கைக்கிளைப்பதுமை…!

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்  
கதைப்பதிவு: April 25, 2014
பார்வையிட்டோர்: 70,859 
 
 

கதைக்குள்ள போகுறதுக்கு முன்னாடி, நீங்க என்ன பத்தி கொஞ்சமாவது தெரிஞ்சிக்கணும்… நான் யார்? என்னோட ‘ஏய்ம்’ என்ன, என்னோட பழக்கவழக்கங்கள் எல்லாமே.. என்ன சொல்லட்டுமா..?

என் பெயர் மோகன். மாநிறம், மெலிந்த தேகம், முன்நெற்றி கொஞ்சம் ஏத்தமா இருக்கும், “உன்னோட கண்கள் எப்பவுமே என்ன வசியம் செய்யுற ஏவல் பொருள்ன்னு” கீதா சொல்லிகிட்டே இருப்பா, அதே மாதிரி என்னோட சிரிப்பு ரம்யாவுக்கு ரொம்பவே பிடிக்கும். என்ன டா இவன் ஒரே பொண்ணுங்க பெயரா சொல்லிகிட்டே போறானேன்னு பாக்குறீங்களா? என்ன செய்ய எனக்கு கேர்ள் பிரண்ட்ஸ் அதிகம். அப்பப்ப அந்த அந்த வயசுக்கு வரவேண்டிய ஈர்ப்பு, காதல் இதெல்லாம் எனக்கு கொஞ்சம் ‘ஓவர் ப்ளோவா’ யிருக்கு. ‘ட்ரூ லவ்’ கொறஞ்சது அஞ்சாவது இருக்கும். எனக்கு காதல் ரொம்ப பிடிக்கும், அதுல தோல்வியடையறதும் ரொம்பவே பிடிக்கும். தோல்வியடையும் பொழுது அந்த வலி; அனுபவிக்க ரொம்பவே பிடிக்கும். அதுக்காக ஏனோ தானோன்னு லவ் பண்ணமாட்டேன். உண்மையா லவ் பண்ணுவேன், அப்ப தானே அந்த தோல்வியோட வலிய முழுமையா அனுபவிக்க முடியும். அதே மாதிரி, எக்ஸ்-லவ்வரோட கல்யாணத்துக்கு போக பிடிக்கும்.. என் முன்னால அவ இன்னொருத்தனோட மனைவியாகுற நேரத்துல, எனக்கு ஏற்படுற வலிய அனுபவிக்க பிடிக்கும். என்னடா இவன் “கிறுக்கன்” மாதிரி பேசுறான்னு நினைக்குறீங்களா? உண்மை.. சத்தியமான வார்த்தை.. ஆனா, நான் ‘கிறுக்கன்’ அல்ல.. இந்த உலகத்துல இருக்குற எல்லா மாதிரியான உணர்வையும் நான் அனுபவிக்கனும் அப்படின்னு ஒரு தேடல் எனக்குள்ள. சந்தோசம், வெற்றி, தோல்வி, காமம், காதல், துரோகம், நட்பு இப்படி பற்பல உணர்வுகள நான் தேடி போய் அனுபவிப்பேன்.. அதுல, நோ டவுட் அட் ஆல்.

என்னோட மெயின் ஏய்ம் நான் ஒரு பெரிய பத்திரிகையாளனாகனும். அதுக்கு உண்டான முயற்சிகள் தான் இப்ப போயிட்டு இருக்கு. தற்போதைய நிலமை, நான் சென்னை மாநகரின் ஒரு பிரபலமான தொலைக்காட்சி அலைவரிசையில் ‘டெக்னிக்கள் அசிஸ்டண்டா’ இருக்கேன்.. கிட்டத்தட்ட பத்து ப்ரோக்ராம் வொர்க்ஸ் போகுது. அதுல ஒரு நிகழ்ச்சி எனக்கு ரொம்பவே பிடிக்கும். விரும்பி வேலை செய்வேன். நாட்டுல நடக்குற அவலங்கள, நிகழ்வுகள, விநோதங்கள மக்களுக்கு அப்பட்டமா வெளிக்காட்டுற நிகழ்ச்சி அது. அப்பறம், கரண்ட் லவ்வர் பேரு ‘சந்தியா’. ஒத்துவந்தா நிரந்தர மனைவியும் அவ தான். அவகிட்ட என்னோட கிறுக்குத்தனங்கள ஒன்னுவிடாம சொல்லியிருக்கேன். ஹெர் ரிப்ளை இஸ் ஜஸ்ட் எ ஸ்மைல். என்னபத்தின அறிமுகம் போதும்னு தோணுது. உங்க மனசுக்குள்ளையும் என்னோட உருவம் அவங்க அவங்க கற்பனைத்திறனுக்கு ஏற்றார் போல் பளிச்சிட்டிருக்கும். இனி கதைக்குள்ள போவோமா?
அந்த நாள் இன்னும் என் நினைவுல இருக்கு. ஒரு வினோதமான கடிதம் எங்களோட தொலைகாட்சி அலுவலகத்திற்கு வந்தது. அது ஒரு மொட்ட கடுதாசி..

அதில் நாங்கள் கண்ட வாக்கியங்கள் சில கீழே…

”அன்புடையீர் வணக்கம்.. தங்கள் தொலைகாட்சியின் நிகழ்ச்சிகளை குறிப்பாக தங்களுடைய நிகழ்ச்சியை தவறாமல் காணும் எண்ணற்றோர்களில் அடியேனும் ஒருவன். பொள்ளாச்சி அருகில் உள்ள ‘…………….’ கிராமத்தில் ஒரு பாழடைந்த வீடு உள்ளது…அதன் ஆயுசு சுமார் பல நூற்றாண்டுகள் இருக்கும். அங்கே அமானுஷியமான விஷயங்கள் அரங்கேறுகின்றது என்னும் கருத்து இங்கே இந்த கிராமத்தில் வழக்கில் உள்ளது. அதை நீங்கள் விசாரித்து சற்றே போக்கினால் தேவலாம்.. நம்பிக்கை இருந்தால் பயணம் மேற்கொள்ளுங்கள்… வாழ்த்துக்கள்….!”

அக்கடிதத்தை படித்து முடித்தவுடன் எனக்குள் ஒரு விதமான ஆவல் தொற்றிக்கொண்டது. மற்றவர்கள் அதை ஒருவாறு ஓதிக்கிவிட்டனர் என்றே சொல்லவேண்டும். அவர்களை பொறுத்தவரை அது ஒரு மொட்டக்கடுதாசி, அதுவும் அதில் உள்ள சில சொற்களின் வயது சிலநூறு வருடங்களை தாண்டும். எவரும் நம்பத்தயங்கினர். “ஏதோ வேலையற்றவன், சும்மா இவர்களை கலாய்க்கின்றான்” என்பது என்னைத்தவிர அனைவரின் எண்ணமும். அதை ஒருவாறு அனைவரும் மறந்தேவிட்டனர். ஆனால் எனக்குள், அது விதையாய் முளைத்து, கிளைவிடத்துவங்கி, ஆலமரமாய் விஸ்தாரித்து அடிவிழுது விழுந்து தொங்கின.

முட்டி மோதி ஒருவழியாக ‘பெர்மிஷன்’ வாங்கிவிட்டேன். ஆனால், எவருக்கும் அதில் நம்பிக்கையில்லை. வேண்டும் என்றால் நீயே அத ஒரு ஆர்டிக்கலா ஷூட் பண்ணிட்டுவா என்று சொல்லிவிட்டார் ‘கிரியேட்டிவ் ஹெட்’. துணைக்கு கேமரா மேன் வேறு. கிளம்பும் முன், “கண்டிப்பா மோகன் ஏமாறத்தான் போறான்… இட்ஸ் ஆல் எ வேஸ்ட் ஆப் டைம்” என்ற ஏளன சிரிப்பொலிகளின் சத்தம் என் முதுகில் முரசுகொட்டின.
பயணம் இனிதே துவங்கியது. உடன் வரும் கேமரா மேன் சேகருக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. கடனே என்று பயணம் செய்தான். சில்லென வீசும் காற்று, மரங்களில் குயில்களின் கானம் என்று எங்களுக்கு பொள்ளாச்சியை அறிமுகம் செய்தது ‘இயற்கை’.

அங்கே இருந்து சில மயில்களே, அந்த கிராமம் வந்துவிடும். உற்சாகம் பொங்கியது, ஆவலும் எண்ணவோட்டமும் என்னைவிட வேகமாய் அந்த கிராமத்தை நோக்கி விரைந்தன.. ஒருவழியாய் வந்து சேர்ந்துவிட்டோம்.
எழில் கொஞ்சும் கிராமம். பச்சைபசேலென இயற்கை அன்னை தன்னுடைய மடியை விரித்து படுத்துக்கொண்டிருப்பதை போல் ஒரு பிரமிப்பு.

”சேகர்… அட்லாஸ்ட் வி கேம். சிகரட்..???”
”அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… கொஞ்சம் சீக்கிரம் விசாரிக்கலாமா …?”

”ஏன் டா அவசரப்படுற…?”

”அவசரப்படாமா… என்ன செய்ய? ஒரு விஷயம் உண்மையா பொய்யானே தெரியமா இதுவரைக்கும் கூட்டிகிட்டு வந்துட்ட… அந்த ஆள் வேற என்ன உன்கூட அனுப்பிட்டான்… இல்லனா இந்நேரம் நான் ஸ்மிதா கூட அவ வீட்டுல….”
”அப்படி சொல்லு… இது தான் உங்க கோவத்துக்கு காரணமா…?”

”பின்ன என்ன டா.. இந்த மாதிரி விஷயங்கள எப்ப வேண்ணும்னாலும் சூட் பண்ணிக்கலாம்.. பட் என் ஸ்மிதா தனியா அதுவும் அவ வீட்டுல, அதுவும் எனக்கு பிடிச்ச பிங்க் கலர் ஷார்ட் ஸ்கிர்ட்ல… ..”

”மச்சி.. எப்படி டா…? ஸ்கிர்ட் கலர் கூட … விட்டா…….?”
”இடியட்.. இப்ப தான் ‘வாட்ஸ் அப்’ள ஷேர் பண்ணா….”

”நான் பாக்கலாமா …..”

”அது எனக்கு மட்டும் தான்… வந்த விஷயத்த பாக்கலாமா..?”

”கல்யாணம் பண்ணிக்க அப்பறம் டெய்லி பாக்கலாம் ஷார்ட் ஸ்கிர்ட்ல ..”

” மோகன்.. ஷி இஸ் நாட் பார் மேரேஜ்.. நானே கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொன்னாலும் அவ ஓகேன்னு சொல்ல மாட்டா..”

பேசிக்கொண்ட நாங்கள் இப்பொழுது அந்த பாழடைந்த வீட்டின் முன் நின்றோம்..
”மச்சி.. ஒருவேள நமக்கு வந்த லெட்டெர் உண்மையா இருக்குமோ…?” – முதல்முறையாக சேகர் என் எண்ணங்களுடன் ஒற்றுப்போனான்.

சில இடங்களை பார்க்கும் பொழுது அந்த இடங்களுக்கு நாம் ஏற்கனவே வந்ததை போல் தோன்றும். அந்த ஊரும் எனக்கு அப்படித்தான் தோன்றியது.. குறிப்பாக அந்த பாழடைந்த வீடு..

சேகரை காமெராவை ஆன் செய்யச்சொல்லி அவ்வீட்டிற்குள் போகும் முன் , “தம்பி….” என்னும் ஒரு நடுங்கிய குரல் எங்களை நிறுத்தியது.. திரும்பிய பொழுது அங்கே தொண்ணூறு வயது மதிக்கத்தக்க ஒரு கிழவனார் நின்றுக்கொண்டிருந்தார்.

”யாரு தம்பிகளா நீங்க…? இந்த வீடுகுள்ளலாம் போகக்கூடாது.. இங்க ரொம்ப காலமா பேய்கள் குடியிருக்குங்க…”
”சுத்த மூடநம்பிக்க தாத்தா… பேயாவது பிசாசாவது…” – இது சேகர்.

”அப்படி பேசாத தம்பி உனக்கு இவங்களோட கத தெரியாது… தெரிஞ்சா நீயே நம்புவ…”
”சுத்த அம்பக் தாத்தா இதுலாம்….”

”கொஞ்சம் இரு சேகர்.. தாத்தா எங்களுக்கு இந்த வீட்டோட வரலாறு தெரியனும்… சொல்லுறீங்களா…?”
”எனக்கு தெரிஞ்சத சொல்லுறேன் பா… ஆனா இங்க வேண்டாம்… முதல்ல நாம இந்த தெருவவிட்டே போகலாம்…” – என்று சொல்லிவிட்டு பதிலைக்கூட எதிர்பாக்காதவாறு நடக்கலானார். ஒரு ஆலமர நிழலின் திண்ணையில் அமர்ந்தார். எங்களையும் அமரச்செய்தார். சீவலை மென்றுக்கொண்டு, பேச ஆரம்பித்தார்.

”தம்பி சுமார் ஒரு ஐநூறு வருஷத்துக்கு முன்னாடி… இந்த ஆனைமலை சுத்துவட்டாரத்த “நாணன்”ற மன்னன் ஆட்சி செஞ்சான்.. அவன் கொஞ்சம் கொடூர புத்தி உள்ளவன்…மக்களை ஒரு மாதிரி அடிமையா வெச்சிக்கிட்டு இருந்தான்… அவன் கொடுக்குற இம்சைகளலாம் தாங்கிகிட்டா அவன் அந்த மக்கள நல்ல படியா பார்த்துப்பான்… அந்த காலத்துல நீங்க பார்தீங்கல்ல அந்த தெரு அக்கரகாரமா இருந்துச்சி….”
”என்ன தாத்தா ஐந்நூறு வருஷமாவா அந்த தெருவும் வீடும் இருந்துச்சு..? கத விட்டாலும் பொருத்தமா விடனும்…” – மறுபடியும் சேகர்.

”சத்தியம் தம்பி… அந்த காலத்துல கட்டுன வீடுங்க அம்புட்டு உறுதியானதுங்க….”
”அப்ப ஐநூறு வருஷமா நீங்களும் இருக்கீங்களா?? என்னவோ நேர்ல பார்த்தா மாதிரி சொல்லுறீங்க…?”

”கிண்டல் பண்ணாதீங்க தம்பி… யாருமே போகாத தெருவுல நீங்க ரெண்டு பேரும் நடந்துபோறத பார்த்து தான் பதறிப்போய் வந்து உங்கள தடுத்தேன்… நீங்க என்னடானா என்னையே கிண்டல் பண்ணுறீங்க?…” – தாத்தா சூடானார்..
”கோச்சிகாதீங்க தாத்தா இவன் எப்பவும் இப்படி தான் .. நான் நம்புதேன், நீங்க சொல்லுங்க…”

”என்னோட எள்ளுதாத்தா அந்த காலத்துல மன்னனோட அரசபையில வேல செஞ்சவரு… வழி வழியா அவர் சொன்ன கதைகள தான் எனக்கும் எங்க அப்பாரு சொன்னாரு.”
சில வினாடி மௌனம். மெல்ல அவரே “கேக்குதிகளா … சொல்லனுமா வேண்டாமா…?”

அவர் கேட்ட விதம் சேகருக்கு மட்டும் அல்ல எனக்கும் தான் சிரிப்பை ஏற்படுத்தியது. நல்லவேளை முறுவலை தாத்தா பார்க்கவில்லை..
”கேக்குறோம்… சொல்லுங்க….”

”அவனுக்கு பொண்ணுங்க பித்து அதிகமாம்… எதாவது ஒரு பொண்ண கண்டுட்டானா அவனோட தளபதீங்க அந்த பொண்ண குதுரையில கவர்ந்துகிட்டு வந்துடுவாங்களாம்.. நீங்க பார்த்தீங்களே அந்த பாழடைஞ்ச வீட்டுல ஒரு பொண்ணு, அம்புட்டு அழகாம்.. பேரு கயல்மதி. சங்கீதம் சரளமா வருமாம்.. அவ பாடுனா ஊரே அசந்து போயிடும் போல… அந்த பொண்ணு தற்செயலா ராஜா கண்ணுல பட்டிருக்கா… அப்பறம் என்ன…? தளபதீங்க அவள இழுத்துகிட்டு போய் ராஜாவோட அந்தபுரத்துல தள்ளி இருக்காங்க… ராஜா இஷ்டம் போல அந்த பொண்ண நாசம் பண்ணி அனுப்பிட்டாரு.. சின்ன பொண்ணு பா, சித்தபிரம்ம பிடிச்சு, துணியெல்லாம் கிழிஞ்சு ரோட்டுல நடந்துவந்திருக்கா, மார்பெல்லாம் தெரிய. இத பார்த்த அந்த பொண்ணோட அப்பா அம்மா பதறிப்போயிட்டங்க.. எதுவும் சரி ஆகல.. ஊரெல்லாம் இதே பேச்சு, ராஜா கையாளுங்கெல்லாம் அந்த பொண்ண அம்மனம்மா பார்த்தத பத்தி இவங்க காதுபட பேச, என்ன நினைச்சாங்களோ அவமானம் தாங்க முடியாம அந்த பொண்ண அவங்க வீட்டு கினத்துளையே மூழ்கடிச்சு கொன்னுட்டாங்க.. அந்த ராஜாவ எப்படியும் பழிவாங்கிடனும்ன்னு நினைச்ச அந்த பொண்ணோட அண்ணன், ஒரு தனி குழுவ உருவாக்கினானாம். அவங்க அண்ணனுக்கு வள்ளுவன போல வரணும்னு ஆசையாம், அம்புட்டு அற்புதமா கவித பாடுவானாம். கவிதையெல்லாம் மூட்டக்கட்டிட்டு ராஜவ பழிவாங்க திட்டம் போட்டானாம்… அவன் கூட்டத்துல இருக்குற ஒருத்தன் பொன்னுக்கும் பொண்ணுக்கும் ஆசைப்பட்டு ராஜாகிட்ட போட்டுக்கொடுக்க, அவளோட அண்ணன துடிதுடிக்க கொன்னுட்டார் ராஜா.. கற்பிழந்து பொண்ணும் போயிட்டா, இவங்களுக்கு ஆறுதல் சொல்லவிருந்த ஒரே பையனும் போயிட்டான், இனி அந்த ரெண்டு வயசான ஜீவன் என்ன பண்ணும்.. புருஷனை மந்திரங்களையெல்லாம் சொல்லச்சொல்லி பொண்டாட்டி தீக்குளிச்சா, அவள அனைச்சபடியே புருஷனும் உயிர்துறந்தான். ரெண்டு பேரும் தீக்குளிச்சபடியே கிணத்துல விழுந்து இறந்தாங்க..”
”செம ஸ்டோரி தாத்தா.. இத மட்டும் புக்கா போட்டீங்கன்னா அல்லும்….”

நிஜமாகவே அந்த பெரியவர் கோபம் கண்டுவிட்டார்.. “நம்புனா நம்புங்க தம்பி… உண்மையாவே அந்த வீட்டுக்குள்ள பேய்கள் நடமாட்டம் இருக்கு… நம்பிக்க இல்லனா போய் பாருங்க… ஆன ஒன்னு உசுரோட திரும்பமாட்டீங்க, இது மாதிரி சம்பவம் நிறையவாட்டி நடந்திருக்கு… ” விருட்டென்று சென்றுவிட்டார்.
அவரைத்தொடர்ந்து ஊரில் பலரை விசாரித்துவிட்டோம், பலரும் பல்வேறு கதைகள் சொன்னார்கள். ஆனால், அனைத்து கதைகளிலும் ஆதாரக்கரு ஒன்றே ஒன்று தான் அது, “அந்த வீட்டில் பேய்கள் நடமாட்டம் உள்ளது” என்பதே. மேலும் கூடுதல் தகவல் பத்து வருடத்திற்கு முன் ‘தொல்லியல்’ துறையை சார்ந்த இருவர் அவ்வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன், சேலை விற்க சென்ற வட இந்தியன் ஒருவன் கிணற்றடியில் ரத்த வெள்ளத்தில் மிதந்தான். அதிலிருந்து அவ்வீட்டை சுற்றி ஒரு வகையான அச்சம் நிலவியது என்னவோ உண்மை தான். கட்டுக்கதைகளிலும் மக்கள் நிஜங்களை கண்டனர்.

மன்னன் நானனைப்பற்றி என் கைபேசியில் உள்ள கூகுள் கொடுத்த வரிகள்,
“Legend tells of the origin of this temple. Anaimalai, a place near Pollachi, was earlier ruled by a king called Naanan. He had a very special mango tree in his farm on the Aaliyar riverside, which he was very fond of. He was so particular that nobody was allowed to use neither its mangoes nor its leaves. Once, a group of girls were having their bath in the Aaliyar river and saw a mango floating on the river which belonged to this mango tree. In anxiety, one of the girls picked the mango and ate it; even after several pleadings made by her father, the king sentenced her to death. After some time, the villagers in that particular area made a female figure in lying state in remembrance of the innocent girl on the graveyard sand and started worshipping her. In due course, she was worshipped by the name “Maasani”. Later Kozhinkhosargal defeated king Naanan and destroyed that particular mango tree.”

பேய் பிசாசுகளில் நம்பிக்கையற்ற சேகருக்கு அவ்வீட்டின் உள்ளே செல்ல ஆவல் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து அன்று இரவு அவ்வீட்டை விஜயம் செய்ய திட்டம் தீட்டினோம். அந்த கொடிய இரவும் வந்தது. சேகர் கேமராவுடன் தயார் நிலையிலிருந்தான். ஊரில் உள்ள அனைவரும் தூங்கிவிட்டனர் என்பதை ஊர்ஜிதம் செய்துவிட்டு அத்தெருவில் நடக்கத்துவங்கினோம். அப்பொழுது தான் கண்டோம், அத்தெருவில் அந்த பாழடைந்த வீட்டை தவிர வேறு வீடுகள் இல்லை. வெறும் மண்மேடுகளும், பாம்புபுற்றுகளும் சூழப்பட்ட தெருவது.
வீட்டின் முன்னே நின்றோம், மணி சுமார் பதினொன்றரை. வீட்டின் வாயிலை மண்மேடு ஒன்று மறைத்திருந்தது, அதில் பாம்புபுற்றுகள் கம்பீரமாய் காட்சியளித்தன. ஆங்காங்கே பாசிகளும், சின்னஞ்சிறு செடிகள் ஏற்றயிரக்கமாய் முளைத்திருந்தது. வீட்டின் வாயிலில் ஒரு பாம்பு ‘சங்குசக்கரம்’ போல் சுற்றிக்கொண்டு அமர்ந்திருந்தது. அதன் உடலை தீண்டிவிடாமல் இருவரும் உள்ளே கவனமாய் சென்றோம்.

வாயிலில் நுழைந்தவுடன் என்னுள் ஏதேதோ குரல்கள் ஒலிக்கத்துவங்கியது. கண்ணின்மனிகள் இவ்வீட்டை புதுப்பொலிவுடன் காணத்துவங்கியது. ப்ரோகிதர் ஒருவரும் அவரின் மனைவியும் தங்களுடைய மகளின் சங்கீதத்தை ரசித்தவாறு அமர்ந்திருந்த காட்சிகள் தென்பட்டது. அவர்களின் மகனோ கவிதையில் லயித்திருந்தான். என்ன இது அக்கால வாழ்க்கை கண்முன் விரைகின்றதே என்று கண்களை கசக்கிவிட்டு பார்த்தேன், இப்பொழுது பொலிவிழந்த வீடு காட்சியளித்தது, அருகில் சேகர் காமெராவை செலுத்தியவாறு.
இருவரும் மெல்லமெல்ல அடியெடுத்து உள்ளே சென்றோம். அங்கே உடைந்துப் போன ரசம்படிந்த பழம்பெரும் கண்ணாடியில் என் முகம் தெரிய போராடிக்கொண்டிருந்தது. அதை உற்றுநோக்கிகொண்டிருக்கும் பொழுதுதில் கண்ணாடி பளிச்சென்று காட்டி என் பின்னே ஒரு உருவம் கவிதை வடிக்கும் நிலையில் நின்றுகொண்டிருப்பதை கண்டேன். ஒரேயொரு நொடிதான் அப்பிம்பம் மறைந்து சகஜநிலைக்கு திரும்பியது. அரண்டுபோனேன். சில நொடிகள் நாவெழவில்லை.சேகர் என்னை சகஜநிலைக்கு கொண்டு வர முயற்சித்தான். அவனுக்கு பின்னே ஒரு நடுத்தர வயது பெண்மணியின் உருவம், கூந்தலை அள்ளி முடித்துக்கொண்டிருந்தது சேகரை வெச்சக்கண் வாங்காமல் பார்த்தவாறு – இதுவும் ஒரே நொடி தான்.

அவனிடம் நடந்தவற்றை கூறினேன், அவனுக்கு நம்பிக்கை வரவில்லை. மேலே தொடர வேண்டாம் என்று அவனிடம் கெஞ்சினேன் அவனுக்குள் இருந்த அந்த ஆவல் இருவரையும் அந்த வீட்டினுள் செலுத்தியது. ஒரு அறைக்குள் சென்றோம், முன்பொரு காலத்தில் அவ்விடம் படுக்கையரையாய் இருந்திருக்கக்கூடும். மெல்ல ஏதோ ஒரு பெண்ணின் இனிய குரலில் சங்கீதம் காற்றில் கரைந்து என் செவிகளை எட்டியது. சேகரிடம் சொல்வது வீண்தான், நம்பமாட்டான் இருப்பினும் அவனை விட்டு வேருயாரிடத்தில் சொல்வது. அவனிடம் சொல்ல வாயெடுத்தேன், ஆச்சர்யம் என்னவென்றால் எனக்குமுன் அவனே
“மச்சி… ஏதோ ஒரு பொண்ணு பாடுறாப்பல கேட்கல?” என்றான் பீதியுடன். அவன் முகத்தில் ‘கிலி’ முழுதும் இப்பொழுது குடிக்கொண்டிருந்தது.

கேமராவை பார்க்களானோம். அதில் ஒரு பெண்ணின் அழகு வாய்ந்த உருவம் தென்பட்டது. அந்த உருவம் தன்னை மறந்து இசையில் கரைந்து வீணையை மீட்டிக்கொண்டு பாடலை உருகிஉருகி பாடிக்கொண்டிருந்தது. அவளின் விழிகள் எங்களை நோகிற்று. அதில் அப்படி ஒரு கொரூரம். இது அனைத்தும் கேமராவில் இருந்தது. ஆனால் , கேமரா காட்டும் அவ்விடத்தில் ஏதொரு உருவமும் தென்படவில்லை.
“சேகர் இங்க ஏதோ உண்மையா ஒரு அமானுஷ்ய சக்தி இருக்கு டா… வா நாம திரும்பிடலாம்..”

சேகருக்கும் பயம் தொற்றிக்கொள்ளவே சரி என்றான். நாங்கள் முடிவு செய்தால் போதுமா..? அவர்கள் அல்லவா முடிவு செய்யவேண்டும்.. செய்து விட்டார்கள்.. நாங்கள் எவ்வளக்குஎவ்வளவு வெளியே செல்ல ஆயுதமானோமோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களால் உள்ளே செலுத்தப்பட்டோம்.
அது வீட்டின் கொல்லைபுறம் என்று நினைக்கின்றேன். ஒருகாலத்தில் இங்கே செடிகளும் கொடிகளும் சூழ்ந்து இருந்திருக்கும். இன்று அதில் சிலந்திகளும், பூச்சிகளும் பாம்புகளும் சூழ்ந்து காட்சியளிக்கின்றன. ஏதோ ஒரு பெண்ணின் அழுகுரல் மெல்ல காற்றுடன் கரைந்து கேட்தது. அது மெல்ல மெல்ல ஒப்பாரியாய் மாறிப்போனது. அடுத்த நொடி சில பாடல்கள், பிறகு ஏதோ ஒரு ஆணின் கவிதை, பிறகு ஒரு ஆணின் குரலில் சாஸ்திரங்களும் மந்திரங்களும் மாறிமாறி கேட்கலாயின.. நான் நின்றுகொண்டிருக்கும் இந்த இடம் ஒருகாலத்தில் கிணறாக இருந்திருக்கும்.. கிணறு .. அதே கிணறு, கயல்மதியும் அவளின் பெற்றோரும் புதைக்கப்பட்ட அதே கிணறு.. என் விருப்பம்மல்லாமல் என்னுடைய கழுத்தை ஏதோ ஒரு கரம் செலுத்த, என் கண்கள் கிணற்றின் உள்ளே நோக்கின. உள்ளே, ஒரு பெண்ணின் உருவம் சிரமப்பட்டு மேலே என்னை நோக்கி ஏறிக்கொண்டிருந்தது. அவளின் இதழ்களில் சிறு புன்முறுவல். கடினப்பட்டு கண்களை மூடிக்கொண்டு திரும்பமுயற்சித்து திரும்பினேன். அது சமையல் கூடம்..

சேகரை ஒரு பெண்மணியின் உருவம் அழுத்தியவாறு இருந்தது. சேகரின் இதயம் பலமாக அடிக்கத்துவங்கியது. என் இதயமும் கூட, அடுத்த நொடி நானும் சேகரும் மட்டும் இருந்தோம்.. யாருமில்லை…
“மோகன் ப்ளீஸ் என்ன காப்பாத்து டா…” என்று சேகர் அழத்துவங்கினான். “என்ன சேகர், நானும் உன்ன மாதிரி தானே…” என்று சொல்லிமுடிக்கும் முன் எங்கள் பின்னால் இருந்த கதவு படீரென சாற்றப்பட்டது.

“எருமைங்களா… பொறம்போக்குத்தேவுடியா… ஒத்… தில் இருந்தா வெளிய வாங்க… நான் பயந்துடுவேன்னு நினைச்சீங்களா ….” பயத்தில் சேகர் தகாத வார்த்தைகளும் தொடர்பில்லாமலும், உளறலுமாக பேசாரம்பித்தான்.
உடனே சாத்திய கதவை யாரோ மெல்ல திறக்கும் ஓசை கேட்டது. இருவரும் பயத்தின் காரணமாக ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறுக்கண்ணால் பார்க்கும்பொழுது, கதவு முழுதும் திறக்கப்பட்டு முதலில் கயல்மதியும், பின்பு அவளின் அண்ணனும் அவனைத்தொடர்ந்து அவர்களின் பெற்றோரும் உள்ளே நுழைந்தனர். அவர்களின் பார்வை உக்கரமாய் இருந்தது. சேகரின் கைகால்கள் இழுக்கப்பட்டு அவன் வெளியே தரதரவென இழுத்துச்செல்லப்பட்டான். நான் மட்டும் அவர்களிடத்தில் தனிமையில் மாட்டிக்கொள்ளக்கூடாதென ஓட ஆரம்பித்தேன். என் சக்திகள் அனைத்தையும் உபயோகித்தேன்……

நான் தப்பித்து சாலைக்கு வந்தேன். நடந்தவை அனைத்தும் கனவுபோல் காட்சித்தந்தது. குழாயை திறந்து குளிர்ந்த நீரை முகத்தில் தெளித்துக்கொண்டேன். “அப்பாடா… தப்பித்தோம்…” என்ற சந்தோஷமும் நிம்மதியும் மனமெங்கும் பரவ, சேகரை காண என்கால்கள் விரைந்தது. அது சோலைகளால் நிரப்பப்பட்ட ஒரு சாலை. மனதிற்கு இதமாய் இருந்தது. என் முன்னே நல்ல ஆறடி உயரத்தில் ஒரு பெண் நடந்து சென்றுக்கொண்டிருந்தாள். என் செவிகளை ஏதோ பாடல் சத்தம் இம்சைத்தது. திரும்பி பார்கையில் என்பின்னால் ஏதோ ஒரு ‘பிண ஊர்வலம்’ வந்துக்கொண்டிருந்தது. மணியை பார்த்தேன் நடுநிசி இரண்டு. ‘ஏதோ தவறாக இருக்கின்றது’ என்று மனம் எச்சரிக்கத்துவங்கும்முன் என் எதிரே இன்னொரு ‘சவ ஊர்வலம்’ வேறு பாடல்களுடன் வந்துக்கொண்டிருந்தது.
இரண்டு ‘சவ ஊர்வலம்’ மக்களும் ஒருவரை ஒருவர் அடிக்கத்துவங்கினர். சவங்களும் உயிர்பெற்று சண்டையிட துவங்கின.. ஆறடி பெண் அலறியடித்தபடி ஓடத்துவங்கினாள். நானும் பயந்து ஓடத்துவங்கினேன். சில நொடிகளிலே அனைத்துமக்களும் அமானுஷ்ய உருவம் பெறத்துவங்கினார்கள். அப்பெண் அவளுடைய உடைகளை துறக்க ஆரம்பித்தாள். மெல்ல அவளின் உடலில் உள்ள எலும்புகள் வெளிப்பட்டு சுவற்றில் முட்டிக்கொண்டாள்.

விடாமல் முட்டிக்கொண்டே இருந்தாள்.. ஓடிக்கொன்டிக்கும் பொழுது என்னை கடந்து ஒருவர் வேகமாய் ஓடினார். அவர் என்னை திரும்பிப்பார்த்து “தம்பி… தப்பி ஓடு.. எல்லாரும் பேயா மாறுறாங்க..நீ வேகமா ஓடலைனா நீயும் இறந்துடுவ..” என்று சொல்லி முடிக்கும்முன்னே அவரின் முகங்களை பூரான்களும் சிலந்திகளும் கொத்தத்துவங்கின. அவரின் முகம் சீழும் குருதியும் ஒழுக நரம்புகளும் எலும்புகளும் புடைத்து உடைய விகோரமாய் காட்சியளித்தது.
கண்களை இருக்க முடிக்கொண்டேன். ஓடினேன், வேகமாய் இன்னும் இன்னும் இன்னும் வேகமாய். என் இதய துடிப்பின் ஓசை அமானுஷ்யமாய் கேட்டது. இருந்தும் உயிர் தப்பும் ஆசையில் ஓடினேன். ஏதோ ஒரு சுவரில் முட்டிக்கொண்டு கீழே விழுந்தேன்.கண்களை திறக்கலாமா என்று எண்ணியவாரே மெல்ல விழிகளை திறக்கும் முன், ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது. குரலில் மெல்ல சுரம் குறைந்து, ஈனசுவரத்தில் “என்னை ஏன் அவ்வாறு செய்தீர்கள்…? நான் தங்களுக்கு என்ன துரோகம் செய்தேன்..? என் ஆசையெல்லாம் சங்கீதம் மட்டும் தானே…” என்று கூறியவாறு அப்பெண் அழத்துவங்கினாள்.

இமைகளை திறந்தேன். என் இதயம் வெளிவந்து விழுந்து விடும் போன்ற ஒரு அதிர்ச்சி. நான் நிற்கும் இடம் அந்த பாழடைந்த வீட்டின் கிணற்றுப்பகுதி. திரும்பி ஓடத்துவங்கினேன். கூடத்திற்கு வந்தேன். அங்கே ஏதோ ஒரு சக்தி என்னை மேலும் ஓடவிடாமல் என் கால்களை செயலிழக்க செய்துவிட்டன.
அழுதேன், கதறினேன் “தயவசெய்து என்னை விட்டுவிடுங்கள்…” என்று கெஞ்சினேன். பதிலுக்கு கம்பீரமான ஒரு ஆணின் குரல் சினத்தில் முழங்கியது..

“வருக….! மதுராந்தக பூபதி…! தளபதியே வருக வருக…! தங்களின் வருகைக்காக எத்தணை வருடங்கள் காத்துக்கிடந்தோம்….”
“யார்.. யார்.. நீ….?” என் குரல் உடயத்துவங்கியது.

“என்னை நினைவில்லையா தளபதியாருக்கு ..?”
“யார் அது….??”

“யாரா..? நல்ல வேடிக்கை… நீர் தான் மதுராந்தக பூபதி..”
“நானா… நான் மோகன்…”

“அது வெறும் பெயர்.. அனால் உன் ஆத்மா ..?”
“என்ன சொல்லுறீங்க புரியல….”

“உன்னை மட்டும் தனியே வரவழைக்க மடல் அனுப்பினால், நீ ஏன் இன்னொரு மானுடனுடன் வந்தாய்.. ஆகையால் தான் அவனை வெளியேற்ற சிறிது நேரம் விளையாடினோம்… நீர் தானே டா… என் தங்கை கயல்மதியை இவுளியில் கவர்ந்துச்சென்ற மன்னன் நாணனின் தளபதி மதுராந்தக பூபதி …”

“நானா..? நான் இல்லை அது, நீங்க தப்பா நினைக்குறீங்க… அக்காலத்தில் நான் இல்லவே இல்லை… என் பெயர் மோகன், ஊர் சென்னை…”
“அது இன்று, ஆனால் அன்று…..?”

……………………………………………………………………………………………………………………………….

இரண்டு வாரங்கள் கழித்து, எங்கள் தொலைகாட்சியில் என்னுடைய ஆர்டிக்கல் ஒளிபரப்பத்துவங்கியது..
அதை தொகுத்து வழங்கியவன் சேகர். அவனின் கேமராவில் அனைத்தையும் துல்லியமாய் பதிவு செய்திருந்தான்.

“எமது நிலையத்திற்கு ஒரு கடிதம் சில நாட்களுக்கு முன்பு வந்தது. அதில் பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தில், ஒரு பழம்பெரும் இல்லம் உள்ளதென்றும். அதில் ஆவிகளின் நடமாட்டம் உள்ளதென்றும் எழுதி இருந்தது. உண்மையை அறிய பயணம் செய்க என்றும் எழுதியிருந்தது. அதை தெரிந்துக்கொள்ள நானும் எமது ‘டெக்னிக்கள் அசிஸ்டண்ட்’ மோகனும் பயணம் மேற்கொண்டோம்.” எனத்துவங்கி, பெரியவரின் சந்திப்பு முதல் அணைத்து நிகழ்வுகளையும் துல்லியமாய் எடுத்துரைத்தான். நிகழ்ச்சியின் முடிவில் கலங்கிய கண்களுடன் “தனக்கு வந்த முதல் அசைன்மென்டையே ஒரு சவாலாய் மேற்கொண்டு என் நண்பன் மோகன் அப்பாவியாய் உயிர் இழந்தான். ஆவிகளின் பசிக்கு பலியான அவன் என்றும் எங்களுக்கு முன்னோடியாய் அனைவரின் மனங்களிலும் நிலைத்து வாழ்வான் என்பதில் சிறு ஐயமும் இல்லை..” என்று நிகழ்ச்சியை முடித்தான்.

என்ன இன்னும் நம்ப முடியவில்லையா …? நான் தான் மோகன், இல்லை இல்லை நாணனின் தளபதி மதுராந்தக பூபதி, கயல்மதியின் குடும்பத்தாரால் இரண்டு வாரங்களுக்கு முன்பு பழி தீர்க்கப்பட்டேன்… இன்னும் நம்பிக்கை வரவில்லை எனில் பயணம் மேற்கொள்ளுங்கள்.. அதே பொள்ளாச்சி அருகில் உள்ள கிராமத்தில், அதே பாழடைந்த வீட்டின் கூடத்தில், அதோ தெரிகின்றதே அந்த மூன்றாம் தூணின் முற்றத்தில் நான் இன்றும் தொங்கிக்கொண்டுதான் இருக்கின்றேன்.

3 thoughts on “கைக்கிளைப்பதுமை…!

  1. டிவி போஸ்ட் பண்ணேன் சொநீங்கலே அந்த லிங்க் கிடைக்குமா

    1. நன்றி விக்னேஷ் 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *