கதையாசிரியர்:
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 12,847 
 

அந்திமாலை நேரம் அந்தப் பூங்காவை அழகுமயமாக்கி இருந்தது. மாலைச் சூரியனின் தகதகப்புப் புல்வெளியை பொன்வெளியாக்க, மரக் கிளைகள் தங்கத் தோரணங்களாய் பளபளத்துக் கொண்டிருந்தன. வசந்த மலர்கள் நாணத்துடன் சிரித்துக் குலுங்கிக் கொண்டி ருந்தன. பக்கத்தில் இருந்த விளையாட்டு மைதானத்தில் இருந்த குழந்தைகளின் சிரிப்பொலிகள் காற்றில் அலையலையாய் மிதந்து வந்தன.

அழகான இளம் பெண்கள் குழந்தைகளைத் தள்ளு வண்டிகளில் வைததுத் தள்ளிய வண்ணம், பேசிச் சிரித்தபடி களிப்புடன் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். பல முதியவர்கள் அலுவலகத்திற்குப் போவது போல் மிகவும் அக்கறையுடன் ஆடைகள் அணிந்து கொண்டு பூங்காவைச் சுற்றி நடந்து கொண்டிருந்தார்கள்.

இராமனாதன் ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்ன இராமனாதன், வந்து ரொம்ப நேரமாச்சா? நான் இன்னிக்குக் கொஞ்சம் தாமதம்…”

குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தார் இராமனாதன். அவருடைய சமீபகால நண்பர் விஸ்வம் பேசிக் கொண்டே வந்து பக்கத்தில் அமர்ந்தார்.

“வாங்க விஸ்வம், இப்பத்தான் வர்றீங்களா? நானும் இன்னிக்குக் கொஞ்சம் மெதுவாத்தான் வந்தேன். ஒரு வேளை நீங்க வந்துட்டுப் போய் விட்டீங்களோ என்று கூட நினைச்சேன்”

விஸ்வம் சிரித்துக் கொண்டே இல்லையென்று தலையாட்டினார்.

“என்னோட மகனும், மருமகளும் வேலை யிலிருந்து வரக் கொஞ்சம் நேரமாயிட்டுது. பக்கத்து வீட்டுக் காரங்க பேரக் குழந்தை களைக் கொண்டு வந்து விட்டுட்டுப் போனாங்க… அதான் அவங்க அம்மா, அப்பா வீட்டுக்கு வந்தப்புறம், நான் புறப்பட்டு வந்தேன்”

இராமனாதனும், விஸ்வமும் தங்கள் பிள்ளைகள் அமெரிக்காவில் இருப்பதால், தற்காலிகமாகக் கலி·போர்னியாவில் தங்கி யிருப்பவர்கள். வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். தினமும் எந்த அவசரமும் இல்லாமல் மாலை வேளையில் அமைதியாக வந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டுப் போவார்கள். அவர்கள் பேச்சில் ஆன்மிகத்தில் இருந்து அரசியல் வரை எல்லா சமாச்சாரங்களும் விரிவாக ஆராயப்படும். மாலை எதைப் பற்றிப் பேசலாம் என்று பகல் முழுவதும் இருந்து தயார் செய்து கொண்டு வருகிறார்களோ என்று கேட்பவர்களுக்குத் தோன்றும்.

விஸ்வம் தன் மகன் பாலாவிடம் சென்று அந்த ஊரில் இருக்கும் பல தமிழர்களைப் பற்றியும், அங்கு நடக்கும் பல நிகழ்ச்சிகள் பற்றியும் தெரிவிப்பார். பூங்காவன மாநாட்டில் வெளிவரும் தகவல்களைக் கேட்டு அவன் அதிசயிப்பான்.

“உங்களிடம் இருந்து செய்திகள் வாங்கிப் பிரசுரம் செய்தால், சி.என்.என் செய்திகளைக் கூடத் தோற்கடித்து விடலாம் போல் இருக்கிறதே” என்று கேலி செய்வான்.

விஸ்வம், இராமனாதன் இவர்களின் உரையாடல் தொடர்ந்தது.

“இன்னிக்குப் பார்த்துக்குங்க…. என் மகன் சொன்னான், ‘ அப்பா, மணி ஆறு ஆயிடுச்சு. இனிமே பூங்காவுக்குப் போக வேண்டாம். நாளைக்குப் போகலாம்’ னு. இந்தப் பூங்கா ஜே ஜேனு இருக்குது. இங்க என்ன பயம்…? அதான் கிளம்பி வந்துட்டேன்…” என்றார் விஸ்வம்.

“ஆமாமாம்… வெளிச்சம் இருந்தா ஒண்ணும் பயம் இல்லை. அதுவும் இந்த சான்பிரான் சிஸ்கோப் பகுதியில கவலையே இல்லை” என்று ஆமோதித்தார் இராமனாதன்.

கொஞ்ச நேரம் அளவளாவிய பின் இராமனாதன் விடை பெற்றுக் கொண்டு சென்றார்.

விஸ்வம் உடற் பயிற்சிக்காக பூங்காவை மூன்று முறை சுற்றி வந்தார். சூரியன் கடலுக்குள் இறங்கப் பார்த்தான். ஒரு பெருமூச்சுடன் களைப்புத் தீர மீண்டும் வந்து இருக்கையில் அமர்ந்தார் விஸ்வம். எதோ ஓரிருவர் தாம் இன்னும் பூங்காவில் இருந்தார்கள். அநேகமாக எல்லோரும் கிளம்பிப் போய் விட்டார்கள்.

வேகமாக சைக்கிளை அழுத்திக் கொண்டு வந்த ஒரு பையன் கிறீச்சிட்டுக் கொண்டு அவருக்கு மிகவும் பக்கத்தில் வந்து நின்றான். மிகுந்த கறுப்பாக இருந்த அவன் முகம் வியர்த்திருந்தது. ஜடாமுடி போல் அவன் சுருண்ட கூந்தல் பாதி முகத்தை மறைத்தது. அவன் என்ன செய்து விடுவானோ என்ற பயம் வர அவசரமாக எழுந்தார் விஸ்வம். அவன் ஒரு வேளை திருடனோ… அவரிடம் எடுத்துத் தர பணம் ஒன்றும் இல்லை.

“உங்களுக்கு நடக்க முடியவில்லையா? என் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போங்கள். நான் நாளைக்குத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். நான் தினமும் உங்களை இங்கே பார்க்கிறேன்…..”

விஸ்வத்தின் காதுகளை அவரால் நம்ப முடியவில்லை. அந்தப் பையனின் அன்பான சொற்கள் அவரை நெகிழச் செய்தன. ஆதரவாக அவன் முதுகில் தட்டினார்.

“நிகேல், உனக்கு ஒண்ணும் ஆகவில்லை யே!… யாரு … அந்த ஆளு என்ன செய்தாரு….” பதட்டமாகக் கேட்டபடி ஓடி வந்தார் அந்தப் பையனின் தந்தை. வந்த வேகத்தில் அவன் பதில் சொல்வதற்குள் எங்கே ஓங்கி ஒர் உதை விட்டு விடுவாரோ என்று தோன்றியது விஸ்வத்திற்கு. ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டார்.

“அப்பா….. இவர் நண்பர்…தட்டிக் கொடுத்தார்….கவலைப் படவேண்டாம்…” என்றான் அந்தப் பையன்.
“மன்னிக்கவும் கிழவரே… மகனே… வா .. போகலாம்…” என்றபடி அவனை அழைத்துக் கொண்டு நகர்ந்தார் அந்தத் தந்தை.

“மகனே…. புதிய மனிதர்கள் தீயவர்களாக இருக்கலாம். உனக்குக் கெடுதல் செய்ய நினைக்கலாம்.. கவனமாக இருக்க வேண்டும்..”

என்று அவன் எச்சரிக்கை செய்து கொண்டு போவது மெதுவாகக் காதில் விழுந்தது.

விஸ்வத்தின் உடல் இன்னும் உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டு இருந்தது. அச்சம் என்கிற விஷக் கண்ணாடி நல்லவனைப் பொல்லாத வனாகக் காட்டுகிறது. நட்பைப் பகை என்று மாற்றிப் பிரதிபலிக்கிறது. அச்சத்தைத் தவிர்த்து உண்மை இரசம் பூசினால் பல அவசியமே இல்லாத சண்டை சச்சரவுகளை எளிதாகத் தவிர்க்கலாம்….. இவ்வாறெல்லாம் சிந்தனை செய்தபடியே வீட்டை நோக்கிப் போவதாக நினைத்துக் கொண்டு நடந்து கொண்டு இருந்தார் விஸ்வம்.

திடீரென்று சிந்தனை கலைந்தவராக எங்கே இருக்கிறோம் என்று சுற்றும், முற்றும் பார்த்தார். வீடுகள் எதுவும் பரிச்சையமாக இல்லை. தெருவிலே மக்கள் நடமாட்டம் சுத்தமாக ஓய்ந்து விட்டது. கார்கள் கூட அதிகம் காணோம். தொலைக்காட்சியில் ஒலியும், ஒளியும் ஓடுவது போல எல்லோரும் வீட்டுக்குள் ஒடுங்கி இருந்தார்கள்.

தமிழ்நாட்டில் இருப்பது போல் வழி கேட்கத் தெருமுனையில் பெட்டிக் கடைகள் கிடையாது. சாலையின் பெயர்ப்பலகைகள் இருந்தன. ஆனால் ஒரு பெயரும் தெரிந்த சாலையாக இல்லை. நிச்சயமாகத் தொலைந்து போய் விட்டோம் என்று தெரிந்தது. இப்போது என்ன செய்வது என்று யோசித்தபடி எதோ ஒரு தெருவில் திரும்பி நடக்க ஆரம்பித்தார் விஸ்வம்.

கால் மிகவும் வலி எடுக்க ஆரம்பித்தது. நல்ல காலமாக, சித்திரை பிறந்து வேனிற்காலம் வந்து விட்டதால், குளிர் இல்லை. சித்திராப் பௌர்ணமி நிலவு அவருக்குத் துணை வந்ததது. விஸ்வத்திற்கு ஆயாசமாக இருந்தது. எங்கே யாவது உட்காரலாம் என்றால், இடம் இல்லை.

“செந்தில் ஆண்டவனே, என்னை வீட்டில் கொண்டு போய் விட்டு விடு” என்று மனது இறைஞ்சியது. அமரச் சொல்லி கால்கள் கெஞ்சியது.

சற்றுத் தொலைவில் ஒரு வீட்டு வாசலில் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. விளக்கின் அடியில் போய் உட்காரலாம் என்று நினைத்து அந்த வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார் விஸ்வம். ஒரு வேளை அவர் மகன் பாலா காரிலே தேடிக் கொண்டு வந்தால், எளிதாக இருக்கும்….

விளக்கு எரிந்த வீட்டின் அருகில் போகப் போக பல வத்தியங்களின் ஒலிகள் கலந்து கேட்க ஆரம்பித்தது. இன்னும் பக்கத்தில் போனால் பாட்டுச் சத்தம் கேட்டது. நெருங்க நெருங்க பஜனைப் பாடல் வரிகளும் கேட்டது.

“கந்தா குமரா வடிவேலா….”

தமிழ்ப் பாட்டின் இனிமை எப்படிப் பட்டது என்று அவரிடம் இப்போது நீங்கள் பேட்டி காண நல்ல சந்தர்ப்பம். அப்படியே மெய் மறந்து உள்ளம் கனிந்து உருகிப் போய் விட்டார் விஸ்வம். வீட்டின் வாசல் திறந்து இருந்தது. பலர் உள்ளே அமர்ந்து பாடிக் கொண்டிருந்தார்கள். விஸ்வமும் உள்ளே போய் அமர்ந்தார். எல்லா நிகழ்ச்சிகளும் முடிந்து பொங்கலும், சுண்டலும் வழங்கப் பட்டது.

“ஐயா நீங்க பாலாவின் அப்பா தானே..? என்னை நினைவு இருக்கிறதா? நான் ராஜா.. பாலாவின் நண்பன்… பாலா வரவில்லையா?”

“இல்லையப்பா… நான் பூங்காவிற்கு வந்தேன். வழி தவறி இந்தப் பக்கம் வந்து விட்டேன்… எல்லாம் முருகன் விட்ட வழி..”

“அப்படியா…இங்கிருந்து வீடு ரொம்ப தூரம். என்னோட வண்டியில வாங்க… நான் இறக்கி விட்டு விடுகிறேன்.”

– ஜூலை 2002

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *