கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: October 20, 2022
பார்வையிட்டோர்: 5,968 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாம் வேத காலத்துக்குச் செல்கிறோம்.

வேத காலத்தைப் பற்றிப் படித்தோ, படித்தவரிடம் கேட்டோ அறியேன்.

ஆனால் என்னுள் திடீரென ஜனித்த வித்து, விறுவிறெனப் பெரிதாகி, என்னின்று விடுதலை பெற என்னை வாட்டிக் கொண்டிருக்கும். இக்கதை – கதையென்று எப்படிச் சொல்வேன்?- சமயம் (situation) அதன் வழியே காட்டிய சில அனுமானங்கள்படி, வேத காலம் என்ற பெயரில் அனுமான காலத்துக்குச் செல்வோம்.

அனுமானமே கேள்விக்குறிதான். ஆகவே என் மூலம் பின்வருமாறு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் விஷயத்தின் தலைப்பும் (?) தான். ஓம்:- ஆசிரியர்.

அழுது அழுது பையனுக்கு முகமே வீங்கி விட்டது. அப்படியும் தன்னுடைய திக்குத் தெரியா நிலையில் வெகு அழகாயிருந்தான். இன்னமும் கண்ணீர் பெருகிய வண்ணம் தான். உள்ளே சுரப்பிகள் எவையேனும் உடைப்பெடுத்துக் கொண்டுவிட்டனவோ? சாந்தினி அச்சங்கண்டாள். அவள் கண்கள், கணவரின் கவனத்தைக் கவலையுடன் நாடின.

யக்ஞதேவர் யாககுண்டத்துக் கெதிர், பத்மாஸனத்தில் வீற்றியபடி, பையன் மேல் தங்கிய அவர் பார்வையில் கருணை வழிந்தது.

அன்றைய ஹோமம் முடிந்து, குண்டத்தில் கங்குகள் நீர்த்துவிட்டன.

“குழந்தாய், இங்கு வா”

பையன் அருகே வந்ததும், ஹோமகுண்டத்திலிருந்து அஸ்தியை எடுத்து அவன் நெற்றி நீட்டுக்கு இட்டார்.

சாந்தினி, பரிவின் பீறல் தாங்கமுடியாமல், அவனை வாரித் தன் மடியில் இருத்திக்கொண்டாள். பையனுக்கு அழுகை புதிதாகப் பீறிட்டது.

“இந்தத் தவப்பிஞ்சுக்குத் தாங்கள் என்னத்தைக் கற்றுத் தரமுடியும்? என்ன இவனுக்கு ஏறும்?”

“இவனுடைய பெற்றோர்கள் குருகுல வாஸத்துக்கு இவனை நம்மிடம் விட்டுச் சென்று விட்டார்கள். இவ னுடைய தந்தையும் நானும் பால்ய ஸ்னேகர்கள். எங்கள் விதி எங்களைத் தனித்தனி வழியில் பிரித்து விட்டாலும் எங்கள் நட்பின் கொழுந்து குனியாமல் அப்படியே வீசிக் கொண்டிருக்கிறது. தவிர, சாந்தினி , பையனுக்கு வித்தை ஏறுமா, ஏறாதா என்று கணிக்க நாம் யார் ? வயதுடன் புத்தியை அளவுகட்டுவது அறியாமையாகும். அவனறியாமல் ஒரு அணுவும் அசையாது. அவளால் ஆகாதது ஏதுமில்லை . கர்ப்பவாஸத்துள் புகுமுன் இந்த உயிர்த்தாது ஞானப்பாலில் முட்ட முட்ட நீந்தியிருந்தால் யார் கண்டது?”

அவள் அவன் தலையைக் கோதிவிட்டாள். காலை சூர்யனில் அவன் தலைமயிர் தங்க மோதிரக் குவியலாய் மாறிவிட்டது. கண்ணீர் கன்னங்களில் காய ஆரம்பித்து விட்டது. முகத்தோடு முகம் புதைத்து,

“குழந்தே, உன் பேர் என்ன?”

“விஷ்ணுசர்மன்.”

“என்ன அழகான பேர்! எத்தனை அழகாகச் சொல்கிறாய்! சரிவா, சாப்பிடப் போவோம்.”

அவள் குடிசையுள் அவனை அழைத்துச் செல்கையில், அவர் நோக்கின் கனிவில் சிரம் பக்கமாய்த் தாழ்ந்தது.

யக்ஞதேவர், ரிஷிபதவியை அடையவில்லை. ஆன்ம ஒழுக்கத்தில் பல வருடங்கள் ஆயினும் இயற்ற வேண்டிய யாகங்கள், தவங்கள் இன்னும் எத்தனை எத்தனையோ ? ஞானமும் பக்தியும் இருந்தால் மட்டும் போதுமா , அருள் இறங்க வேண்டாமா? அலராத புஷ்பமாய் அருள்பிரஸாதத் துக்கு வேளைக்குப் புவனத்தின் சுற்றல்களையும் ஜன்மாக் களையும் வைத்துக் கணிப்பதோ எதிர்பார்ப்பதோ பாபமே யாகும். அவர் அறிவார். அவனோ, அவளோ, அதுவோ, எதுவாயினும் சரி. ஸர்வாந்தர்யாமியாய அந்த சக்திக்குத் தான் வேளை அறியும். வேளையும் தவறாது.

அவர் கண்கள் சிந்தாத கண்ணீரில் பளபளத்தன. பெரிய மேட்டுவிழிகள்.

***

“குமாரா!”

குரல் கேட்டுப் பையன் திடுக்கிட்டு நிமிர்ந்தான். மூங்கில் புதரினின்று வெளிப்பட்டு ஒரு மான் எதிரே நின்று கொண்டிருந்தது. குட்டியில்லை. ஆனால் முழு வளர்ச்சியை இன்னும் அடையவில்லை.

“ஏன் இங்கு தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறாய்?”

“என் அப்பனும் அம்மையும் என்னை விட்டுவிட்டுப் போய் விட்டார்கள்.”

“புரியவில்லையே! இறந்து விட்டனரா?”

“இல்லை இல்லை!!” அலறினான். “குருவிடம் பாடம் கற்றுக் கொள்ள விட்டுப் போய்விட்டனர்.”

“இவ்வளவுதானே! குருகுல வாஸம் முடிந்து அவர்களே வந்து உன்னை அழைத்துப் போகவோ, அல்லது அப்போது நீயே பெரியவனாகிவிடுவாய் அல்லவா!-நீயே அவர்களிடம் போகவோ வாய்ப்பு இருக்கிறதே! என்னைப் பார். எனக்குப் பெற்றோர்களேயில்லை. இறந்தா போய்விட்டேன்? மொழு மொழுவென்று இருக்கிறேனாயில்லையா?”

“உனக்குப் பெற்றோர்கள் ஏன் இல்லை? இறந்து விட்டனரா?”

“இறந்த மாதிரிதான். ஏதோ கண்முன் பூச்சி பறக்கிற மாதிரி ஒரு நினைப்பு இடறி அதுவும் மங்கிக் கொண்டு வருகிறது. எங்கோ குஹையிருள். நான் திடீரென ஒரு தனிமை உணருகிறேன். முக்கி இடறி எழுந்து தத்தித் தத்தி குஹை வாயிலுக்குப் போய்ப் பார்த்தால், அதோ தூஊஊரத்தில் என் தந்தையின் கொம்புக் கிளைகளின் நிழலாட்டம் காலை வெய்யிலில்; கூடவே தாய். உடனே மலைச்சரிவில் மறைந்தும் விட்டனர். பிறகு இன்னமும் அவர்களைப் பார்க்கப் போகிறேன். பார்த்தாலும் அடையாளம் கண்டு கொள்வேனோ அறியேன்.”

“இப்படியும் உண்டோ?” அதிசயிப்பில் பையன் அழுகை மறந்தான்.

“ஏன் இருக்கக் கூடாது? ஆனால் நினைக்கிறேன். நான் பிறவி ஊனம். என் வலது பின் தொடை எலும்பு சரிந்திருக் கிறது. ஏனைய மான்களைப் போல் என்னால் ஓடமுடியாது. அதனால் என்னைக் கழித்து விட்டார்கள். என்னைப் போன்ற பிறவிகளை – தனக்கே பயனில்லாதவைகளைக் காப்பாற்றுவதை விடத் துறந்து விடுவதே மேல். ஆனால் நான் புல்லையும் செடியையும் மேய்ந்து இதுவரை பிழைத்துத்தானிருக்கிறேன். மூங்கில் குருத்துத் தின்பதற்கு ரொம்ப ருசி. ஆனால் கல்லும் மண்ணும் கூட இந்த உடம்புக்கு இனி ஒத்துக் கொள்ளும் என்றே எண்ணுகிறேன். இது எங்கள் வழி. ஆனால் குமாரா! நீ இப்படி ஆசிரமத்தின் எல்லை தாண்டி இங்கெல்லாம் துணையில்லாமல் வர லாகாது. யக்ஞதேவர் எங்களைப் போன்றவர்க்கு ரொம்ப ப்ரியமானவர். உன் பெற்றோர் உன்னை அவரிடம் ஒப்படைத்திருக்கும் பொறுப்பை நீயே சோதிக்கக் கூடாது.”

அது சொல்லிவிட்டு, மெதுவாய்த் தான் வந்த வழியே சரிந்த நடையில் சென்று மூங்கில் புதர்களிடையே மறைந்தது. அதன் குட்டை வால் சும்மாயிருக்க முடியாமல் ஆடிற்று. கொம்பில்லை. பெண்மான்.

அதன் விழிகள் அவனுக்குப் பாமினியை நினைவு மூட்டின. பாமினி அவன் அக்கை.

அவன் சிறியவனே யானாலும் பாமினியின் திருமணம் பற்றி அவன் பெற்றோர்களின் பதைபதைப்பை ஊமைக் கனவாக உணர்வான். இப்பவே அவளுக்குத் திருமணம் ஆகியிருக்க வேண்டும். அல்லது அவளுக்காக நியமிக்கப் பட்டவன் குருகுல வாஸத்தினின்று திரும்புவதற்கு எதிர் பார்த்துக் கொண்டிருத்தல் வேண்டும். ஆனால் அவள் வரன் இன்னும் நியமிக்கப்படவில்லையே!

குருகுல வாஸம் முடிந்தவுடன் முறைப்படி நடை யாகவே நாடு யாத்திரையிலிருந்து திரும்பிவரும் பிரம்மச் சாரிகளைத் தேடிக் கொண்டிருந்தனர். அவர்களில் பெண்ணுக்கு ஜாதகனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்பவே முறை பிழறிப் போனதுதான். மணமுடிந்து பெண் ருதுவாகி, புக்ககம் அடையும்போது வதுக்களிடையே வயது வித்யாசம், இருபது இருபத்தியிரண்டுக்குக் குறையாது. நீண்ட காலம் கிரஹஸ்தாசிரமத்தில் இருந்து அதன் தருமங்களாய அதிதி ஆராதனை, மாமனார் மாமியார் வழிபாடு, புத்திரப் பேறு எல்லாம் நடந்த பின் வரணாசிரமம் இருந்து, கடந்து, ஜன்மாவின் கடைசி நிலை காவியைக் கணவன் ஏற்குமுன் மஞ்சளும் குங்குமமும் கலையாமல் கூந்தலில் பூவும், மடியில் தேங்காயும் திரண்டு, அவள் ஜீவன் சுமங்கல்யப்ராப்தி அடைந்துவிடும். எதுக்கும் குறைவில்லை . அந்த நாளின் ஆசாரம், வாழ்க்கையின் நெறிமுறை, நேர்மையின் விளை வாகிய உடல், மன ஆரோக்யம் அப்படி.

ஆனால் யாவற்றைக் காட்டிலும், பாமினியின் பெற் றோரை அரித்துக்கொண்டிருந்த திகில், காலகதியில் யுகச் சந்திகளில் நேரப்போகும் வாழ்க்கையின் சீர்குலைவுக்கும் தர்மச்சிதைவுகளுக்கும் ஆன்றோர்கள், தீர்க்கதரிசிகள் இப்பவே எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் களுடைய முதல் எடுத்துக்காட்டுக்கு, அவமானச் சின்னத்துக்கு நாம் இலக்காகி விடுவோமோ?

அவச்சொல்லுக்கு அப்படி அஞ்சிய காலம் அது.

***

முதல் நாள் பாடம் துவங்குகிறது.

“மகனே! நான் சொல்வதைத் திரும்பச் சொல்: மாதுர் தேவோ பவ:”

“மாதுர்தேவோபவ:”

“பிதுர்த் தேவோ பவ:”

“பிதுர்தேவோபவ:”

“குரு தேவோ பவ”

“குருதேவா! உங்கள் ஸ்தானம் மாதா பிதாவுக்குப் பின்னாலல்லவா வருகிறது.”

“அதைப்பற்றி என்ன ஸந்தேகம்? அன்னையும் பிதாவும் தான் முதல் தெய்வங்கள்.”

“அப்படி ஆனால் நான் தங்களிடம் வரவேண்டிய அவசியமேயில்லையே! என் பெற்றோர்களைப் பிரியாமல் அவர்களை வழிபட்டுக் கொண்டு, நான் அவர்களோடேயே இருக்கலாமே!”

“குமாரா! ஒரு ஜன்மாவை உருப்படுத்தி அதன் தர்மத்தில் அதற்கு வழிகாட்ட குரு தேவைப்படுகிறார். இந்தப் பூமியில் நீ தோன்றியதற்குக் காரணம் உன் மாதாபிதா. அவர்கள் இல்லாமல் நீ இல்லை, ஆகையால் அவர்களுக்குத் தெய்வநிலை. நீ எதற்காகப் பூமியில் பிறந்தாயோ அந்தக் கர்மாக்களை உனக்குச் சுட்டிக் காட்டி அவைகளை நீ வஹிக்க ஞானத்தையும் மனோபலத்தையும் குரு போதிப்ப தால் அவருக்குத் தெய்வநிலை.”

“ஏன், என் பெற்றோர்கள் எனக்குச் சொல்லிக் கொடுக்க முடியாதா?”

“அவர்களை மீறின விஷயங்களும், நீ கற்றுப் பேண வேணது உள. தவிர புத்ரபாசம், பெற்றோர் பாசம், சிஷ்ய னுடைய மாணவ சிந்தைக்கும், சிரத்தைக்கும், நாளடைவின் தவ நிலைக்கும் குறுக்கீடாகி, அதனால் பாபகிருத்யங்கள் நீங்கள் அறியாமலே நேர ஹேதுவாகும். உனக்கு நேரும் ஸந்தேகங்களை நீ கேட்கலாம். கேட்க வேண்டும். தீர்த்து வைக்கத்தான் குரு இருக்கிறார். அப்படியும் அவரால் தீர்க்க முடியாத சந்தேகங்களைத் தெளிய, தெளிவிக்க அவருடைய ஞானாசிரியனை அவர் நாடுவார். ஞான விசாரணை அளப்பரியது. ஆழம் அறிய முடியாதது. ஆனால் ஆரம்பத்தில் நம் முன்னோர்கள் காட்டிய வழியில் அவர்கள் நடந்த பாதையில், அவர்கள் மிதித்த சுவடுகளைப் பின்பற்றினால் தான் ஆரம்ப சந்தேகங்கள் தாமே அழிந்து உன் புத்தி விசாலிக்க வழி பிறக்கும். ஆரம்பத்திலேயே தர்க்கித்தால் புத்தி குயுக்தியில் முடிந்து, பிறவிப்பயன் எட்டிப் போய் விடும். ஸ்வய, உண்மையான விசாரணை ஆரம்பமாகையில் உனக்கே அடையாளம் தெரியும். ஆகவே இப்போது நான் சொல்வதைப் பின்பற்றிச் சொல்வாயாக. மாதுர் தேவோ பவ: பிதுர்த் தேவோ பவ: குருதேவோ பவ:”

பையன் கீழ்ப்படிந்தான். ஆனால் அவன் முழுத்ருப்தியில் இல்லை.

யக்ஞதேவர் நெற்றி வேர்வையை ஒற்றிக் கொண்டார்.

***

“குமாரா! ஆசிரமத்து எல்லை தாண்டி இங்கெல்லாம் துணையில்லாமல் வரலாகாது என்று நான் எச்சரித்தும் நீ இப்படித் தனியாக வருவது முறையாகாது. ஏன் வந்தாய்?”

“நீ வருவாயோ என்கிற ஏக்கம்தான்.”

“எனக்குச் சொல்லி அனுப்பித்தால் வரமாட்டேனா?”

“சொல்லி அனுப்ப எனக்கு யார் இருக்கிறார்கள்?”

“உன் குருநாதர் நீ நினைக்கற மாதிரி கருணை இல்லாதவர் அன்று. ரொம்ப இரக்கமும் அனுசரணையும் உள்ளவர்”

“என்னைச் சொல்லிவிட்டு நீ மாத்திரம் உன் இஷ்டத்துக்கு இங்கு நடமாடலாமோ?”

“குமாரா! இதை நன்கு புரிந்துகொள். நீ மனிதப் பிறவி. உலகத்துக்கு உன் பங்கு, உபயோகமாயிருக்கப் பிறந்திருக் கிறாய். அதன் முறை தெரிந்து கொள்ளவே குருகுல வாசத் துக்கு வந்திருக்கிறாய். நாங்கள் அப்படியல்ல. மரணம் எப்போதும் எங்கள் நெருங்கிய உறவு. அதன் மையத்தில் தான் எப்பவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் விடும் மூச்சே , எங்கள் பிழைப்பே அப்படித்தான். எந்த சமயம் வேடன் அம்புக்கு இலக்காவோமோ, எந்த விலங்குக்கு இறைச்சியோ? இந்த ஆபத்கரம் கண்ணுக்குத் தெரியா இழையில் எங்கள் மேல் எப்போதுமே தொங்கிக் கொண்டிருப்பதால் எங்கள் ஸர்வ குறிக்கோளே, உயிர் இருக்கும் வரை ஒருவினாடிகூட வீணாகாமல் அதை முழுக்க அனுபவித்துவிட வேண்டும். இது தவிர வேறு அறியோம். நான் சொன்னதுக்கு ஏற்ற மாதிரி?”- முன்னும் பின்னும் சூழ்ந்தும் அவசரமாய்ப் பார்த்தது. அதன் மேலுதடு தீவிரமான மோப்பத்தில் சுருங்கிற்று. ” வேற்று மிருகத்தின் வாசனை தெரிகிறது. இது நல்ல வாசனை இல்லை. குமாரா இங்கேவிட்டு ஓடி விடு. இதோ நான் ஓடிப்போகிறேன்.”

சொல்லி விட்டால் ஆகிவிட்டதா? அவனுக்கு உடல் எல்லாம் உதறிற்று. கால்கள் பூமியுடன் ஒட்டிக் கொண்டு பெயர மறுத்துவிட்டன.

அப்போது அவன் அதனைக் கண்டான். இதுவரை எங்கு மறைந்திருந்தது?

நீளமும் அகலமுமாய், ஆனால் சிக்கனமான அங்கங் களுடன், இவ்வளவு பெரிய உருவை அவன் இதுவரை கண்டதில்லை.

முகம், உடல், வால் உள்பட மஞ்சளில் வரிவரிக் கோடுகள் அதற்கு அழகு செய்தன. மஞ்சள் விழிகள் அரை மங்கலில் ஜ்வலித்தன. வால் சாட்டை சுழன்றது. கிழடுதான். அதன் நடையில் அசாத்ய கம்பீரம் தெரிந்தாலும், கூடவே தளர்ச்சியும் தெரிந்தது.

மான் மின்னலாய்ப் பறந்தது. ஆபத்து கொடுக்கும் தனி பலத்தில், பிறவி ஊனம் மற்ற குறைகளெல்லாம் மறந்து விடும், மறைந்தும் விடுமோ?

ஆனால் புலிக்கு அதன் வேகத்தை அதனாலேயே அடக்க முடியவில்லை. வேகம் அதன் உச்சத்தைத் தொட்டதும், கால்கள் பூமியில் பதியாமல் அந்தரத்தில் நீந்தின. மானின் பக்கலிலேயே நீந்திற்று. நீந்திப் பாய்ந்து புலி, அதன் முழு கனத்துடன், கனத்தின் வேகத்துடன் மான்மேல் விழுந்த தும் இருவயிறுகளும் அணைந்தன. புலி, தன் மூர்க்கத்தின் ஆசையில், கோரைப்பற்களை இரையின் கழுத்தில் பதித்த தும், மான் தலைசாய்ந்ததும்…

பையன் கீழே விழுந்து நினைவிழந்தான்.

அவன் கண் திறந்த போது, அரசமரத்தடியில், கயிற்றுக் கட்டிலில் கிடந்தான். யக்ஞதேவர் அருகே அமர்ந்திருக்க, குருமாதா அவன் வாயில் ஜலத்தை ஊற்றிக் கொண்டிருந் தாள்.

“குழந்தாய் மெதுவாக, மெதுவாக. கங்காஜலம் யாவதுக்கும் ஒளஷதம்.”

மானின் தொங்கிய தலையும் அந்தக் கோரமும், மடை திறந்த நினைப்பில், அடித்துக்கொண்டு வந்ததும், துக்கமும் பயமும் பீறிட்டது.

“மானைப் புலி தின்றுவிட்டது. என் நண்பன் போய் விட்டான்” தேம்பினான்.

“மகனே நீ கண்ட காக்ஷி உனக்கு வந்திருக்க வேண்டாம். நீ ஆசிரமம் தாண்டியிருக்கக் கூடாது.”

“என் நண்பனும் அதைத்தான் சொன்னான்.” “ஓ, அது சொல்லிவிட்டதா? நீதான் கேட்கவில்லையா?” “குருதேவா இனி நான் என்ன செய்வேன்?”

“நாம் என்ன செய்ய முடியும்? ஆசிரமத்தின் திக்கில் ஓடிவந்திருந்தால் ஒருவேளை அது தப்பித்திருக்கலாமோ. எதிர்த் திக்கில் ஓடிற்றோ? அதற்கு விதிமுடிய வேளை வந்து விட்டது.”

“அது என்ன விதி? விதி!” பையனுக்குக் குமுறிற்று.

“குமாரா! பிறப்பது, இருப்பது, முடிவது மூன்றும் இயற்கையின் ஏற்பாடு. அதற்கு விதியென்று பெயர். விதியை யாருமே தப்பமுடியாது.”

“அப்போ மான் திரும்பிவராதா?”

“வராது.”

“ஏன், சுவாமி அதைப் பிழைப்பிக்க முடியாதா?”

“கடவுள் அதனதன் செயலுக்கும், முடிவுக்கும் விதித் திருக்கும் வேளையை மீறி எதுவும் செய்ய மாட்டார். செய்ய முடியாது. மீறினால், மற்றதன் வேளைகள் பாதிக்கப்பட்டு, யாவும் தடம் மாறி உலகுக்கே தீங்கு நேரும்.”

“குருதேவா, புரியவில்லை.”

“இதோபார், மானின் வாழ்க்கை வீணாகவில்லை. அதன் உடல், புலியின் பசியைத் தீர்த்தது. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. அந்தந்த உயிருக்கு அதனதன் உணவு என்று விதித்திருக்கிறது.”

“நாம் உயிரைத் தின்கிறோமா?”

“ஏன், நாம் காய், கறி, கனி, கிழங்கு தின்று வயிறு வளர்க்கவில்லையா? தாவரங்களை உண்டே! தாவரங்கள் தாம் வாழ பூமியினின்று தண்ணீரை உறிஞ்சிக் குடிக்க வில்லையா? மண்ணுக்கு இரையாகாதது எதுவுமில்லை. யாவும் கடைசியில் மண்ணோடு மண்ணாய், மண்ணிலே பிறந்து, மண்ணிலே வாழ்ந்து, மண்ணுக்கு எருவாகி, மறுபடியும் மண்ணிலே பிறந்து, சின்ன உயிருக்குப் பெரிய உயிர் என்கிற ஏற்பாடில், என்ன ஆச்சர்யம்!” அவர் கைகள் கூப்பின. மூவரும் மௌனமானார்கள். பிறகு அவன்:

“யாரும் பசியோடு இல்லாதபடி அப்படி ஒரு வரம் இருக்காதா?”

குருதேவர் சிரித்தார். ”முடியாது மகனே. கூடவும் கூடாது. பசியே அற்றுப் போனால் வாழ்க்கை அசைவற்றுப் போய்விடும். அப்புறம் உயிருக்கே என்ன வேலை? பசி என்கையில் வயிற்றுப்பசி தவிர என்னென்னவோ வேறு பசிகள் இருக்கின்றன. வயிற்றுப் பசியைவிட உயர்ந்த பசிகள், தேடல் பசிகள். அவைகளை விளக்க உனக்கு இப்போது வயதாகவில்லை . உயிரை வளர்க்க வயிற்றுப்பசி அவசியம். மற்ற பசிகளை வளர்க்க, அவை நிறைய , அதனால் லோகம் க்ஷேமமடைய உயிர் வேண்டும். உயர்ந்த பசிகள். தேடல் பசிகள். எல்லாம் நிறைந்தவன் ஆண்டவனே இன்னமும் தியானத்தில் இருக்கிறான்.”

“தியானம் என்றால் என்னவென்று தெரியும். தவம். கடவுள் எல்லாம் நிறைந்தவர் தியானத்தில் என்ன தேடுகிறார்?”

“தன்னை” அவருக்கு மெய்சிலிர்த்தது.

“ஓ!” பையன் முகம் மாறிற்று. “பகவானே தன்னைத் தேடிக் கொண்டிருக்கிறாரானால் அவனவனும் தன்னை அவனேதானே தேடிக்கொள்ள வேண்டும்?” பதிலுக்குக் காத்திருக்கவில்லை.

அவன் நெற்றி ஒளிவீசிற்று.

“குருதேவா, புரிந்துவிட்டது. என்னைப் புலி விட்டது. அப்பா அம்மா புலி, பாமினி புலி, மானின் புலி, புலியின் புலி இன்னும் என்னென்ன புலிகளோ அத்தனையும் விட்டு என் தேடலுக்கு விடுதலையாகி விட்டேன். விடை பெற்றுக் கொள்கிறேன்.”

“குழந்தை, அதற்கும் அருள் வேண்டும். அவசரப்படாதே.”

“அதுவும் சும்மா உட்கார்ந்திருந்தால் வராதே! அதையும் தேடித்தானே போகவேண்டும்! இனி எனக்கு இங்கே வேலையில்லை.”

அவனின்று ஒளி கண் கூசிற்று. இடுப்பில் துண்டு தவிர வெறும் கையனாய், ஆசிரமம் தாண்டி, மூங்கில் புதர்களைத் தாண்டி அவன் தூரத்தில் மறையும் வரை கைகூப்பிய வண்ணம் இருவரும் கல்லாய்ச் சமைந்து நின்றனர்.

லோக க்ஷேமார்த்தத்துக்கு சுபகாரியம் தன் செயலில் நிகழ்கையில் போல், திடீரென மழை வந்து பெய்து அவர் களைத் தெப்பலாக்கியது. ஆயினும் அவர்கள் அசைய வில்லை.

இவன் போது துருவ நக்ஷத்ரம் தோன்றிவிட்டதா? எழுத்து பிறந்து விட்டதா?

பாடங்கள், உபதேசங்கள், சரித்ரம் முதலியன வாய் வழி, நினைவு எனும் மரபு வழிதானா?

எல்லாம்

?

– அலைகள் ஓய்வதில்லை (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 2001, வானதி பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *