வைத்தியனின் கடைசி எருமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 10,072 
 

ஆங்கார ரூபத்துடன் ஓங்காரமாய் நின்று, கோரைப்பல் நடுவே ரத்த நிற நாக்கு வெளித்தள்ள, ஆயுதங் களுடன் விழி உருட்டி நின்ற ஓங்காளியம்மன், சின்ன கண்ணாடிச் சட்டத்துக்குள் அழகாக நின்றாள். ஓங்காளியம்மன் முன் மண்டியிட்டு வேண்டிக் கொண்டு இருந்த கறுத்த நிறத்துக்காரனின் பெயர் ஓங்காளியப்பன். அவனுடைய பாட்டி பெயரும் ஓங்காளியம்மாதான். இப்படி ஒரு குலதெய்வத்தின் கொடித் தடமாக வேரோடிக்கிடந்த ஓங்காளியப்பனுக்கு ஓங்காளியம்மா மேல் (பாட்டி ஓங்காளியம்மா இல்லை; சாமி ஓங்காளியம்மா) அப்படி ஒரு நம்பிக்கை!

ஓங்காளியப்பன் வேண்டிக்கொண் டான்… ‘‘மகமாயி… ஓங்காளியம்மா! எங்க குல வெளக்கே! உனக்கு இந்த நோம்புக்கு ஒரு எருமைக் கிடாவை ஒரே வெட்டுல பலி தரேன். என் மகன் உன் எல்லையை விட்டுப் போறேன்னு சொல்லுறான். அவனைத் தடுத்து நிறுத்து! அவன் போகப்போற ரயில் பொட்டிகளை நெருப்புப் பொட்டி யாட்டம் உருட்டி விட்டுடு தாயி. அடி பட்டு, கை கால் ஊனமாகி வீடு திரும்பினாலும் பரவாயில்ல… அவன் வெளியூரு போகாம இருந்தா சரி!’’

சொன்ன பேச்சைக் கேட்காமல், வைத்தியன் படிப்பு படித்தே தீருவேன் என்று அடம்பிடித்த மகன் நாளைக் காலையில் கிளம்பிவிடுவான். பன்றியைப் போல பல பெற்றிருந்தாலும் பரவாயில்லை… ‘நாலு பிள்ளையில் எனக்கொன்று, பசித்த நாயே உனக்கொன்று’ என்று விட்டிருக்கலாம். ஒரே பிள்ளை!

ஓங்காளியப்பனுக்குத் தெரிந்ததெல்-லாம் எருமைகள்தான். தெரிந்த தொழில் எருமை மேய்ப்பது. தெரிந்த பாஷை எருமை பாஷை. இப்படி எருமையே வாழ்க்கையான ஓங்காளியப்பனுக்கு அளவுக்கு அதிகமான பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், சாணி, கோமியம் எல்லாம் போதும் போதும் என்கிற அளவுக்கு இருந்தன.

எனவே, தன் மகன் திம்மனையும் பொறுப்பும் திறமையும் மிக்க எருமைக் காரனாக வளர்க்கத்தான் ஆசைப்பட் டான் ஓங்காளியப்பன். திம்மனும் சின்ன வயதில் எருமை மந்தையை ஒரு வேட்டை நாயைப்போல் பாய்ந்து ஓட்டிப் பத்திக் கூட்டி வந்தவன்தான். ஓங்காளியப்பன் செய்த ஒரே தப்பு, அவனைப் பள்ளிக்கூடத் துக்கு அனுப்பியதுதான்.

‘வைத்தியனுக்குப் படிக்கப் போகிறேன்’ என்று மகன் சொன்னதும், சின்ன வயதில் குடித்த எருமைப்பாலின் மந்தம் இப்போது வேலை காட்டுகிறதோ என்று சத்தேகம் வந்துவிட்டது ஓங்காளியப்பனுக்கு. காரணம், இந்த ஊரிலேயே ஒரு வைத்தியன் இருக்கிறான். அரைக்கண் வெளிச்சத்தில், எப்போதும் ஏதாவது ஒரு பொருளுக்காக, யார் முன்பாவது நின்று பின்னந் தலையைச் சொறிந்தபடி இருந்த அந்த வைத்தியன் பிறக்கும்போதே பச்சிலையோடு பிறந்தவன் என்று ஊரில் சொல்வார்கள்.

ஊரில் இருக்கும் ஜனங்களுக்கு வரும் எந்தவிதமான வியாதியாக இருந்தாலும் சொஸ்தப்படுத்திவிடும் அவன், பறவைகளுக்கும் கால்நடை களுக்கும்கூட வைத்தியம் பார்ப்ப வனாக இருந்தான். அதுமட்டுமின்றி, சோளிகளை உருட்டி நடந்த, நடக்கப் போகிற நல்லது கெட்டதுகளையும் கண்டு கணி சொல்லும் கணிக்காரனாகவும் இருந்தான். இப்படிச் சகலமும் அறிந்த வைத்தியக்காரன், அடுத்தவர் தரும் தானிய, மானிய, தருமங்களில்தான் காலத்தை ஓட்டினான். கால் சொம்பு பால் வேண்டுமென்றாலும், ஓங்காளியப்பன் முன் வந்து ஒடுங்கிய அலு மினியப் பாத்திரத்தை நீட்டிப் பல் இளித்து நிற்பான்.

நூறு எருமைக்குச் சொந்தக்காரனான தன் மகன் திம்மனும் அப்படிப் பாலுக்கு அலுமினியப் பாத்திரம் ஏந்தும் கேவலத்துக்கு ஆளாகவேண்டி வருமோ என்று மனசு நொந்து, ‘‘அந்த வைத்தியனாட்டம் ஆகத்தான் நீ ஆசைப்படறியா?’’ என்று கேட்டான்.

திம்மன் இரண்டு கையிலும் தன் உச்சி முடியைப் பிய்த்துக்கொண்டு, கொஞ்சநேரம் பேசாமல் குனிந்து நின்றான். பிறகு சொன்னான்… ‘‘யப்பா, உனக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைக்கிறதுன்னு தெரியலே! நான் காட்டுப் பச்சிலையை அரைச்சுக் குடுத்துப் பச்சரிசிக்குக் கையேந்துற வைத்தியனுக்குப் படிக்கலே. ஊசி போடுற வைத்தியன் படிப்பு படிக்கப் போறேன். படிச்சு வந்ததும் ஊரே என்னை ஊசி போடுற டாக்டர்னு தலையில வெச்சு ஆடும்!’’

ஓங்காளியப்பன் எகத்தாளமாக பதிலடித் தான்… ‘‘ஆ… பெரிய ஊசி! நம்ம எருமைப் பட்டியில போய்ப் பாரு. ரொய்யினு ஒரே கொசு! அதுங்க எல்லாம் ஆளுக்கு ஒரு ஊசியோடத்தான் சுத்துது. அதுக்காக, கொசுதான் உலகத்தில் பெரிய வைத்தியனா? அது இருக்கட்டும்… அப்பன் பேச்சைக் கேட்காம படிக்கப் போறேங்கிறியே, காசுக்கு என்ன செய்வே?’’

தகப்பன், காசு என்ற ஆயுதத்தை எடுத்ததும், குரல் அடக்கி நைச்சியமாகப் பேச ஆரம்பித்தான் திம்மன். ‘‘உன்னோட மகன் பெரிய வைத்தியனா இருக்கிறது உனக்குப் பெருமைதானே அப்பா! உன் ஒரே மகனுக் காக நீ பத்து எருமையை வித்துத் தர மாட்டியா?’’

பத்து எருமைகளை விற்பதா? ஓங்காளியப்பனுக்கு எருமை நிறத்தில் உலகம் இருண்டது. திம்மனின் வார்த்தை மலை மீதிருந்து பாறாங்கல்லாகப் புரண்டு விழுந்து, எருமை மந்தையை நசுக்கிக் கூழாக்கியது. ஒவ்வொரு எருமையையும் ஒரு மந்தையாக்க ஓங்காளியப்பன் என்ன பாடுபட்டிருப்பான்! எத்தனை சுளுவாகச் கேட்டுவிட்டான், பத்து எருமைகளை விற்கக்கூடாதா என்று!

ஓங்காளியப்பன் மிகுந்த இரக்கம் ஏற்படும்படியான குரலில் மகனிடம் கேட்டான்… ‘‘நீ படிச்சு வைத்தியன் ஆகிட்டா, இந்த எருமை மந்தையை யாருடா பார்த்துக்குவாங்க, சொல்லு?’’

‘‘அப்பா, இதான் உன் கவலையா? அதனாலதான் என்னைப் படிக்கப் போகா தேன்னு சொன்னியா? நான் வைத்தியனா கிட்டா, அந்த எருமை மந்தையை யார் பார்த்துப்பாங்கன்ற கவலையே நமக்கு இருக்காது’’ என்றான் திம்மன்.

‘‘எப்படிடா மவனே?’’

திம்மன் பொறுப்பாக, ‘‘நான் படிக்கப் போறதுக்காக நீ பத்து எருமையை விற்கப்போறே. அப்புறம், மாசா மாசம் செலவுக்கு ரெண்டு ரெண்டு எருமைகளா விக்கவேண்டி வரும். நான் படிச்சி முடிச்சிட்டு வரும்போது, மந்தையில் ஒரு எருமைகூட இருக்காது. அப்புறம், மந்தையை யாரு பார்த்துப் பாங்கன்ற கேள்விக்கே இட மில்லியே!’’ என்றான்.

ஓங்காளியப்பனுக்கு மொத்த எருமைகளும் அப்போதே செத்துப்போனது போலத் தோன்ற, சுருண்டு விழுந்து மயக்கம் ஆனான்.

மறுநாள் அதிகாலையி லேயே, மகன் சொல்லாமல் கொள்ளாமல் ரயிலேறி விட்டான். வழியனுப்ப பெண்டாட் டியும் போய்விட்டாள். கட்டி னதும் சரியில்லை, பெற்றதும் சரியில்லை என்று அலுத்துக் கொண்டு பட்டிக்குப் போனவன், அங்கே பத்து எருமைகள் குறைந்திருப்பது கண்டு ஆடிப் போனான் ஆடி.

‘பத்து எருமைகளை வித்தா ஆச்சா? மாசமானா பணத்துக்கு என்ன செய்வே?’ என்று மகனிடம் மனசோடு கறுவியபடி வீறாப்பாய் இருந்த ஓங்காளியப்பன், அதன்பின் எத்தனை விதமாகக் கண் விழித்துக் காவல் இருந்தாலும், மாசமானால் இரண்டு எருமைகள் களவு போய்க்கொண்டிருந் ததில், கதிகலங்கிப் போனான். அதுவும், மாசம் ஒருமுறை தனக்கு வயிற்றுப்போக்கு வருவதும், சரியாக அதே நாளில் எருமைகள் களவு போவதும் அதிசயமாக இருந்தது.

ஒருமுறை கெட்டித் தயிரும், டேக்சா நிறைய சீம்பாலும் கொடுத்து நைச்சியமாகப் பேச்சுக் கொடுத்ததும், பச்சிலை வைத்தியன் உளறித் தொலைத்தான்… ‘‘உன் பொண்டாட்டிதான் உனக்குச் சாப்பாட்டுல வயித்துப்போக்குப் பச்சிலையைக் கலந்து தந்துட்டு, நீ கொல்லையில இருக்கும்போது எருமைகளைக் களவாடி விக்கிறா!’’

அடுத்து ஒரு மாசம் முழுவதும் அவள் தந்த சாப்பாட்டைச் சாப்பிடாமல், தானே கறந்த எருமைப் பாலை மட்டுமே குடித்து வந்தான் ஓங்காளியப்பன். இது தெரியாத அவன் மனைவி, எருமைகள் கழிசல் கண்ட இரவில், பதுங்கிப் பதுங்கி தரகனோடு வந்தாள். கிழட்டு உடம்பில் எங்கிருந்துதான் அத்தனைக் கோபமும் வலிமையும் வந்ததோ… தரகனையும் அவளையும் போட்டு உதை உதை என்று உதைத்தான் ஓங்காளியப்பன். அடி தாங்காமல், அவள் அன்றைக்கே தன் அம்மா வீட்டுக்கு ஓடிப் போனாள். இது நடப்பதற்குள் மந்தையில் ஐம்பது எருமைகள் குறைந்து போயிருந்தன.

எப்படியும் இனி காசில்லாமல் படிப்பு பாதியில் நின்று, தன் மகன் திரும்பிவிடுவான், இந்த மந்தையை மேய்ப்பான் என்ற நம்பிக்கையில் இருந் தான் ஓங்காளியப்பன். ஆனால், மாசக்கணக்காகியும் மகன் வராமல் போகவே, தனிமையில் துவண்டு போனான். செத்தால் கொள்ளிவைக்க மகன் வேண்டுமே, மிச்சம் ஐம்பது எருமைகள் இருந் தாலும், ஒரு எருமைக்காவது கொள்ளிவைக்கத் தெரியாதே! இப்படி ராத்திரியெல்லாம் யோசித்துக் கொண்டு இருந்தவன், மறுநாளே தன் மகனைப் பார்த்துச் சமாதானமாகப் புத்தி சொல்லி, கையோடு அழைத்துவரலாம் என்று டவுனுக்குப் புறப்பட்டுப் போனான்.

அவன் போன நேரம், மகன் அங்கே இல்லை. எங்கே போனான் என்று அங்கு அவனுடன் இருந்த பிள்ளைகளுக்கும் தெரியவில்லை. வருத்தத்தோடு வீடு திரும்பியவன், திடுக்கிட்டுப் போனான். மந்தையில் இன்னுமொரு இருபத்தைந்து எருமைகள் காணாமல் போயிருந்தன. அவன் வீடு வீடாகப் போய் கெட்ட கெட்ட வார்த்தையில் ஊரையே திட்டிக் கொண்டு வர, ஊரில் சொன்னார்கள்… ‘‘போடா பொக்கே! நீ ரயில் ஏறினதும் உன் மகன்தான் வந்து எருமைகளை விற்று விட்டுப் போனான்’’ என்று.

அதன்பிறகு, கொஞ்ச நாள் அந்த மகன் செத்துத் தொலைத்தால் என்ன என்ற எரிச்சலும், பிறகு ஒரே மகனாச்சே என்ற பாசமும் மாறி மாறி வந்தது ஓங்காளியப் பனுக்கு. கொள்ளிவைக்காத தன் செத்த உடம்பை நாய் நரிகள் வெட்ட வெளியில் கடித்துக் குதறித் தின்பது போன்ற கனவும் வர ஆரம்பித்தது. சரி, முதலில் பெண் டாட்டியிடம் பேசி சமாதானமாகி, அவள் மூலம் மகனோடு சமாதான மாகலாம் என்று முடிவெடுத்து, ஒருநாள் அவள் ஊருக்குப் பொட்டி கட்டி னான்.

தாய் வீட்டில் அவளைப் பார்த்ததும், கண்களில் தண்ணீர் வந்துவிட்டது. அவளிடம் குமுறினான்… ‘‘புருசன்காரன் மேலதான் பாசமில்ல. பெத்த மகனைப் பார்க்காம எப்படி இருக்கே நீ? காசு, பணம் இல்லாம எத்தனைக் கஷ்டப் படறானோ! உனக்கு வருத்தமே இல்லயா?’’

அவள் சொம்பு நிறையத் தண்ணீ ரைக் குடிக்கக் கொடுத்துவிட்டு, ‘‘என் மகன் என்னை வாரா வாரம் வந்து பார்த்துட்டுதான் இருக்கான். இருபத் தைந்து எருமை வித்த காசு இப்பத்தான் செலவாகி முடிஞ்சுதாம். நீ எனக்குத் தந்த நகை நட்டெல்லாம் வித்துத் தந்துட்டேன். நிலபுலத்து மேல நானே கையெழுத்து போட்டுக் கடன் வாங்கித் தந்திருக்கேன். அதுவும் செலவாகிருச் சாம். இப்ப, இன்னும் கொஞ்சம் காசு தேவைப்படறதால, மீதி எருமைகளை விக்கத்தான் அங்க போயிருக்கான். நீ இங்க வந்திருக்கே’’ என்றாள்.

இதைக் கேட்டதும், ஓங்காளியப்பன் ‘ஓ’வென்று அலறி பொத்தென்று விழுந்தான். பின்பு சுதாரித்து தானே எழுந்து, வீட்டுக்கு ஓடினான். ‘‘என் ரத்தம் சிந்தி மந்தையை உருப்படியாக்கி யிருக்கேன். ஒத்தை எருமையும் இல்லாத போனா, நான் என்ன எருமைக்காரன்! அப்படி ஆயிட்டா, பட்டியி லேயே தூக்கு மாட்டிக்கிட்டுச் சாவேன்’’ என்று சூளுரைத்தபடி, தூக்கு மாட்டிக்கொள்ள வசதி யாக ஒரு தாம்புக் கயிற்றையும் எடுத்துக்கொண்டு ஓடினான்.

அங்கே சொல்லி வைத்தது போல, ஒரே ஒரு எருமை தவிர, மொத்த எருமையும் களவு போயிருந்தது. அதைப் பார்த் ததும் ஓங்காளியப்பனுக்கு ஒரே சந்தோஷமாகப் போய்விட்டது. தான் சாகக் கூடாது என்கிற மகனின் பாசத்தில் உருகிப் போய்விட்டான். ‘சரி… ஆனது ஆச்சு! அவன் படிச்சு முடிச்சு உருப்படாத வைத்தியனா ஊருக்குத் திரும்பட்டும். அவனுக்கு இந்த ஒத்தை எருமையை ஒரு மந்தையா மாத்திக் கொடுக்கறேன். அதை மேய்ச்சு நல்லவிதமா அவன் பொழைச்சுக்கட்டும்’ என்று ஒரு வைராக்கியத்தோடு இருக்க ஆரம்பித்தான்.

திம்மன், வைத்தியன் படிப்பு முடிந்து, ஊசி போடும் வைத்திய னாக கழுத்தில் ஸ்டெதாஸ்கோப் மாட்டிக்கொண்டு ஊருக்குத் திரும்பி வந்தான். அவன் வந்ததும், பொண்டாட்டியும் வந்து சேர்ந்தாள். ஒரே வீட்டில் புழங்கினாலும், ஒருவருக்கு ஒருவர் இடக்குமடக்கான பேச்சாகவே இருந்தது.

திம்மன் அதுவரை ஊரில் இருந்த சொறி, சிரங்கு, கக்குவான் இருமல், நாள்பட்ட புண் எல்லாவற்றையும் சரி செய்து கைராசி வைத்தியனாக கீர்த்தி பெற ஆரம்பித்தான். பழைய பச்சிலை வைத்தியன் செய்யத் தொழில் இல்லாமல், நிரந்தரமாகக் கையேந்தும் நிலைக்கு ஆளானான். எல்லா வியாதிக்கும் ஜனங்கள் தன் மகனிடம் ஓடுவதில் ஒரே சந்தோஷம்தான் ஓங்காளியப்பனுக்கு. ஆனாலும், ஒரு பெரிய எருமைக்காரனுக்குப் பிறந்தவன், கேவலம் உருப்படாத ஒரு வைத்தியனாகப் போய்விட்டானே என்று உள்ளூர வருத்தமும் இருந்தது.

ஓங்காளியப்பனுக்கும் வயதாகிவிட்டதால், உடம்பு சொன்ன பேச்சைக் கேட்கவில்லை. ஒற்றை எருமைக்குப் பிரசவம் பார்த்து இரட்டை எருமை ஆக்குவதற்குள் மொத்த நாடியும் அடங்கிப்போயிற்று. செரிமானம் சரியாக இல்லை. எலும்புகள் தேய்ந்து நடக்க சக்தியில்லாமல் போயிற்று.

தன் மந்தையைக் களவாடி வைத்தியனான தன் மகனிடம் வைத்தியத்துக்குப் போவதற்கும் அவமானமாக இருந்தது. அப்படியும் ஒருநாள் உடல் சோர்வு அதிகமாகி, வேறு வழியில்லாமல், மகன் வைத்திருந்த ஆஸ்பத்திரிக்குப் போனான். ஆச்சர்யமாக, ‘‘வாப்பா’’ என்று வரவேற்றான் திம்மன்.

வெள்ளை உடுப்பும், கண்ணுக்குத் தங்க நிறக் கண்ணாடியும் போட்டிருந்த மகனைப் பார்த்ததும் ஓங்காளியப்பனுக்குச் சந்தோஷமாகிவிட்டது. ‘‘வெளியே தகரத்தில் என்னமோ எழுதிவெச்சிருக் கியே, என்ன அது?’’ என்று கேட்டான். ‘‘டாக்டர் திம்மன் எம்.பி.பி.எஸ்’’ என்று மகன் மிதப்பாகச் சொன்னான்.

‘‘ஒரு எருமை மந்தையை முழுசாக் களவாடி வித்தது இப்படித் தகரத்தில் எழுதிவெக்கிறதுக்குத் தானா? கூறுகெட்ட வைத்தியன்கிட்ட வர்றது வயசாளிக்குத் தலைவிதி. யம்மாடி சாமி!’’ என்று அலுத்தபடி உட்கார்ந்தான் ஓங்காளியப்பன். கண்கள் உள்ளுக்குள் சுருண்டு, வாய் வரண்டு, பெருமூச்சும் வியர்வையுமாக இருந்தான்.

அப்பாவின் வயோதிகம் சட்டென உறைக்க, அனுதாபமாகிவிட்டது திம்மனுக்கு. முதல்முறையாக மன்னிப்புக் கேட்கும் தொனியில், ‘‘அப்பனோட எருமையை மகன் வித்தா, களவாடினது ஆகுமா? நான் மந்தையை வித்துக் காசைக் கரியாக்காம பொறுப்பா படிச்சிருக் கேன்ப்பா. உனக்கும் ஓய்வு வேணுமில் லையா… அதனால எருமைகளை வித்ததா நெனைச்சுக்கோ’’ என்றான்.

மகனின் பேச்சைக் கேட்டு இருமல் கலந்து துன்பத்தோடு ஒரு பெரும் சிரிப்பு சிரித்த ஓங்காளியப்பன், ‘‘சரி சரி, நீ படிச்ச லச்சணத்தைப் பாக்கலாம். என் ஒடம்பைக் கொஞ்சம் பாரு’’ என்றான்.

‘‘என்னப்பா உடம்புக்கு?’’ – அக்கறையாகக் கேட்டான் திம்மன்.

‘‘ம்… ஒண்ணுக்குப் போனா பச்சைத் தண்ணியாட்டம் போகுது. அதுக்கு என்ன செய்யலாம், சொல்லு?’’ & பரிதாபமாகக் கேட்டுவிட்டு, மகனுக்குக் கோபம் பொங்குவதைக் கண்டு, கடகடவெனச் சிரித்தான் ஓங்காளியப்பன்.

‘‘எருமைப் பால் திமிர் அடங்கல இல்ல… நான் அடக்கிக் காட்டறேன்’’ என்று கறுவினான் திம்மன்.

பையனிடம் இருந்த வன்மத்தை ஒரே ஒரு இடக்குப் பேச்சின் மூலம் தீர்த்துக்கொண்ட திருப்தியில் மிதந்து நடந்த ஓங்காளியப்பன் வீடு வீடாகப் போய், ‘‘எம் மகன் ஊசி போடற பெரிய வைத்தியன், தெரியுமா? நீ ஊசி போட்டுக்கிட்டியா?’’ என்று கேட்டு விட்டு, எருமைப்பட்டிக்குத் திரும்பி னான்.

அங்கே இருந்த ஒற்றை எருமையும் களவுபோயிருந்தது.

‘‘பையனை இடக்கா பேசினியா? அதான், இருந்த ஒரு எருமையையும் வித்துட்டான்’’ என்று அவன் பெண்டாட்டி வாசலில் நின்று சொல்லியவாறு, ஒவ்வொரு பல்லாக உதிர்ந்து விழச் சிரித்தபடியே கிழவியாக மாறிக்கொண்டு இருந்தாள். பலப் பல கன்றுகள் பிரசவமாகி விழுந்த, சாணமும் கோமியமும் பரவிக்கிடந்த தொழுவத்தின் மத்தியில், மந்தையின் கடைசி எருமையாகச் சிரித்துக் கொண்டே சரிந்து விழுந்த ஓங்காளி யப்பன், கடைசி வரை எழவே இல்லை.

பின்னாளில், டவுனுக்குப் புலம் பெயர்ந்த டாக்டர் திம்மனின் மகள் பாட்டியிடம் கேட்டாள்… ‘‘எருமைக்கு எத்தனை கொம்பு பாட்டி?’’

வெளியான தேதி: 02 ஜூலை 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *