சாகப் பிடிக்காதவர்கள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: December 24, 2016
பார்வையிட்டோர்: 59,336 
 

என்ன இருந்தாலும் தாம்பரம்னா தாம்பரம்தான். அந்த அதிகாலைப் பனியும் சில்லு காத்தும் ஸிட்டில கிடைக்குமா சொல்லுங்க? அதுவும் போன மாசம் முழுக்க மதுரை திருச்சின்னு ஆபீஸ் விஷயம் டூர்ல இருந்த எனக்கு இந்தக் குளிர் ரொம்பவுமே இதமா இருந்துது. நேத்து ராத்திரி தான் தாம்பரம் வந்தேன். ஒரு சின்ன வாக் போலாம்னு வெளியே வந்திருந்தேன். மனைவி நச்சரிப்புப் தாங்காம எடுத்த வந்த மப்ளர் கழுத்தைச் சுற்றி ஸ்டைலாகக் கிடந்தது.

அந்தக் குளிருக்கு ஒரு தம் போட்டா இன்னும் சுகம்னு தோண காமராஜபுரம் பஸ் ஸ்டேண்ட் பக்கத்துல இருந்த டீ கடைக்குப் போய் ஒரு ஸிகரெட் வாங்கிப் பற்ற வைத்தேன். அதை ஒரு இழுப்பு இழுத்து நுரையீரலில் புகையை நிரப்பி நாஸி வழியாக வெளியேற்றுகையில் தான் விக்டரைப் பார்த்தேன். அதிர்ந்தேன்.

என் கையில் இருந்த ஸிகரெட் கீழே விழுந்தது. என் திறந்த வாய் மூடவில்லை. உடம்புல மின்சாரம் பாய்ந்தது போல ஒரு அதிர்வு.

விக்டர்! என்னோட காலேஜ் மேட். ஏர் போர்ஸ் மேட். ரெண்டு பேரும் ஒரே வருஷத்துல தான் ஏர் போர்ஸ் ஜாயின் பண்ணினோம். ஒரே வருஷத்துல தான் காண்ட்ராக்ட் பீரியட் முடிஞ்சு வெளியவும் வந்தோம். நான் மார்கெட்டிங் லைன்ல போயிட்டேன். விக்டர் ஒரு மொபைல் கடை வைத்துவிட்டான். தாம்பரம் கேம்ப் ரோட் கிட்ட. நல்ல பெரிய கடை. நல்ல சேல்ஸ் கூட. இப்ப அத கொஞ்சம் விரிவு செஞ்சு கம்ப்யூடர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் கூட வைத்து விட்டான்.

அதுக்காக நான் ஏன் அதிர்ச்சி அடையணும்னு நீங்க முணுமுணுக்கறது கேக்குது. இன்னிக்குக் காலைல வீட்ட விட்டு வாக்குக்கு வெளியே வந்த போது என் மனைவி மப்ளர் மட்டுமா தந்தாள்? என் காலேஜ் மேட் விக்டர் செத்துப் போன செய்தியையும் சேர்த்துத் தந்தாள். மேற்குத் தாம்பரத்துல ப்ரிஜ் மேல நடந்த ஒரு விபத்துல விக்டர் போயிட்டானாம். அதுனால வாக் போயிட்டு வந்த பிற்பாடு அவங்க வீட்டுக்கு நான் போயி துக்கம் விசாரிக்கணும்னும் சொல்லிட்டா.

அவ செத்துப் போனதா சொன்ன விக்டர் என் எதிர்ல! என் அதிர்ச்சிக்கு காரணம் புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன். சரி, கதைகள்ல வர்ற மாதிரி, நண்பனைப் பார்க்க விக்டர் ஆவிதான் வந்திருக்கு போல என்று நான் நினைத்துக்கொண்டிருந்த போதே “டே மச்சான்! எப்படா வந்த?” என்று கேட்டவாறே அருகில் வந்த விக்டர் ஆவி .. சேச்சே.. விக்டர் கடைக்காரரிடம் “ ஒரு பில்டர் கொடுப்பா” என்று கையை நீட்டினான்.

நெருப்பைக் காட்டினால் பேய்கள் ஓடி விடும் என்று படித்திருக்கிறேன். இங்க என்னடானா பேயே ஸிகரெட் பிடிக்கிறதே! கலிகாலம்! (ஆமாம் கிறித்துவர்களுக்குக் கலி காலம் உண்டா?)

“மச்சான் எப்படா வந்த டூர்லேர்ந்து? எனக்குத் தெரியவே இல்லையே. சிஸ்டர் கூட சொல்லலையே!”

“இல்லை விக்டர்! நேத்து நைட்டு தான் வந்தேன். இன்னைக்கு உன் வீடு வரைல வரலாம்னு தான் இருந்தேன்”என்று இழுத்தேன். உன் சாவுக்குத் துக்கம் விசாரிக்க வரலாம்னு இருந்தேன் என்று சொல்ல வந்ததை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

“ம்ம்ம்… எல்லாம் விதி! யாருக்குத் தெரியும் இப்படி ஆகும்னு? திடீர்ன்னு குறுக்க வந்த வண்டி மேலதான் தப்பு.” என்றான். நான் ஆச்சர்யத்தின் உச்சிக்கே போய்விட்டேன். தான் செத்ததுக்கு குறுக்க வந்த வண்டிதான் காரணம் என்று செத்தவனே சொல்கிறான். நானும் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்!

“அப்புறம் சிஸ்டர் எப்படி இருக்காங்க? கேட்டதா சொல்லு. வீட்டுக்கு வா. ஒரு பதினொரு மணிக்கு மேல. அப்புறம் என்கிட்டே சில்லறை இல்ல. இந்த சிகரெட்டுக்கு நீயே காசு கொடுத்திடு” என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் கூட காத்திருக்காமல் விடு விடு என்று நடந்து அந்த அதிகாலைப் பனிக்குள் மறைந்தான்.

நான் மந்திரிச்சு விட்ட கோழி கணக்கா ரெண்டு சிகரெட்டுக்குக் காசு கொடுத்தேன். கடைக்காரன் என்னைபார்த்து “பாவம் ஸார் அவரு! என்ன வயசு ஆச்சுன்னு இப்ப டெத் வரணும்? இன்னும் வாழ்ந்திருக்கலாம்” என்றான். என்னைக்குத் துணிவே துணை படத்தோட ஆரம்பக் காட்சிகள் நினைவுக்கு வந்தன. ஆண்டவா! என்ன சோதனை! காமராஜபுரத்துல பேய்களா! அதுவும் சர்வ சாதரணமாக உலவுதா! எல்லாரும் அத சகஜமாக எடுத்துக்க வேற செய்யுறாங்களே! தெய்வமே! என் உடம்புல திரும்பவும் அதே மின்சாரம்.

திடீரென்று கை சில்லிட்டது போலத் தோன்றவும் பாக்கெட்டுக்குள் விட்டுக் கொண்டேன். கையில் மொபைல் நிரடியது. திடீரென்று ஒரு எண்ணம்! எடுத்து விக்டர் வீட்டு லேன்ட்லைன் நம்பரைப் போட்டேன். சில ரிங்குகளுக்குப் பின்னர் போன் எடுக்கப்பட்டது.

“ஹல்லோ” விக்டர் அப்பா!

“அங்கிள்! நான் வெங்கட்! விக்டர் பிரெண்ட்”

“சொல்லு வெங்கட்! என்ன விஷயம்? ஏன் பதறினாபோலப் பேசற?”

“ஒண்ணுமில்லை அங்கிள். சும்மா வாக்கிங் வந்தேனா. ரொம்ப குளிர். அதுனால மூச்சு வாங்குது. சும்மாதான் போன் பண்ணினேன். விக்டர் இருக்கானா?”

அங்கிள் சிரித்தார். “எப்படித்தான் ஏர் போர்ஸ் காரங்க எல்லாம் ஒரே மாதிரி இருக்கீங்களோ தெரியல. அவனும் ஒன்னிய மாதிரிதான். வாக்கிங் போறேன்னு கிளம்பிப் போயிருக்கான். அரை மணில வந்திருவான். வந்தாவுட்டு போன் பண்ணச் சொல்றேன்”.

எனக்குப் பாவமாக இருந்தது. அங்கிளுக்கு எப்படியும் எழுபது வயது இருக்கும். மகன் இறந்த செய்தியைத் தாங்க முடியல போல. இன்னும் உயிரோடவே இருக்கறா மாதிரி நெனச்சுக்கிட்டு வாழ்ந்துகிட்டு இருக்கார். பாவம்

“சரி அங்கிள்” என்று சொல்லி போனை கட் பண்ணி விட்டேன். மேற்கொண்டு வாக்கிங் போகப் பிடிக்காமல் வீட்டுக்குத் திரும்பினேன்.

கிச்சனில் காப்பி மணம். நான் செலுத்தப்பட்டவன் மாதிரி கிச்சனை நோக்கிச் சென்றேன். மனைவி ரெடியாக வைத்திருந்த காப்பியை எடுத்துத் தந்தாள்.

அந்த குளிருக்கும், அதிர்ச்சிக்கும் காப்பி மருந்து போல இருந்தது. இரண்டு மடக்குக் குடித்துவிட்டு மனைவியைப் பார்த்து “விக்டரை வழியில் பார்த்தேன். அவன் கிட்ட கொஞ்ச நேரம் பேசினேன் ” என்று சொன்னேன்.

அவள் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைவாள் என்ற என் நினைப்பில் மண் விழுந்தது. அவள் “ இந்த நேரத்துல அவங்க அப்பா விக்டர் சீனியர் இறந்து போனதுக்கு துக்கம் விசாரிச்சீங்களா? இப்படி எடக்கு மடக்க ஏதானும் ஏங்க பண்ணறீங்க?” என்று அலுத்துக் கொண்டாள்.

என் கையில் இருந்த காப்பி டம்ளர் கீழே விழுந்தது.

– மே 2015

Print Friendly, PDF & Email

1 thought on “சாகப் பிடிக்காதவர்கள்

  1. தங்களின் ” சாக பிடிக்காதவர்கள் ” என்னை நன்றாக குழப்பி விட்டது. கதையின் முடிவு சரியாக புரியவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *