அந்த மூன்றாவது பயணி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: March 25, 2023
பார்வையிட்டோர்: 15,164 
 
 

இரவுநேரப் பயணம் என்பதால் அந்தப் பேருந்தில் நவீன் மற்றும் இரண்டு நபர்கள் தவிர வேறு பயணிகள் இல்லை. நவீன் சன்னல் ஓரமாக அமர்ந்து குளுகுளு காற்றை சுகித்தவாறே இருட்டில் வேடிக்கை பார்க்க முடியாவிட்டாலும் இருட்டையே பார்த்துக்கொண்டு பழைய படப் பாடல்களை தனக்குமட்டுமே கேட்கும் வகையில் பாடிக்கொண்டிருந்தான். மற்ற இரு பயணிகளும் நல்ல உறக்கத்தில். மணியுர் பேருந்து நிலையம் சென்றடைய இன்னும் மூன்று மணிநேரம் ஆகும் இப்போது மணி இரவு 11:35. கண்டக்டர், தனியே ஒரு இருக்கையில் அமர்ந்து பயணசீட்டு வரவுக் கணக்கைப் பார்த்தவண்ணம், நூறு, ஐம்பது, இருபது, பத்து என ரூபாய்த்தாள்களை அடுக்கிக்கொண்டிருந்தார். டிரைவர், சாலையிலிருந்து பார்வையை நகர்த்தவில்லை பேருந்து 60 முதல் 70 கி.மீ வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது. சாலையின் இருபுறமும் மரங்கள், கும் இருட்டு, பேருந்தின் ஹெட்லைட் வெளிச்சம் தவிர நிலவு வெளிச்சம் மட்டுமே அந்த சாலைக்குத் துணையாக இருந்தது. பெருந்தினுள்ளும் ஒன்றிரண்டு விளக்குகள் தவிர மற்ற விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தது.

லேசாக ஒளிர்ந்துகொண்டிருந்த ஒரு விளக்கின் கீழ் இருக்கை ஒன்றில் அமர்ந்து பணத்தை எண்ணி அடுக்கி முடித்த கண்டக்டர், டிரைவர் அருகில் சென்று  சற்று உரையாடலாம் என்ற எண்ணத்தில் எழுந்து நடந்தார், வழியில், விழித்திருக்கும் நவீனைப் பார்த்து “என்ன சார் தூக்கம் வரலையா?”, என்றார்.

“இருட்டு நல்லா இருக்கு சார், காத்து குளுகுளுன்னு இதமா இருக்கு, என்ஜாய் பண்ணிட்டிருக்கேன்”, என்று பதிலளித்தான் நவீன். சிரித்துக்கொண்டே நகர்ந்தார் கண்டக்டர்.

டிரைவருக்கு அருகாமையில் அமர்ந்தார் கண்டக்டர். கண்டக்டர் வந்ததைக் கண்ட டிரைவர், “ஏம்பா மாங்குடில நிப்பாட்டி சாப்பிட்டுட்டு போலாமா? மூணு மணி ஆயிடும் மணியூர் போறதுக்கு அதுவரைக்கும் பசி தாக்குப் பிடிக்க முடியாது.” என்றார்.

“ஆமா, நானே கேட்கலாம்னுட்டு தான் இருந்தேன், அப்படியே செய்வோம்” என்றார் கண்டக்டர்.

அது ஒரு சாலையோரத்து இரவு உணவு விடுதி அங்கே வேலை பார்க்கும் சிறுவன் ஒருவன் அந்த விடுதியின் முன்னும், சாலை ஓரமாகவும் நின்றுகொண்டு பேருந்தை கைகாட்டி உணவு விடுதியின் அருகாமையில் நிறுத்தும்படி  சைகை காட்டிக்கொண்டிருந்தான். அந்த வழியே போகும் பேருந்துகளை இதுபோல் கைகாட்டி உணவு விடுதிக்கு அழைப்பது அவர்களின் இயல்பான பழக்கம், காரணம், அந்தச் சாலையில் செல்லும் பேருந்து மற்றும் வெகுதூரப் பயணம் மேற்கொள்ளும் வாகனங்களை மட்டும் நம்பியே அந்த உணவு விடுதி இயங்கி வருகிறது. அந்த இடத்திலிருந்து மாங்குடி ஊருக்குள் செல்ல இரண்டு கிலோமீட்டர் தூரம் இருந்தாலும் அடையாளத்திற்கு, அந்த உணவுவிடுதியை, பயணிகள், மாங்குடி உணவுவிடுதி என்றே அழைப்பது வழக்கம்.

சிறுவன் காட்டிய திசையில் பேருந்தை நிறுத்தினார் டிரைவர். சிறுவன் பெருந்தினுள் எட்டிப் பார்த்தான், “என்ன சார் பாசெஞ்சர் யாரும் இல்லையா?, ஆளில்லாத பஸ்ஸை நிப்பாட்டினேனான்னு ஓனர் என்னை திட்டப்போறாரு?” என்றான்.

“ஏம்பா, இருக்கவுங்கள பார்த்தா பாசெஞ்சரா தெரியலையா?”, என்றார் கண்டக்டர்.

“நாங்க சாப்பிடுறதுக்கு காசு கொடுத்துடுவோம்னு சொல்லு தம்பி, ஓனர் திட்டமாட்டார்,” என்று சொல்லிக்கொண்டே எஞ்சினை ஆஃப் செய்தார் டிரைவர்.

விடுதி வாயில் அருகில் இருந்த கேசட் கடையிலிருந்து பழைய பாடல் ரம்யமாக ஒலித்துக்கொண்டிருந்தது.  “ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்” என்று T.M.S, வாலியின் வரிகளை உணர்ச்சிப்பூர்வமாக பாடிக்கொண்டிருந்தார்.

நவீன் இன்னும் சன்னலோரப் பார்வையை விலக்கவில்லை. மற்ற இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில். கண்டக்டர் நவீனின் அருகில் சென்றார் ஒருவேளை உறங்கினால் எழுப்பவேண்டாம் விழித்திருந்தால் சாப்பிட அழைக்கலாம் என்ற எண்ணத்தில், சற்று நவீனின் முகத்தை உற்று நோக்கினார். அதே நேரம் டிரைவர் கண்டக்டரிடம் “ஏம்பா சீக்கிரம் எறங்குப்பா பசிக்குது”. என்றார். “இதோ வந்துட்டேண்ணே பாசெஞ்சர் யாராவது முழிச்சிருந்தா சாப்பிடுறீங்களான்னு கேட்கலாம்னு வந்தேன்”. என்றார் கண்டக்டர்.

“சரி சரி சீக்கிரம் கேளு”, என்று சொல்லிவிட்டு “இருக்கது ஒன்னு ரெண்டு டிக்கெட், ஒவ்வொருத்தரையும் பக்கத்துல பொய் கேட்கணுமாக்கும்” என்றார் டிரைவர் தனக்குள்.

நவீன் விழித்திருப்பதை உறுதிசெய்துகொண்ட கண்டக்டர் “சார் சாப்பிட வரலியா?” என்று கேட்க, நவீன் உடன் பதிலளித்தான், “சார் எனக்கு பசி இல்ல நீங்க போயிட்டு வாங்க, T.M.S பாட்டு நல்லா இருக்கு நான் இந்த பாட்ட கேட்டுகிட்டு இங்கே இருக்கேன்” என்றான். “அப்ப சரி, ஒரு பதினஞ்சு நிமிஷம் ஆகும்” என்று நவீனிடம் சொல்லிவிட்டு, “அண்ணே வந்துட்டேன்”, என்று பேருந்தை விட்டு இறங்கி வேகமாக டிரைவர் அருகில் வந்தார் கன்டக்டர்.

விடுதி வாயில் உட்புறம், கல்லாவில், ஓனர் அமர்ந்திருந்தார், டிரைவரையும் கண்டக்டரையும் பார்த்து “வாங்க வாங்க” என்றார். “உள்ள டேபிள் இருக்கா பார் தம்பி” என்று சிறுவனுக்கு கட்டளை இட்டார் ஓனர்.

“என்ன சார் பாசெஞ்சர் இல்லேன்னா தம்பிய திட்டுவீங்களா?, தம்பிய பயமுறுத்தி வச்சிருக்கீங்களே”, என்றார் சிரித்துக்கொண்டே டிரைவர் ஓனரிடம்.

“யாரு… பையன் சொன்னானா? அப்படியெல்லாம் பயமுறுத்த மாட்டோம் சார், அவனா அப்படி நினைச்சுக்கிறான்”, என்றார் பதிலுக்கு, சிரித்துக்கொண்டே ஓனர். தொடர்ந்து “போங்க பொய் மொத பசிக்கு என்னவேணும்னு பார்த்து சாப்பிடுங்க” என்றார்.

சிறிது நேரத்தில் பசியாறிய கண்டக்டரும் டிரைவரும் கல்லாவின் அருகில் வந்தனர். ஓனரிடம், “பில் கொடுக்கச் சொன்னா தம்பி உங்கள வந்து பார்க்க சொல்றான்” என்றார் கண்டக்டர்.

“ஆமா சார் உங்ககிட்ட எப்ப நான் பணம் வாங்கியிருக்கேன், நீங்க கிளம்புங்க உங்க டூட்டிய பாருங்க” என்றார் ஓனர்.

“பாசெஞ்சர் இருந்தாலும் பரவால்ல… இன்னிக்கு நம்ம வண்டியில பாசெஞ்சரும் இல்லையே, நீங்க பில்லை  கொடுங்க” என்றார் டிரைவர்.

“அடடா அதல்லாம் கணக்கு இல்ல… நீங்க எப்பவும் நம்ம விருந்தாளிதான், கிளம்புங்க, மீண்டும் சிந்திப்போம்” என்றார் ஓனர். ஓனரின் அன்புக்கு அடிபணிந்த டிரைவரும் கண்டக்டரும் விடைபெற்றுக்கொண்டு தங்களின் பேருந்து நோக்கி நடந்தனர்.

“கடலோரம் வாங்கிய காத்து…” என்று வாலியின் வரிகளை காற்றில் கலந்துகொண்டிருந்தார் T.M.S.

பேருந்தில் ஏறிய டிரைவர் என்ஜினை ஸ்டார்ட் செய்ய, கண்டக்டர் பின் படிக்கட்டு வழியாக ஏறி எல்லா இருக்கைகளையும் நோட்டம் விட்டார். இன்னும் அந்த இருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர், நவீன் விழித்துக்கொண்டுதான் இருந்தான். “என்ன சார், சாப்பிடவும் போகல, இறங்கி யூரின் பாஸ் பண்ணக்கூட போன மாதிரித் தெரியல, உக்காந்த இடத்துல அப்படியே இருக்கீங்க”, என்று நவீனிடம் பேச்சைத் தொடர்ந்தார் கண்டக்டர். “நான் கிளம்பும்போதே முட்டை பிரியாணி சாப்பிட்டுத்தான் கிளம்பினேன்” என்றான் நவீன்.

டிரைவர் தலைக்குமேல் இருந்த கண்ணாடியைப் பார்த்தார். தனக்குப் பின்னால், கண்டக்டரும் உறங்கும் மற்ற இரண்டு பயனிகளும் தெரிந்தனர். பேசிக்கொண்டே டிரைவரின் அருகாமையில் இருந்த இருக்கை ஒன்றில் வந்தமர்ந்தார் கண்டக்டர். “யாருகிட்டையா பேசுற? நீயா பேசிக்கிட்டு வர்ற? வேப்பிலை அடிக்கணுமா?” என்று கேட்டுச் சிரித்தார் டிரைவர், “பாசெஞ்சர் கிட்டாதான் வேற யார்கிட்ட”, என்று பதிலளித்தார் கண்டக்டர்.

பிறை நிலா வானில், பேருந்து சாலையில். நிலவுக்கு பேருந்து துணை பேருந்திற்கு நிலா துணை எனும் புரிதலில் அந்தச் சாலையின் இருட்டு அமைதியாகக் கடந்துகொண்டிருந்தது. பேருந்தின் ஹெட்லைட் வெளிச்சம் சாலையில் இருக்கும் குண்டு குழிகளைத் தெளிவாகக்காட்ட டிரைவர் இடது வலது என ஸ்டேரிங்கை லாவகமாகத்திருப்பி  பேருந்தைச் செலுத்திக்கொண்டிருந்தார்.

மணியூரின் எல்லை ஆரம்பம் என்பதை அந்த இருபதடி உயர வளைவு கம்பீரமாக உணர்த்திக்கொண்டிருந்தது. வளைவைக்கடந்ததும், “ஏம்பா கோயில் சைடா போலாமா ரோடு வேலை முடிஞ்சுடுச்சா, ஏதாவது தெரியுமா?” என்று கண்டக்டரிடம் வரிசையாக கேள்விகளைத் தொடுத்தார் டிரைவர். சற்று நேரம் பதில் இல்லை திரும்பிப் பார்த்தார், உறக்கத்திலிருந்தார் கண்டக்டர்.

மணியூர் பேரூந்துநிலையம். மணி 2:50 அதிகாலை. அந்த இரண்டு உணவு விடுதிகள் மற்றும் அந்த மூன்று பெட்டிக்கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. பெட்டிக்கடைகளின் முன் அன்றைய நாளிதழ்களைப் பரப்பி எடுத்து சிறு சிறு கட்டுகளாக அடுக்கிக்கொண்டிருந்தனர், அவர்கள் அந்தந்தக் கடைகளில் வேலை பார்ப்பவர்களாகவோ அல்லது கடை உரிமையாளர்களாகவோ இருக்கக்கூடும். பயணிகள் சிலர் ஆங்காங்கே விழித்துக்கொண்டும் சிலர் தங்களின் சுமைகளில் சாய்ந்து உறங்கிக்கொண்டும், அதிகாலை வரப்போகும் தங்களின் பெருந்திற்காகக் காத்திருந்தனர். நிறுத்தம் பார்த்து பேருந்தை நிறுத்தினார் டிரைவர், கண்டக்டரும் விழித்துக்கொண்டார், “கொஞ்சம் கண் அசந்துட்டேன்” என்றார் டிரைவரிடம். “பரவால்ல பாசெஞ்சரை எழுப்பு மணியூர் வந்துடுச்சு”, என்றார் டிரைவர். “ஆமா..” என்று கொட்டாவி விட்டுக்கொண்டே சொல்லிவிட்டு, உறங்கிக்கொண்டிருந்த இருவரை நோக்கி நடந்தார் கண்டக்டர். எஞ்சினை ஆஃப் செய்துவிட்டு பேருந்தின் எல்லா விளக்குகளையும் பிரகாசிக்கச்செய்தார் டிரைவர்.

“சார் எழுந்திருங்க மணியூர் வந்துடுச்சு” என்ற கண்டக்டரின் உரத்த குரலைக்கேட்டுத் தட்டுத்தடுமாறி விழித்துக்கொண்டனர் உறங்கிய இரு பயணிகளும். பாசெஞ்சர்களைப் பின்தொடர்ந்து பின்புறப்படிக்கட்டில் இறங்கினார் கண்டக்டர்.  அவர்கள் இறங்கும் வரை காத்திருந்துவிட்டு பேருந்தின் விளக்குகளை நிறுத்திவிட்டு டிரைவர் சீட் பக்கத்துக் கதவைத்திறந்துகொண்டு வெளியில் குதித்தார் டிரைவர். பேருந்தின் பின்புறமாகச் சுற்றி டிரைவர் அருகில் வந்தார் கண்டக்டர். இருவரும் அந்த பெட்டிக்கடை நோக்கி நடந்தனர்.

“அண்ணே, அந்த 12ம் நம்பர் சீட்ல இருந்தவர் எங்க இறங்கினார் ணே… நான் நல்லாத்தூங்கிட்டேன் போல கவனிக்கல”, என்று கேட்டார் கண்டக்டர்.

“என்னப்பா சொல்ற… மாங்குடில கெளப்புன வண்டி எங்கயும் நிக்கல… ரெண்டுபேர நீதானே இப்போ இறக்கிவிட்ட” என்றார் டிரைவர்.

“இல்லண்ணே மாங்குடில கூட நாம சாப்பிடுறதுக்கு இறங்கினோம் ஆனா அவர் பசிக்கலன்னு சொல்லிட்டு பஸ்லையே இருந்தாரே… அவரு” என்றார் கண்டக்டர்.

“யோவ்… என்ன கனவா? மாங்குடிக்கு முன்னால அரியானூர்ல இருந்தே ரெண்டு பாசெஞ்சர்தான்..” என்றார் டிரைவர்.

சற்றே அதிர்ந்த கண்டக்டர், திரும்பி பேருந்தை நோக்கி நடந்தார். “எதுக்கு இப்போ பஸ்ஸுக்கு போறே?” என்று கேட்டார் டிரைவர்.

“நில்லுங்கண்ணே, எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு நான் அவர்கிட்டதான் பேசிக்கிட்டு வந்தேன், வேற சீட்ல படுத்து தூங்குறாரான்னு பார்த்துட்டு வறேன்”, என்று விரைந்தார் கண்டக்டர்.

பேருந்தின் பின் படிக்கட்டு வழியே ஏறி சற்று நேரத்தில் முன் படிக்கட்டு வழியே இறங்கினார் கண்டக்டர்.

“என்னாயா… தூங்குறாரா உன் பாசேஞ்சர்?” என்று நையாண்டியாகச் சிரித்தார் டிரைவர்.

சற்றே முகம் வேர்த்திருந்தது கண்டக்டருக்கு. கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு, “பஸ்ல யாரும் இல்லண்ணே” என்றார் மெதுவாக. சொன்னவர் தொடர்ந்து, “அண்ணே டீ சாப்பிடுவோமோ?” என்றார்.

“ஓ… போலாமே, போய் மொத முகத்த கழுவு தூக்கம் போகும்.” என்றார் டிரைவர். அந்தச் சிறிய உணவு விடுதி நோக்கி நடையைத்திருப்பினர் கண்டக்டரும் டிரைவரும். டீக்கடையில் இருந்த ஆடியோ செட் வழியாக T.M.S.

“கண்ணே கனியே முத்தே மணியே… என்று கண்ணதாசன் வரிகளை ரகசிய போலீஸ் 115க்காக அழைத்துக்கொண்டிருந்தார்.”

“தலைவா, சூடா ஒரு மால்டோவா, ஒரு டீ” என்றார் டிரைவர் கடைக்காரிடம். “உள்ளே உட்காருங்க சார், கொண்டுவந்து தாரேன்” என்று உள்ளே இருக்கை காட்டி இருவரையும் இருக்கச்சொன்னார் கடைக்காரர். டிரைவர் ஒரு இருக்கையில் அமர்ந்தார். “அண்ணே மொகத்தைக் கழுவிட்டு வந்துடறேன்”, என்று டிரைவரிடம் சொல்லிவிட்டு, கடைக்காரரிடம், “முகங்கழுவ தண்ணி தறீங்களா”, என்று கேட்டார் கண்டக்டர்.

“இதோ டாப் இருக்கு, இங்க கழுவிக்குங்க”, என்று கடையின் வெளிப்புறத்தில் தண்ணீர் வரும் குழாய் இருந்த திசை நோக்கிக் கைகாட்டினார் கடைக்காரர்.

முகத்தைக் கழுவும் அதேநேரம் கடைக்கிறார் அங்கு யாருடனோ பேசிக்கொண்டிருந்தது கண்டக்டரின் காதுகளில் சுத்தமாக ஒலித்தது.

“என்ன தலைவா, எவ்வளவு புதுப் பாட்டு வந்திருக்கு, இன்னும் நீ T.M.S. பாட்டையே மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு இருக்க”, என்றவரின் கேள்விக்கு பதிலளித்தார் கடைக்காரர், “நான் இங்க பாட்டு போடுறதே என் பையனுக்காகத்தான், சுனாமி அன்னிக்கு என் பையன்தான் கடைல இருந்தான், கடைய சாத்திட்டு வீட்டுக்கு வந்துடுவான்னு நினைச்சோம், அடுத்தநாள் காலைல தண்ணி வடியுற வரைக்கும் அவன் வீட்டுக்கு வரல, சரி கடைல எங்கயாவது இருப்பான்னு வந்து பார்த்தோம் ஆனா கடை திறந்திருந்துச்சு, மத்த கடைங்க மாதிரியே நம்ம கடையிலையும் பொருளெல்லாம் தண்ணில அடிச்சுக்கிட்டு போயிடுச்சு, பையன தேட ஆரம்பிச்சோம் ஒரு நாள் ரெண்டுநாள் போயி வாரம் ஆச்சு, மாதம் ஆச்சு, இப்போ வருஷங்கள் போயிடுச்சு. இருந்தாலும் T.M.S. பாட்ட கேட்டு எம்புள்ள திரும்பி வருவான்னு மனசு மட்டும் சொல்லிக்கிட்டு இருக்கு”.

அடுத்த கேள்வியை தொடுத்தார் அந்த நபர், “ஓ… உங்க பையனுக்கு பழைய பாட்டுதான் பிடிக்குமா?”

“அவன் மாடர்னா இருக்கணும்னு ‘நவீன்’னு பேர் வச்சேன், ஆனா அவனுக்கு ரொம்பப் பிடிச்சதெல்லாம் ரெண்டு விஷயம்தான், ஒன்னு T.M.S. பாட்டு இன்னொன்னு முட்டை பிரியாணி”. என்ற கடைக்காரரின் வார்த்தைகளை உள்வாங்கிய கண்டக்டருக்கு சடக்கென பேருந்தில் நடந்த உரையாடல்கள் மின்னலாய் வந்துபோனது.

முகத்தைத் துடைத்துக்கொண்டு டிரைவரை நோக்கி வேகமாக விரைந்தார் கண்டக்டர். கடைக்காரர் மால்டோவையும் டீயையும் டிரைவரின் முன், மேசைமீது வைத்தார். டிரைவரின் அருகில் வந்து அமர்ந்த கண்டக்டர், “அண்ணே விடிஞ்சதும் கெளம்புறதுக்கு முன்னாடி எனக்கு வேப்பிலை அடிக்கணும், இங்க பக்கத்துல யாராவது இருக்காங்களான்னு கேட்டு சொல்லுங்கண்ணே”, என்றார் முகத்தில் முத்து முத்தாய் வெளியேறிய வியர்வையைத் துடைத்துக்கொன்டே.

– 24-Aug-2021

Print Friendly, PDF & Email
என் பெயர்: மீ.மணிகண்டன் புனைப்பெயர்: மணிமீ தந்தை பெயர் ந.மீனாட்சி சுந்தரம் தாயார்: மீ.பானுமதி சொந்தவூர்: கல்லல், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா வசிப்பிடங்கள்: கல்லூரிக்காலம் வரை தமிழகத்திலிருந்த நான் பின்னர் தொழில் நிமித்தமாகப் பல நாடுகளில் வசித்து வருகிறேன். 1996 - 2000 சவுதி அரேபியா 2001 - 2014 குவைத் 2015 முதல் அமெரிக்கா அடர்த்தியாக இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நட்சத்திரம் தாங்கும் சில இரவு வானம்போலப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *