பிடித்த நாளில் பெய்த மழைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 22, 2013
பார்வையிட்டோர்: 10,997 
 

படித்து முடித்த பின் வேலை தேட வேண்டிய சூழ் நிலை கட்டாயம் அனைவருக்கும் வரும். அது எனக்கும் வந்தது, நானும் நினைத்தேன் ஆனால் இப்போது வேண்டாம் இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து தேடிக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தேன்.
காரணம் படித்த படிப்பில் வேலைகிடப்பது சுலபமாக இல்லை அது போக எழுத்தாளனாவது என்றும், சவுண்ட் இஞ்சினியரிங் படிக்க வேண்டும் என்றும் வெவ்வேறு எண்ணங்கள் எனக்குள் இருந்தன.

அப்பாவின் பேச்சை கேட்டு அரசு பணிக்கான தேர்வுக்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன். இப்படியாக சென்ற நாட்களில் அரசு பணிக்காண தேர்வுக்காக சென்னை செல்ல வேண்டிய கட்டாயம்.

இதில் ஒரே சந்தோஷமான விசயம் இதை எழுத எனது தோழியும் சென்னைக்கு வருவாள். நான் தான் அவளுக்கும் சேர்த்து பதிவு செய்திருந்தேன். இருவருக்கும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் தேர்வு நடைபெரும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நடந்தது வேறு. வெவ்வேறு இடம் , நேரமும் வேறு.

நான் எதிர் பார்த்தது ஏதும் நட்கவில்லை. இதுவரை நடந்ததும் இல்லை.

தேர்வு முடிந்தது கைபேசியில் அவளை தொடர்வு கொண்டேன், ரொம்ப நேரம் கழித்து தான் அழைப்பை எடுத்தாள்.

எக்ஸாம் எப்படி எழுதிருக்க ? என்றாள்
ரொம்ப நல்லா எழுதிருக்கேன்
அப்படியே ஈஸியாவா இருந்துச்சு???
ஆமா படிக்காம போன எதுமே கஷ்டமா தெரியாது என்றேன்.

சரி சரி , நாளைக்கு எழும்பூரில், இண்டர்வியூவ் நடக்குது , நேரம் 10.30
ம்ம்ம் சரி நீ சீக்கிரம் கிழம்பிவா நான் இரயில் நிலையத்தில் காத்திருக்கிறேன் என்றேன்.

இரவு நான் அனுப்பிய எந்த குறுந்தகவலுக்கும் பதில் அனுப்பவே இல்லை
*****

நண்பனின் அறையில் தங்கியிருந்த நான், சீக்கிரமே எழுந்து விட்டேன். நான் குழித்துவிட்டு வந்த சமயத்தில் எனது கைபேசி ஒலித்து குறுந்தகவல் வந்ததை தெரியப்படுத்தியது.

இரண்டு தகவல்கள் அவளிடம் இருந்து

முதல் தகவல் : குட் மார்னிங் , நையிட் தூங்கிட்டேன்

இரண்டாம் தகவல் : அவள் கிண்டியில் இருந்து இரயிலில் வருகிறாள் என்பதை தெரியப் படுத்தியது.

நான் நுங்கம்பாக்கத்தில் வந்து சேர்ந்து கொள்வதாக பதில் அனுப்பி வைத்துவிட்டு சாப்பிட அம்ர்ந்தேன். சாப்பிட்டு முடித்த பின் நானும் எனது நண்பனும் இரயில் நிலையம் வந்தோம். அவன் வேலை விசயமாக கிண்டி செல்வதால் எனக்கு பாதையை மட்டும் சொல்லி, பயணச்சீட்டையும் எடுத்து கொடுத்து விட்டு சென்றான்.

நான் எதிர் பார்த்தது போலவே தாமதமாக வந்தாள். அவளது வருகைக்காக காத்திருந்தேன். கோடம்பாக்கம் வந்ததும் தெரிய படுத்தும்படி அவளிடம் சொல்லியிருந்தேன்.
என்னை தவிர அனைவரும் நடைபாதையில் பரபரப்புடன் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
இரயில் வந்தது, நானும் ஏறிக்கொண்டேன். ஒரு 3 நிமிட பயணம், எழும்பூர் நிலையத்தில் இரயில் நின்றது. இறங்கியதும்., அவளை கைபேசியில் தொடர்பு கொண்டேன்.

எங்க இருக்க நீ??
நீ எங்க இருக்க?? நான் பதில் சொல்வதற்குள்
நான் உன்னை பாத்துட்டேன் என்று அழைப்பை துண்டித்துவிட்டாள்.

லேசான சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த நிறத்தில் சுடிதாரும், கையில் இளம் பச்சை நிற கோப்புடனும் அழகான சிறு கைப்பையுடனும் என்னை நோக்கி நடந்து வந்தாள்.
இருவரும் இரயில் நிலயத்தின் வாசல் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
கடந்த எட்டு மாத சென்னை வாழ்க்கையில் முதல் முறையாக என்னிடம் பயணச்சீட்டு சோதனை செய்தார்கள்.
******
கல்லூரில் படிக்கும் போது இவளிடம் அதிகம் என்ன அவ்வளவாக பேசியதே கிடையாது. ஆனால் பேச வேண்டும் என்று அநேக முறை நினைத்திருக்கிறேன்.

இறுதி ஆண்டில் அவளது கைபேசி எண் தற்செயலாக கிடைத்தது. அன்றிலிருந்து தொடங்கியது எங்கள் நட்பின் சாலை.

அதன் பின் இருவரும் அவ்வப்போது பேசிக் கொள்ள துவங்கினோம்,
இருவருக்குள்ளும் அலைவரிசை ரொம்ப சரியாக இல்லை என்றாலும் சொல்லிக் கொள்ளும்படி இருந்தது.

என்னால் அவளது இருப்பை உணர முடிந்தது அவள் அருகில் இல்லாத போதும். என் உள்ளுணர்வு அவளை பற்றி தெரியபடுத்தும்
அவள் என்ன மன நிலையில் இருக்கிறாள் என்று என்னாள் சொல்ல முடிந்தது. அது எப்படி என்னால் செய்ய முடிந்தது என்று தான் புரியவில்லை.

அவளும் பல முறை என்னிடம் கேட்டிருக்கிறாள் எப்படி “சரிய சொல்ற ” என்று. எனக்கு தெரிந்தால் தானே அவளிடம் சொல்ல முடியும்.

தோனுச்சு சொல்றேன் என்று அவளுக்கு பதில் அளிப்பேன்.

*****
இரயில் நிலையம் விட்டு வெளியில் வந்து பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தோம். நாங்கள் செல்லவும் அங்கு பேருந்து வரவும் சரியாக இருந்து. அவசரமாக ஏறினோம், நடத்துனர் பின்னாலிருந்து வராததால் இறங்க வேண்டிய இடம் வந்த பிறகு தான் பயணசீட்டை வாங்கினோம்.
“டிக்கெட் எடுக்காமலே இறங்கிருக்கலாம் “என்று சொல்லி சிரித்தாள்.

நாங்கள் போக வேண்டிய அலுவலகம் அருங்காட்சியத்திற்கு அருகில் இருந்தது. அங்கு அவளது உறவினர் ஒருவர் வேலை பார்க்கிறார். அவரின் அறிமுகத்தால் தான் இன்று நேர்காணலுக்கு செல்கிறோம்.

இடத்தை கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது, வெயில் வேறு சுட்டெரித்து கொண்டிருந்தது.

கடைசியாக அவளது உறவினரை தொடர்பு கொண்டோம், பின்பு அவரே வந்து எங்களை அழைத்து சென்றார்.

11 மணிக்கு பிறகு தான் உள்ளே சென்றோம். ஒரு குளிர் சாதன வசதி செய்யப்பட்ட அறையில் காத்திருக்க சொன்னார்கள்.

“ இந்த நாள் மிகவும் பிடித்தமான நாளாக இருக்க போகிறது ” என்பதை அறியாமல் காத்திருக்க துவங்கினேன் அவளுடன்.
*****
அந்த அறை எனக்கு சின்ன திரையரங்கம் போலவே இருந்தது. இருக்கை அமைப்புகள் அவ்வாரே படிக்கட்டுகள் போல் அமைக்கப் பட்டிருந்தது.

அதில் மூன்றாவது படியில் , ஒரு மேஜையை பகிர்ந்து கொண்டு இருவரும் அமர்ந்தோம்.
இருவருக்கும் வினாத்தாள்கள் வழங்கப்பட்டன எழுத துவங்கினோம்.
கொஞ்ச நேரத்தில் முடித்தும் விட்டோம்.. இருவரும் சுயமாகத்தான் பதில்களை எழுதினோம், இருந்தும் இருவரது பதிலகளும் ஒன்று போலவே இருந்தது.

எழுதி முடித்த பின் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம், அந்த அறை மிகவும் அமைதியாக இருந்ததால் முதலில் மெல்லிய குரலில் தான் பேச துவங்கினோம். போக போக எப்பவும் போல் பேசலானோம்.

நிறைய பேசினோம்.

நீ நல்ல பேசுவன்னு நினைக்கவே இல்லை என்றேன்
நீ நல்லா பேசுன அதானால நானும் பேசுறேன் என்றால் கண்சிமிட்டியபடி.

அரசியல், சினிமா, கல்லூரி, நேர்காணல், எதிர்காலம், எனது கடந்த காலம் என எல்லாம் பேசினோம்.
எனது கடந்த காலம் பற்றி பேசும் போது என்னையும் அறியாமல் வெளிப்பட்ட கோபத்தை கவனித்த அவள், மெல்ல பேச்சை அறையில் இருந்த அஃறினை பொருட்களுக்கு மாற்றினாள்.

சுமார் 1 மணி அளவில் அவளது உறவிர் வந்தார், நாங்கள் எழுதி பதில் எழுதி வைத்திருந்த தாள்களை வாங்விட்டு.

பக்கத்துல ஹோட்டல் இருக்கும் இரண்டு பேரும் போய் சாப்டு 2 மணிக்கு வந்திருங்க என்றார்.
*****
எழுதிய நேரம் போக மற்ற நேரத்திலெல்லாம் பேசிக் கொண்டுதான் இருந்தோம்.நேர்காணல் என்கிற எண்ணமே தோன்றவில்லை தோழியுடன் உரையாட கிடைத்த நேரம் என்று தான் நினைத்தேன்.

பேசிக் கொண்டிருக்கும் போது ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் வித்தியாசமான முக பாவனைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள் அழகாக.

அப்போது காமிரா கையில் இல்லை இருந்திருந்தால் நிச்சயம் நூற்று்கணக்கான அழகான பாவனைகள் கிடைத்திருக்கும் நிழற்படங்களாக.
இப்போது எனக்குள் மட்டும் இருக்கிறது.

சில நிமடங்கள் நடப்பது உண்மைதான அல்லது “தேஜா வூ ” – வாக இருக்குமோ என்கிற சந்தேகம் கூட வந்தது. இதற்கு காரணம் அவளது பாவனைகளாக கூட இருக்கலாம்.

நல்லவேளையாக அறையில் இருந்த மற்றவர்களின் சப்தங்கள் இது உண்மைதான் என்பதை எனக்கு உணர்த்தியது.
*****
சாப்பிடும் போதும் புன்னகைத்த படியே சாப்பிட்டாள், வைக்க பட்ட கண்ணாடி டம்ளர் சுத்தமாக இருக்கிறதா என்று ஒரு முறை முறைத்து பார்த்தாள் அதை. சாப்பிட்டு விட்டு 2.15 க்கு மீண்டும் அலுவலகத்திற்குள் நுழைந்தோம். அதே அறையில் உட்கார வைக்கப்பட்டோம்.

பின்பு இருவரில் ஒருவரை நேர்காணலுக்கு அழைத்தார்கள், அவள் என்னை போக சொன்னதால் நான் சென்றேன்.
ஒரு இருபது நிமிடம் வரிசையாக கேள்விகள், அனைத்திற்கும் பதில் அளித்தேன். பின்பு அவள் அழைக்கப்பட்டாள், மீண்டும் ஒரு இருபது நிமிடம் திரும்பி வந்தாள் வா கிளம்புவோம் என்றாள் அவளுக்கே உறிய செய்கையில்.

அவளது உறவினரிடம் சொல்லிவிட்டு வெளியில் சென்றோம்.

காலையில் இருந்த சூரிய வெப்பம் இப்போது இல்லை, மேகங்களின் உதவியால் நிழலில் நடக்க துவங்கினோம்.

அருங்காட்சியகத்திற்கு செல்வோமா என்றேன் சரி என்றாள். நுழைவுச்சீட்டு வாங்கும் இடத்திற்குச் சென்றோம் அவள் தான் வாங்கினாள்.
அதன் பின் வரலாற்று கலை பொருட்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றோம்

காலையில் அவளது முகத்தில் இருந்த துள்ளல் இப்போது அவளிடம் இல்லை, காரணம் கேட்டேன் காலையில் வெயிலில் நடந்த சோர்வு என்றாள்.
ஒவ்வொரு பொருட்களாக பார்க்க ஆரம்பித்தாள் மீண்டும் குதூகலமானாள். ஒன்றையும் விடாமல் நிதானமாக பார்த்து வந்தாள்.

அடுத்ததாக ஒவியங்கள் இருக்கும் பகுதிக்கு சென்றாள்,

எனக்கு பயம் இவளை பார்த்து
“இவ்வளவு அழகான பேசும் ஓவியமா” என்று பொறாமை கொள்ளும் என்று. அவளுக்கு அந்த கவலையெல்லாம் இருந்ததாக தெரிவில்லை.
அங்கே , பொருட்களை தொடக்கூடாது என்பது விதி, ஆனால் இவளோ சிலவற்றை சிறு குழந்தையின் குதூகலத்துடன் தொட்டு பார்த்து கண்சிமிட்டி சிரித்தாள்.

“ குமரி வடிவில் இருக்கும் குழந்தையோ ” என்று நினைத்துக் கொண்டேன். அந்த பகுதியை விட்டு வெளியில் வந்தோம்
அன்றைய பொழுதின் முதல் மழை பெய்து கொண்டிருந்தது.

*****
நான் மழை பார்த்து வாசல் படிக்கட்டுகளில் அமர்ந்தேன் , முதலில் யோசித்தவள் பின்பு அமர்ந்தாள். சரியாக , பூமி லேசாக நனைவதற்கு மட்டுமே பெய்தது.
ஒரு 5 நிமிடம் தான் பொழிந்திருக்கும், அதற்குள் என்ன அவசரமோ மழை சென்று விட்டது..

பூமியில் இருந்து வெப்பம் ஆவியாக வெளியேருவதை முதல் முதலாக கண்டேன், அவளிடம் காண்பித்தேன்.

அச்சச்சோ என்று பூமிக்காக வருத்தப்பட்டாள்.

அடுத்து சிறுவர்களுக்கான பகுதிக்கு போவோம் என்றாள். சரி என்று அங்கும் சென்றோம் . நிறைய பொம்மைகள் இருந்தன அங்கிருந்த பொம்மைகள் மொத்தமாக சொல்லின இவளை பார்த்து
“அழகான நடக்கும் பொம்மை என்றன” எனக்கு மட்டும் கேட்கும்படி.

அங்கிருக்கும் கப்பலை பார்த்து இதை நான் ஹாலிவுட் பட்த்தில் பார்த்திருக்கிறேன் என்றாள்.நானும் ஆமோதித்தேன்.
பின்பு புத்தக கண்காட்சி நடைபெரும் இடத்திற்கு சென்றோம், மெதுவாக சுற்றி பார்த்தாள் ஒரு புத்தகத்தை எடுத்தாள் அவளது பெயருக்கான் காரணத்தை பார்த்து என்னிடமும் காட்டினாள்.

எனக்கு ஒரு புத்தகம் வாங்கி தருவதாக சொன்னாள், நான் தான் வேண்டாம் என்று செல்லிவிட்டேன்.
அங்கிருந்து வெளியில் வந்துபேருந்து நிறுத்தம் நோக்கி நடக்க துவங்கினோம்.
*****
செல்லும் போது நடைபாதையில் தேங்கியிருக்கும் தண்ணீரை தவிர்த்து நடந்து வந்தாள். அங்கு நின்ற “தமிழ் நாட்டு குடிமகன்” ஒருவனை பார்த்து நடைபாதைவிட்டு சாலையில் குதித்தாள். பின்னாள் ஒரு ஆட்டோ வந்து கொண்டிருந்தது நல்லவேளையாக விபத்து நேரவில்லை.

ஆனால் என்னிடம் திட்டு வாங்கினாள்.

அப்போது இரண்டாம் மழை பெய்ய துவங்கியது. பேருந்தில் ஏறி எழும்பூர் ரயில் நிலையம் வந்திறங்கினோம். அப்போது மழை சற்று கூடியிருந்தது. நனைந்த படி பேசிக்கொண்டே உள்ளே சென்றோம்.

“ மழை பிடிக்குமா ” என்றாள்
“ ம்ம்ம் இப்ப இங்க பிடிக்கல”
“ எனக்கும் தான் இங்க மழை பிடிக்கவே இல்லை” என்றாள்

“ நீ பிடிக்லைன்னு சொன்னா மழையும் அழும் ” என்றது எனது மனம்.
அவள் சொன்னது கேட்டுவிட்டதோ என்னவோ. மழை நின்று விட்டது, அநேகமாக வருத்தத்துடன் தான் சென்றிருக்கும்.
அவளிடம் பேசியிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மூன்று இரயில்களில் ஏற வேண்டாம் என்றேன்.

நான்காம் இரயில் பெண்களுக்கான பெட்டியில் ஏறிக்கொண்டாள். அவளை ஏற்றிக்கொண்ட சந்தோஷத்தில் ரயில் விசிலடித்த படி கிழம்பியது.
******
இன்றைய பொழுது இவ்வளவு மகிழ்ச்சியாக கழியும் என்று நினைக்கவேயில்லை.கிட்டத்தட்ட முழுதாக எட்டு மணி நேரம் உங்களது தோழியுடன் நடந்து, பயணித்து , அமர்ந்து பேசிப்பாருங்கள் . நான் சொல்வது புரியும்.
அவளுக்கு எப்படியோ தெரியவில்லை , நான் கேட்க்கவும் இல்லை. நான் உன்னை பற்றி நினைத்து வைத்ததற்கும், நீ நடந்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்றாள். மற்றபடி ஏதும் சொல்லவில்லை.
நேர்காணல் முடிந்த பின் இந்தவேலை கிடைத்தால் கட்டாயம் ஏற்றுக்கொள் என்றாள்.
அதே சமயம் எழுதுவதையும் நிறுத்தி்க் கொள்ளாதே, அதையும் தொடர்ந்து செய் என்றாள்.
சவுண்ட் இஞ்சினியரிங்கை நீ வேலைக்கு போய் சொந்த காசில் படி என்றாள். இப்படி சில அறிவுரைகள் இன்று என் தோழியிடம் இருந்து கிடைத்தது.

என்னிடம் இவ்வளவு நேர்மறையாக என்னிடம் யாரும் பேசியதேயில்லை, நான் பேசுவதை பொருமையாக கேட்டவர்களும் இல்லை. இவள் இரண்டையும் செய்தாள்.
*****

அவள் இரயில் ஏறிய பின், நான் பேருந்து நிறுத்தம் சென்றேன் நான் தங்கியிருந்த நண்பனின் அறைக்கு செல்ல.
போகும் வழியின் பாதியிலேயே அன்றைய பொழுதின் மூன்றாம் மழை மொழிய துவங்கியது. நான் இறங்க வேண்டிய இடமும் வந்துவிட்டது. நனைந்து கொண்டே, அருகில் இருந்த ஒரு கடையின் வாசலில் நின்றருந்தேன்.

மழையில் நனைந்து விட்டேன் என்று குறுந்தகவல் அனுப்பினேன். உடனே பதில் அனுப்பினாள்.
இப்ப எங்க இருக்க??
பேருந்து நிறுத்தத்தில், அங்க மழை பெய்யுதா
ஆமா, இங்கேயும் மழை பெய்யுது.
இந்த பதி்ல் வந்ததும் மழை சறறே அதிகமானது. இதற்கு காரணம் இவள் இப்போது மழை பற்றி ஏதும் சொல்லவில்லை. ஒரு வேளை மாலையில் சொன்னது போல் மழை பிடிக்கவே இல்லை என்று சொல்லி இருந்தால், மழை நின்றிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

“சரி ஃபிரண்ட் ரூமுக்கு பொய்ட்டு மெசேஜ் அனுப்பு ” என்றாள்.

நானும் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தேன். மூன்றாம் மழை சற்றே குறைந்து சாரலாகியிருந்தது. நனைந்தபடியே அறைக்கு வந்தேன்.
உடைகளை மாற்றிவிட்டு அவளுக்கு குறுந்தகவல் அனுப்பினேன்
பதில் வரவில்லை.

“குட் மார்னிங் , நைட் தூங்கிட்டேன்” என்று மறு நாள் அனுப்புவாள் என்று நினைத்துக் கொண்டே தூங்க போனேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *