அடாஜன் சாலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: May 21, 2023
பார்வையிட்டோர்: 13,614 
 

மழை. அடை மழை. ஹசிரா சாலை வழக்கம் போல் ஆள் அரவமற்று கிடந்தது. அங்கிருந்து சூரத் செல்லவேண்டுமெனில் அடாஜன் சாலை வழியாகவோ அல்லது டுமாஸ் சாலை வழியாகவோ செல்ல வேண்டும். டுமாஸ் வழியாக செல்வது கால விரையம் தான். ஆனாலும் பாதுகாப்பான சாலை அது.

அடாஜன் பாதுகாப்பற்ற சாலையா என்று உறுதியாக தெரியாது. ஆனால் அந்த சாலையை பற்றி நான் கேள்விப்பட்ட கதைகள் ஏராளம் என்பதால் அந்த சாலையில் பயணிப்பதை தவிர்த்து வந்தேன். அதற்கு என் நண்பர் சுனில் படேலும் ஒரு காரணம். அவர் ஹஜிரா டுமாஸ் சாலை சந்திப்பில் அமைந்திருந்த மக்தல்லா குடியிருப்பில் வசித்து வந்தார். அது என் கம்பெனியின் குடியிருப்பு. திருமணமானவர்களுக்கு மட்டும். அதனால் நான் சூரத்திலிருந்த பேச்சுலர் ஹாஸ்டலில் தங்கியிருந்தேன்.

எங்களுக்கு இரண்டாவது ஷிப்ட். நான் தினமும் ஷிப்ட் ரிபோர்டை எழுதிவிட்டு கிளம்ப பன்னிரண்டு மணியாகிவிடும். கம்பெனி பஸ் இரவு பதினொன்னே முக்கால் மணிக்கெலாம் கிளம்பிவிடும். சுனில் அதில்தான் போய் கொண்டிருந்தார்.

நான் கம்ப்ரசர் சிஸ்டம் இன்சார்ஜாக இருந்தேன். சுனில் பாய்லர் இன்சார்ஜாக இருந்தார். இரவு ஏழுமணிக்கு பின்பு இரண்டு பேருக்குமே வேலை இருக்காது. ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை வெறும் ரீடிங்க்ஸ் எடுப்பது மட்டுமே வேலை. பாய்லர் அறையும் கம்ப்ரசர் அறையும் அருகருகே இருந்ததால் நான் அவர் அறைக்கு சென்று அமர்ந்து கொள்வேன். இருவரும் ஏதாவது கதைப் பேசிக்கொண்டிருப்போம். அப்படியே நாங்கள் நண்பர்களாகிப் போனதால், சுனில் என்னுடன் என்னுடைய காரில் வரத் தொடங்கினார். அலுவலகம் வரும் போது மதியம் ஒன்றரை மணிக்கு அவரை பிக் செய்து கொள்வேன். இரவு, அவரை அவர் குடியிருப்பில் இறக்கிவிட்டுவிட்டு நான் சூரத் வந்தடைய மணி ஒன்றாகிவிடும்.

முதன் முதலில் நாங்கள் சேர்ந்து பயணிக்கும் போது, ஹசிரா அடாஜன் டுமாஸ் மூன்று சாலைகளும் சந்திக்கும் இடத்தை அடைந்த போது, அடாஜன் சாலையை சுட்டிக் காண்பித்து, “ராத் மே உஸ் தரப் மத் ஜாவ்” என்றார். நான் “ஏன் அங்க ஏதும் வழிப்பறி நடக்குமா?” என்று அப்பாவியாக கேட்டேன். சப்தமாக சிரித்த அவர், “பேய் இருக்கு” என்றார். எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. அதனால் அவர் சொன்னதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் பலரும் இரவு நேரங்களில் அந்த சாலையை தவிர்க்கும் படி அறிவுரை கூறினர். ஒரு முறை மதிய வேலையில் நான் அந்த சாலை வழியாக வந்தேன். அன்று சுனில் விடுப்பில் இருந்தார்.

அடாஜன் சாலையில் பால் பாட்டியா அருகே வந்ததும், கார் பஞ்சர் ஆகிவிட்டது. காரை ஓரம் கட்டிவிட்டு ஸ்டெப்னியை எடுத்து மாட்டினேன். யாரோ காரின் முன்கதவை திறந்துகொண்டு உள்ளே ஏறியது போல் இருந்தது. வேகமாக முன் சென்று பார்த்தேன். யாருமில்லை. சுற்றும் முற்றும் பார்த்தேன். ஆள் நடமாட்டம் எதுவுமில்லை. மீண்டும் பின்னாடி வந்து ஸ்டெப்னியை டைட் செய்ய முற்பட்ட போது தான், ஸ்டெப்னியும் பஞ்சர் ஆகியிருந்ததை கவனித்தேன். நான் வெளியே எடுக்கும் போது ஸ்டெப்னி நன்றாகதான் இருந்தது. அருகே எதாவது பஞ்சர் கடை இருக்கிறதா என்று தேடிக் கொண்டு சென்றேன்.

அங்கே இருந்த சந்தோசி மாத கோவில் வாசலில் அமர்ந்திருந்த பூசாரி, “என்ன வேணும்?” என்றார். நடந்ததை சொன்னேன்.

“சந்தோசி மாதா உன் கூட இருக்கா. அதான். இனிமே இந்த பக்கம் வராத” என்றார். கோவிலில் இருந்த பையனிடம் சொல்லி அனுப்பினார். அவன் ஒரு மெக்கானிக்கை அழைத்து வந்தான்.

மெக்கானிக்கிடம், “இவங்க சொல்ற மாதிரி எதாவது பேய் ஆவிலாம் உண்டா?” என்றேன்.

“அதெல்லாம் தெரியாது பாய். இங்க நிறைய ஆக்சிடென்ட் நடக்கும். அதுக்கு ஆளாளுக்கு ஏதேதோ காரணம் சொல்றாங்க” என்று சொன்னான். அவன் என்னிடம் பேச விரும்பாதவன் போல் இருந்ததால், நான் மேற்கொண்டு அவனை எதுவும் கேட்கவில்லை.

இதை என் அம்மாவிடம் யதார்த்தமாக பகிர்ந்து கொண்டேன். இரண்டு நாட்களில் பார்சலில் மாசிபெரியண்ண சாமியின் விபூதியும், கருப்பு கயிறும் வந்தது. நான் எதற்கு தேவையில்லாத மனக்குழப்பமென்று அந்த சாலையில் பயணிப்பதை தவிர்த்து வந்தேன்.

அன்றும் சுனில் வரவில்லை. நான் ஒரு ட்ரைனிங் விஷயமாக மும்பை செல்ல வேண்டும். இரவு பன்னிரன்டரை மணிக்கு பஸ். அலுவலகத்திலிருந்து பத்து மணிக்கெல்லாம் கிளம்பிவிட வேண்டுமென்று எண்ணினேன். ஆனால் அன்று air-dryer பழுதடைந்து விட்டதால், வேலை அதிகமாகிவிட்டது.. நான் அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது மணி 11.30 ஆகிவிட்டிருந்தது. தூரலாக இருந்த மழை நான் ஹசிரா சந்திப்பை அடைந்த போது அடை மழையாக மாறியிருந்தது. ஹசிரா அடாஜன் டுமாஸ் சந்திப்பில் வழக்கம் போல் வலது புறம் திரும்பாமல், நேராக அடாஜன் சாலையை நோக்கி பயணித்தேன். டுமாஸ் சாலையில் சென்றால் நேரத்திற்கு சூரத்தை அடைய முடியாது. 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில் ஸ்பீடோமீட்டர் ’60’-ஐ தொட்டிருந்தது. சாலையில் விளக்குகள் இல்லை. என் முன்னோ பின்னோ எந்த வாகனமும் வரவில்லை. மணி இரவு பன்னிரண்டு இருக்கும். என்னுடைய கார் விளக்குகள் தந்த வெளிச்சத்தில் நான் வேகமாக சென்று கொண்டிருந்தேன். இடை இடையே என்னை அறியாமலேயே ஹாரன் அடித்தேன்.

திடிரென்று ஒரு பெண் சாலையின் குறுக்கே தோன்றினாள். என்னால் காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ‘டங்’

அந்த பெண்ணின் மீது கார் வேகமாக ஏறியது.

‘கடக் கடக்’ என்றொரு சப்தம். நான் காரை ஸ்லோ செய்தவாறே கார் ரியர்வ்யூ கண்ணாடியில் பார்த்தேன் அந்த பெண்ணின் உடல் சாலையில் கிடந்தது. இளம்பெண் போல் தோன்றினாள். எனக்கு காரை நிறுத்த பயமாக இருந்தது. என் கால் கட்டைவிரல் ஆக்சிலரேட்டர் மீது வேகமாக பதிந்தது.

மழை நின்றிருந்தது. மனம் உறுத்தலாகவே இருந்தது. சிறிது தூரத்தில் சந்தோசி மாதா கோவில் வந்தது. காரை நிறுத்தி உள்ளே ஓடினேன். உள்ளே உறங்கிக் கொண்டிருந்த பூசாரி, என்னை ஆச்சர்யமாக பார்த்தார். எல்லாவற்றையும் வேகமாக விவரித்தேன். அவர் கோவில் சிறுவன் மூலம் ஊர் பெரியவருக்கு செய்தி அனுப்பினார். ஊரிலிருந்து சிலர் திரண்டு வந்தனர். அதற்குள் அங்கே ஒரு பேட்ரோல் வண்டியும் வந்திருந்தது. நான் காரை கோவிலிலேயே விட்டுவிட்டு போலிஸ் வண்டியில் ஏறி பின்னிருக்கையில் அமர்ந்துகொண்டேன். ஊர் பெரியவரும் இன்னொருவரும் என்னுடன் எறிக்கொண்டனர். முன்னிருக்கையில் ஒரு போலிஸ் அதிகாரி அமர்ந்திருந்தார். நாங்கள் எல்லோரும் சேர்ந்து நான் சொன்ன இடத்திற்கு சென்றோம்.

“எந்த இடம்?” போலிஸ் ஓட்டுனர் வினவினார்.

“புல்கா விஹார் ஸ்கூல் கிட்ட…” நான் சொன்னேன்.

“இங்க ரெண்டு பெரிய மரம் இருக்கும்…” நான் சொல்லிகொண்டிருக்கும் போதே வண்டி அந்த மரங்களின் முன்பு நின்றது. .நான் அந்த மரத்தாருகே சென்றேன். சாலை காலியாக இருந்தது. இன்னும் சில ஊர் காரர்கள் அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்கினர். இரு புறமும் எல்லோரும் தேடினோம். அங்கே ஒரு விபத்து நடந்ததற்கான அறிகுறி எதுவுமில்லை. எல்லோரும் தங்களுக்குள் குஜராத்தியில் பேசிக் கொண்டனர் “லுக்ட் லைக் ஆன் யங் கேர்ள்….” நான் ஆங்கிலமும் ஹிந்தியும் கலந்து அந்த போலிஸ் அதிகாரியிடம் பேசினேன். அவளை அந்த சாலையில் பார்த்தேன் என்று உறுதியாக சொன்னேன். அவர் நான் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல், “கல்யாணம் ஆச்சா?” என்று வினவினார்.

நான் இல்லை என்று தலை அசைத்தேன். “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ” என்று சப்தமாக சொன்னார். எல்லோரும் சிரித்தனர். நான் எதுவும் பேசாமல் போலிஸ் வண்டியில் ஏறிக்கொண்டேன். வரும் வழியில் யாரும் எதுவும் பேசவில்லை. எங்களை கோவிலில் இறக்கிவிட்டுவிட்டு போலிஸ் அதிகாரி நகர்ந்தார். பூசாரி என்னை உற்று பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டார்.

அனைவரும் தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். நான் மும்பை செல்லும் மன நிலையில் இல்லை. எனக்கு ஒரே குழப்பாக இருந்தது. ‘டங்’. ‘கடக் கடக்’ ‘சந்தோசி மாதா உன் கூட இருக்கா.’ ‘இங்க நிறைய ஆக்சிடென்ட் நடக்கும்’ ‘ராத் மே உஸ் தரப் மத் ஜாவ்’

விடுதிக்குச் சென்று உறங்கிவிடுவது நல்லது எனப் பட்டது. என் விடுதியின் பார்க்கிங்கில் காரை நிறுத்தினேன். லிப்ட்டில் ஏறச் செல்லும் போது எதர்ச்சையாக காரை நோக்கினேன். காரின் முன்புறம் கிரிலில் ஏதோ தொங்கிக்கொண்டிருந்ததை கவனித்தேன். அருகே சென்றுப பார்த்தேன். காரில் கொத்தாக தலைமுடி சிக்குண்டிருந்தது. நீளமான அந்த முடியிலிருந்து சொட்டிக்கொண்டிருந்த மழைத்துளி, சிகப்பாக இருந்தது.

– ஜூலை 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *