பூட்டியபடி கிடக்கும் வீட்டின் முன்னறையைப் பார்த்துத் திடுக்கிடுகிறான்.

வீட்டுக்காரத் தம்பதிகள் மிஸ்டர் அன்ட் மிஸிஸ் பார்ணட் வந்திருந்தால் முதல் வேலையாகத் தங்கள் முன்னறையைத்தான் திறப்பார்கள். மேல் மாடியில் மகாதேவனுக்குப் பக்கத்தறையில் வாழும் எலியட் கதவைத் திறந்து மேலே வரும்போதே ‘ஹலோ மகாதேவன்’ என்று சொல்லிக்காண்டுதான் வருவான்.

மேல் மாடியிலிருந்து படிகளில் இறங்கிவந்த மகாதேவன் அப்படியே திகைத்து நிற்கிறான்.திறந்து கிடக்கும் வீட்டுக்கதவு வெளியிலிருந்து வரும் காற்றுக்கு முன்னும் பின்னுமாக மெல்ல மெல்ல அசைகிறது.

சட்டென்று முன்கதவைச் சாத்தி விட்டு ஹோலின் லைட்டைப்போட்டு விட்டுச் சமையல் அறைக்குட் போகிறான்.’யார் திறந்தார்கள் கதவை?கள்வனாக இருக்குமோ?’

சரியாக இருள் பரவாத நேரத்தில், துணிந்த களவாட வரும் கள்வன் யாரும் செயின்ட் அல்பேன்ஸ் என்ற அந்த நகரத்தில் இருப்பதாக அவன் நினைக்கவில்லை.

‘நான்தான், வந்த களைப்பில்க் கதவைச் சரியாகப் பூட்டாமல் மேலே போனேனா?’ அரிசியைக் கழுவியபடி மகாதேவன் யோசிக்கிறான்.இருள் தழுவம் அந்த நேரத்தில் அந்த வீடு வெறும் நிசப்தத்தில் ஆழ்ந்து கிடக்கிறது.அந்த அமைதி அவனை ஏதோ செய்கிறது. பட படவென்று மேலே ஓடிப்போய் ஒரு தமிழ்ப் பாட்டைக் கசட்டில் போட்டு விட்டுக் கீழே வருகிறான் சவுந்திரராஜனின் ‘கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கெதி அருள்வாயம்மா’ என்ற பாட்டு வீட்டை நிரப்புகிறது. அவன் மனதுக்கும் அந்தப் பாட்டு இதமாகவிருக்கிறது.

‘கற்பகவல்லி’ பக்திப்பாடல் முடியவும் ஆட்டிறைச்சிக் கறி கொதிக்கவும் சரியாகவிருக்கிறது.

சாப்பாடு ஆறமுதல் ஒரு குளிப்படிக்கவேண்டும்.அவசர அவசரமாகச் சுடுநீரையும், பச்சைத் தண்ணியையும் திறந்து விடுகிறான்.வெள்ளை வெளேரென்ற பாத் டப்புக்குள் நீர் நிறைகிறது.அருமையான குளிப்பும் ருசியான ஆட்டுக்கறி சமயலும் அவனுக்கிருந்த அசதியைப் போக்கிவிட்டது.

‘நாளைக்குக் கொடுக்கவேண்டிய நோட்ஸ் எல்லாத்தையும் முடித்து விட்டால் கொஞ்ச நேரம் டெலிவிஷன் பார்க்கலாம்’ என்ற அவனுடைய திட்டத்தை மீறி நித்திராதேவி அவனை ஆள்கொண்டு விட்டாள்.. அரைகுறை நித்திரையில் எழும்பி லைட்டை ஓவ் பண்ணுகிறான்;.

‘கீழே ஹோலில் போட்டலைட்,?’ ஒரு நிமிடம் யோசிக்கிறான்.

‘பாவம், பார்ணர்ட் தம்பதிகள் என் இருட்டில் கதவைத் திறந்து வந்து கஷ்டப்படவேண்டும?’ கீழே எரியும் லைட்டை ஓவ் பண்ணாமல் அப்படியே கண்ணயர்ந்து விட்டான்.

கொஞ்ச நேரத்தில்.உறக்கமும் விழிப்புமான இரண்டும் கெட்ட உணர்வு அவனுக்கு. கண்களைத் திறக்கவேண்டும் என்று நினைத்தாலும் திறக்க முடியாத ஒரு மயக்க நிலை.நித்திரையில் அப்படியே ஆழ்ந்த துக்கத்தில் அமிழ வேண்டும் என்ற பிரமை.மனம் எங்கேயோவெல்லாம் போவதுபோன்ற நிம்மதியற்ற தவிப்பு.

கனவும் நனவுமற்ற விடயங்கள் மனத்தை அழுத்துகின்றன. அடையாளம் தெரியாத மனிதர்கள், சப்பாஷணைகள்,அவன் நிம்மதியின்றி புரண்டு புரண்டு படுக்கிறான்.அவனுக்கு அவனுடைய அம்மா,அப்பா,சகோதரங்களில் அளவு கடந்த அன்பு. அவர்களைப் பிரிந்துவாழும் வேதனை சிலவேளை தாங்கமுடியாதிருக்கிறது.அந்த வேதனையில் நித்திரையற்று துடித்த இரவுகள் பல. துன்பத்தைப் பகிர்ந்துகொள்ள,இந்த ஊரில் நெருக்கமான சினேகிதர்களோ, உறவினர்களொ இல்லாத தனிமையான மாணவ வாழ்க்கையின் ஒரு பகுதி நிம்மதியிழந்த, நித்திரை சரியாக வராத வாழ்க்கை.

படிப்பதற்காக ஊரிலிருந்து இங்கிலாந்துக்கு வந்தபோது, கொஞ்சநாட்கள் லண்டனில் அவனுக்குத் தெரிந்த நண்பர்களுடன் காலத்தைக்கழித்தான். அது ஒரு சந்தோசமான அனுபவம். அப்படியில்லாமல், ஊரிலிருந்து நேரடியாக, செயின்ட் அல்பேன்ஸ் என்ற நகருக்குப் புதிதாக வந்திருந்தால் என்ன நடந்திருக்குமோ தெரியாது.

அன்பான குடும்பத்தினரின் பிரிவு,புதுநாட்டுச் சீவியம்,பொல்லாத குளிர், அத்துடன் மண்டைக்கனமும் இனவாதமும் பிடித்த சில வெள்ளையினத்தவரின் அவமதிப்பான நடவடிக்கைகள் எல்லாவற்றையும் சகித்துப்பழகத் தெரிந்து கொண்டான். சில அனுபவங்கள்,எவரையும்,எந்தவிதமான திடமனதுள்ளோரையும் மிகச்சங்கடத்திற்குள் அழுத்திவிடும் என்று வெளிநாட்டுவாழ்க்கை அவனுக்குப்போதித்திருந்தது.

நினைவுகளை உதறிவிட்டு நித்திரைகொள்ள எத்தனிக்கிறான்.இந்த அறைக்கு வந்து இரண்டு கிழமைகளாகியும் அவனுக்குச் சரியாக நித்திரைவராமலிருக்கிறது. இந்த அறைக்கு வந்த நாட்களில்,’புதிதான இடமென்றபடியால்,நித்திரைவராமலிருக்கிறது’ என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டான்.

வீடு பழகி, வீட்டில் உள்ள மனிதர்களுடனும்பழகத் தொடங்கி இரண்டு வாரங்களாகி விட்டன.ஆனால் இந்த அறை..?

ஏதோ விபரிக்க முடியாத தர்மசங்கட உணர்வு அவனின் நிம்மதியைக் குலைக்கிறது.தூரத்திற் தெரியும் சவக்காலை ஒரு காரணமா?

அரைகுறை நித்திரையிலும் மூடநம்பிக்கைகளை நினைத்து அவனுக்குச் சிரிப்பு வருகிறது.

நீண்டநேரத்தின் போராட்டத்தின்பின் ஏதோ அரைகுறையாக நித்திரையில் ஆழ்ந்து கொண்டிருக்கும்போது..

கிறீச்,என்ற சப்தத்துடன் அவன் அறையின் கதவு திறந்துகொண்டது. அதைத் தொடர்ந்து..நினைவில் எங்கேயோ புதைத்துவைத்திருந்த சோக ஞாபகங்களை நினைவுக்குக்கொண்டுவரும் ஒரு சுகந்தமணம்…அன்பான யாரையோ நினைவுக்குக்கொண்டுவரும் மல்லிகையின் இதமான மணம்,மூக்கைத்துளைக்காத கொடிமல்லிகைப் பூவின் மெல்லிய வாசம்…!

இங்கிலாந்தில் மல்லிகைப் பூ இருக்குமா? மல்லிகை வாசம் நிறைந்த திரவியம் கிடைக்குமா? சட்டென்று எழுந்தான். உடம்பு வியர்வையில் நனைந்து தெப்பமாகியிருந்தது.

அவசரமாக எழுந்து லைட்டைப்போட்டான்.அவன் கனவு காணவில்லை. நிச்சயமாக அவன் கதவைப் பூட்டிவிட்டுத்தான் படுத்தான். இப்போது ஆவென்று திறந்து கிடக்கிறது.

பின்னேரம் முன்கதவு திறந்து கிடந்ததுபோல் அவனது கதவும் திறந்து கிடக்கிறது.

அவனால் மேற்கொண்டு எதையும் யோசிக்க விரும்பவில்லை. இனி நித்திரை வராது.

நோட்ஸ்களைத் திருப்பி ஒரு தரம் படிக்கவேண்டும். அதற்குமுதல்,ஒரு காப்பி போட்டுக்குடிக்கவென்று சமயலறைக்குப்போகக் கீழே வரப் படிக்கட்டுகளிற கால்வைத்தவன் ஒருகணம் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறான்.அவன் சரியாகக் கதவைப் பூட்டாமற் படுத்திருந்தால் அது தற்செயலாகத் திறபட்டிருக்கலாம். ஆனால், வீட்டுக்கார முதிய தம்பதிகளுக்காக அவன் ஹோலிற் போட்டு வைத்திருந்த லைட் அணைக்கப் பட்டுக் கும்மிருட்டாக இருந்தது.

‘யார் லைட்டை ஓவ் பண்ணியிருப்பார்கள்’,தன்னந் தனியே,இரண்டுவாரம்மட்டும் பரிச்சயமான அந்த வீட்டின் மேல்மாடிப்படிக்கட்டில் நின்றபோது, பேய்களுக்குப் பயமோ இல்லையோ அவனையறியாமல், அவன் மனத்தை ஏதோ ஒன்று உறுத்துகிறது.

‘பார்ணார்ட் தம்பதிகள் வந்திருப்பார்களோ?’ மனதில் யோசனையுடன் கீழே இறங்கி வந்தான்.

பின்னேரம் பார்த்ததுபோல் முன்னறை இன்னும் மூடிக்கிடக்கிறது. அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

காப்பியைக்குடித்துவிட்டு படிப்பைத் தொடங்கினான்.; இரவின் பெரும்பகுதி படிப்பில் கழிந்தது.

அடுத்த நாள்க் காலையில் பார்ணார்ட் தம்பதிகள் வந்து சேர்ந்தார்கள்.மகளுக்குப் பிள்ளை பிறந்ததாம்,பேர்மிங்காம் நகருக்குப்போய் மகளைப்பார்த்துவிட்டு வருகிறார்களாம்.

பக்கத்து அறையிலிருக்கும் எலியட் வழக்கம்போல் லண்டனிலிருந்து,திங்கட்கிழமை அதிகாலையில் வந்து சேர்ந்தான்.

இருவரும்,ஹட்பீல்ட் என்ற நகரிலிருக்கும் தங்களின் கல்லூரிக்குப்போக பஸ் தரிப்பிடம் சென்றார்கள். செயின்ட் அல்பேன்ஸ் நகரிரன் நடுமையத்திலிருந்து பஸ் புறப்படும். அந்த நகரம் சரித்திரப் பிரசித்தமான,மிகப் பழமைவாய்ந்தது. மங்கிய நிறமான பழைய கட்டிடங்களில் பார்வையைப் பதித்தபடி மகாதேவன் உட்கார்ந்திருந்தான்.

‘என்ன இரவு நல்ல நித்திரையில்லையா? வீட்டில் யாருமிருக்கவில்லை, உன்னுடைய கேர்ள் பிரண்டைக் கூட்டிக்கொண்டுவந்து உல்லாசமாகவிருந்தாயா?’

நித்திரையின்றிச் சிவப்பாகவிருக்கும் மகாதேவனின் கண்களைப் பார்த்தபடி,குறும்பு தவளும் பார்வையுடன் கேள்வி மேல் கேள்வி கேட்கிறான் எலியட்.

இளம் வயது வாலிபன் நித்திரையின்றித் தவிப்பதற்கு’செக்ஸ்’ மட்டும்தான் காரணமாகவிருக்கவேண்டுமா?

மகாதேவன் பதில் சொல்லவில்லை. எலியட் ஒருவருடமாக அந்த வீட்டில் இருக்கிறான்.

இந்த வீட்டில் நல்ல நித்திரை உனக்கு வருகிறதா என்று எலியட்டைக் கேட்கலாமா? அத்துடன் தான் இரவு கண்ட சில அனுபவங்கள் அவனுக்கும் வந்திருக்கிறதா என்று கேட்கலாமா?’பேய்க்குப் பயப்படுகிறேன் என்று என்னைக் கேலி செய்ய மாட்டானா’? கேலி செய்தால் கேலி செய்துவிட்டுப் போகட்டும்.

‘எலியட்…’மகாதேவன் மனதில் படுவதைச் சொல்லத் தயங்குகிறான்.

‘என்ன பேய்க்கதை சொல்லப்போகிறாயா?’ எலியட்டின் அந்தக்கேள்வி மகாதேவனைத் திடுக்கிடப்பண்ணுகிறது.

‘பேயோ பிசாசோ..இரவு சரியாக நித்திரை வரவில்லை’தனது சந்தேகத்தைக் காட்டிக்கொள்ளாமற் சொல்கிறான் மகாதேவன்.

‘இந்த நகரான செயின்ட் அல்பேன்ஸ் ஒரு காலத்தில் உரோம சாம்ராச்சியத்தின் மிகப் பிரதானமான யுத்த தளமாகவிருந்தது. ஆயிரக்கணக்கான, பிரித்தானிய,உரோம இராணுவ வீரர்கள் மடிந்த மண்ணிது. இந்த ஊர் மக்கள் இன்னும் பல பேய்க்கதைகளைச் சொல்வார்கள், சிலர் பேய்களை நம்புகிறார்கள். உனக்கு முன் உனது அறையிலிருந்த மாணவனும் தனக்குச் சரியான நித்திரை வரவில்லை என்று சொல்வான். நான் உரோம போர்வீரர்களின் வருகை பற்றிக் கிண்டலடிப்பேன்’ எலியட் வழக்கம்போல் பகிடியாகச் சொல்கிறான்.

‘மல்லிi மண்வாசனை தடவிய உரோம வீரர்களா பேய்களாக உலவுகிறார்கள்?’ மகாதேவன் பேய்கள் பற்றிய சம்பாசணையைத் தொடராமல் ஜன்னலுக்கப்பாலுள்ள உலகத்தைப் பார்க்கிறான்.

கல்லூரிப் பரிட்சை தொடங்கி விட்டது. மூச்சுவிட நேரமில்லாத படிப்பு. சரியான நித்திரையுமில்லை. படிப்புச்சுமை, அத்துடன் தலையிடிவேறு. அன்றிரவு அகோரமான இடிமுழக்கத்துடன் பெரும்காற்றும் மழையும் படிப்பை முடித்துவிட்டுத் தூங்கப்போக மிக நேரமாகிவிட்டது. களைப்பில் கண்களயர்ந்தன.

கதவு திறபடும் சப்தம். இழவு பிடித்த காற்று, அவன் தன் மனதில் முணுமுணுக்கிறான். அதைத்தொடர்ந்து,மெல்லிய கொடிமல்லிகை மலரின் வாசம்….;,

எக்காரணம் கொண்டும் நினைக்கக்கூடாது என்று மகாதேவன் நினைத்திருந்த பல நினைவுகள் மடை திறந்தாற்போல் அவன் மனதிற் பாய்கிறது.

மல்லிகை வாசம்… பெரியக்கா..

மகாதேவன் வேதனையுடன் புரண்டுபடுத்தான். சோகத்தைச் சுமந்த பெரியக்காவின் முகம் அவன் முன்னே வந்தது. கொல்லென்ற சிரிப்பும்,குறுகுறுவென்ற பார்வையுமுள்ள பெரியக்கா எப்படி ஒரு சோகப் பதுமையாக மாறிப் போனாள்?

அக்கா இளவயதிலிருந்தே பல ஆசிரியர்களின் மதிப்பைப்பெற்ற ஒரு கெட்டிக்கார மாணவி என்று பெயர் எடுத்தவள். அவளின் பல்கலைக்கழகப் படிப்பு முடிய அனுராதபுரத் தமிழ் வித்தியாலயமொன்றில் வேலை கிடைத்தது. வேலைக்குச் சேர்ந்து ஆறமாதம்கூட ஆகவில்லை….

1977ம் ஆண்டு,தமிழர்களுக்கெதிராக ஜெயவார்த்தனா தலைமையில்,அன்றிருந்த சிங்கள அரசு, மிகப் பயங்கரமான தமிழர் ஒழிப்பு கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டது.

சிங்கள இனவாத மிருக வேட்டையில் தமிழர்கள் அப்பாவி மிருகங்கள் மாதிரி வேட்டையாடப்பட்டார்கள்.

அக்காவை அனுராதபுரத்திலிருந்து,வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். அன்றிலிருந்து, அக்காவின் முகத்தில் குறுகுறுப்பில்லை.அவளின் கொல்லென்ற சிரிப்பை யாரும் கேட்கவில்லை.அவளின் அழகிய விழிகள் யாரையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை.

மகாதேவன் ‘சின்னப்பையனாம்’;,அவனுக்கு,யாரும் ஒன்றும் சொல்லவில்லை. அவன் லண்டனுக்கு வரும் ஒழுங்குகளைச் செய்துகொண்டிருந்தான்!

அக்காவுக்கு என்ன நடந்திருக்கும் என்று ஊகித்துக்கொண்டான். தமிழர்களுக்கெதிராகக் கொடுமையான கலவரம், தன்னால் பாதுகாக்கவேண்டிய மக்களுக்கெதிராக, அரசே பின்நின்று பெரு நெருப்பாக எரிந்தபோது,ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்களுக்கு என்ன நடந்ததோ அதுவே அக்காவுக்கும் நடந்தது.

காட்டு மிருகத்தின் வெறிக்கு அகப்பட்ட மான் குட்டியிடம் கேட்கமுடியுமா என்ன நடந்ததென்று?

ஊர் உறங்கும் நேரத்தில்,தனியே இருந்து தானழுத தமிழ்ப் பெண்களில் மகாதேவனின் தமக்கையும் ஒருத்தியானாள்.

ஓரு நாள் இரவு,’ஒன்றுக்குப்போக’ வெளியில் வந்த மகாதேவன்,கண்சிமிட்டும் நட்சத்திரங்களின் துணையுடன்,தென்னை மரத்தடியில் சாய்ந்திருந்து அழும் தமக்கையைக் கண்டான்.

இரவில் தனியாக ….’அக்கா’ அவன் கூப்பிட்ட குரலுக்குத் திரும்பிப் பார்க்காமல், கண்களைத தன் ட்ரெசிங் கவுணிற் துடைத்துக்கொண்டாள்.; தேய்நிலவின்மெல்லிய ஒளி,தென்னம் கீற்றுக்களின் இடுக்ககளால் எட்டிப்பார்க்க,அந்த வெளிச்சத்தில் அக்காவின் நீர்வழியும் கடைவிழிகளைப் பார்த்தான்; அவன்.

‘இந்த நேரத்தில் வெளியில் என்ன வேலை’ அவன் தடுமாறினான். அந்த நேரம், அவர்களின் பாட்டி சொல்வதுபோல்’ பேய் உலவும் நேரம்’. தமக்கை தம்பியை வெறித்துப் பார்த்தாள்.அவனுக்கு மறுமொழி சொல்லாமல் வீட்டுக்குள்ச் சென்றாள். அவன் வழக்கம்போல் முன் ஹோலுக்குள் வந்து படுத்துக்கொண்டான்.

ஏதோ ஒரு சப்தம்!.

என்ன சத்தம்? குசினியிற் பூனையா? உறியில் உள்ள மீன்பொரியலை, பலகாரங்களை எடுக்க அவர்கள் வீட்டுப் பூனை எகிறிப்பாய்வதுண்டு. அவன் எழும்பிக் குசினிப் பக்கம் போனான். கதவு உட்பக்கமாகப் தாளிடப்;பட்டிருந்தது.

உட்பக்கம் பூட்டப்பட்டிருக்கிறது.

ஜன்னலுக்குப் போட்டிருந்த வலைக்கம்பிகளுக்குளால் பார்த்தவனுக்கு…….உறியில் மீன் தொங்கவில்லை. பெண்மையழிக்கப்பட்ட பெரியக்காவின் வெற்றுடம்பு முகட்டின் வளையில்; பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தது.

‘அக்கா..அக்கா’ அவனின் அலறல் உலகை உலுக்கியது.

…..

மகாதேவன் திடுக்கிட்டெழுகிறான்;. அவன் அறையிலுள்ள அந்தப் பைப்பிற் தொங்கும் அந்தப் பிணம்?….என்ன இது கனவா அல்லது நனவா?

உடம்பு சில்லிட்டுச் சிலிhக்கிறது. நாடி பட படவென அடித்துக்கொள்கிறது. கைகள் நடுங்க எழும்பிப்போய் லைட்டைப் போடுகிறான்.

ஓன்றுமில்லை..அந்த பை;பில் எதுவும் தொங்கவில்லை. ‘எல்லாம் எனது மனப் பயம்’ அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அந்த இரவு மிகவும் நீண்டதாகவிருந்தது.அக்காவின் செத்த வீட்டுக்குப் பின் இன்றுதான் மனம் விட்டழுகிறான்.அவனின் சிவில் என்ஞினியர் படிப்பு நோட்ஸ்கள்; அவன் கண்ணீர்த்துளிகளால் நனைவதை மறந்து அவன் அழுகிறான்.

அடுத்த நாட்காலையில்,’ஏன் உனது கண்கள் சிவந்திருக்கிறது?’ என்று எலியட் கேட்கமுதல் அவன் கல்லூரிக்குப் போய்விட்டான். அந்த அறையில் இருக்க அவனுக்கு மனம் வரவில்லை. நிம்மதியாகவிருந்து படிக்க முடியவில்லை.

பின்னேரம் வீட்டுக்காரக் கிழவர் மிஸ்டர் பார்ணர்ட் மகாதேவனின் கதவைத் தட்டினார். சோர்ந்த முகத்துடன் கதவைத் திறந்தான் மகாதேவன். கிழவன் அவனைப் பரிதாபமாகப் பார்த்தார்.

என்ன கேட்கப்போகிறார் கிழவர்? வீpட்டு வாடகையைக் கூட்டப்போகிறாரா? கிழவர் அப்படி ஒன்றும் பணப்பைத்தியமில்லை.

கிழவர் அவனை ஏற இறங்கப் பார்த்து விட்டு,’ இரவு ஏதும் பயங்கரக் கனவு கண்டாயா?’ என்று கேட்கிறார். மகாதேவன் மறுமொழி சொல்லாமல் அவரைப் பார்க்கிறான். என்ன சொல்கிறார் கிழவர்?

‘இரவு ஏதோ பெரிய சத்தம் போட்டாய் போலக் கேட்டது…’ கிழவர் அவனை உற்றுப் பார்க்கிறார். அக்காவைக் கனவு கண்டு அழுததைச் சொல்லலாமா?ஆட்களுக்குக் கேட்கக் கூடியதாகவா அழுதேன்? அப்படியில்லாவிட்டால் ஏன் கிழவர் கேட்கிறார்?

கிழவர் தயங்குகிறார்.அவரின் பார்வை அந்தப் பைப்பில் போய் வருகிறது. ‘கிழவருக்குச் சொல்லலாமா அந்தப் பைப்பிற்தான் எனது தமக்கை பிணமாகத் தொங்குவதாகக் கனவு கண்டேன் என்று?’

கிழவர் மகாதேவனைப் பரிவுடன் தடவி விடுகிறார்.

‘மகாதேவன், நீ இந்த அறைக்கு வந்தபோதே நான் சொல்லியிருக்கவேண்டும்….’கிழவரின் குரல் தடைப்படுகிறது.

என்ன சொல்கிறார் கிழவர்?

‘இந்த அறையில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள்.’ கிழவர் மகாதேவனின் முகத்திலிருந்து பார்வையை எடுக்காமல் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவனின் முகம் பேயடித்ததுபோல் வெளுக்கிறது. அது ஆச்சரியத்தால் என்று கிழவர் நினைக்கலாம்.

‘அந்தப் பெண்ணும் ஒரு இலங்கைப் பெண்.பக்கத்து ஆஸ்பத்திரியில் நேர்ஸாக இருந்தாள். ஓரு வெள்ளைக்காரனுடன் காதலாக இருந்தாள். அவளுக்கு வயிற்றில் குழந்தை வந்ததும் அவன் எங்கே போனானோ தெரியாது……அதனால் அவள் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் தாங்காமல்……’ கிழவர் அவனையே பார்க்கிறார். என்ன மறுமொழி சொல்வது?

‘சிலர் ஒழுக்கம் பண்பு என்பது தங்கள் உயிரை விட மேலானது என்று நினைப்பதுண்டு’ கிழவர் அவனை இன்னொரு தரம் பாசத்துடன் தடவி விடுகிறார்.

அந்தப் பாசமோ என்னவோ மகாதேவன்pன் கண்கள் கலங்குகின்றன.

‘எங்கள் நாட்டுப் பெண்கள், வாழ்க்கையை அணுகும்; விதமே வேறு, தங்களின் வாழ்க்கை பற்றிய,உங்கள் நாட்டுப் பெண்களின் மனப்போங்கும் அணுகுமுறையும் வேறு..’ அவன் அப்படிச் சொல்லாமல் மவுனமாக அவரைப் பார்க்கிறான்.

‘ அந்தப் பெண்ணின் தற்கொலைக்குப்பின் பலர் இந்த அறையில் இருந்திருக்கிறார்கள். ஓரு சில அனுபவங்களும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உன்னைப் போல் யாரும் சத்தம் போட்டழவில்லை.’ கிழவர் மெல்லமாகச் சொல்கிறார்.

‘நான் பேய்க்குப் பயந்து அழவில்லை.என் தமக்கையின் ஞாபகம் வந்து அழுதேன்’என்பதைக் கிழவனிடம் எப்படிச் சொல்வது?

‘பேய்களுக்குப் பயமா?’ கிழவர் கேட்கிறார். மகாதேவன் கிழவரை வெறித்துப் பார்க்கிறான்.

‘பேய்களை உண்டாக்கி,உலகத்தை உறிஞ்சும் மனிதப்பேய்களைக் கண்டுதான் பயப்படுகிறேன், ஒரு காலத்தில் அந்தப் பேய்க் கூட்டத்தை அழிக்க,வல்லமையும், உண்மையும், துணிவும் கொண்ட பூசாரிகள் வருவார்கள் என்று நம்புகிறேன்’ என்று கிழவருக்குச் சொன்னால் அவருக்கு அது புரியுமா?

(யாவும் கற்பனையே)

–  ‘அலை’ பிரசுரம்-யாழ்ப்பாணம்-1981

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *