கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 21, 2015
பார்வையிட்டோர்: 21,684 
 

அது பெர்லினில் இருபத்துநான்கு மணிநேரமும் திறந்திருக்கும் ஒரு றெஸ்ரோறன்ட். கோப்பியில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட வகைகள். நம் தேர்வுப்படி நொடியில் அரைத்து கமகமக்கப்போட்டுத் தருவார்கள். வீதியில் ஐநூறு மீட்டருக்கு மிதந்துவரும் கோப்பியின் மணம் ஷேர்ட்டில் பிடித்து ஆளைஉள்ளே இழுக்கும். அது இருக்கும் வழியாக நானும் வரவேண்டியிருக்கவே மேலே கடந்து போகமுடியாதுள்ளே இழுபட நேர்ந்தது.

கிறில் பண்ணிய ~றிப்பும், தொட்டுக்கொள்ளக் காரமான பாபெகியூ ஸாசும், கோப்பியும் வாங்கிக்கொண்டு ஒரு மூலையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.

நாலு இளம்பெண்கள் ஏதோ இடையைக்காட்டுவதற்கான ஒருபோட்டியில் பங்குபற்றிவிட்டு நேரே வருபவர்கள் மாதிரி பேரிடை முழுவதும் தெரிய உடுத்திக்கொண்டு நடக்கையில் முக்கோண ஜட்டிகள் தில்லானா ஆட அட்டகாசமாக உள்நுழைந்தார்கள். கோடை காலம் இளசுகளின் உடைகள் கொஞ்சம் மனதை அலைக்கழிப்பதாகத்தான் இருக்கும். ஆனாலும் இது அநியாயாத்துக்கும் அதிகம். அன்று நான்தான் அதிகம் வதைபடவேணுமென்று நியதியாக்கும், அல்லது அத்தனை காலியிருக்கைகள் இருக்க அவர்கள் ஏன் அமர்வதற்கு என் ஓரமாகப் போடப்பட்டிருக்கும் மேசையைத் தேரவேண்டும்?

அந்த நால்வரிலும் மேசையின் ஓரப்பக்கமாக என் பார்வை முழுதாய்ப்படும்படியான இடத்தில் இருந்தவள் அச்சில் வார்த்தெடுத்துப் பொலிஷ் செய்துவைத்தவொரு பொம்மையைப்போல இருந்தாள். எந்தவொரு ஜெர்மன் அழகுப்பாரம்பரியத்தின் நீட்சியோ இல்லை ஏதும் இடைக்கலப்பால் விளைந்த அதிசயமோ நோக்குவோரை மூர்ச்சையாக்கவல்லதொரு எழிலைக் கொண்டிருந்தாள்.

170செ.மீ உயர தேகத்தில் பெயருக்காவது ஒரு மறுவோ , பருவோ , புள்ளியோ இருக்கவேணுமே? அரையில் நேவி நீலநிறத்தில் ஒன்றரை சாணே இருக்கக்கூடிய ஸ்கேட்டும் , மேலே தலையணை உறை மாதிரி கையோ கழுத்தோ இல்லாத ஒரு மெல்லிய மீள் தகவுள்ள மார்புக்கச்சையும் (ஸ்றெட்ச் டொப்பிற்கு எப்படி நம்தமிழ்!) பற்றியிருக்க மீதிவனப்பு முழுவதும் காற்றாடிக் கொண்டிருக்கிறது. சின்ன வெள்ளிமணி மாட்டியிருந்த தொப்புளில் ஆரம்பித்து மிகமிக ஆழங்களில் பரவிய கற்பனைகளில் என் மனது சுகித்துத்தியங்க அவர்கள் ஓடர் பண்ணிய சாப்பாடுகள் வந்தன.

அவர்கள் ரசித்துச் சாப்பிடத் தொடங்கினார்கள்.

பார்க்கிறேன் அவள் சாப்பிடக் குனிகையிலாவது வயிற்றில் சின்ன மடிப்புக்கள் விழவேண்டுமே……….ஊகூம்!
குற்றவாளிகளுடன் விவாதிக்கவேண்டியதில்லை. அவர்களுக்கு தம் குற்றங்களின் முழுப்பரிமாணங்களும்; தெரிந்தேயிருக்கும்.

அவளைப் பார்க்கப் பார்க்கப் பார்க்க என் மனது முழுக்களவாகி வன்மமாக வளர்ந்து நான் முழுத்திருடனாகி விட்டிருந்தேன்.

ஒரு யௌவனப்பெண் பார்வையில் பட்டவுடன் ஒரு ஆடவனின் மனதில் தூண்டப்படும் மின்னேற்றங்கள் சமிக்கைகளாகி அவை வேண்டிய ஹோமோன்களைச் சுரக்கவைத்து அவனது இதயத்துடிப்பை அதிகரிக்கப் பண்ணும் வரையிலான தாக்கங்கள் பற்றியும் அவை கடத்தப்படும் வழி பற்றியும் இடையே சிறிது சிந்திக்கிறேன். மாற்றங்களின் இரசாயனம் புரிகிறது.

ஆனால் ஆதியிலிருந்தே ஆண்களைப் பெண்களிடம் பிணைத்து வைத்திருக்கும் அவ்வதிசயச் சமிக்கைகளை இந்தப் பெண்களால் மாத்திரமே உற்பத்தியாக்க முடிவதுதான் விந்தையாக இருக்கிறது. ஆனானப்பட்ட அறிவியல் மேதைகளுக்கே பிடிபடாத விஷயந்தானெனினும் அவர்கள் நிரையில் ஞானும் அதுபற்றிச் சற்றே சிந்தித்து வைத்தேன்.

என்னுள் இத்தனை ஹோமோன்களையும் குதித்தோடச்செய்தொரு தீயை வளர்த்துக்கொண்டிருந்தவள் ஏதோ ஞாபகம் வந்தவள்போல் கடித்த பேகரைப் தட்டில் வைத்துவிட்டு கைப்பையுள்ளிருந்து பேனாவைப் போலிருந்த எதையோ எடுத்தாள். அதன் முனைதை; திருகித்திறந்தாள். என்னைக் காந்திக்கொண்டிருந்த பட்டு இடுப்பில்; நிதானமாகக் குத்தி மருந்தை உள்ளே செலுத்தினாள்.

வியாதியின் மூன்றாவது கட்டத்துக்கு (குணப்படுத்தமுடியாதபடி) வந்துவிட்டவர்களுக்கே தாமேபோட்டுக் கொள்ளும் இவ்வகை இன்சுலின் ஊசியைக் கொடுத்திருப்பார்கள்.

இப்பொழுது என்மேல் ஒரு நயாகராவே கொட்டியது,

என்னுள் ஓங்கிய தீயின் நீண்ட கங்குகள் ஒடுங்கிஇல்லாமற்போயின.

இவைகள் எதையுமே அறியாமல் தன் பேகரைச் சாப்பிடத்தொடங்கினாள் அவள்.

30.08.2002 பெர்லின்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *