‘நான்தான்’ நாகசாமி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: October 14, 2012
பார்வையிட்டோர்: 12,862 
 

கையிலே ரிஸ்ட் வாட்ச், விரலிலே வைர மோதிரம், குரலிலே ஒரு கம்பீரம். இந்த லட்சணங்களைக் கொண்டவர்தான் நாகசாமி. அவருக்குத் தெரியாத பெரிய மனிதர்கள் கிடையாது. அவரால் சாதிக்க முடியாத காரியங்களும் கிடையாது. யாருக்கும், எந்த நேரத்திலும், எம்மாதிரி உதவி தேவையானாலும் நாகசாமியைத் தான் தேடுவார்கள். அவரும் செய்வார். ஆனால், “நான்தான் செய்தேன்” என்று கொஞ்சம் தற்புகழ்ச்சி செய்து கொள்வார்; அவ்வளவுதான்.

நகரத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் நாகசாமியைச் சந்திக்கலாம்.

கலியாண ஊர்வலங்களில் அவர் ‘அமுத்த’லாக நடந்து செல்லும்போது நாதசுரக்காரர் அவரைக் கண்டுவிட்டால், தம்முடைய வாசிப்பை அப்படியே நிறுத்திவிட்டு, அவருக்குக் கை கூப்பி வணக்கம் செய்வார். அச் சமயம் பார்க்கவேண்டுமே, நாகசாமியின் முகத்தில் பொங்கும் பெருமையை!

நாதசுர வித்வான் தமக்குக் கும்பிடு போடுவதை நாலு பேர் கவனிக்கிறார்களா என்று ஒரு கண்ணால் அக்கம் பக்கத்திலுள்ளவர்களைக் கவனித்துக் கொள்வார்.

“என்ன ஸார், உங்களுக்குத் தெரியுமா இந்த நாதஸ்வரக்காரரை?” என்று யாராவது கேட்க வேண்டியதுதான்; உடனே தொடங்கிவிடுவார் :

“தெரியுமாவது? நான்தானே இவனை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்தேன்! செம்பன்னார் கோயில் பையனாச்சே இவன்? இவன் சின்னவனா இருந்தப்போ, ‘சீவாளியைத் தொடமாட்டேன்; சீமைப் படிப்புத்தான் படிக்கப் போறேன்னு’ பிடிவாதம் பிடிச்சான். இவனுடைய அப்பன் என்கிட்டே வந்து அழுதான். இவனை என்ன பண்ணினேன் தெரியுமா அப்போ? காதைப் பிடிச்சுத் திருகி, ”போய் ஒத்து ஊதுடா பயலே” என்று விரட்டி அனுப்பிச்சேன். இப்ப என்னடான்னா பிரமாதப்படுத்தறான். அகாடமியிலே கூட சான்ஸ் கொடுக்கச் சொல்லியிருக்கேன்?” என்பார்.

இதற்குள் இன்னொருவர் வந்து, “இந்த வைரமோதிரம் எங்கே வாங்கினீங்க, சார்?” என்பார்.

”வாங்கறதாவது? பம்பாயிலே ஒரு டைமண்ட் மர்ச்செண்ட் கொடுத்தனுப்பிச்சான். அவனுக்கு நாய் வளர்க்கிறதிலே ஒரு மேனியா. எங்கிட்டே நாலு ஸ்பேனியல் இருந்தது. அதை யாரோ போய் அவன் காதுலே போட்டு வெச்சுட்டான் போல இருக்கு. விடுவானா அவன்? ‘மை டியர் நாகசாமி’ அந்த நாலு ஸ்பேனியலையும் எனக்கு அனுப்பிச்சுடு’ன்னு லெட்டர் எழுதிவிட்டான். அப்புறம் என்ன செய்யறது? அனுப்பி வெச்சேன். அவ்வளவுதான். அவன் வெரிமச் பிளீஸ்ட்! உடனே ஒரு வைர மோதிரத்தை அனுப்பிச்சு கோஹினூர் டைமண்ட், ரொம்ப ரேர் ஜெம். இதை என் ஞாபகமாக உன் விரலிலே போட்டுக்கணும்னு கட்டாயப்படுத்தினான், எப்படி மறுக்கிறது?”

இதற்குள் ”நேற்று உங்களை ஏரோடிரோம்லே பார்த்தாப்பலே இருக்கே?” என்று ஒருவர் ஆரம்பிப்பார்.

”என்ன சார் பண்றது? சீப் என்ஜீனீர் சீதாராமய்யர் திடீர்னு பங்களூர் போகணும், ஏர் டிக்கட் ஒண்ணு புக் பண்ணிக் குடுக்க முடியுமான்னு எனக்கு போன் பண்ணினார். பங்களூரில் அவர் தாயாருக்கு ஏதோ ரொம்ப சீரியஸ்னு தந்தி வந்ததாம். யாருக்கு எது வேண்டுமானாலும்தான் நான் ஒருத்தன் இருக்கேனே. ஓரொரு சமயம் ஏண்டா இவ்வளவு பாபுலரா இருக்கோம்னுகூடத் தோன்றுது. பிளேன் புறப்படறதுக்கு அரைமணி நேரம்தான் இருக்கும். என்ஜீனியரை என் காரிலேயே அழைச்சிண்டு நேரா ஏரோட்ரோமுக்குப் போனேன். அங்கே போனால் அயர்ன் மர்ச்செண்ட் அழகிரிசாமி அதே ப்ளேன்லே பங்களூருக்குப் புறப்பட்டுண்டிருக்கான். இவன் டிக்கட்டை மாற்றி என்ஜினீயர்கிட்டே கொடுத்து நீங்க புறப்படுங்கோன்னேன். அழகிரிசாமி அர்ஜண்டாப் போகணும்னு முணுமுணுத்தான். சரிதாண்டா, எதுக்குப் போறேன்னு எனக்குத் தெரியாத மாதிரி பேசறயே. என் கூட வா. இங்கேயே வாங்கிக் கொடுக்கறேன்னு சொல்லி ஒரு பர்மிட் ஹோல்டர் வீட்டுக்கு அழைச்சிண்டு போய்த் தொலைச்சேன். அந்தப் பர்மிட் வாங்கறதுக்கு அவன் என் உயிரை வாங்கி விட்டான். நான்தான் போய் ஹயர் அதாரிடீஸ்கிட்டே பேசி, மெடிகல் சர்டிபிகேட் வாங்கி, பர்மிட்டும் வாங்கிக் கொடுத்தேன். அந்த ஹயர் அதாரிட்டிக்கு எங்கிட்டே ஒரு ஆப்ளிகேஷன்.

”அவர் ஒரு நாள் வந்து, ‘நாகசாமி! உன்னைத்தான் மலையா நம்பிண்டிருக்கேன்’ என்றார். சமாசாரத்தைச் சொல்லுங்கன்னேன்.

”பெண்ணுக்குக் கலியாணம்னார். யார் மாப்பிள்ளேன்னேன். நீதான் ஒரு நல்ல மாப்பிள்ளையாப் பார்த்துக் கொடுக்கணும்னார். ரிடயர்ட் அக்கெளண்டண்ட் ஜெனரல் சோமசுந்தரம் இல்லே; அதான்ய்யா குருமூர்த்தி ஷட்டகர். அவர் பிள்ளை ஐ.ஏ.எஸ். படிச்சவன். அவனை நிச்சயம் பண்ணி வெச்சேன். அத்தோடு விட்டாரா? அப்புறம் கல்யாணத்தை நடத்தறதுக்கு இடம் வேணும்னார். அப்பட்ஸ்பரியிலே ஏற்பாடு பண்ணினேன். அப்புறம் நாதசுரம், சங்கீதக் கச்சேரி எல்லா ஏற்பாடும் நீதான் கவனிச்சுக்கணும் நாகசாமின்னுட்டார்.

கடைசிலே பாரு! ஒரு சின்ன விஷயம் தொந்தரவாப் போச்சு. லெளட் ஸ்பீக்கருக்குப் போலீஸ் லைசென்ஸ் வாங்கல்லே. நான் உடனே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் பண்ணினேன். அந்த ஸப் இன்ஸ்பெக்டர் எனக்குத் தெரிஞ்சவன். விஷயத்தை அவன்கிட்டே சொல்லி லைசென்ஸ் வேணும்னேன். ‘பணம் கட்டணும்; ஒரு வாரத்துக்கு முன்னாலே அப்ளிகேஷன் போடணும் அது இது’ன்னான். இத பாரு, எனக்கு அதெல்லாம் தெரியாது : இன்னைக்கே லைசென்ஸ் வேணும் முதல்லே லைசென்ஸை அனுப்பி வை. அப்புறம் மற்ற விஷயங்களை பாத்துக்கலாம்’னேன். அவ்வளவுதான்; லைசென்ஸ் கதறிண்டு வந்துட்டுது. ஏன்? சும்மாவா? அந்த ஸப் இன்ஸ்பெக்டருக்குப் பிரமோஷனுக்கு ஐ.ஜி.கிட்டே இந்த நாகசாமிதானே ரெகமண்ட் பண்ணி ஆகணும்?”

இந்தச் சமயம் யாரோ ஒருவர் வந்து நாகசாமியைக் கூப்பிட்டார்.

”சரி; ஈஜிப்ட்லேருந்து காட்டன் மர்ச்செண்ட்ஸ் சில பேர் வராங்களாம். நான் போயிட்டு வரேன். இந்த நாகசாமியைக் கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விடுவாளா, என்ன?…. உம், காரை எடுக்கச் சொல்லு” என்றார்.

– கேரக்டர், 9வது பதிப்பு-1997, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *