கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்  
கதைப்பதிவு: January 25, 2023
பார்வையிட்டோர்: 15,550 
 
 

பெரும்பாலான தற்கொலை முயற்சிகள் அற்பக் காரணங்களுக்காகவே நடைபெறுகின்றன” என்கிறார் உளவியல் வல்லுநர் ஒருவர். சின்ன சின்ன பிரச்னைகளுக்கும் “இனிமேல் என்னால் இதை தாங்கிக் கொள்ள முடியாது’ ‘நான் எதுக்காக இனியும் வாழணும்? ” என்று நினைப்பவர் உண்டு.

உளர்றான் அந்த உளவியல் வல்லுனன்! எனக்கிருக்கும் பிரச்சனைகள் யாருக்கும் கிடையாது என்பதில் எனக்கு ஒரு ஐயமும் இல்லை. வீட்டில் மனைவிக்கு உடல்நல பிரச்னை, மகன் மன நல பிரச்னை, எனக்கு நோய் நொடி பிரச்னை, இதை விட பிரச்னைகள் வேறு என்ன வேண்டும்? பெரும்பாலான தற்கொலை முயற்சிகள் அற்பக் காரணங்களுக்காகவே நடைபெறுகின்றனவாம். என்ன ஒரு பேத்தல்!

நான் ஒப்புக் கொள்கிறேன். கடவுளின் படைப்பு மிக உயர்ந்தது தான். மிக அதிசயம் தான். எல்லாம் சரி. ஆனால் அதிலும் ஒன்று இரண்டு குறைகள் உண்டு. பிறப்பு, இறப்பு, இது இரண்டும் தான் அவை. பிறப்பை தவிர்க்க முடியாது. ஒப்புக் கொள்கிறேன்.

ஆனால், தாங்க முடியாத துயரம் வரும்போது, ஒருவனுக்கு அவன் விருப்பப் படி, சந்தோஷமாக இறப்பு வர, இறைவன் வரம் கொடுத்திருக்கலாம். ஆனால், அதை அந்த இறைவன் கொடுக்க வில்லையே. இது ஒரு பெரிய குறை இல்லையா?

எல்லோரும் சொல்லலாம். ஏன் தற்கொலை செய்து கொள்ளலாமே என்று. ஆனால் அதில் சில சிக்கல் இருக்கிறதே. இறக்காமல் போய்விட்டால்? யாராவது அவனை காப்பாற்றி விட்டால்?அல்லைது அவனது தற்கொலை இறப்பில் அவனுக்கு தாளாத வலி வந்தால்?

மன பாரங்களை குறைக்க, யோக சித்தர், பதஞ்சலி அவரது யோக சூத்திரத்தில், கொடுத்தது இது : ” யோகா! சித்த விருத்தி நிரோதகா! “- ” யோகம் செய்வது, மனம் அலை பாய்வதை, மன உளைச்சலை குறைக்க வல்லது” என்கிறார் அவர்!

எனக்கு தெரிந்து, அது எல்லாம் கேட்க நல்லா இருக்கும். ஆனால், கவைக்கு உதவாது. நானும் முண்டி அடித்து முயற்சி பண்ணி பார்த்து விட்டேன். ஒன்னும் ஆகலை. பின்னர், பக்தி மார்க்கத்தில், இறைவனே உன்னடியே சரண் என்றும் இருந்து பார்த்து விட்டேன். ஒரு மண்ணுக்கும் பிரயோசனமில்லை. என் பிரச்னை தீர்ந்த பாடில்லை. அதனால் முடிவு செய்து விட்டேன். இறந்து விடுவதென்று. இதில் மாற்று கருத்து இல்லை.

ஏதோ சில பல நாடுகளில் தற்கொலை செய்து கொள்ள அரசு அனுமதி இருக்கிறதாமே! பெர்ன்: சுவிட்சர்லாந்தில் வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள ‘டாக்டர் டெத்’ என்ற காப்சியூலை தனியார் நிறுவனம் வடிவமைத்துள்ளதாமே. இதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதலையும் வழங்கியுள்ளதாமே! சில நாடுகளில், டாக்டேர்களே, அரசு அங்கீகாரத்துடன் தற்கொலை செய்து கொள்ள உதவுகிறார்களாமே! அது மாதிரி இந்தியாவில் இருந்தால் என்னை போன்றவர்களுக்கு எவ்வளவு சௌகரியம்.?.

யாருடைய உதவி இருக்கிறதோ இல்லையோ, நான் தற்கொலை செய்து கொண்டு சாகப் போகிறேன். எல்லா ஏற்பாடும் செய்து விட்டேன். ‘டாக்டர் டெத்’ என்கிற காப்சியூலை, கள்ளத்தனமாக வெளிநாட்டிலிருந்து வரவழைத்தேன்.

ஒரு நாள் இரவு. எல்லோரும் தூங்கியாகி விட்டது. எனக்கு தனி அறை. எனக்கு பிடித்த பாடலை மெதுவாக மொபைலில் பாட விட்டேன். கட்டிலில் அமர்ந்து கொண்டேன். டாக்டர் டெத் என்ற காப்சியூலை எடுத்துக் கொண்டேன். பால் ஒரு டம்ளர். மாத்திரை போட்ட ஒரு நிமிடத்தில் உயிர் போய் விடுமாமே, வலியே இல்லாமல்.

மாத்திரையை வாயில் போட்டுக் கொண்டு, பாலை அருந்தினேன். சுகமான பாடல். மெதுவாக தூக்கம் கண்ணை அழுத்தியது மயக்கம்..அவ்வளவு தான் எனக்கு தெரியும்..


நான் இறந்து கொண்டிருக்கிறேன்.மெதுவாக, உடலிலிருந்து உயிர் பிரிவது போன்ற நினைவுகள் ஏற்பட்டது யாரோ என் உடலிலிருந்து உயிரை பிய்த்தெடுப்பது போல இருந்தது. இறைவன் தான். அல்லது அவன் அடியாட்கள். வேறு யாராக இருக்க முடியும்? லேசான வலி. என் உயிர் உடலிலிருந்து வெளியே வந்து விட்டது. தெய்வீக ஆற்றலால் ஆட்கொள்ளப்பட்டு மிதத்தல் போன்ற உணர்வு, ஒளியில் ஜொலிக்கும் ஆற்றல், அமைதி நிலை, சூடான பாதுகாப்பு, மரண வேளையின் அனுபவம் இதெல்லாம் ஒருசேர உணர்ந்தேன்.

கை காலை அசைக்க முடியவில்லை. கண்ணால் பார்க்க முடியவில்லை காதால் எதையும் கேட்க முடியவில்லை. வாய் திறந்து பேச முடியவில்லை. எந்த வாசனையும் தெரியவில்லை. தொடு உணர்ச்சி எதுவும் இல்லை. ஒரு ஜடமாக இருந்தேன்.மெதுவாக நான் எனது உடலிலிருந்து பிரிந்து ஒரு ஐந்தடி உயரத்தில் மிதந்தேன். மெது மெதுவாக என் கண்கள் திறந்தன. காது கேட்க ஆரம்பித்தது. ஒரு ஓங்கார ஒலியைகேட்டு மனம் பரவசம் ஏற்பட்டது. என் உடலை விட்டு என் உயிர் பிரிதலை உணர்ந்தேன்,

என் பக்கத்தில் யாரோ மிதப்பது போல தோன்றியது. வாராத தலை முடியும், கோரை பற்களும், மனிதர் அல்லாத தோற்றமும், யார் இவர்கள்? எனக்கு புரியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி அவர்கள் பின்னால் என்னை போக செய்தது. அவர்கள் தான் யம தூதர்கள் என பின்னால் அறிந்து கொண்டேன். கொஞ்ச நேரத்தில் அவர்கள் பாஷை எனக்கு மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது.

போகும் வழியில், விண்வெளியில் ஆன்மா தங்குதல் போன்று இருந்தது. ஏதோ நீண்ட சுரங்கவழிப்பயணம் ஒன்று மேற்கொள்ள ஆரம்பித்தேன். போகும் வழியெல்லாம், ஒளிமிக்க சிலரை தரிசித்தேன், யார் அவர்கள்? எனக்கு தெரியவில்லை. பிரம்மாண்ட ஜோதி ஒன்றை தூரத்தில், என் கண்ணெதிரே கண்டேன், கடந்த வாழ்க்கை ஒன்று ஒன்றாய் என் கண் முன்னே விரிந்தது., என் வாழ்க்கை இன்னும் முடிவடைந்து போகவில்லை என்று உணர்ந்தேன்.

போகும் வழியெல்லாம் ஒரு ஆறு கூடவே வந்து கொண்டிருந்தது. வைதரணி ஆறு என கருட புராணத்தில் படித்த ஞாபகம். சீழும், ரத்தமும், பிய்ந்த உடலும், தலைகளும், பார்க்கவே அருவருப்பாக இருந்தது. உயிரோடு பலர் ஆற்றில், முக்கி முனகி முண்டி அடித்து கரைக்கு வர முயற்சி செய்து கொண்டிருந்தனர். கரையில் இருந்த சில மாடுகளும், ஆடுகளும், நாய்களும், இனம் தெரியாத விலங்குகளும், மானுடர் போன்ற சிலரும் அவர்களை இழுத்துக் கொண்டிருந்தன(ர்) தொத்தல் பொத்தலாக இருந்த சில ஆடுகள், மாடுகள் இழுக்க, முடியாமல் விட்டு விலகின.

முன்னால் சென்று கொண்டிருந்த யம தூதரிடம் கேட்டேன். அவர்கள் சொன்னது : “இந்த விலங்குகள் எல்லாம் வைதரணி ஆற்றில் தவிக்கும் மானுட ஜன்மங்கள்செய்த புண்ணியங்கள்”

நான் கேட்டேன் : “நான் ஏன் இந்த ஆற்றின் வழியாக வராமல் கரை ஓரமாக வருகிறேன்?

அவர்கள் சொன்னது “நீ ஒரு பிரேத ஜன்மம். ஒருவர் இறந்து, அவரின் ஜீவ ஆத்மா மறுபடியின் ஏதாவது ஒரு உடலைபெற்று மறு ஜென்மம் அடைய வேண்டும். அவ்வாறு உடல் கிடைக்காமல் ஆத்மா அலைவதே பிரேத ஜென்ம தோஷம் ஆகும். உன் பிரேத ஜன்ம காலம் முடிந்த பிறகு தான் உனக்கு நரக லோக ப்ராப்தி.

நான் கேட்டேன் : “யாருக்கெல்லாம் இந்த பிரேத ஜன்ம சாப கெதி கிடைக்கும்”

யம தூதர்கள் சொன்னார்கள் : “நிறைய காரணங்கள் உண்டு. அதில் உனக்கு தற்கொலை செய்து கொண்டதால் பிரேத ஜன்ம தோஷம் உள்ளது. பிரேத ஜன்ம தோஷத்தால் உடலை இழந்த ஆத்மா, உணவின்றி, ஓய்வின்றி அகோர பசியுடனும், தாகத்துடனும் பிரேத ஜென்மம் எடுத்து பேயாய் அலையும்.

அதற்கு முன் நீ, உன்னுடைய பாவங்களுக்காக நரகத்தில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.அது என்ன என்பதை இறைவன் சொல்வார்.அதற்காகத்தான் உன்னை இழுத்து செல்கிறோம். அந்த தண்டனைகளில் ஒன்று தான் வைதரணி ஆறு. “

ஐயோ! இது என்ன கொடுமை! வாழ்க்கை கொடுமை என்று தற்கொலை செய்து கொண்டால், பிரேத ஜன்மமா?

பயந்து கொண்டே போய் நரகத்தை அடைந்தேன். அங்கு எனக்கு பிரேத ஜன்ம தண்டனை கொடுக்கப் பட்டது. அதை அனுபவித்த பின்னர், பூவுலகில் நான் செய்த பாவங்களுக்காக தண்டனை அனுபவிக்க ஆணை பிறப்பிக்க பட்டது. மீண்டும் பிரேத ஜன்மம் எடுக்க பூலோகத்திற்கே அனுப்ப பட்டேன்.

திரும்பிப் போகும் வழியில், வித விதமான நரகங்களை பார்த்தேன். அக்னி குண்டத்தில் சில பேரை தள்ளிக் கொண்டிருந்தார்கள். எண்ணையில் போட்டு சிலரை வறுத்துக் கொண்டிருந்தார்கள். பாம்பு, தேள், பூரான் இவைகள் சிலரை கடித்து குதறிக் கொண்டிருந்தன. மாடுகள் சிலரை முட்டிக் கொண்டிருந்தன. ஐயோ அப்பா, நான் பண்ணின பூர்வ ஜன்ம புண்ணியம், இந்த பாவ காரியங்கள் செய்யாமல் இந்த நரகங்களிருந்து தப்பித்தேன்.


நான் மீண்டும் பூலோகத்திற்கு வந்து விட்டேன். என் வீட்டு வாசல் முன்னால் மிதந்து கொண்டிருந்தேன்.

வீட்டு வாசலில் கூக்குரல் கேட்டது “ஐயோ! போயிட்டாரே! நான் என்ன செய்வேன்?”

“அட! இப்பத்தான் இறந்தேனா? ரொம்ப காலம் ஆனது போல இருந்ததே!”

அக்கம் பக்கம் வீட்டிலிருந்து யாரும் வரவில்லை. திரும்பிக் கூட பார்க்க வில்லை. அடுக்கு மாடி குடியிருப்புகள். மற்றவர் பற்றி அவர்களுக்கு என்ன வந்தது? அவரவருக்கு அவரவர் வேலை.

பார்த்துக் கொண்டேயிருந்தேன்! உறவுகள் வந்தன. சுற்றம் சேர்ந்தது. என்னை எடுத்துக் கொண்டு போய் எரியூட்டினர். சாம்பலானேன். உடல் எரிந்து சாம்பலானவுடன் உலகப் பற்றானது நீங்கிவிட்டது. அப்போது எனக்குப் பிண்டத்தால் ஆன சரீரம் உண்டானது. என் மகன் எனக்கு பிண்டம் போட்டான்.

முதல் நாள் போடும் பிண்டத்தால் தலை உண்டானது. இரண்டாம் நாள் போடும பிண்டத்தால் கழுத்தும், மூன்றாம் நாள் போடும் பிண்டத்தால் மார்பும், நான்காம் நாள் போடும் பிண்டத்தால் வயிறும், ஐந்தாம் நாள் போடும் பிண்டத்தால் உந்தியும் உண்டானது.

ஆறாம் நாள் போடும் பிண்டத்தால் பின்பாகமும், ஏழாம் நாள் போடும் பிண்டத்தால் குய்யமும் எட்டாம் நாள் போடும் பிண்டத்தால் தொடைகளும் ஒன்பதாம் நாள் போடும் பிண்டத்தால் கால்களும் பத்தாம் நாள் பிண்டத்தால் உடல் முழுவதும் உண்டானது.. இவ்வாறு பிண்டத்தாலான சரீரம் உண்டானாலும் என்னால் பேச முடியவில்லை.மற்றவர்களுக்கு நான் அசரீரி. பார்க்கவோ, கேட்கவோ, தொடவோ முடியாது.

பிண்ட உருவமான நான், வீட்டுக்கு வெளியே நின்று, வீட்டில் உள்ள என்னைச் சேர்ந்தவர்களையும் வீட்டுக்கு வந்து போகும் சுற்றத்தாரையும் பார்த்து ஏங்கினேன். பசியாலும் தாகத்தாலும் அலறிக் கொண்டு இருந்தேன் வருத்தத்துடன் செய்வதறியாது திகைத்து நின்றேன்.

பத்தாம், பதினொராம் நாள் என்னுடைய புத்திரன் பிராண முகமாகக் கொடுக்கப்பட்டவற்றை உண்டு, பதின்மூன்றாம் நாளில் மீண்டும் வந்த யமதூதர்களுடன் சென்றேன்.

பாசத்தால் கட்டப்பெற்ற நான், யமதூதர்கள் என்னை இழுத்துச் செல்லும் போது எனது வீட்டையும் சுற்றத்தாரையும் பார்த்துக் கொண்டே சென்றேன்.

மீண்டும் நரகலோகம். அங்கு எனக்கு தண்டனை.

சின்ன வயதில் நான் பெரியவர்களை இகழ்ந்து பேசியிருக்கிறேன். அதனால் ஏற்பட்ட பாவத்தின் தண்டனையாக வாயில் இருந்து புழுக்கள் உருவானது. அந்த சித்ரவதையை அனுபவித்தேன். பின்னர் பிற உயிர்களை வாட்டி வதைத்தவன் என்ற காரணத்தினால் எனக்கு கொடூரமான சரீரம் கிடைத்தது.


எல்லா தண்டனைகளும் முடிந்த பிறகும், எனது கர்மா என்னை விட வில்லை. பிரேத ஜன்மம் எடுத்தேன். என் குடும்பத்தையே ஆட்டுவிக்க ஆரம்பித்தேன்.

அப்போது, யம கிங்கரர்கள் பிரேத ஜன்ம தோஷம் பற்றி சொன்னது நினைவுக்கு வந்தது.

“இத்தகைய பிரேத ஜென்மம் எடுத்து, தனது குடும்பத்தில் உள்ளவர்களையும், சொந்தங்களையும் துன்புறுத்துவார்கள்.

முன்னோருக்கு திதி செய்யும் தினங்களில் வீட்டிற்கு வரும் முன்னோர்களை வீட்டில் நுழயவிடாமல் தடுத்து துரத்துவார்கள், முன்னோர்களுக்கு வழங்கும் படையலை அவர்களே பிடுங்கி உண்பார்கள். குடும்பத்திற்குரிய சொத்துகளையும், பொருள்களையும் குடும்பத்தார்கள் அனுபவிக்க விடாமலும், பிறரிடம் கொடுக்கவோ,விற்கவோ முடியாமல் வீணாக போகும்படி செய்வார்கள்.

மற்றும் தனது பிள்ளைககுக்கு குழந்தை பிறப்பதை தடுத்து வம்சத்தையே நாசமடைய செய்வார்கள், ஜுரம், கைகால்கள் வலிஉண்டாக்கி, உடல் வியாதிகளை கொடுத்து வருத்துவார்கள். தான் பிறந்த குலத்தையே அதிகம் வருத்துவார்கள்.பல துன்பங்களை தன் குலத்தார்க்கு இந்த பிரேத ஜென்ம ஆத்மாக்கள் கொடுப்பார்கள். நீ அந்த ஜன்மம் எடுக்க வேண்டும்”.


நான் அழுதேன். “இது என்ன கொடுமை? எனது பிரச்னைகளுக்காக என் உயிரை நான் மாய்த்து கொண்டேன். ஆனால், என் குடும்பத்தை அந்த தோஷம் விட்டு வைக்க வில்லையே! நானே என் குடும்பத்தை கெடுக்கிறேனே! இதற்கு என்ன வழி?”

அப்போது, வீட்டிற்குள்ளிருந்து ஒரு பண்டிதர் குரல் கேட்டது. “மறுஜென்னம் கிடைக்காமல் அலைந்து திரியும் பிரேத ஜென்ம தோஷம் அடைந்த ஆத்மாவை, அவர் குலத்தில் பிறந்தவர்கள் சரியான தானம், தர்ம யாகங்கள் செய்து அவர்களின் பிரேத ஜென்ம தோஷங்களை போக்கி மறுஜென்மம் அடைய செய்ய வேண்டும். இதுவே அவர் குலத்தார் படும் துன்பங்களுக்கு ஸ்ரீ கருட புராணம் கூறும் பரிகாரமாகும்.”

என் மகன் அதை கேட்டு, “அப்படியே செய்கிறேன்” என்று சொன்னான்.சொன்னபடி செய்தான். எனது சொத்துக்களை விற்று, ஏழைகளுக்கு அன்ன தானம் செய்தான், இல்லாதவர்களுக்கு வஸ்திர தானம் செய்தான. அம்மாவுடன் சேர்ந்து தான தர்மங்கள் பண்ணினான். முதியோர் இல்லங்களுக்கு, அனாதை ஆசிரமங்களுக்கு நன்கொடை கொடுத்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக என் பிரேத ஜன்ம தோஷம் என்னை விட்டு விலக ஆரம்பித்தது. ஒருநாள் என்னை விட்டு முழுவதுமாக விலகி விட்டது.அதுவரை என் சொந்தங்களையே பிடித்து ஆட்டிக் கொண்டிருந்த நான் விலகிக்கொண்டேன்.


அன்று வீட்டில் ஒரே கொண்டாட்டம். குதூகலம். நான் தான் காரணம். என் மகனுடைய செல்ல நாய், பிரெயாவுக்கு குட்டியாக, அதுவும் பெண் குட்டியாக மீண்டும் மறு ஜன்மம் எடுத்திருக்கிறேன். பிரேத ஜன்மம் போயாச்சு. இன்னும் இரண்டு நாட்களில், எனது முந்தைய ஜன்ம நினைவுகள் என் நினைவிலிருந்து அழிந்து விடும். புதுப் பலகை. எழுத ஆரம்பிக்க வேண்டும்.

எனது புதிய கர்மாக்கள் மீண்டும் தொடக்கம், பழைய கர்மாக்களுடன் சேர்நத்து அனுபவிக்கப் போகிறேன் தொடங்கட்டும் புது வாழ்க்கை. லொள்! லொள்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *