கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: October 6, 2014
பார்வையிட்டோர்: 78,790 
 
 

மழை விடுவது போலத் தெரியவில்லை. இன்னும் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே குளிர்காலம். மழையினால் குளிர் அதிகமாகி விட்டது.

திரும்பவும் நான் என் எதிரிலிருந்த மேஜையில் வைக்கப் பட்டிருந்த அந்தப் பழைய செய்தித்தாளைப் பார்த்தேன். முதல் பக்கத்தில் இருந்து என் முகம் என்னைப் பார்த்து சிரித்தது. அப்போது தான் கடைசியாக சிரித்தது. அப்புறம் சோகமோ சோகம். கோரமோ கோரம். எல்லாம் என் விதி.

அப்போது தான் காலிங் பெல் ஒலித்தது.

“கதவு திறந்துதான் இருக்கிறது. உள்ளே வரலாம்”

ஒரு எச்சரிக்கையுடன் கதவைத் திறந்து கொண்டு ஒரு இளம் பெண் உள்ளே வந்தாள்.

“சாரி சார்! மழை ரொம்ப ஜாஸ்தி ஆயிடிச்சு. பிக் அப் செய்ய வரேன்னு சொன்ன ஹஸ்பண்ட் வண்டில ஏதோ ப்ராப்ளம் கொஞ்ச நேரம் ஆகும்னு போன் பண்ணிட்டார். அதான்….” என்று இழுத்தாள்.

“இதிலென்ன இருக்கு? உட்காரு” என்று மேஜைக்கு அப்புறம் இருந்த சேரைக் காட்டினேன்.

உட்கார்ந்தவளைக் கூர்ந்து பார்த்தேன். சுமார் இருவத்தைந்து வயதிருக்கும். நல்ல நிறம். நல்ல உடல் வளம். மழையில் வேறு நனைந்து இருந்தாளா, மிகவும் கவர்ச்சியாக இருந்தாள்.

“என்ன பார்க்கறீங்க?”

“இல்லை, ஒரு தனியான ஆம்பிளை இருக்கேன். உனக்கு பயமா இல்லையா?”

“எதுக்கு பயம்? நீங்க என்ன பேயா?”

மெலிதாக சிரித்தேன். “எதுக்கு சிரிக்கிறீங்க?”

“ஒண்ணுமில்லை. உன்னப் பத்தி சொல்லு. உன் வீட்டுக்காரர் வர்ற வரைல பொழுது போகும்”

“நான் ராணி. பேர்ல மட்டுமில்லை. என் வீட்டுக்காரர் என்ன ஒரு ராணி மாதிரி தான் ட்ரீட் பண்ணுவார். நான் ஒரு ஐடி கம்பனில வொர்க் பண்ணறேன். அவர் ஒரு டாக்டர். சாதாரணமா ஆபீசில் இருந்து டிராப் உண்டு. ஆனால் இன்னைக்கு ஒரு பர்த்டே அட்டென்ட் பண்ண இந்தப் பக்கம் வந்தேன். அதுனால பிக் அப் பண்ண வீட்டுக்காரர் வர்றேன்னு சொன்னார். “என்ன பாக்கறீங்க?”

“இல்ல, ரொம்ப வேகமா பேசற”

“அதிருக்கட்டும் ஒங்களப் பத்திச் சொல்லுங்க. உங்க மனைவி, குழந்தைங்க…”

“ எனக்குக் குடும்பம் என்று எதுவும் இல்லை” என்றேன் ஒரு பெருமூச்சுடன்.

“ஏன் என்ன ஆச்சு? இன்னும் கல்யாணம் ஆகலியா?”

“ அதெல்லாம் ஆச்சு. ஆனா என் மனைவி என்னை விட்டுட்டு வேற ஒருத்தனோட போயிட்டா.”

அவள் முகம் மாறியது. ஒருவித மன்னிப்புக் கேட்கும் குரலில் “ஐயாம் வெரி சாரி” என்றாள்.

“இட்ஸ் ஓகே. அவ ஓடிப்போனதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க?”

“வேற கல்யாணம் பண்ணிக்கலையா? You are still young”

“இல்லைங்க, போற போக்குல என்ன அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து கொன்னுட்டாங்க.”

அவள் முகம் போன போக்கு சரியில்லை. அப்புறம் என் இதழோரம் வந்த புன்னகையைப் பார்த்து “ஒ! உங்க வாழ்க்கையைக் கொன்னுட்டாங்கன்னு சொல்ல வர்றீங்க! ஆனாலும் நீங்க ஒரு சினிமா கதாசிரியர் போல ஒரு effect கொடுத்துத் தான் பேசறீங்க. கதை எழுதலாம் நீங்க”

“நான் சாகறத்துக்கு முன்னால கதை தான் எழுத்திக்கிட்டு இருந்தேன். குழந்தைங்க கதை.”

கலகலவென்று சிரித்தாள் ராணி.

“சரி, குடிக்க ஏதாவது இருக்குமா? காப்பி, டீ?”

“நான் அதெல்லாம் குடிக்கறது இல்லை. ஒன்லி ரத்தம். வேணுமா?”

“You are really a joker! hahaha…..”

“ரத்தம் குடிக்கறது ஒரு ஜோக்கா? ஆண்டவா! நல்லா மூச்ச இழுத்து விடு. ரத்த வாடை காத்துல வரும் பாரு”

“சரி போதும் நிறுத்துங்க. ரொம்ப ஹாரர் ஆகாது”

“சரி, நீ கேட்டதுனால சொன்னேன்”

“ஓகே. நீங்க ஏன் இப்படி விரக்தியாப் பேசறீங்க? நல்லா படிச்சவர் மாதிரி தெரியுது. வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகாத, இப்படி இருட்டிப் புடுங்கித் திங்கற வீட்டுல ஏன் யாருக்காக உக்காந்துக்கிட்டு இருக்கீங்க?” என்றாள் கரிசனத்துடன்.

“நகைகள். இங்க தான் இருக்கு. நகைகள் வேணும்னா இங்க வந்து தான் ஆகணும். அவ வருவா. அவ வர்றதுக்காகத் தான் காத்துக்கிட்டு இருக்கேன்.”

அவள் ஏதோ சொல்ல வாய் எடுப்பதற்கு முன் அவள் செல்போன் ஒலித்தது.

எடுத்து “ஹலோ! வந்துட்டீங்களா? எங்க, தெருமுனைல தான் வெயிட் பண்றீங்களா? சரி , மழை நின்ன மாதிரி இருக்கு. நானே அங்க வந்திர்றேன்” என்று சொல்லி என்னிடம் “Thanks for the company. Bye. Catch up with you some other time ” என்று எழுந்தாள்.

“எனக்கு பதினைந்து நாளுக்கு ஒரு தடவதான் ரத்த தாகம் எடுக்கும். இன்னைக்கு அது தீர்ந்துடுச்சி. அடுத்த முறை அந்த மாதிரி டைம்ல வந்தா எனக்கு உபயோகமா இருக்கும்” என்றேன்.

அவளுக்குச் சிரிப்பு அடக்க முடியவில்லை. “நிச்சயம் வர்றேன். அடுத்த பதினைந்தாம் தேதி definitely I’ll be here with my husband”

நான் பதிலுக்குப் புன்னகைத்தேன். “பிறகு பார்க்கலாம்” என்றேன். ராணி கதவைத் திறந்துகொண்டு வெளியே சென்றாள். அவள் சொன்ன மாதிரி மழை நின்றிருந்தது. ஆனால் இத்தனை நேரம் அடங்கியிருந்த தாகம் திடீரென்று தலை தூக்கியது.

மீண்டும் ஒரு முறை அந்தச் செய்தித்தாளைப் பார்த்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய தினசரி.

“கள்ளக் காதலனுடன் சேர்ந்து கட்டிய கணவனைக் கொலை செய்துவிட்டு இளம் பெண் தலைமறைவு” என்று பெரிய எழுத்துக்களில் செய்தி போட்டிருந்தது. அதன் கீழே “கொலையுண்ட கணவர் இவர்தான்” என்று போட்டு என் போட்டோ போட்டிருந்தது.

ஒரு பெருமூச்சுடன் எழுந்தேன். தரையில் கால் பாவாமல் மிதந்தபடி பின்னால் இருந்த ரூமுக்குச் சென்றேன்.

அங்கேதான் நான் ரத்தம் குடிப்பதற்காக கொன்று வைத்திருந்த பெண் சவமாகக் கிடந்தாள்.

– ஆகஸ்ட் 2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *