அவன் கண் விழித்த போது மிதமான குளிரை உணர்ந்தான். அது அவனுக்கு இதமாக இருந்தது. சுற்றும் முற்றும் கவனித்தான். தான் வெறும் புல் தரையில், எவ்வித வசதியும் இன்றி சயனித்திருந்ததை எண்ணி திகைத்தான். எழுந்து உட்கார்ந்தவன், அந்த இடம் ஒரு காடு என்பதையும், ஒரே ஒரு ஒற்றையடிப் பாதை அங்கு இருந்ததையும் கண்ணுற்றான்.
ஏனோ அவனுக்கு மிக மகிழ்சியாக இருந்தது. காற்றில் மிதப்பது போல உடலும் உள்ளமும் லேசாக இருந்தது. அவன் அந்த ஒற்றையடிப் பாதை வழியே நடக்கத் துவங்கினான். தூரத்தில் ஒரு பங்களா தென்பட்டது. அதை நெருங்கியவுடன் அந்த பங்களாவின் முன்புறத் தோட்டதில் வயதான ஒருவர் வேலை செய்து கொண்டிருந்ததைப் பார்த்தான். அவரை நெருங்கி “ஐயா!” என விளித்தான். அவரோ அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் தன் வேலையிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். அப்பொழுது “யார் நீங்கள்?” என்ற குரல் பின்னாலிலிருந்து கேட்கவே திரும்பினான். அங்கு மிக அழகாக உடை உடுத்திக் கொண்டிருந்த ஒருகட்டுமஸ்தான இளைஞன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான்.
“நான் வந்து வந்து….என் பெயர் காளீஸ்வரன்.”
ஒ! அப்படியா? என் பெயர் மயிலன்.சரி சரி. உள்ளே வாங்க” என்ற அந்த இளைஞன், காளியை உட்புறம் அழைத்துச் சென்றான். உள்ளே வரவேற்பறையில், பெரிய மேஜை. போடப்பட்டிருந்தது. அதனைச் சுற்றிலும், இருபது பேர் போல நாற்காலிகளில் அமர்ந்து கொண்டிருந்தனர். சிலர் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். மற்றவர்கள் வேடிக்கை பார்த்தபடி இருந்தனர். மயிலனைப் பார்த்த அவர்கள்; மகிழ்சியுடன் வந்து அவனைச் சூழ்ந்து கொண்டனர்.
காளீஸ்வரன்! நீ போய் அந்த இருக்கையில் அமர்ந்து கொள். அப்புறமாக சொல் இந்த அடர்ந்த காட்டுக்குள் ஏன் வந்தாய்?
“அதான் எனக்கே புரியவில்லை. நேற்று என் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தேன் யாரோதான் என்னைக்கடத்திக் கொண்டுவந்து இந்த காட்டில் போட்டுவிட்டுப் போய் விட்டார்கள். என நினைக்கிறேன்.”
“களுக்” என்ற சிரிப்பு சப்தம் வந்த திசை நோக்கி காளி திரும்பினான். அங்கே அழகே உருவான பெண் ஒருத்தி நின்றுகொண்டிருந்தாள்.
“இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது?” காளி கோபப் பட்டான்.
“அமைதி. நண்பனே!.உன்னை, காவியாவுடன் உன் வீட்டிற்கு அனுப்பப் போகிறேன் .இந்த காட்டிலிருந்து வெளியேற உனக்கு அவள் வழி காட்டுவாள்.”
“நீங்கள் எல்லாம் யார்?. எதற்கு இங்கே ஒன்றாக தங்கி இருக்கிறீர்கள்?. என நான் தெரிந்து கொள்ளலாமா?”
மறுபடியும் “களுக்” மீண்டும் அந்த அந்தப் பெண் சிரிக்கவே அவனுக்கு எரிச்சலாக இருந்தது. அவர்களைப்பற்றி எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் மறைந்தே போனது
வேண்டா வெறுப்பாக காளி அவளுடன் புறப்பட்டான். அவள் அவனருகே விசித்திரமாக நடந்துவந்து சேர்ந்து கொண்டாள். மயிலன் சின்னதாக கனைக்கவே அவள் நடை இயல்பானது. இருவரும் புறப்பட்டார்கள். அவளை கொஞ்சம்கூட திரும்பிப்பாராது காளி நடந்தான். அவள் கிண்டல் செய்வதில் ஆர்வமுள்ளவளாக இருக்க வேண்டும் என அவன் கணித்தான். தன்னை யாரோ தூக்கிவந்து இவ்விடத்தில் போட்டிருக்கவேண்டும் என்ற என் அனுமானத்தில் நகைப்புக்கு என்ன இருக்கிறது? ஏன் விசித்திரமாக என் அருகே அவள் நடந்து வர வேண்டும்?
தோட்டத்தில் அந்த வயதான ஆள் பூக்களைப் பறித்து அவருடைய கையில் வைத்திருந்த பூக்கூடையில் போட்டுக் கொண்டிருந்தார்.
“தாத்தா! இந்த மல்லிகையின் மணம் மிக நன்றாக இருக்கிறது.” என அவன் கூறியதைக் கொஞ்சம் கூட கேட்காதவர் போல் முகத்தை வைத்துக்கொண்டு கருமமே கண்ணாக இருந்தார்..
அவருக்கு காதும் கேட்காது கண்ணும் தெரியாது. என அவள் கூறினாள்.
“ அப்புறம் எப்படி பூக்களை அவரால் பறிக்க முடிகிறது?” என அவன் வினவினான்.
“ம்ம்ம்.. அதுவா? அவருக்கு மோப்ப சக்தி அதிகம்.””களுக்”
“என் தலைவிதி இவளிடம் வந்து மாட்டிக் கொண்டேன்” என அவன் நினைத்தான்.
காட்டை கடந்து விட்டார்கள். இனி நானே போய்க்கொள்கிறேன் என அவளைப்பார்த்து காளி கூறினான்.
“உன் வீடு வரை நானும் உடன் வர வேண்டும் என்பது மயிலன் உத்தரவு”.
காளி கோபத்துடன் எதுவும் பேசாமல் நடந்தான். வீட்டைநெருங்கிவிட்டர்கள். இப்பொழுது காளி, வீட்டை நோக்கிப் போகாமல் பக்கவாட்டில் இருந்த சந்தினுள் வேண்டுமென்றே போகத்துவங்கினான். அவளோ எதுவும் பேசாமல் அவனுடைய வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்தாள். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த கூட்டத்திற்கு என் வீடு தெரிந்திருக்கிறது. இவர்கள் கொள்ளைக்காரர்களாகத்தான் இருக்க வேண்டும் இவர்கள்தான் பணக்காரனான என்னைக் கடத்திக்கொண்டு போய் காட்டில் போட்டிருக்கவேண்டும் என நினைத்து, அது குறித்து அவளிடம் கேட்பதற்காக அவளை நோக்கினான்..
அவள் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்ததைப் பார்த்த அவனுக்கு வியப்பாக இருந்தது..அவளுடைய முகத்தில் அப்படி ஒரு சோகம் அப்பிக்கிடந்தது. அவளிடம் அதுபற்றி கேட்க நினைத்தான்.
அதற்குள் வீட்டை அடைந்து விட்டார்கள். வீட்டில் ஏகமாக கூட்டம். அந்த தெரு முழுதும் அடைத்துக்கொண்டு கார்கள். பைக்குகள், மாலைகள் இத்யாதி இத்யாதி. அழுதுகொண்டிருந்த அவனுடைய தாய்மாமா, தங்கவேலுவிடம் பேச அவன் முற்பட்டான். காவியாவோ அவனைப் பேசவிடாமல் அவன் கைகளைப்பற்றி ஏறக்குறைய அவனை இழுத்துக்கொண்டு உள்ளே அழைத்துச் சென்றாள். வரவேற்பறையில் கண்ணாடிப் பெட்டிக்குள் கிடத்தப் பட்டிருந்த சரீரம் யாருடையது? அவனது அம்மா மூர்ச்சையாகிக் கிடக்க அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவசப்படுத்திக்கொண்டிருந்த அவனது இரண்டு அத்தைகளும் அவன் வந்ததைக்கூட பொருட்படுத்தவில்லை. அவன் கூடவே வந்த காவியா மறுபடியும் அவன் கைகளைப் பற்றி அழைத்துக்கொண்டு சவப்பெட்டி அருகில் சென்று நின்றாள்..
சவத்தைப் பார்த்த அவனுக்கு தலை சுற்றியது. தானே அங்கு பிணமாகப் படுத்திருப்பதை அறிந்து அதிர்ந்தான். இப்பொழுதுதான், தான் உடல் அல்ல. உயிரென்பதை உணர்ந்து தன் உடலுக்குள் புக முயற்சி செய்தான். படுதோல்வி. கதறி அழுதான். சத்தம் போட்டான். யாருக்குமே அவனது கூப்பாடு கேட்டபாடில்லை. சிறிது நேரம் வரை அமைதியுடன் இருந்த காவியா, இப்பொழுது அவனை அணைத்துக்கொண்டு தேற்ற முற்பட்டாள். ஏதேதோ சடங்குகள், சம்ப்ரதாயங்கள் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது.
அவனுடைய பெரிய புகைப்படத்தை அங்கே கொண்டுவந்து வைத்தார்கள். மாலை போட்டு ஊதுபத்தி ஏற்றி வைத்தார்கள். ஊதுபத்தியின் மணம் காவியாவுக்கும் , அவனுக்குமே பிடிக்கவில்லை. அருகில் கிடந்த மல்லிகைப் பூ ஒன்றை எடுத்து மூக்கின் அருகில் வைத்து முகர்ந்துகொண்டார்கள். அவ்வழியாக வந்த யாரோ ஒருவர் தன் கையை லாவகமாக வீசி அந்த இரு பூக்களையும் தட்டிவிட்டு ஒட்டடையில் பூக்கள் மாட்டிக்கொண்டு தொங்கிக்கொண்டு இருப்பதாக புகார் செய்தார்.
யார் அவர்களைக் கடந்து சென்றாலும் அவர்கள் நகர்ந்து கொள்ளத்தேவை இல்லாதிருந்தது. அவர்களுக்குள்ளாகவே ஜனங்கள் புகுந்து புறப்பட்டுச் சென்றார்கள். அந்த பதினைந்து தினங்களும் அவனுக்குப் பிடித்த தின்பண்டங்கள், ஆடைகள் வைத்துப் படைத்த வண்ணம் இருந்தார்கள். காளி குனிந்து அவன் போட்டிருந்த ஆடைகளைக் கவனித்தான். அவனுக்குப் பிடித்த வெளிர் நீல சட்டையும் வெள்ளை நிற கீழ் உடையும் அணிந்திருந்தான். அவனைக் கவனித்துக்கொண்டிருந்த காவியா சொன்னாள் “உனது ஆத்மா உனக்குப் பிடித்த ஆடையை உனக்கு அணிவித்துவிட்டது.”என்று அவனுக்கோ எதுவும் புரியவில்லை. ஆத்மா வேறு, ஆவி வேறா?
எட்டு நாட்கள் வரை அவன் இறந்ததற்கு அவனே துக்கித்தபடி இருந்தான் ஒன்பதாம் நாள், தனக்குப் படைத்திருந்த உணவுகளின் வாசனையை முகர்ந்து பார்த்தான். காவியாவும் அவனும் அப்படி முகர்ந்து பார்த்துக்கொள்ள முடிந்ததில் சிறிதே பலம் பெற்றது போலவே உணர்ந்தார்கள். அவனுடைய குடும்பத்தினர் துக்கித்து இருந்ததைப் பார்த்த அவனுக்கு; அவர்களுக்கு ஆறுதல் கூற விருப்பம் ஏற்பட்டது. தனது அம்மாவின் முன்னே போய் நின்றான். அதீத உணர்ச்சிக் கொந்தளிப்பினால் அவனது உயிர் பழைய உருவத்தை எடுத்தது. அவன் உருவத்தைப் பார்த்துவிட்ட அவனுடைய அம்மா, காளி! காளி! என புலம்பி “அவன் இதோ இருக்கிறான். சாகவில்லை” என கூப்பாடு போட்டார்கள். காளியின் உருவம் சட்டென மறைந்து காற்றில் கலந்தது.. இனி இப்படி செய்யாதே என காவியா காளியை எச்சரித்தாள். “ ஏன்?”
ஆவிகளுக்கென்று சட்ட திட்டங்கள் உண்டு. சரி சரி. பதினாறு நாட்கள் ஆகிவிட்டது. இனி நாம் நம் இருப்பிடம் போகலாம் வா!”, காவியா அழைக்க காளி, “நான் வர மாட்டேன் இங்கேயே இருப்பேன்” என அடம் பிடித்தான். அப்பொழுது வேதியர்களின் வேதம் உச்ச ஸ்தாயியில் ஒலிக்கவே காவியாவும், காளியும் தாங்கள் வெளியில் தள்ளப்படுவது போல உணர்ந்தார்கள். நாம் இங்கிருப்பதை உன் குடும்பத்தார்கள் கூட விருப்பப்பட மாட்டார்கள். இங்கிருந்தால், அவர்களுக்கு நல்ல தேவதைகளின் ஆசி கிடைக்காது. எப்போதாவது நீ இங்கு வந்து இவர்களைப் பார்த்துவிட்டுப் போகலாம். நீ மரணமடைந்த திதியில் இங்கு வர உனக்கு அதிகாரம் வழங்கப்படும். பலவாறு காளியைத் தேற்றிய அவள், அவனைத் தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச்சென்றாள்.
வழியெல்லாம் காவியா அந்த விசித்திர நடை நடந்தாள். அவனும் அவ்வாறே நடப்பதை அப்பொழுதுதான் உணர்ந்தான்..அவர்களுக்கு தரையில் கால் பாவவில்லை. மிதந்தவாறே சென்றார்கள். காவியா அவனது கைகளைப் பற்றிக்கொண்டு மேலே எழுந்தாள். இருவரும் பறப்பதுபோலவே சென்று சீக்கிரமாகவே அவர்களது இருப்பிடம் வந்தடைந்தார்கள்.
அந்த தாத்தா தோட்டத்தில் களை எடுத்துக்கொண்டிருந்தார். அவர் அவர்களைப் போல அல்ல இன்னும் இறக்காத மனிதர். அவர் அந்த பங்களாவின் காவல் காரர். மற்றும் தோட்டக்காரர். அவர் அவுட் ஹவுஸ் வீட்டில் தன்னந்தனியாக வசித்துக்கொண்டிருக்கிறார் .வருடம் இரண்டுமுறை வரும் பங்களா சொந்தக்காரர், வாரம் ஒருமுறை வரும் இந்த தாத்தாவின் பேரன், இவர்களைத்தவிர அங்கு வேறு மனிதவாடை கிடையாது. அவரைப் பார்த்த காளி இப்பொழுது தன் துக்கம் மறந்து சிரித்துவிட்டான். அவருக்கு மோப்ப சக்தி இருக்கா காவியா? எனக்கேட்டான். இருவரும் சிரித்தவாறே வீட்டிற்குள் சென்றனர்..அங்கே அனைவரும் அமைதியாக இறைவனைப் பிரார்த்தனை செய்தவண்ணம் இருந்தனர். இருவரும் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். பிரார்த்தனை முடிந்ததும் அனைவரும் கலைந்து சென்றனர். நடுவில் அமர்ந்திருந்த வெள்ளைத்தாடி பெரியவர் எழுந்து காளியிடம் வந்தார். அவரை வணங்கிய காளி, “நான் எவ்வாறு இறந்தேன்?. எப்படி இந்த காட்டுக்குள் வந்தேன்? சொல்லுங்கள் ஐயா” என பணிவுடன் கேட்டுக் கொண்டான் “உன் கேள்விக்கான பதிலை நாளாவட்டத்தில் நீயே உணர்வாய் மகனே” என்ற அவர், அவ்விடம் விட்டு நகர்ந்து போய்விட்டார்.
அப்பொழுது நான்கைந்து பேர் பெண்களும் ஆண்களுமாக அவ்விடம் வந்தவர்களைப் பார்த்து மயிலன், “ஜபக்கூட்டம் முடிந்ததா?”எனக்கேட்டார்.
மறுபடியும் சிலர் அவ்விடம் வந்தவர்கள், தொழுகை முடிந்தது எனக் கூற, அனைவருமே பலப்பல விளையாட்டுகளில் ஈடுபட்டனர். சிலர் பாடவும் சிலர் அதற்கு நாட்டியம் ஆடவும் ஆரம்பித்தனர்.
ஒருவர் தன் நாயுடன் அங்கு வந்து சேர்ந்தார். வந்தவர் அனைவருக்கும் வணக்கம் சொல்வதற்காக மேலெழும்பி கீழெ இறங்கினார்.. நாயும் அவருடன் கூடவே மேல் எழும்பி வாலை ஆட்டிக்கொண்டு பின் கீழே இறங்கி அவருடன் சேர்ந்துகொண்டது.
யார் அது காவியா?
“அவர் நம் காட்டிற்கு அருகில் இருக்கும் அவரது வீட்டிலேயே தங்கி இருக்கிறார். அவருடைய மனிதப்பேரனும் அவன் மனைவியும் வருடத்திற்கு ஒருமுறை; இரண்டு மாதங்கள் அந்த வீட்டில் வந்து தங்குவார்கள் அந்த சமயங்களில் இவர் இங்கு வந்துவிடுவார். இரண்டு மாதங்கள் கழித்து அவர்கள் அன்னிய நாட்டிற்கு திரும்பிச் சென்ற பிறகு அந்த வீட்டிற்கே இவர் சென்றுவிடுவார்.
வீடு பூட்டியிருக்குமே! எப்படி போவார்?
சுவர் வழியாகவும் போகமுடியும் என்பது உனக்கு இன்னுமா தெரியவில்லை?
காளி உடனேயே மிதந்து போய் வரவேற்பறையின் சுவரைக்கடந்தான்., பக்கத்திலிருந்த அறைக்குள் சென்ற அவன் அதே வேகத்தில் திரும்பிவிட்டான். அந்த அறையில் தலைவிரி கோலமாக ஒரு பெண் அமர்ந்து கொண்டிருந்தாள். பிடரி எது? முகம் எது?என்பதை அவளைப் பார்த்துக் கண்டு பிடிக்க முடியாதவாறு இருந்ததே அவனுடைய அச்சத்திற்க்கு காரணம்.
“காவியா!. நாமும் ஒரு நாய் வளர்க்கலாமா?
காவியா இப்ப பேய்ச் சிரிப்பு சிரித்தாள்.
“இந்தா! அப்படி சிரிக்காதே!” பக்கதிலிருந்த சாமிநாதன் சத்தம் போட்டார். “எனக்கே ஈரல்குலை எல்லாம் நடுங்குகிறது”
அவர் சொன்னதைப் பொருட்படுத்தாத காவியா,
“அவர் அந்த நாயைக் குட்டியிலிருந்து வளர்த்து வந்தார். அவர் உயிர் விட்டதும் நாயும் அவருடைய பிரிவு தாங்காமல் இறந்துபோய் ,அவருடன் கூடவே வந்து தங்கிவிட்டது.”
“மற்ற மிருகங்களின் ஆவிகள் எங்கெ செல்லும்?”
“அவற்றிற்கென்று தனி இடம் இருக்கிறது.. இந்த நாய் மட்டும் இவரை விடாது ஒட்டிக்கொண்டுவிட்டது.
வாசலிலிருந்து பெண்கள் பட்டாளம் ஒன்று உள்ளே நுழைந்தது.
“இவர்கள் பக்கத்து தியேட்டரில் சினிமா பார்த்துவிட்டு வருகிறார்கள்”
:ஓ! அவர்களுக்குப் பின்னால் வரும் நபர். தள்ளாடியபடி ஏன் வருகிறார்?
டாஸ் மாக்
நாம் எதுவும் அருந்தவோ குடிக்கவோ முடியாதே காவியா?
ஏன் முடியாது?. உனக்கு சாப்பிட என்ன ஆசை சொல் அழைத்துப் போய் சாப்பிடவைக்கிறேன்.
பூரி உருளைக்கிழங்கு
அவன் காவியாவுடன் புறப்பட்டான். உயர்தர உணவகம் ஒன்றை அடைந்தார்கள். அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த இரண்டு நண்பர்களுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டார்கள்.. திடீரென்று காவியா, அந்த நண்பர்களுள் ஒருவனை நோக்கி காளியை பலமாகத் தள்ளிவிட்டாள். காளி அந்த ஆளின் திரேகத்தில் புகுத்தப்பட்டான். காவியாவும் மற்றொருவனுடைய உடலில் புகுந்துகொண்டாள். இஷ்டத்திற்கு அந்த நண்பர்கள் குரலில் திரும்பத்திரும்ப பூரி உருளைக்கிழங்கு ஆர்டர் செய்து சாப்பிட்டார்கள்.
இன்று ஏன் இப்படி பூரி சாப்பிட ஆசை வருகிறது என்றே புரியவில்லை என இரு நண்பர்களும் வியப்புற்றார்கள்.
ஆவி உலகம் இவ்வளவு மகிச்சியாக இருக்கும் என அவன் நினைத்துப் பார்த்ததே இல்லை. அவர்கள் தங்கள் இருப்பிடம் திரும்பிக்கொண்டிருந்த போது வழியில் ஒரு ஆவி மேலெழும்பி போய்க்கொண்டே இருந்தார்.. மிகவும் உயர உயர பறந்து போய்க்கொண்டிருந்தார் காவியா தடுத்தும் காளி அவரைப் பின்தொடர்ந்தான், குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் அவனால் போகமுடியவில்லை அவரோ மெலே மேலே போய்க்கொண்டே இருந்தார். காளி திரும்ப வந்து காவியாவுடன் சேர்ந்து கொண்டான்.
ஏன் என்னால் அவரைப்பின் தொடர்ந்து போக முடியவில்லை காவியா?
“அவர் மிக மிக புண்ணியம் செய்தவர். நமக்கும் மேலே உள்ள அருள் உலகம் அவரை ஈர்த்து அங்கே கொண்டு போய்விடும். நேராக அங்கே போய்விடுவார். நமக்கோ அடுத்த பிறவி காத்திருக்கிறது. அருள் உலகத்தில், ஒருவர் விரும்பினால் மட்டுமே அவருக்கு பிறவி தரப்படும்.
அப்பொழுது ஓளி பொருந்திய உருவத்துடன் ஒரு ஆவி கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார்.. காவியா, வேகமக மிதந்து சென்று அவர் அடி பணிந்து நின்றாள். காளியும் அவளைப் பின்பற்றிச் சென்று அவரைப் பணிந்தான். அவர், இருவருக்கும் ஆசி வழங்கியதோடு,”காவியா! உனக்கு அடுத்த வாரம் மறு பிறவி போல?” என வினவினார்.
“ஆமாம் ஐயா. எங்கே யாருக்குப் பிறக்கப் போகிறேன் என்பது தெரியவில்லை அது பற்றி உங்களிடம் கேட்கலாமா ஐயா?”
“தாராளமாக..சோலையூரில் சுரேஷ் என்பருக்கும், வெண்ணிலா என்ற பெண்ணிற்கும், மகனாக பிறக்கப்போகிறாய். இந்த காளி ஒருவருடம் கழித்து உனக்கு முறைப் பெண்ணாகப் பிறக்கப் போகிறான். அதனால்தான் இப்போதிருந்தே உன்னைச் சுற்றிச் சுற்றி வருகிறான்.” அவர் வேகமாக பூமி நோக்கி சென்றுவிட்டார்.