குந்தியும் நிசாதினும்

2
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 44,133 
 

ஆசிரமத்தில் திருதராட்டினனையும் காந்தாரியையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு குந்திக்கு இருந்தது. இந்தக் கடமையை குந்தி விரும்பியே செய்தாள்.வனத்தின் மத்தியிலான ஆசிரமம் இது. அன்றாட வழிபாட்டிற்காக தினமும் காட்டுக்குச் சென்று சுள்ளிகளை எடுத்து வருவது அவள் வேலை. மதியம் தான் அவளுக்கு பிடித்த பொழுது. சுள்ளிகளைப் பொறுக்கி விட்டு சிறிது நேரம் அங்கேயே சுற்றி விட்டு வருவாள். பீமன் மட்டும் இங்கிருந்தால் எப்படியெல்லாம் உதவி செய்வான்?

நிசாதஇன மலைவாழ் பெண்கள் சிலர் எதிரே வந்தனர். இழையோடிய நரைகள் அவர்களது அனுபவங்களைச் சொல்வதாக இருந்தன. சுள்ளிகளைச் சேகரித்து கனமான கட்டுக்களாக்கி தோளில் சுமந்து ஏதாவது பேசியபடி போவார்கள். குந்தி அவர்கள் பேசுவதை அறிந்து கொள்ள ஒரு போதும் முயன்றதில்லை.கடுமையாக உழைத்தபடி, மகிழ்ச்சியாக..அழகாக பளீரெனச் சிரித்தபடி…

காற்று வேகமாக அடித்தது. சுகமாக வருடி அவளுடைய சோர்வை நீக்கியது. வீடு திரும்பிக் கொண்டிருந்த மலைவாழ் பெண்களைப் பார்த்த குந்திக்குள் முதல் முறையாக ஒரு கேள்வி எழுந்தது.”நான் ஏன் இந்த இடத்தில் வசித்து என் வாழ்வை வீணாக்குகிறேன்? விருப்பப்பட்டு நான் இங்கு வரவில்லை. விதி விட்ட வழியில் போகிறேன்” தன்னைப் பற்றி யோசிக்க இப்போது நேரம் உள்ளது. இப்படியொரு ஆழமான சுமை அவளுக்குள் இருந்திருக்கிறது என்பது தெரியாமல் தான் இருந்தது. முன்பு அவள் வாழ்க்கை வேறு விதமாக இருந்தது. அவள் பல்வேறு பாத்திரங் களாக வாழ்ந்திருக்கிறாள். மருமகள், அரசி, தாய், என்று.. ஒரு பெண்ணாக வாழ அவளுக்கு என்று நேரம் இருந்ததில்லை.அவளுக்குச் சொந்தம் என்று எதுவும் இருந்ததுமில்லை. ஆமாம். ஒரே ஒரு தடவை.. இளமையில்..அந்த நினைவு சுடு காட்டுத் தீயாய் மனதுள் ஜூவாலைகளை விசிறி அடித்தது. அவள் சாகும்வரை அது சுடும். அவளுக்கு இப்போது மன்னிப்பு கேட்க வேண்டும் போல இருந்தது. காட்டிடம்,மலைகளிடம்,பறவைகளிடம் ,சருகு களிடம் தன் சுமையை இறக்க முடிந்தால்..பெண்கள் அருகே வந்தும், விலகியும் தங்கள் பணிகளைத் தொடர்ந்தனர். ஆனால் அவர்களிடையே பேச்சுப் பரிமாற்றம் இல்லை. நிசாதினர்களை எப்போதும் பார்க்கும்போதும் அவர்களைப் பற்றி எந்தப் பதிவும் அவளுக்குள் இல்லை. குந்திக்கும், அவர்களுக்கும் என்றும் தொடர்பு இருந்ததில்லை. எப்படி இருக்க முடியும்? ராஜவாழ்க்கையின் போது வழிபாடும், பிராமணர்களை கவனிப்பதும் தான் அவள் வேலை.அவள் ஒரு தடவையாவது தாசியுடன் பேசியிருப்பாளா? குந்திக்கும் , ஹிடிம்பாவுக்கும் ஏதாவது உறவுண்டா? ராஜ வாழ்க்கை தவிர வேறு எதுவும் அவளுக்கு தெரிந்ததில்லை. ஏன் அந்த நிசாதினர் அவளருகில் வர வேண்டும்? அவளுக்கு தெரிந்து கொள்ள மனமில்லை. அவள் விரும்புவ தெல்லாம் தனது மனச்சுமையை இறக்கி வைத்து விட்டு மன்னிப்பு பெறுவது தான்.

கண்களைக் கட்டிக் கொண்ட காந்தாரியின் தன்மை அவளை வருத்தியது. அவள் எவ்வளவு உறுதியானவள்? நூறு மகன்களை இழந்த பிறகும் எவ்வளவு மனக் கட்டுப்பாடு ; எப்போதும் சரியான பாதையில் ..

ஆனால் குந்தி …கண்டிப்பாக பாவமன்னிப்பு பெற வேண்டும்.அதற்கு எப்போது நேரம் வரும்? நாளுக்கு நாள் தன்னை பலவீனமாக உணர்கிறாள். தினமும் அவர்களை கவனித்துக் கொள்வதும் ,ஆசிரமத்தில் விட்டு விட்டு வருவதும் அவளை இன்னமும் பலவீனமாக்குகிறது.காடு, ஆறு, பறவைகள், சரசரக்கும் இலைகள் , காற்று, நிசாதினர்கள் என்று எல்லோரிடமும் சொல்லி விடுவது சரிதான் என்று படுகிறது. அவள் தன் மொழியிலேயே சொல்லும் போது அவர்களுக்குப் புரியாது. கேள்விகளும் இருக்காது. சூரியஸ்தமனத்திற்கு பிறகு அவர்கள் போவார்கள். அவளும் ஆசிரமத்திற்குப் போய் வேண்டியதைச் செய்வாள்.

ஆமாம். யுதிஷ்டிரன் ,கிருட்டிணன், பீமன், அர்ச்சுனன் அவள் கருவறையில் ஜனித்தவர்கள்தான். ஆனால் அவர்கள் பாண்டுவின் புத்திரர்கள் இல்லை. நகுலனையும், சகாதேவனையும் அவள் அதிகமாக நேசிப்பதேன் ? தன்னிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டவைகளை நிறைவு செய்யவா?அவள் தைரியம், தர்மம் எல்லாம் எங்கே?தனக்குள் பேசிக் கொண்டாள். பாவ மன்னிப்பு பெறாவிட்டால் எப்படிப் பாவங்களில் இருந்து மீள முடியும்? தேவி பிருத்வியே ! என் பாவப்பட்ட கதையைக் கேள். “நான் காந்தாரியைப் போல தர்மப் பிறவியில்லை. தர்மம் எனக்கு தைரியத்தைத் தரவில்லை. தர்மயுத்தம் முடிந்து என் புதல்வர்கள் உயிரோடு வந்த போது நான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினேன். ஆனால் திரௌபதியும், உத்தராவும் தம் மகன்களை இழந்த சோகத்தில் இருந்தனர். என்னால் அவர்களை ஆறுதல் படுத்தமுடியவில்லை. ஆனால் காந்தாரிக்கு முடிந்தது.அவளது நூறு மகன்களும் இறந்து விட்ட போதிலும் ஆறுதல் சொல்ல முடிந்தது. “இந்த மொத்த மரணமும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதும், தவிர்க்க முடியாததும் ஆகும். உங்களைப் போலவே நானும் என் மகன்களை இழந்திருக்கிறேன். மரண நேரம் முடிந்தது.மனம் சோகத்தில் புதைய நாம் அனுமதிக்கக் கூடாது.இறப்பு என்பது வேதனைதான். ஆனால் மனைவி, தாய், மகள். சகோதரி என்று வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.வாழ்க்கை எல்லாமும் கலந்ததுதான்” என்று ஆறுதல் சொன்னாள். எனக்கு தர்மத்தைப் பற்றி அவளைப் போல முழுப்புரிதல் இல்லை. கிருஷ்ணனிடம் புலம்பியபோதும்கூட அவள் தன் மகன்களுக்காகவும், பேரன்களுக்காகவும் மட்டுமா புலம்பினாள்? அபிமன்யு தன் மடியில் கிடந்த போது உலகத்துப் பெண்களின் சார்பில் அவளால் போரைச் சபிக்க முடிந்தததை நான் உணர்ந்தேன். அதுதான் காந்தாரி. இது பதவிக்கான போர். இது தர்மத்திற்கான வெற்றியா? அதர்மத்திற்கான தோல்வியா? சவங்களைப் பார்க்கும் போது யுத்தம் என்ற வார்த்தையை எவ்வளவு பெண்கள் சபித்திருப்பார்கள்.. கர்ணன் ஜுவாலையைவிடப் பிரகாசமானவன். எதையும் சுலபமாக ஏற்றுக்கொள்ளாதவன்.பிணமாய்க் கிடந்தபோது எவ்வளவு அமைதி அவனிடம்…அவனுடைய உடலைக் கண்டதும் காந்தாரி கதறியழுதது எனக்குச் சாட்டையடியாக விழுந்தது. எனக்கு ஏன் அந்த தைரியம் இல்லை? நான் ஏன் அவனை என் மடியில் வைத்துக்கொள்ளவில்லை?.உண்மையைச் சொல்ல வில்லை?அவன்தான் என் முதல்குழந்தை .தனஞ்செயனே! ஏன் அண்ணனைக் கொன்றாய்? பழிக்குப் பயந்துதான் நான் அவனை ஒதுக்கினேன். கர்ணன் ஒருவன்தான் நான் விரும்பி அழைத்து வந்தவனிடம் பிறந்தவன்.எப்படியான வேடிக்கை இது! பஞ்சபாண்டவர்கள் யாரும் பாண்டுவின் மகன்கள் இல்லை. ஆனாலும் பாண்டவர்கள். கர்ணன் தேரோட்டியின் மகன்.அந்த நேரத்திலும் நான் மௌனமாக இருந்தேன். இதை விட பாவம் எது?காந்தாரி தூய்மையானவளும் அப்பாவியும். அதனால்தான் அவளால் தைரியமாக உண்மையைப் பேசமுடிந்தது..இல்லாவிட்டால் அவளால் கிருஷ்ணனைச் சபிக்கமுடிந்திருக்குமா?நான் அத்தனையும் கேட்டுக்கொண்டுதானே அங்கிருந்தேன்? இந்தக் காடு, இயற்கை ஆகியவை எனக்கு மனிதர்கள் எப்படியெல்லாம் இழிவானவர்கள் என்பதைக் காட்டுகிறது.பதவிக்கான யுத்தம்,

முறையற்ற சாவுகள் இவை எதுவும் இயற்கையின் அமைதியைப் பாதிக்க முடியாது.இதற்கு முன்பு எனக்கு எதையும் பார்க்கவும், யோசிக்கவும் மறந்து போனதே. என் மௌனம் மன்னிக்க முடியாதது என்று இப்போது தெரிகிறது.

திடீரென அவள் நிமிர்ந்தாள். நிசாதினர்கள் அவளையே வெறித்தபடி இருந்தனர். முகங்களில் வெறுமை..கண்கள் அசைவின்றி, குந்தி மரத்துப் போனவளாக இருந்தாள்.அவர்களில் வயதான பெண் ஏதோ சொல்ல மற்றவர்கள் சிரித்தனர். குந்தி பயந்தாள்.அருகில் வந்துவிடுவார்களோ.. மாலைப் பொழுது நெருங்கியது. அவள் சுள்ளிகளை இழுத்துக் கொண்டு நடந்தாள்.நாளை அவள் வேறெங்காவது போவாள்.இன்று பாவத்தை ஒப்புக் கொண்டுவிட்டபிறகு மனம் அமைதியாக இருப்பதை அவளால் உணர முடிந்தது. இதுவரை கவலை மனதை அரித்ததையும், பொறுக்க முடியாத சுமையாக இருந்ததையும் நினைத்தாள். அந்த நிசாதினப் பெண்கள் அவள் சொன்னதைக் கேட்டிருக்க வேண்டும். குந்தியைப் பொறுத்த வரை அவர்கள் பாறைகள்தான். அவளுக்கு அவர்கள் மொழி தெரியாதைப் போல அவளுக்கும் அவர்களுடையது தெரியாது.

காந்தாரி படுப்பதற்கு குந்தி உதவி செய்தாள். ” எப்போதும் உன் கைகள் குளிர்ச்சியாகவே இருக்கும். இன்று என்னவோ இளம் சூடு விரல் களில் தெரிகிறது. ரத்த ஓட்டம் வேகமாகப் பாய்வதைப் போல.. இன்றுதான் உன் தொடுதல் ஓர் உயிர்ப்புடன் இருக்கிறது.’

“காடு தாயைப் போல அன்புடையதாக இருக்கிறது.”

“உனக்குச் சிறிதாவது அமைதி கிடைத்ததா?”

“ஓரளவு’

“கவலைகளில் இருந்து விலகப் பழகிக் கொள்ள வேண்டும்”

“எனக்கு உங்களைப் போல மனவலிமை இல்லை’

“ஒவ்வொரு கணம் கடக்கும் போதும் நாம் சாவை நெருங்கிக் கொண்டிருக் கிறோம். நான் சாவிற்காகக் காத்திருக்கிறேன்.”

குந்தி படுத்தாள் திருதராட்டினனும், காந்தாரியும் போவது சரிதான். குந்தி ஏன் போக வேண்டும்?.முதுகைச் சூரியனுக்குக் காட்டியபடி குந்தி குளத்தில் குளித்தாள். அவள் முதுகை வெள்ளைக்கூந்தல் மறைத்தி ருந்தது. குனிந்து பார்த்தால் சூரியதேவனுக்கு அவள் யாரென்று தெரியுமா? மனித வாழ்க்கையின் பல கோடி வருடங்கள் கடவுளுக்குச் சில கணங்கள் தான்.,

இன்று ஏன் இப்படி மன்னிப்புக் கேட்பதற்கான வேகம்? நிசாதினத்தவர் காட்டின் இந்தப் பகுதிக்கு வர மாட்டார்கள். இங்கு எல்லாம் ஒரே மாதிரியான இடமாகவே தெரிகிறது. தொலைந்து போவதற்கு வாய்ப்பு இருப்பதால்தான் விதுரன் மரக் கிளையையும, பாறையையும் அடையாளம் காட்டினான். “காட்டு தெய்வத்திற்கு மனிதர்களைக் கண்டால் பிடிப்பதில்லை. இது காட்டுவாசிகளின் இடம். அவர்கள் தொலைவதற்கு வாய்ப்பே இல்லை. ஆசிரமத்திற்குப் போகும் வழியிலான மரத்தைப் நீ பார்த்துக் கொண்டு விட்டால் போதும் ’

“பயப்படும்படி ஏதாவது உண்டா?”

’பயம் என்பது மனதின் பிரமைதான்!”

காடு அருமையான இடம். தனியாக இருக்க முடியும். முணுமுணுப்பாய் மன்னிப்புக் கேட்க முடியும்.குருஷேத்திரத்திற்குப் பிறகு தர்மன் கட்டளைப்படி விதுரன் பெரிய அளவில் தகனம் செய்து விட்டான்.வெண்ணையும், கர்ப்பூரமும் எரிந்த நாற்றத்தை மறைக்கும்படி…என்றாலும் அவ்வளவு சீக்கிரத்தில் போகாத அழிவு. நான் பாவங்களைத் தொடர்ந்து செய்திருக் கிறேன். கர்ணனைப் பற்றி என் மகன்களிடம் சொல்லவில்லை. யுத்தத்திற்கு முதல்நாள் கர்ணனிடம் போய் துரியோதனனை விட்டுவிட்டு யுதிஷ்டிரனோடு சேரும்படி சொன்னேன்.அப்போதும் அவன் கடுமையாக ஒருவார்த்தை சொல்லவில்லை. “நீ என் மகன். நான் சொல்வதைக் கேட்கத்தான் வேண்டும்.” என்றேன். “வெட்கக் கேடு! நான் பிறந்த கணத்திலேயே என்னை உதறி விட்ட நீ ஒரு தாயின் கடமையைச் செய்யவில்லை. மகனிடம் உன்னால் எப்படி எதையும் கேட்க முடியும் என்று அவன் சொல்லியிருக்கலாம். ஆனால் அவன் எதுவும் சொல்லவில்லை.பாசத்தோடு அவனைக் கட்டித் தழுவிக்கொள் வதற்காக நான் போகவில்லை ஒருதடவைகூட அவனைப்பற்றி நினைத் ததில்லை. எப்போதும் பாண்டவர்கள் நினைவுதான்.ஆனால் காந்தாரியால் எந்தத் தடையும் இல்லாமல் கர்ணனைப் புகழ முடிந்தது. “கர்ணனைப் பற்றிய பயம் யுதிஷ்டிரனை பதிமூன்று வருடங்கள் தூங்க விடாமல் செய்தது.கர்ணன் அக்னியைப் போல தைரியமும், இந்திரனைப் போல வெற்றியும் இமயம் போலக் குளிர்ச்சியும், உறுதியும் கொண்டவன் என்று காந்தாரி புகழ்ந் தாள். பேச்சற்று என்னால் அவளை உற்றுப்பார்க்க முடிந்தது. அவ்வளவுதான்.ராஜ வாழ்க்கையில் ஒருவரால் தந்திரமானவராக முடியும். கர்ணனிடம் அழைத்துப்போனது என் சுயநலம்தான்;பாசமில்லை.பாண்ட வர்களின் வெற்றிக்காக கிருஷ்ணன் எதையும் செய்வான் என்பது கர்ணனுக் குத் தெரியும் என்று இன்று புரிந்து கொண்டேன்.வெற்றிக்குரியவர்கள் சேர்ந்து போராடுவது தர்ம யுத்தமில்லை.இது கர்ணனுக்கு தெரிந்திருந்ததால் தான் “நான் துரியோதனனை விட்டு வரமாட்டேன். வேண்டுமானால் உன் மகன்களில் நான் அர்ச்சுனனை மட்டும் கொல்வேன். கொன்றாலும் உன்னுடைய ஐந்து மகன்களும் உயிரோடு இருப்பார்கள்.”என்று சொன்னான்.தன்னை என்னுடைய மகனாக நினைத்திருக்கிறான். நான் ஒரு முறைகூட அப்படிச் சொன்னதில்லை. எனக்கு அந்தக் குற்றவுணர்வு இருக்கவில்லை நான் பாண்டவர்களைப்பற்றி மட்டுமே நினைத்தேன். அதனால் உன் சகோதர்களுக்க் உதவு என்று சொன்னேன்.இறந்தவர்களுக்கு தர்மன் திதி செய்யப் போன போது”கர்ணனுக்கும் செய்து விடு. அவன் சூரியனால் எனக்குப் பிறந்த மகன்.’என்று சொன்னேன். யுத்தத்திற்கு முன்னால் ஏன் இதைச் சொல்லவில்லை என்று அவன் கேட்டான்.என் மகன்கள் என்னை மன்னிக்க மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்..”எப்படி அவன் மட்டும் உன் வயிற்றில் பிறந்தான் என்று கேட்டான். நீங்கள் யாரும் பாண்டுவின் புதல்வர்கள் இல்லை. மத்ரியின் கருவில் இருவர் பிறந்தது போலவே கர்ணனும் பிறந்தான். அவர்களைப் போலவே பிறந்ததாக நான் சொல்லியிருக்கலாம் எதையும் என் விருப்பத்தோடு நான் செய்ய வில்லை.மனைவி மற்றவர் மூலம் பிள்ளை பெற்லாம் என்று பாண்டு சொன்னதைக் கேட்டுத்தான் நான் உங்கள் மூவரையும் பெற்றேன்.நான் சுயமாக நடந்து கொண்டது கர்ணனனைப் பெற்ற போதுதான்.நான் அப்போது கன்னி. கணவனின் சம்மதம் பெற வேண்டியதில்லை.இன்றைய நாளில் கணவனின் விருப்பத்தோடு மனைவி அதைச் செய்யலாம். ஆனால் கன்னிப் பெண் அதைச் செய்ய முடியாது.யயாதியின் மகள் மாதவி தன் தந்தையின் விருப்பப்படி நான்கு குழந்தைகளை நால்வரிடம் பெற்றாள். கன்னி என்பதால் தந்தையின் விருப்பம் அவளுடையதானது.நான் பாண்டுவின் மனைவி. நீங்கள் பாண்டவர்கள். கர்ணன் தேரோட்டி மகன். தன் மனதில் உள்ளவற்றை கொட்டித் தீர்த்த குந்தி நிமிர்ந்தாள். அந்த முதிய நிசாதினப் பெண் அவளையே வெறித்தவாறு நின்றாள்.அவள் கண்களில் இரக்கம் தெரிந்தது. இரக்கமா?அதுவும் அந்தப் பெண்ணா?அவள் தன் சுள்ளியை எடுத்துக் கொண்டு நடந்தாள்.இன்று என்னவோ ஆசிரமம் ரொம்பத் தொலைவில் இருப்பது போலத் தெரிந்தது.பாலைவனத்தில் கானல் நீரைக்காண்பது…காட் டைப் பாலைவனமாக்க முடியாது.

காந்தாரி அவள் கைகளை இணைத்துக் கொண்டாள்.” தேர்ச் சக்கரம் சுழலுவதைப் போல காலம் சுழன்று விடும்.நம்முடைய ஆயுள் சக்கரம் சுருங்கிக் கொண்டிருக்கிறது.விரைவில் அது ஒரு புள்ளியாகி விடும்.அந்தப் புள்ளியும் சூன்யமாகி விடும்”

“ஆமாம்”

“உன்னையே துன்புறுத்திக் கொள்ளாதே. கடந்த காலத்தை திரும்பக் கொண்டு வரமுடியாது.இன்றைய சூரிய உதயம் தான் யதார்த்தம்.அது போலத் தான் சூரிய அஸ்தமனமும்.நாம் தூங்கினாலும் காலம் சுழலும் ; நாளை சூரிய உதயம் நிகழும்.

காந்தாரியின் பாதங்களை தொட்டு விட்டு குந்தி புல்தரையில் படுத்தாள்.

குந்தி பாறை ஒன்றில் உட்கார்ந்திருந்த போது காடு அதிர்வது போன்ற ஒரு வித உணர்வு அவளுக்குள் ஓர் எச்சரிக்கையாய்த் தெரிந்தது.காடு இன்று அமைதியாக இல்லை.பறவைகள், கூட்டமாகப் பறக்கின்றன. குரங்குகள் தாவி மறைகின்றன. என்ன ஆயிற்று?நிசாத இனக் குடும்பங்களும் தங்கள் வேட்டை நாய்களோடு காட்டைவிட்டுச் செல்கின்றனர்.பரவாயில்லை. அவர்கள் போகட்டும்.இன்று குந்தி பூமித்தாயிடம் தன் பாவங்கள் எங்கே தொலையும் என்று கேட்பாள். எப்போது தனக்கு மன்னிப்பு என்று கேட்பாள்.

ஒரு நிழல் அருகே… அந்த முதிய நிசாதஇனப்பெண்.குந்திக்கு வியப்பாக இருந்தது. இவள் எதற்கு தன்னருகில் நிற்கிறாள். எதையோ தேடுவதைப் போல கண்களைப் பார்ப்பதேன்?.

“இன்று மன்னிப்பு கேட்கவில்லையா?”

“நீங்கள் நீங்கள்..”

நான் உன் தவறுகளைக் கேட்டேன். நீ செய்த தவறுகளில் மிகப் பெரிய ஒன்றிற்காகவும் பாவ மன்னிப்பு கேட்பாய் என்று காத்திருந்தேன்”

“உங்கள் மொழி.. எங்களைப் போன்றதா?”

“ஆமாம்.எனக்குப் புரியும். நான் தேவைப்பட்ட போது மட்டும் பேசுவேன். நாங்களும் மனிதர்கள் தான் என்று ஏன் உனக்கு தோன்றவில்லை! நாங்கள் யார்? பாறைகளா,மரங்களா, விலங்குகளா?”

“நீங்கள் பேசி நான் கேட்டதில்லை.”

“நான் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்.பல வருடங்களாக நான் உன்னைத் தொடர்கிறேன். நாங்கள் நகரங்களுக்குப் போவதில்லை. நீயாக இங்கு வர வேண்டியதாயிற்று. குந்தி நான் பல காலமாக்க் காத்திருக்கிறேன்”

“என் பெயர் தெரியுமா உங்களுக்கு?”

“உனக்கு வலிக்கிறது இல்லையா?’

அவள் சிரித்தாள். “ஒரு நிசாதினப் பெண் உன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறாள்.இந்தக் காட்டில் நீ நிராயுதபாணி.உன் மகன்கள் நகரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சிப்பாய்களை அனுப்பி எங்களை தண்டிக்க முடியாது!”

“இங்கே முனிவர்கள் இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா”

“ஓ, முனிவர்கள்! எப்போதும் அவர்களைப் பார்க்கிறோமே!நாங்கள் காட்டின் குழந்தைகள். ”

குந்தி மிகச் சோர்வாக உணர்ந்தாள். “சரி.உங்களுக்கு என்ன வேண்டும்?”

“நீ செய்த மிகப் பெரிய தவறுக்கு மன்னிப்பு கேட்கவில்லை. ”

“இல்லை. நான் மன்னிப்பு கேட்டதை நீங்களும் கேட்டீர்கள்.”

“இல்லை குந்தி. அது இல்லை. நான் சொல்வது ராஜவாழ்க்கை அத்தியா யத்தைச் சேர்ந்தது. உன் மகன் அப்போது அரசனாக இல்லை.”

“நான் கர்ணனைப் பற்றி மன்னிப்புக் கேட்டாகிவிட்டது.”

“ராஜவாழ்க்கையும்,மனித வாழ்க்கையும்!வெவ்வேறு வகையான தீர்ப்புகளோடு …ஒரு நிசாதினப் பெண்ண் கர்ப்பமாகி விட்டால் நாங்கள் அவர்களுக்குத் திருமணம் செய்து விடுவோம்.”

“எந்த வழக்கத்தின் அடிப்படையில்?

“அது இயற்கையின் விதி. இயற்கை நாசத்தைப் பொறுக்காது. நாங்கள் வாழ்க்கையை மதிப்பவர்கள். இரண்டு மனித உயிர்கள் இணையும் போது அவர்கள் புதிய வாழ்க்கையை உருவாக்குவார்கள். இது உனக்கு புரியாது.”

“என்ன? என் மன்னிப்புக்கு மதிப்பில்லையா?”

“உனக்கு வேண்டுமானால் இருக்கலாம். எங்களுக்கு அது புரியவில்லை. மனித வாழ்க்கையின் மிகப் பெரிய கொடூரம் சுயநலத்திற்காக அப்பாவி மனிதர்களைக் கொல்வதுதான்..நீ அதைச் செய்திருக்கிறாய்”

“ஆனால்”

“பேசாதே .நான் சொல்வதைக் கேள்.காட்டு கிராமங்களில் இருந்து ஆண்களும், பெண்களும் தங்களிடம் உள்ள தேன், மூலிகைகள் ,தந்தம் இத்யாதிகளைக் கொடுத்து தங்களுக்கு வேண்டிய அரிசி, துணி, உப்பு போன்றவற்றை வாங்கிப் போவார்கள். ஆடிப்பாடி ,குடித்து மகிழ்வார்கள். அந்த வழியில் தான் ஜோதி கிருகம் இருந்தது.’

“ஆமாம்’

“யார் அந்த முதிய நிசாதினப் பெண்ணையும், அவள் ஐந்து மகன்களையும் கண்காணித்தது? யார் நிசாதனர்களுக்கு விருந்து படைத்தது? அவர்கள் விருந்துணவில் மது கலந்தது? நீதானே?” நிசாதி பெண்ணின் பார்வை அவளைக் கொலைக் குற்றம் சாட்டுவதாக இருந்தது.

“ஆமாம்”

அந்த்த் தாயும், ஐந்து மகன்களும் நன்றாகக் குடித்து விட்டு கட்டை போலக் கிடந்தனர். நீ அந்தச் சிறுபாதை வழியாக வெளியேறிய போது அது உனக்குத் தெரியும் .இல்லையா?”

“ஆமாம். தெரியும்.”

“அந்த நிசாதின்..”

“நீங்கள் இல்லையா?”

“இல்லை. அவள் என் மாமியார். நான் தான் மூத்த மருமகள். மற்ற நால்வரும் அவர்களின் மனைவியர்.”

“ஆனால் நீங்கள் விதவை..”

“வாழ்க்கையின் தேவைகளை நாங்கள் மறுப்பதில்லை.மறுமணம் செய்து கொள்ள எங்களுக்கு உரிமை உண்டு. விரும்பினால் விதவை மணம் உண்டு. ஆம்.எங்களுக்குக் கணவர்கள், குழந்தைகள் இருக்கிறார்கள்” அவள் பெருமையோடு சொன்னாள்.

“நீங்கள் என்னை…”

“நான் உன்னைக் கொல்ல மாட்டேன். பல்லுக்கு பல், கண்ணுக்குக் கண் என்பதை ராஜவாழ்க்கைதான் செய்யும். குருஷேத்திரத்தில் அது நடந்தது.எங்கள் விதிகள் வேறானவை.”

“சொல்லுங்கள். நான் என்ன செய்ய வேண்டும்?”

“நீ இந்த கொடூரத்தைச் செய்து விட்டு முழுவதுமாக மறந்து விட்டாய். ஏனென்றால் உன்னைப் பொறுத்த வரை அது குற்றமில்லை. அப்பாவிக் காட்டுவாசிகள் ஆறு பேரை உன்சுயநலத்திற்காக எரித்துவிட்டாய்.அது குற்றமில்லை. ஆனால் காட்டுவாசிகளான எங்களின் சட்டப்படி நீ ,உன் மகன்கள். உன் கூட்டம் எல்லோரும் குற்றம் செய்தவர்கள்தான்’

நிசாதினப் பெண்நெருங்கினாள் “நீ இந்தக் காட்டை நன்றாகப் பார்த்திருக்கிறாயா?இங்கு இருக்கும் மரங்கள் எல்லாம் குங்கிலியம்.அவை எளிதில் எரியக் கூடியவை.தெரியுமா?’

“உம்.’

’குங்கிலியம் கீழே விழுந்து இறுகும். மரத்திலிருந்து விழும் சருகு உருண்டு குங்கிலியத்தில் உரசி நெருப்பு வெளிப்படும். காட்டுத் தீ!’

“காட்டுத் தீ?”

’ஆமாம். காட்டுவாசிகளான எங்களுக்குக் காற்றின் மணம் மூலம் அது தெரியும். அதனால்தான் பறவைகளும், விலங்குகளும் வெளியேறு கின்றன.நாங்களும் தான்”

“எங்கே?”

“வெகு தொலைவிற்கு.தீ அணுக முடியாத இடத்திற்கு. மலைகள்,ஏரிகள், ஆறுகள் நிறைந்த இடத்திற்கு’

“காட்டுத் தீ!’

’ஆமாம்.கண் பார்வையற்ற மூன்று மனிதர்களால் அங்கு போக முடியாது. ஒருவன் பிறவியில் பார்க்கும் சக்தி இல்லாதவன். இன்னொருவர் பார்க்கும் சக்தியை விரும்பி விலக்கியவர். நீதான் முழுப் பார்வையும் இல்லாதவள்.நீ அப்பாவிகளைக் கொன்று விட்டு அமைதியாய் இருப்பவள். ”

“நிசாதின். என்னை மன்னிக்க மாட்டாயா?”

“குற்றம் செய்து விட்டு மன்னிப்பு வேண்டுவது.அதுவெல்லாம் எங்கள் வசம் இல்லாதது .தவிர அது ராஜவாழ்க்கைக்கு உரியது. நாங்கள் ஜோதிகிருகத்திலி ருந்து புறப்பட்ட போது மற்ற காட்டுவாசிகளும் எங்களுடன் வந்து விட்டனர். இந்தக் காடுதான் எங்களுக்கு அடைக்கலம்.”

“இப்போது காட்டுத் தீ வருகிறதே!”

’வரட்டும். தீ . மழை தீயை அணைக்கும்.பூமி மறுபடி பசுமையாய் வளரும். இது இயற்கையின் விதி.”

நிசாதினப் பெண் போய் விட்டாள்.

குந்தி அதிர்ந்தாள். மனம் சூன்யமானது. மெதுவாக எழுந்தாள். ஆசிரமத்திற் குத் திரும்ப வேண்டும். காட்டுத் தீக்காக காத்திருக்க வேண்டும். காந்தாரியும் ,திருதராட்டினனும் தம் மகன்கள் இழந்து விட்டு மரணத்திற்காக காத்திருக்கின்றனர்.

ராஜவாழ்க்கையில் முதலில் ஒருவரைக் கொன்று விட்டு அப்புறம் மன்னிப்புக் கேட்பது வழக்கமோ? குந்திக்குத் தெரியவில்லை.

– இந்தி: மகாஸ்வேதா தேவி

Print Friendly, PDF & Email

2 thoughts on “குந்தியும் நிசாதினும்

  1. முன்கதை சுருக்கமும் … கடைசிலும் கொஞ்சம் கதை சுருக்கம் இருந்துருந்தால் நல்லாஹ் இருந்துருக்கும்

    1. குந்தி மேல் உள்ள வெறுப்பு நீண்ட நாளாக இருந்து வந்தது.
      இந்த கதையில் அவளே அவள் குற்றத்தை உணரும் படியான வரிகளை படிக்கும் போது மனதில் சொல்ல முடியாத சந்தோஷம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *